2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடுத்த தேர்தலில் தமிழர்கள்

என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 24 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். 

ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 

அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்‌ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. 

ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்படியேறிய, ஏறத்தாழ நான்கேகால் மாதங்களில், ஆக்கபூர்வமாக எதுவும் நடந்திராத நிலையில், இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை இணை-அனுசரணை வழங்கியிருந்த இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகியிருக்கிறது. 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான, யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் நிமித்தமாக அவரும், அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்வதற்கு, அமெரிக்க அரசு விதித்த தடையின் எதிரொலியாகவே, குறித்த தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கை அறிவித்திருந்தது. 

ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான இலங்கையின், இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள், சர்வதேச அளவில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக, மேற்கு நாடுகளுடனான அவர்களது பரஸ்பர அதிருப்தி, நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், உள்ளூர் வாக்குவங்கியைப் பொறுத்தவரையில், தம்மை நோக்கி வீசப்படும் எல்லாப் பந்துகளையும் அவர்கள் இதுவரை, எல்லைக் கோட்டுக்கப்பால் உந்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

மிக முக்கிய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், சவேந்திர சில்வா மீதான பிரயாணத் தடையை அமெரிக்கா அறிவித்தது, ராஜபக்‌ஷக்களுக்கு உள்ளூர் வாக்குவங்கி மட்டத்தில் மிகச் சாதகமானதே. 

இது, ராஜபக்‌ஷக்களின் தேர்தல் நலனுக்காக, அமெரிக்கா வேலை செய்கிறதா என்ற ஐயத்தையும், ஏனைய எதிர்க்கட்சியினரிடையே, ஏற்படுத்தாமல் இல்லை. 

எதிர்வரும் தேர்தலில், யுத்த வெற்றி வீரர்களாக மட்டுமல்ல, வல்லரசான அமெரிக்காவையே எதிர்க்கும் மாவீரர்களாக, ராஜபக்‌ஷக்கள் முன்னிறுத்தப்பட்டாலும், நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதுபோலவே, இம்முறை ராஜபக்‌ஷக்கள், தமது வாக்குவங்கி எது என்பதில் மிகத் தௌிவாக இருக்கிறார்கள். 

‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைத் திருப்தி செய்தாலே போதும்; தாம் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக மாறியிருக்கிறது. 

சிறுபான்மையினரை மகிழ்வூட்டும் (minority pleasing) நடவடிக்கைகளைக் கூட அவர்கள் செய்யத் தயாராக இல்லை. கிடைக்கும் திருப்பங்களிலெல்லாம், தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தம் முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். 

தமிழில் தேசிய கீதம் பாடாததிலிருந்து, வடக்கில்கூட பெயர்ப்பலகையில் முதலில் சிங்களம் இடம்பெறுமாறு மாற்றியமைத்ததிலிருந்து, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகியது என, தமது சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்திசெய்வதில், அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்.  

மறுபுறத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. 

தலைமைத்துவச் சண்டை என்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 

இன்று, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்ற நிலையில், எதிர்வரும் தேர்தலை ஐ.தே.க, தனது ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணியாகச் சந்திக்க இருக்கிறது. 

இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் பெயர், சின்னம், செயலாளர்கள் என்று எதுவுமே திட்டவட்டமாக இல்லாத குழப்பகர நிலை உருவாகியிருக்கிறது.   

மறுபுறத்தில், இதுவரைகால ரணிலின் அணுகுமுறையிலிருந்து, மாறியதோர் அணுகுமுறையாக, சஜித்தின் அணுகுமுறை அமையும் என்பதற்கான சமிக்ஞைகள் மிகத் தௌிவாகத் தெரிகின்றன. 

சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் பிரயாணத்தடையைக் கண்டித்து, சஜித் பிரேமதாஸ விடுத்திருந்த அறிக்கையானது, கடந்த தேர்தலில் அவரை ஆதரித்திருந்த தமிழர்களையும் தாராளவாதிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருந்தமையை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

இதுபற்றி, ஐ.தே.கவின் ஏனைய பிரதான தலைவர்கள், மௌனமாக இருந்த நிலையில், சஜித் மட்டும் கண்டித்தமை, ஏற்கெனவே பலமிழந்துள்ள ஐ.தே.கவின் வாக்குவங்கி, இன்னும் பலமிழந்துவிடுமோ என்ற அச்சத்தை, சிலரிடையே ஏற்படுத்தி இருக்கிறது. 

இருந்தபோதிலும், பெரும்பான்மை, சிங்கள-பௌத்த வாக்குவங்கியைத் திருப்தி செய்தால் மட்டுமே, ஒரு பிரதான கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். ஆகவே, சஜித்தின் அணுகுமுறையானது மிகச் சரியானது என்ற கருத்துகளையும் சிலர் முன்வைப்பதையும்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆகவே, சஜித் பிரேமதாஸவும் பெரும்பான்மையினரை மகிழ்வூட்டும், அதாவது சிங்கள-பௌத்த வாக்குவங்கியை மகிழ்வூட்டும் அணுகுமுறையையே கையாள்கிறார் என்பது, அவர் திரைவிலகி, தலைமைத்துவ முன்னரங்குக்கு வரவர, இன்னமும் தௌிவாகிக் கொண்டேயிருக்கும். 

தமிழ் மக்களும் பொதுத் தேர்தலும்  

இந்தச் சூழலில்தான், தமிழ் மக்களும் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். 
ஆனால், இம்முறை தமிழ் மக்களின் ‘ஏக’ பிரதிநிதிகள் யார் என்ற போட்டி, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள் நின்று நிதானமாக யோசித்து, முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படும், தமிழரசுக் கட்சியுடனான, டெலோ, புெளாட்டின் தேர்தல் கூட்டானது, இன்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்தி நிற்கிறது. 

தமிழரசுக் கட்சிக்கு இதுவரை காலமும் இருந்த பெருந்துணை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். தமிழரசுக் கட்சித் தலைமைகளுக்கு ரணிலுடன் இருந்த நெருக்கமும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த, இயைந்து இயங்கிச் செல்லத்தக்க உறவும், சிற்சில காரியங்களை, அவர்களால் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ரணிலிடமிருந்து அவர்கள் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொண்ட விடயத்தைவிட, ரணிலுக்காக அவர்கள் செய்த விடயங்கள் நிறைய இருக்கின்றன. 

2018ஆம் ஆண்டு, 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தமிழரசுக் கட்சி, ரணிலுக்கும் இந்த நாட்டுக்கும் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. 

ஆனால், அதற்கான நன்றிக்கடனின் பலாபலன், தமிழ் மக்களுக்குக் கிடைத்ததா என்றால், “இல்லை” என்பதே உண்மையாகும். 

அன்று, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, டட்லி சேனநாயக்கவின் ஆட்சியைக் காப்பாற்றியது போலவே, இன்று இராஜவரோதயம் சம்பந்தன், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றினார். 

 ஆனால், அதனால் தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ் மக்களுக்கோ அன்றும் எந்த நன்மையும் நடக்கவில்லை; இன்றும் நடக்கவில்லை. இதைக் குறிப்பிடுவது, அவர்களது முயற்சிகளைக் கொச்கைப்படுத்த அல்ல; மாறாக, வரலாறு மீண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே ஆகும்.

ஒரே அணுகுமுறையை, மீண்டும் மீண்டும் கையாண்டுகொண்டு, வேறுபட்ட முடிவை எதிர்பார்ப்பது, எங்ஙனம் என்ற கேள்வியும், இங்கு எழாமல் இல்லை. 

அன்று, செல்வநாயகம் எதிர்க்கட்சியில் இருந்து, டட்லிக்கு ஆதரவு வழங்கிய பின், அடுத்த தேர்தலில் சிறிமாவோவும் அவரது தோழர்களும் ஆட்சிக்கு வந்து, அரசமைப்பை மாற்றி, தனிச்சிங்களச் சட்டத்தின் தாற்பரியத்தைப் புதிய அரசமைப்புக்குள்  ஏற்றினார்கள். 

தனிச்சிங்களத்துக்கு,  அரசமைப்பு அந்தஸ்தை வழங்கி, பௌத்தத்துக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை வழங்கி, பல்கலைக்கழக அனுமதிகளில் தரப்படுத்தலைக் கொண்டுவந்து முற்றிலும் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகள், நசுக்காக அரங்கேற்றப்பட்டன. 

இது தொடர்பில், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில்தான், அன்றைய தமிழ்த் தலைமைகள் இருந்தார்கள். அன்று, டட்லிக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடமேறிய ஜே.ஆரின் அணுகுமுறை, டட்லியிலிருந்து வேறுபட்டதாகவும் பெருந்திரள்வாதப் போக்குடையதாகவும், மேற்குலகு சார்புடையதாகவும், திறந்த பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும், அபிவிருத்தி தொடர்பான பகட்டாரவாரப் பேச்சைக் கொண்டதாகவும் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கவர்ந்திழுப்பதாகவும் அமைந்திருந்தது. 
ஏறத்தாழ, இதுபோன்ற ஒரு நிலையைத்தான் இன்றும் நாம் எதிர்கொள்கிறோம்.   

ஆனால், அன்று ஒருவருக்கொருவர் ஆழந்த வைரிகளாக இருந்த தமிழ்த் தலைமைகள், அந்தக் கையறு நிலையை எதிர்கொள்ள, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒன்று பட்டன என்பது, நாம் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியதொன்று. 

மீண்டும், ஜீ.ஜீ. பொன்னம்பலமும் சா.ஜே.வே. செல்வநாயகமும் ஒன்றிணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியாக (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஒரு தளத்தில், தமிழ்த் தேசியக் கொள்கையை மய்யமாக நிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியலை ஒன்றிணைத்தமையானது தன்னலமற்ற, தமது மக்கள் நலன்சார்ந்த பெரும் நடவடிக்கை ஆகும். 

ஆனால், இன்று தமிழ்த் தலைமைகளும் அவர்களது கட்சிகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? 

இருக்கின்ற ஒற்றுமையைச் சிதைத்து, புதிய உதிரிக் கட்சிகளையும் கூட்டணிகளையும் தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் உருவாக்கிக் கொண்டும், மறுபுறத்தில், விட்டுக்கொடுப்புகள் மூலம் ஒற்றுமையை உருவாக்காமல், கொள்கையிலிருந்து விலகித் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் தமிழ் மக்களைத் திக்குத்தெரியாத அரசியல் சூனியத்துக்குள் தள்ளும் கைங்கரியத்தையே தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் செய்துகொண்டிருக்கிறார்கள். 

‘கூட்டணி’ என்பது கட்சிகள் ஒன்றிணைவதைக் குறிப்பதாக இருந்தது. இன்று, தனிநபர்கள் ஒன்றிணைவது ‘கூட்டணி’ என்பதாக மாறியுள்ளது. 

தனிநபர் கம்பனிகள் போல, ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கிக் கொண்டு, கூட்டணி அமைக்கிறார்கள். ஏன், எதற்கு, தமிழ் மக்களுக்கு இதனால் என்ன நன்மை, தமிழ்த் தேசியத்துக்கு என்ன நன்மை என்று சிந்திப்பார்கள் இல்லை. 

இவற்றைச் சுட்டிக்காட்டுவதால், ஒற்றுமை என்பதை அடைந்து கொள்வதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாய் பொருள்கொண்டு விடக்கூடாது. ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை நேசிப்பவர்கள், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரே அணியில் திரள முடியாது இருப்பதற்கு, நிச்சயமாகத் தனிப்பட்டதும் சுயநல காரணங்களுமே தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

இவர்கள் எவருமே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறார்கள் என்றால், எந்த அடிப்படைகளில் தாங்கள் பிரிந்து நிற்கிறோம் என்பதை, தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்ல வேண்டுமல்லவா? 

அது, இவர்களின் சுயநலம், பதவி ஆசை என்பவற்றைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?  
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .