2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

இது விளையாட்டு அல்ல; விபரீதமானது

காரை துர்க்கா   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். 

கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். 

ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி விட்டார்கள். பொருள் தேட, புகழ் தேட, உல்லாசமாக வாழ என்று,  தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன் பலர் அரசியலுக்குள் படை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று, அரசியல் செய்ய சாணாக்கியம் தேவை. அது போல, ஆள் (அடியாட்கள்) பலம், பணபலம் அற்றவர்கள், அரசியலுக்கு அருகதை அற்றவர்களாக உள்ளனர்.  இவ்வாறான போக்கு, அபிவிருத்தி அடைந்து வருகின்ற கீழைத்தேச நாடுகளில், பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கு, இலங்கையும் விதிவலக்கல்ல. இலங்கைக்கு உள்ளே, எம் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்லர். 

இவ்வாறான நிலையில், இலங்கையில் நடைபெற்று வருகின்ற இனப்பூசலில், தமிழினம் இழந்தவைகள் ஏராளம். ஆனாலும், இன்னமும் தமிழ் மக்களது விடுதலை, பின் நோக்கியே சென்றுகொண்டு இருக்கின்றது. இதற்கான பல காரணங்களில், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்ற உட்பூசல்கள், தலைமைத்துப் போட்டிகள், ஒத்துப்போகாத தன்மைகள் கூடக் காரணங்கள் ஆகின்றன. 

ஆனாலும், அதனைக்கூட இன்னமும் எள்ளளவேனும் பொருட்படுத்தாது, கூட்டு அமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகளை ஒடு(து)க்குதல், கூட்டை உடைத்து தனி வழிச் செல்லுதல், ஏற்கெனவே பல கட்சிகள் இருக்கின்ற நிலையில், இன்றும் புதிதாகத் தனிக் கட்சி தொடங்குதல், நாமே மாற்று அணி என முழக்கமிடுதல் என்பன, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

இதற்கிடையே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மாதமளவில், பொதுத் தேர்தல் நடைபெறலாம் என ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. 

இதனை, தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்நோக்குவது என்ற உரையாடல்கள் இன்னமும் எந்தவொரு தரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதைய கள நிலைவரங்களின்படி, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள், ஒருமித்து ஒரு குடையின் கீழ் பொதுத் தேர்தலை எதிர்நோக்குகின்ற போக்குகள், அறிகுறிகள் காணப்படவில்லை.

தங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்தவம் குறைந்து விடுமோ அல்லது இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் பயமும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அளவுக்கேனும், தலைவர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி, இன்று ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. 

ஆனாலும், தமிழ்த் தலைவர்கள் தற்போது பயணிக்கும் போக்கிலேயே அவர்களைத் தொடர்ந்தும் பயணிக்க, தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்கவும் முடியாது. ஏனெனில், விடுதலைக்காக ஒப்பற்ற விலை கொடுத்த தமிழினம், தங்களது தலைவர்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் போதுமான தகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

இலங்கையில், ஏனைய இன மக்களோடு ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களது வாக்களிப்புச் சதவீதம், குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளதை, பரப்புரைக் காலங்களில் கதறக் கதறப் பேசுவோர், வெற்றியீட்டிய பின்னர் அது தொடர்பில் சற்றும் அலட்டிக்கொள்ளாது இருப்பதே, இதற்கான காரணமாகக் கூறலாம்.  

ஆனாலும், அதையும் தாண்டி ஒற்றுமையாக ஒரு சின்னத்தில் தமிழ்த் தரப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் போட்டியிட்டால், அதுவே ஒரு புதிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும், தமிழ் மக்களிடையே நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  
இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தாமே மாற்று அணி என அண்மையில் தெரிவித்துள்ளது. இவர்கள் இவ்வாறு கூறிக்கொண்டு, வேறு கட்சிகளையும் தங்களோடு அணி சேர்க்காது தனித்துப் போட்டியிட்டால், சில வேளைகளில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் மாத்திரம் ஒரு சில ஆசனங்களைப் பெறலாம். 

இவ்வாறனதொரு நிலைவரம், 2015 பொதுத் தேர்தலில் காணப்பட்ட போதுகூட, அன்றைய காலப் பகுதியில் அவர்களால் ஓர் ஆசனத்தைக்கூடக் கைப்பற்றிக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாநகர சபை ஆட்சியைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றலாம் என்ற எதிர்வு கூரல்கள்கூட, பொய்த்துப் போய்விட்டன. 

அடுத்து, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி உள்ளது. அங்கு, நீதியரசர் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அருந்தவபாலன் ஆகியோரே, மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக உள்ளார்கள். 

இவ்வாறு கூறுவதன் மூலம், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி வகுத்து நிற்கின்றார்கள் என்றில்லை. கூட்டமைப்பும், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பல இடங்களில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. 

தொடர்ந்த ஐந்து ஆண்டுக் காலங்களில், நல்லாட்சி அரசாங்கத்துடன் நல்லுறவைக் கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நல்ல காட்சிகளைக் காண்பிக்க முடியவில்லை. 

புதிய அரசமைப்பைக் கொண்டுவந்து, அதனூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற எண்ணத்தில் (ஆனால் இது நிறைவேறக்கூடிய காரியம் எனத் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை), ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அன்றைய அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்க வேண்டிய அவ(சிய)சர நிலை இருந்திருக்கலாம். அத்துடன், அவ்வாறாக அவர்கள் வாதிடலாம்.  ஆனாலும் கூட்டமைப்பினரால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டப் பணிகளைக்கூட, ஐந்து ஆண்டுகளில் பூரணப்படுத்த முடியாது போனமை, சிறப்பான விளைவுகளைக் காட்டாத வினைத்திறன் அற்ற தலைமைத்துவப் பண்பாகவே பார்க்க முடியும். நிறைவில், அரசியல் சீர்திருத்தமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளும், ஆமை வேகத்தில் ஓடி, அவையும் இன்று நின்றுவிட்டன. 

உண்மையில், நம்பிக்கை கொள்ளக்கூடிய எந்தவொரு தமிழ் அரசியல்த் தலைவர்களும் அற்ற நிலையில், அநாதை இல்லங்களில் வாழ்வதைப் போலவே தமிழ் மக்கள் இன்று தங்கள் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.  

இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடீபி, வரதர் அணி என ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியை ஆதரித்த (வடக்கு, கிழக்கில்) கட்சிகள், வரும் பொதுத் தேர்தலிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீ

ஜனாதிபதித் தேர்தலில், இவர்கள் கை காட்டிய வேட்பாளருக்கு (கோட்டாபய ராஜபக்‌ஷ), தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனாலும், பொதுத் தேர்தலில் இவர்களே களம் இறங்குவதால், அவர்கள் நம்மவர்கள் (தமிழ்ப் பிரதிநிதிகள்) தானே எனத் தமிழ் மக்கள் சிலவேளை வாக்களிக்கலாம். 

அதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய தேசியக் கட்சியும், வேறு சில தமிழ் உதிரிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வடக்கு, கிழக்கில் போட்டியிடும். இதற்கு மேலதிகமாக, தமிழ் மக்களது வாக்குகளைச் சிதறடிப்பதற்காக, பல சுயேட்சைக் குழுக்களும், திட்டமிட்டக் களமிறக்கப்படலாம். பலர்,  அதற்காகக் கொழுத்த விலை போவார்கள்.  

இந்நிலையில், யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) கட்சிகள் பிரிந்து போட்டியிட்டு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத்துக்குச்  செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாக, வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் பிரிந்து போட்டியிட்டு, தமிழினம் தனக்கான ஆசனங்களை மற்றைய இனங்களுக்கு தாரை வார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.

 ஆகவே, இவ்வாறான ஆபத்துகளைத் தமிழ் மக்கள் தடுக்கத் தயாராக வேண்டும். கொள்கைகள், கோட்பாடுகள் என்ற எல்லை கடந்து, அவை ஒருபுறம் இருக்க, ஒற்றுமை என்ற ஒற்றைப் புள்ளிக்குள், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இழு(அழை)த்துவர வேண்டும். 

வெறுமனே, கட்சி அரசியலுக்குள் செக்கு மாடுகள் போலச் சுற்றிவரும் தமிழ்த் தரப்புகளை, என்ன விதத்திலாவது அழுத்தங்களைக் கொடுத்து, ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான வேலைத்திட்டத்தை வேகமாக முன்னெடுக்க வேண்டும். 

அதற்கு, தமிழ்ச் சமூகத்தினது சமய சமூகத் தலைவர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர், வர்த்தகச் சமூகத்தினர், ஏனைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து, உடனடியாகவும் ஆரோக்கியமானதுமான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .