2020 மார்ச் 30, திங்கட்கிழமை

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி: தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி

எம். காசிநாதன்   / 2020 பெப்ரவரி 24 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மாநிலக் கட்சிகள் தோன்றினாலும், டெல்லியில், காங்கிரஸ், பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லும் இரண்டையும் அதாவது, மதச்சார்பற்ற தன்மை, தேசப்பற்று  ஆகியவற்றை முன்னிறுத்திஈ அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றிருப்பது, கத்தி மேல் நின்று பெற்ற வெற்றியாகவே, அரசியல் அவதானிகளால் கருதப்படுகிறது.  

தேசப்பற்று பற்றியும் இந்துத்துவா பற்றியும் விருப்பம் உள்ள வாக்காளர்கள், முதலில், பாரதிய ஜனதாக் கட்சியைத்தான் தெரிவு செய்வார்கள். 

வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. பா.ஜ.கவின் இந்த வாக்கு வங்கிக்கு அச்சுறுத்தலாகத் தோன்றிய இரு தலைவர்களில் ஒருவர், மறைந்த ஜெயலலிதா; மற்றையவர், அரவிந்த் கெஜ்ரிவால். 

இந்துத்துவா, தேசப்பற்று, மதச்சார்பற்ற தன்மை ஆகிய மூன்றையும் வென்றெடுக்கும் ஆற்றல், ஜெயலலிதாவுக்கு இருந்தது. இப்போது அதேவலிமை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்திருக்கிறது. 

ஜெயலலிதாவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலிமையான இன்னொரு மாநிலக் கட்சி, தமிழ்நாட்டில் இருந்தது. அதனால், இந்துத்துவா கொள்கைகளை, ஜெயலலிதா அதிகம் பேசிய போது, குறிப்பாக, “இராமர் கோவிலை, அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே பல சலுகைகள் உள்ளன; ஆகவே, இனி வேலை வாய்ப்புகளிலும் தனி இட ஒதுக்கீடா” என்றெல்லாம் கேள்வி எழுப்பிய போது, தி.மு.கவிடம் அவர் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழல் உருவானது.  

ஆனால், மற்ற நேரங்களில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இந்துத்துவா, மதசார்பற்ற தன்மை ஆகிய இரண்டுக்குமே  ஜெயலலிதா பொருத்தமான தலைவராகவே, வாக்காளர்கள் மனதில் கொலுவீற்றிருந்தார் என்பதை, யாரும் மறந்து விட முடியாது. 

அந்தநிலை, இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸின் மதச்சார்பற்ற தன்மைக்காக, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் மக்களின் ஆதரவையும், தேசப்பற்று, இந்துத்துவாவுக்காக பா.ஜ.கவுக்கு வாக்களிக்கும் மக்களின் ஆதரவையும் ஒன்று சேர, அரவிந்த் கெஜ்ரிவால் பெற்று, டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்த ‘டெல்லித் தேர்தல்’ பாடம், பா.ஜ.கவுக்குச் செய்தியாக இருக்கிறதோ இல்லையோ, பிரதமர் மோடிக்கு எதிராக, வெற்றி பெறக்கூடிய கூட்டணியை அமைக்கும் தலைவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 

காங்கிரஸைப் பொறுத்தமட்டில், ஆடு களத்துக்கு வரும் முன்பே, தோல்வியை ஒப்புக் கொண்டது போல், இன்றைக்கு பிரதமர் மோடியின் தேர்தல் வியூகங்களைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பிரதமர் மோடி போன்றோரின் வியூகங்கள், காங்கிரஸுக்குச் சிம்மசொப்பனமாக இருக்கிறது. இந்துத்துவா வாக்காளர்களைக் கவர்வதற்கு, காங்கிரஸால் முடியவில்லை. 

மானசுரோவருக்கே பயணம் செய்தாலும், ராகுல் காந்தியால் அந்த வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், சோனியா காந்தி ஆகியோரால் பெற முடிந்த நம்பிக்கையைக் கூட, ராகுல் காந்தியால் பெற்று, காங்கிரஸுக்கு வெற்றி பெற்றுத் தர முடியவில்லை. 

இப்படியோர் இக்கட்டான நிலையில்தான், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். என்றாலும், மீண்டும் அக்கட்சிக்கு பொறுப்பேற்க, அவரால் முன்வர முடியவில்லை. இந்த நிலையில், காங்கிரஸின் வலிமை பற்றிய சந்தேகம், அக்கட்சியில் உள்ள முன்னணித் தலைவர்களுக்கே வந்து விட்டது.

டெல்லித் தேர்தலில், காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்வி, காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக, உருப்படியான ஒரு தலைமை தேவை என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதற்குக் கூட, அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றியே, ஒரு செய்தியாக மாறியிருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  

காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல,  பா.ஜ.கவைச் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், இது மாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

இவரும், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக மட்டுமே, அரசியல் செய்ய முடியாது என்ற சூழல், இவரை அச்சுறுத்துகிறது. முற்பட்ட சமுதாய வாக்காளர்கள், குறிப்பாக காங்கிரஸ், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட வாக்காளர்களை, ஒட்டுமொத்தமாக மம்தா பாணர்ஜி பெற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். 

அப்படியோர் அரசியலைத் தொடங்கினால் மட்டுமே, ஜெயிக்க முடியும் என்பதை, டெல்லித் தேர்தல் வெற்றி, குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூகங்கள், மம்தா பானர்ஜிக்குக் கற்றுக் கொடுக்கும் என்று நம்பலாம். 

உத்தர பிரதேசத்தில் உள்ள மாயாவதியும் அகிலேச் யாதவும் கூட இந்த டெல்லித் தேர்தல் மாதிரியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

ஆந்திராவில், முதலமைச்சர் ஆகியுள்ள ஜெகமோகன் ரெட்டி, இந்தத் டெல்லித் தேர்தல் வெற்றியின் இரகசியத்தைத் தானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பலாம். 

அது மட்டுமல்ல, காங்கிரஸுக்கு மாற்றாக, ஆட்சியைப் பிடித்த கட்சிகள், எங்கெல்லாம் உருவாகி, அக்கட்சிகளுக்கு பா.ஜ.க தற்போது போட்டியாக மாறி வருகிறதோ, அங்கெல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் உத்திகள் பேருதவியாக இருக்கும். 

ஆகவே, தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கிடைத்த வெற்றி, தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும், மிகப்பெரிய செய்தி கொண்டு செல்லும் தூதுவராக மாறியிருக்கிறது என்பதே உண்மை நிலைவரம்.  

அகில இந்திய அளவில், சிறப்பு அதிகாரங்கள் கொண்ட, தலைநகர யூனியன் அரசாக இருக்கும் டெல்லி, நாட்டுக்கே, தேர்தல் வியூகத்தின் வழிகாட்டியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 

இந்த வழிகாட்டுதலை, மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எப்படிக் கடைப்பிடித்து, இனி வரும் தேர்தல்களில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான், இந்திய அரசியலின் வருங்காலத் திருப்புமுனைகள் இருக்கின்றன. 

2024 வரை, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசாங்கத்துக்கு, இந்திய மக்கள் வாக்களித்து, ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். 

இரண்டாவது முறையாக, ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில், மோடி நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்கள், இந்தியாவின் தன்மைகளை மாற்றியிருக்கிறது. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து, முத்தலாக் முறை தடை, குடியுரிமை திருத்தச் சட்டம்-2019, இராமர் கோவில் கட்டுவது என்று அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், பா.ஜ.கவுக்குப் பெரிய சாதனைகள் ஆகும். 

ஆனால், இது இந்தியாவின் அரசியல் சட்டத்தை, முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

நாட்டின் மதச்சார்பற்ற தன்மைகளுக்கு  எதிரான நடவடிக்கைகளாக இருக்கிறது என்பது, எதிர்க்கட்சித் தலைவர்ளின் பிரசாரமாக இருக்கிறது. இது போன்ற நிலையில், பொதுச் சிவில் சட்டமும் நிறைவேற்றப்பட்டால், பா.ஜ.கவின் அடிப்படை கொள்கைகள் சார்ந்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட்ட சாதனைச் சரித்திரமாகும். 

ஆகவே, இப்படி வலிமையான பலத்துடன் இருக்கும் பா.ஜ.கவை, வெறும் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவு என்ற பிரசாரத்தின் மூலம், முறியடித்து வெற்றி பெற்று விட முடியும் என்று, இனி எதிர்க்கட்சிகள் நினைப்பது, தவறான தேர்தல் யுக்தியாகவே அமையும். 

அரவிந்த் கெஜ்ரிவாலின், டெல்லித் தேர்தல் வெற்றி, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள புதிய வழிகாட்டி. இந்தப் பாதையை, எந்தெந்தக் கட்சிகள் தெரிவு செய்யும், எப்படித் தேர்தல்களில் பயன்படுத்தும் என்பதற்கு ஏற்றார் போல், எதிர்காலத் தேர்தல் வியூகம் அமையும்.

ஆனால், அந்த களத்தில் மதச்சார்பற்ற தன்மைக்கும், இந்துத்துவாவுக்குமான போட்டி ஏற்படுவதற்குப் பதில்,  இரண்டையும் சேர்த்து ஓர் அரசியல் கட்சித் தலைவர், நாட்டு மக்களுக்கு வழங்குவார் என்றால், அந்த கொள்கைக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைக்கும். 

அதன் எதிரொலிதான், டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற அசாத்தியமான வெற்றி ஆகும். எதிர்வரும் தேர்தல் களங்களை அடையாளப்படுத்தும் வெற்றியும் இதுவாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .