அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார்.  

 வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.   

கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அவர், முதலமைச்சர் ஆதரவு அணியிலுள்ள அனந்தியை நோக்கியே, கைத்துப்பாக்கி பெற்றதான விடயத்தை முன்வைத்திருக்கின்றார்.   

இதைச் சபை அமர்வொன்றின், வாதப்பிரதிவாதங்களில் முன்வைக்கப்பட்ட விடயமாக மாத்திரம், கடந்து சென்றுவிட முடியாது.   

ஏனெனில், இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களில் அனந்தியும் ஒருவர். குறிப்பாக, இறுதி மோதலின் இறுதி நாட்களில், இராணுவத்திடம் கையளித்த தன்னுடைய கணவரான சசிதரனின் (எழிலன்) நிலை என்ன என்று கோரி, நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீதிமன்றத்தை நாடியவர் அவர்.   

அப்படியான நிலையில், யாருக்கு,  எந்தத் தரப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றாரோ, அந்தத் தரப்பிடமே தன்னுடைய பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கியைப் பெற்றிருப்பதாக, அனந்தியை நோக்கிக் கூறும் விடயம், பாரதூரமானது.   

அவ்வாறான கட்டத்தில், அஸ்மின் தன்னுடைய கூற்று தொடர்பில், ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. அது மாத்திரமின்றி, அவர் தன்னுடைய, அரசியல் வகிபாகம் குறித்து உணர்ந்து, இயங்குவதும் அவசியமானது.   

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில், மன்னாரில் போட்டியிட்ட அஸ்மின் 1,009 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார்.   

ஆனாலும், தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து, இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் தேவைப்பாடுகளின் போக்கில், கூட்டமைப்பால் நியமனப்பட்டியலினூடாக மாகாண சபை உறுப்பினராக்கப்பட்டார் அஸ்மின்.  

 முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான இணைப்பாளராகவும் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அஸ்மின் வந்த வழியையும் செல்ல வேண்டிய வழியையும் மறந்து நின்று, அல்லாடுகிறார்.   

தன்னுடைய தாய் இயக்கமான, நல்லாட்சி மக்கள் இயக்கத்தோடு முரண்பட்டுவிட்ட அஸ்மின், தமிழரசுக் கட்சியோடு இணைந்து கொள்வது சார்ந்து, அதிக ஆர்வம் காட்டுகிறார். அதற்காக அவர் மிகுந்த பிரயத்தனங்களை எடுக்கின்றார். எனினும், அவர் இதுவரை, தமிழரசுக் கட்சி உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.   

அஸ்மின், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதோ அல்லது தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதோ தவறில்லை. அதற்கான உரிமை அவருக்கு உண்டு.   

ஆனால், அவர் என்ன காரணங்களைக் கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்தாரோ, அதன்போக்கில் அவருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்பட்டதோ, அதையெல்லாம் மறந்து நின்று, செயற்படுகின்ற தன்மையானது, குழப்பங்களையும் முரண்பாடுகளையும் அதிகப்படுத்திவிடும். அதன்போக்கிலேயே அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றதான விடயத்தையும் பார்க்க வேண்டும்.   

முதலமைச்சருக்கு எதிரான அணியில், குறிப்பாக எம்.ஏ. சுமந்திரன் அணியில், தன்னை முக்கியஸ்தராக நிலைநிறுத்தும் தேவைப்பாடொன்றின் போக்கில், கடந்த சில ஆண்டுகளாக அஸ்மின் இயங்குவது வெளிப்படையானது. ஆனால், அதற்காக அவர் தேர்தெடுத்த வழியும், வெளிப்படுத்தும் விடயங்களுமே சிக்கலானவை.   

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. அது, இயல்பாகவே இலங்கை அரசாங்கத்துக்கும், அதன் நிறுவனங்களுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டது.   

அப்படியான கட்டத்தில், பொலிஸ் பாதுகாப்பைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ பெறுவதையே, ஒருவித ஒவ்வாமையாக நோக்கும் தன்மையொன்று உண்டு. அதிலும், சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நீதிமன்ற உத்தரவின் பேரில் வழங்கப்பட்டிருக்கின்ற விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பைத் தமிழ் மக்கள் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளவில்லை.  

அதைப் பெரும் விடயமாகத் தமிழ்த் தேசிய அரசியல் களம் பேசியும் வருகின்றது. அப்படியான நிலையில், அதையும் தாண்டிய நிலையொன்றை நோக்கி, அனந்தி சென்றிருக்கின்றார்; கைத்துப்பாக்கியைப் பாதுகாப்பு அமைச்சிடம் பெற்றிருக்கின்றார் என்கிற கூற்று, எந்த அடிப்படையில் வருகின்றது என்பதை, நோக்க வேண்டிய தேவை உண்டு.   

இது, அஸ்மின் என்கிற மாகாண சபை உறுப்பினருக்கும் அனந்தி என்கிற அமைச்சருக்கும் இடையிலான விடயம் மாத்திரம் அல்ல. மாறாக, இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமை தலையிட வேண்டிய விடயம்;  ஆதாரங்களைக் கோர வேண்டிய விடயம். 

இல்லாது போனால், இந்தப் பாராதூரமான விடயம் சார்ந்து, அஸ்மின் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட வேண்டியது அவசியம்.   

இன்னொரு கட்டத்தில், அஸ்மின் முன்வைக்கும், கைத்துப்பாக்கியை அனந்தி பெற்றதான விடயம், பொய் என்று நிருபணமாகும் பட்சத்தில், தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளின் அளவை அதிகரிக்கும்.   

ஏனெனில், அனந்தி மீது, அமைச்சர் என்கிற அடையாளம் மாத்திரம் இருக்கவில்லை. மாறாக, போராளி ஒருவரின் மனைவி என்கிற அடையாளமும் உண்டு. அப்படியான நிலையில், அனந்தியை நோக்கியதான இந்தக் குற்றச்சாட்டு, தமிழ் மக்களைக் கோபப்படுத்தும்.   

அதுவும், இனமுரண்பாடுகளின் போக்கில் பிளவுண்டிருக்கின்ற சமூகம், அஸ்மின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத கட்டத்தில், அந்தக் கோபத்தை, அஸ்மின் மீது மாத்திரமல்ல, அவர் சார்ந்த சமூகத்தின் மீதும் காட்டும்.   

ஏனெனில், நினைத்துப் பார்க்க முடியாத முரண்பாடுகளின் கட்டத்தில், தமிழ்- முஸ்லிம் உறவு இருக்கின்றது. அதனை, மெல்ல மெல்லச் சரி செய்வதற்கான முயற்சிகளைப் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் எடுக்கும் போது, அதன் போக்கில் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட நபரே, அதற்கு உலை வைப்பதான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பாரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.   
தான், பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி பெற்றதான குற்றச்சாட்டுகளை, அனந்தி உடனடியாக மறுத்துரைத்து விட்டார். அவர் அதற்கு மேல், தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையும் தற்போதைக்கு இல்லை.

ஏனெனில், குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களே, ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும். அதுதான் சட்டநெறி. அதன்போக்கில், அஸ்மின் தன்னுடைய சட்டத்துறை நண்பர்களுடன் பேசி, விடயங்களை வெளிப்படுத்த வேண்டும்.   

அரசியலில், தங்களது வகிபாகங்கள் சார்ந்து, எந்தத் தெளிவும் இல்லாமல், மற்றவர்களின் தயவில் வளர நினைக்கும் தன்மையானது, ஒரு கட்டம் வரையில் வேண்டுமானால், ஒருவரை வளர்க்கலாம்.   

ஆனால், அது நிரந்தர வெற்றியையோ, சுய ஆளுமையின் வெற்றியையோ பதிவு செய்யாது. அப்படியான நிலையில், மற்றவர் நிழலில் அஸ்மின் வளர்வதற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு, உணர்ச்சிகர அரசியலைச் செய்ய நினைத்தால், அது அவரை மாத்திரமல்ல, அவரை வளர்த்துவிட நினைப்பவர்களையும் வெட்டி வீழ்த்திவிடும்.   

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதலமைச்சர் தொடர்பில், அவதூறுக் கருத்தொன்று ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த அவதூறைப் பரப்பியவர்களுக்கு, எந்தவிதமான சமூக ஒழுக்கமும், அரசியல் நெறியும் கிடையாது.   

மாறாக, முதலமைச்சருக்கு எதிரான மனநிலையை, வெளிப்படுத்துவது மாத்திரமே குறிக்கோளாக இருந்தது. ஆதாரங்கள் இன்றி அவதூறுகளைப் பரப்புவதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஒரு வகையில் மனப்பிறழ்வின் நிலை.   

அதையே வேலையாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றது.   

 அப்படியான நிலையில், தங்களது மனக்கிலேசங்களையும் அவாக்களையும் சமூக ஊடக மனநிலையின் போக்கில், அரசியலாக வெளிப்படுத்த ஆரம்பிப்பதும், அதுவே இறுதி வரை சரியென நம்புவதும் அபத்தங்களின் உச்சம்.  

ஏனெனில், சமூக ஊடகங்களின் ஆரோக்கியமான கட்டங்களைத் தாண்டி, அவதூறின் கட்டங்களே இன்றைய சூழலில் கோலோச்சுகின்றன. அது, பலரையும் சூனிய வெளிக்குள் தள்ளியும் விட்டிருக்கின்றது.   

அப்படியானதொரு கட்டத்தில், அனந்தி கைத்துப்பாக்கி பெற்றமை தொடர்பிலான தன்னுடைய கூற்று தொடர்பில், அஸ்மின் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.   

இல்லையென்றால், அவர் முன்வைத்திருக்கும் விடயம், அவதூறின் வடிவமாகவும் அபத்தமான அரசியல் கூச்சலாகவும் கொள்ளப்பட வேண்டியது; மன்னிக்கப்பட முடியாதது.     


அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.