2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்?

Gopikrishna Kanagalingam   / 2019 ஜனவரி 31 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர்.  

இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது மாறியிருந்தது.  

ஆனால் இப்போது, பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் பல, தங்களது ஊடகவியலாளர்களை நீக்குவதாக அறிவித்திருக்கின்றன. ஊடகங்களின் எதிர்காலம், இணையத்தில் தான் என்று கூறிவந்த நிலையில், மிகவும் பிரபலமான இணைய ஊடகங்களே, ஊடகவியலாளர்களை நீக்குகின்ற நிலைமைக்கு வந்துள்ளமை, ஊடகங்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

ஏனென்றால், இதுவரை காலமும் பத்திரிகைகளின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் போது, “பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது. இனிமேல், இணையத்தில் தான் ஊடகங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது” என்று கூறப்பட்டது. இப்போது பார்த்தால், பிரபலமான இணைய ஊடகங்களும் பணிக்குறைப்பை மேற்கொள்கின்ற போது, ஊடகங்களுக்கே எதிர்காலம் இல்லையோ என்ற கேள்வி எழுவது வழக்கமானது.  

உலகம் முழுவதிலுமே, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான மனநிலையொன்று காணப்படுவதையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒன்றில், அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்படும் ஆதரவாளர்களால் வெறுக்கப்படுவது காணப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம் பல்வேறு கடும்போக்கு வலதுசாரிகளும் கடும்போக்கு இடதுசாரிகளும், உலகம் முழுவதிலும் செயற்பட்டு வருகிறார்கள். உண்மையை மறைக்க வேண்டுமாயின், ஊடகங்களை வெறுக்கச் செய்வது அல்லது அவற்றின் மீது நம்பிக்கையிழக்கச் செய்வது தான் வழி என்ற நிலையிலேயே, இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான ஒரு நிலையாக இது இருக்கிறது.  

மறுபக்கமாக, ஒரு சில ஊடகங்களில் மோசமான நடவடிக்கைகளும், ஊடகங்களின் மீதான நம்பிக்கையிழப்புக்குப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. அரசியலில் அல்லது தமது கொள்கையில் கொண்ட அதீத நாட்டம் காரணமாக, ஊடக அறநெறிகளை மீறிச் செயற்படுகின்ற மோசமான ஊடகங்கள், இப்பிரிவுக்குள் உள்ளடங்குகின்றன. மறுபக்கமாக, வருமான உழைப்புக்காக, எதை வேண்டுமென்றாலும் பதிப்போம் அல்லது பகிர்வோம் என்ற எண்ணத்தில் செயற்படுகின்ற ஊடகங்களும் இருக்கின்றன. இலங்கையின் ஊடகச் சூழலிலும், “கொசுறுச் செய்திகள்” (கொசிப்) என்று சொல்லப்படுகின்ற வகை, இணைய ஊடகங்களை மாத்திரமன்றி, பத்திரிகைகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப்படுகின்ற தகவல்களை, எந்தவித ஊடக அறங்களுமின்றி, “அவர் இப்படிச் செய்தாராம். இவர் இப்படிச் செய்தாராம்” என்று பதிப்பிக்கின்ற, பகிர்கின்ற சூழலை நாம் காண்கிறோம். இவையெல்லாம், ஊடகங்கள் மீதான நம்பிக்கையிழப்புக்கு முக்கியமானவையாக அமைந்துள்ளன.  

இவ்வாறான சூழல் காணப்பட்டாலும், முன்னெரெப்போதையும் விட, இப்போது தான் ஊடகங்களின் பங்களிப்பு, மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றது. உலகின் எப்பக்கத்தில் திரும்பினாலும், பிரிவுகளும் பிளவுகளும் தான் காணப்படுகின்றன. இனங்களாக, மதங்களாக, சாதிகளாக, வர்க்கங்களாக மக்கள் பிரிந்து செயற்படுகின்ற நிலைமை தான் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பிரித்தாள விரும்பும் தரப்புகள், ஊடகங்களை வெறுக்கின்றன.  

இப்படியான சவால்களை ஊடகங்கள் எதிர்கொள்ளும் போது, வணிகமாக மாறிவிட்ட ஊடகவியலில், வருமானம் உழைப்பதற்கான வழியென்னவென்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக, நோக்கமாக, இலக்காக இருக்கிறது. முன்னர் காணப்பட்ட ஊடகங்களுக்கும் இந்நோக்கம் இருந்திருக்கவில்லை என்றில்லை. ஆனால், சமூக ஊடகங்களின் தாக்கமும் இலவசச் செய்தித் தளங்களின் அதிகரிப்பும், ஊடகங்களுக்கான போட்டிச் சூழலை அதிகரித்திருக்கின்றன. 

எனவே, பத்திரிகையாக இருந்தாலோ, இல்லாவிட்டால் இணைய ஊடகமாக இருந்தாலோ, ஊடக அறத்துக்குட்பட்டுச் சேகரிக்கப்படும் செய்திகளுக்குத் தேவையான செலவைச் செலுத்துவதற்கு, வாசகர்கள் தயாராக இல்லாத சூழல் தான் காணப்படுகிறது. வாசகர்களிலும் குற்றஞ்சொல்லிப் பயனில்லை. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு உயர்ச்சியென்பது, அவர்களை வாட்டுகிறது.  

இதனால் தான், சுதந்திரமான வகையில் ஆசிரிய பீடங்கள் செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது, உலகம் முழுவதிலும் காணப்படும் பிரச்சினையாக இருக்கிறது. வழக்கமான, ஊடக அறங்களுக்குட்பட்ட செய்திகளும் செய்தியறிக்கைகளும், “விற்கப்பட முடியாத” விடயங்களாக மாறியிருக்கின்றன. இதனால் தான், உலகம் முழுவதிலும், ஆசிரிய பீடங்களை விட, சந்தைப்படுத்தல் பிரிவுகளும் விரிவுபடுத்தல் பிரிவுகளும், ஆசிரிய பீடத்தின் பணிகளை ஆற்றத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரிய பீட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலையில், சந்தைப்படுத்தல் பிரிவினராலோ, விரிவுபடுத்தல் பிரிவினராலோ செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வேறானது.

ஆனால், மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளும், ஆசிரிய பீடத்தை விட முக்கியத்துவம் பெற்ற துறைகளாக மாற, ஆசிரிய பீடம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று தீர்மானிக்கின்ற பிரிவுகளாக அவை மாறுகின்றன. இந்த நிலை, மிக ஆபத்தானது. ஊடகமேதும் இல்லாத சூழலை விட, ஆசிரிய பீடத்தின் கட்டுப்பாட்டில் ஆசிரிய பீடச் செயற்பாடுகள் இல்லாத ஊடகங்கள் ஆபத்தானவை; ஜனநாயகத்துக்குப் பாரிய தீங்கிழைக்கக்கூடியன.  

இந்த நிலையில், ஆசிரிய பீடத்தின் சுயாதீனத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக, ஆசிரிய பீடங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை, இணைய வாசகர்கள் தெரியாதளவுக்கு, பல பகுதிகளிலும், வாசகர்களின் தேவைக்காகவும் நன்மைக்காகவும், ஆசிரிய பீடத்து உறுப்பினர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் போராட்டங்கள் அனைத்தும் வெற்றியளிப்பதில்லை என்பதைத் தான், அண்மைய பணி நீக்கங்கள் சொல்லிச் சென்றிருக்கின்றன.  

பணி நீக்கங்கள் வேறானவை. ஊடகப் பணியிலிருந்து சிலர் நீக்கப்பட்டால், ஊடகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்மையென்றாலும், இன்னொரு பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரிய பீடத்தால் ஏற்படும் பாதிப்பை விட அது குறைவானது. இன்னமும் எத்தனை ஆசிரிய பீட உறுப்பினர்கள், வாசகர்களுக்கு உண்மையையும் தேவையான விடயங்களையும் கொண்டு செல்ல வேண்டுமென்ற விருப்பத்துக்கு மத்தியிலும், பல்வேறான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அவ்வாறானவர்கள், ஒரு கட்டத்தில் ஊடகத்துறையிலிருந்து விலகிச் செல்லும் போது தான், அவர்களின் போராட்டங்களின் பெறுமதி உணரப்படும்.  

இப்படியாகப் போராடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஊடகவியலாளர்களால் தான், மக்களுக்குத் தேவையான செய்திகளை, ஓரளவுக்கேனும் ஊடகங்கள் வழங்குகின்றன. ஆனால், ஊடகங்கள் செல்லும் போக்கைப் பார்க்கும் போது, நீண்டகாலத்துக்கு இது நீடிக்காத நிலைமை தான் காணப்படுகிறது. அப்படிப் பார்த்தால், ஆபத்தான நிலைமையில் தான் ஊடகங்கள் இருக்கின்றன. இந்த ஆபத்திலிருந்து ஊடகங்கள் மீள வேண்டுமாயின், இலாபந்தரும் தொழிலாக, செய்தியிடல் மாற வேண்டும். அதற்கு, வாசகர்களின் ஒத்துழைப்பு அவசியமானது.  

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில், இந்நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நேர்மையான ஊடகவியல் மரணித்துப்போகும் ஆபத்துக் காணப்படுகிறது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்?    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X