2020 மே 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார்.   

ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.   

இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியளிக்க இணங்கி இருந்தமையும் ராஜபக்‌ஷ - இந்தியா இடையேயான, ‘இரண்டாம் இன்னிங்ஸ்’இன், சுப ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

2015இற்கு முன் ராஜபக்‌ஷ, இந்தியா இடையேயான உறவு, சுமூகமானதாக இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ கண்ட தோல்வி, ராஜபக்‌ஷக்களுக்கு சர்வதேசம், பூகோள அரசியலில் சமநிலையைப் பேணவேண்டியதன் அத்தியாவசியத்தையும் அதைத் தந்திரோபாய ரீதியில் கையாளவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருக்கிறது. இதை, ஜனாதிபதி கோட்டாபயவின் ஆரம்பகால நடவடிக்கைகள், எமக்கு உணர்த்தி நிற்கின்றன.  

சிலர், மோடி-ராஜபக்‌ஷ ஆகியோரிடையேயான அரசியல் ரீதியிலான ஒற்றுமைத் தன்மைகளே இந்தப் ‘புதிய ஒற்றுமை”க்குக் காரணம் என்கிறார்கள்.   

மோடியும் ஒரு பெரும்பான்மையினத் தேசியவாதி; அதுபோலவே, ராஜபக்‌ஷக்களும் பேரினத்தேசியவாதிகள். ஆகவே, அவர்கள் இணங்கிச் செயற்படுவதில் ஆச்சரியம் இல்லையென்று சிலர் சொல்கிறார்கள்.   

ஆனால், இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, ஆட்சிக்கு வருபவர்களால் பெருமளவுக்கு மாற்றியமைக்கப்படும் ஒன்று அல்ல; அதிலும் குறிப்பாக, இந்தியாவின் அயலவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு, ஆட்சிக்கு வரும் கட்சிகளைத் தாண்டி, மிக நீண்டகாலமாக, ஒரே மாதிரியானதாகவே அமைந்திருக்கிறது.  

அணுகுமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அயலவர்கள் தொடர்பிலான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கை, ஸ்திரமானதாகவே இருந்திருக்கிறது.   

இதற்குக் காரணம், இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இது பற்றிக் கருத்துரைக்கும் மஞ்சரி சட்டர்ஜீ மில்லர், “பா.ஜ.கவின் கீழ் கூட, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பல அம்சங்கள், இன்றும் உலகில் இந்தியாவின் பங்கைப் பற்றிய பழைய, நிறுவன மயமாக்கப்பட்ட கருத்துகளிலேயே சாய்ந்துள்ளன. மேலும், முந்தைய எல்லாக் காங்கிரஸ் அரசாங்கங்கள், தங்கள் கண்ணோட்டங்களிலும் உத்திகளிலும் ஒற்றைத் தன்மையிலேயே செயற்பட்டிருக்கின்றன என்று நினைப்பதும் தவறானதாகும். காங்கிரஸின் கீழான இந்தியாவுக்கும் பா.ஜ.கவின் கீழான இந்தியாவுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையின் தூரநோக்குக்கு இடையில் வேறுபாடுண்டு என்று கூறுவது தவறாகும். பல வழிகளில் அவை முன்னையதன் தொடர்ச்சியாகவே அமைகின்றன” என்கிறார்.  

சுர்ஜித் மான்சிங், ராஜு தோமஸ் ஆகிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், 30 ஆண்டுகளில் பெருமளவு மாறியிருந்தாலும், அமெரிக்காவின் ‘மொன்றோ கோட்பாடு’, ‘ஐசன்ஹவர் கோட்பாடு’, ‘நிக்ஸன் கோட்பாடு’ (குவாம் கோட்பாடு) போன்று வெளிப்படையான கொள்கைகளை, பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பில், இந்தியா கொண்டிருக்கவில்லை என்று கருத்துரைக்கிறார்கள்.   

ஆனால், பிரபலமான அரசறிவியலாளரும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆய்வாளருமான பபானி சென் குப்தா, வெளிப்படையாக இந்தியா அறிவிக்காவிட்டாலும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில், வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதனை அவர் முதலில், ‘பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும், பின்னர் ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது.   

பபானி சென் குப்தா குறிப்பிட்ட இந்தியக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும்.  

இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும், இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது.  

மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.   

இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதுதான் ‘இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கொள்கை’ என்று 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பபானி சென் குப்தா எழுதியிருந்தார்.   

சுருக்கமாக, இந்தக் கொள்கையானது, இந்தியா, தன்னைத் தெற்காசியப் பிராந்தியத்தின் (பாகிஸ்தான் தவிர்த்து) ‘பெரியண்ணன்’ஆக உருவகித்துக் கொள்வதைச் சுட்டுகிறது.  

1980 களில் இருந்த நிலையை விட, தற்போதைய பூகோள அரசியல் நிலையும் களமும் பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இன்று, சீனாவைச் சமன் செய்வதுதான் இந்தியாவுக்குத் தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரும் சவால்.   

மறுபுறத்தில், சீனாவும் தெற்காசியாவில் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் மும்முரமாக முன்னெடுத்து வருகிறது. பாகிஸ்தானோடு மிக நெருக்கமாகச் சீனா செயற்பட்டு வருவதுடன், சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் பெருவீதியை அமைத்தும் வருவதுடன், பாகிஸ்தானின் ‘க்வாடார்’ துறைமுகத்தையும் 2059 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது.   

மறுபுறத்தில், தற்போது நேபாளத்தில் ஆட்சியிலிருக்கும் நேபாள கொம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) அரசாங்கத்தோடு, சீனா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, நேபாளத்திலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.   

மேலும், பங்களாதேஷிலும் சீனா மிகப்பாரியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில், வேறெந்த நாட்டிலும் சீனா முதலிட்டமையை விட, மிக அதிக அளவில், பங்களாதேஷில் முதலிட்டிருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கருத்துரைப்பதுடன், பங்களாதேஷை கடன்வலையில், சீனா அழுத்தப் பார்க்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள்.  

ஆகவே, இந்தியாவின் அயலவர்களை வளைப்பதில், தனது பிடிக்குள் கொண்டுவருவதில், சீனா மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருவது ‘வௌ்ளிடைமலை’. இதுதான், இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரும் சர்வதேச பூகோள அரசியல் சவாலாகும்.  

2015இற்கு முன்னர், ராஜபக்‌ஷக்களின் சீனாச் சார்பு நடவடிக்கைகள், இந்தியாவை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது என்பது வௌிப்படையாகவே தெரிந்தது.   

2015 ஆட்சி மாற்றத்தில், மேற்குலகினது மட்டுமல்லாது, இந்தியாவினது பங்கும் இருந்தது என்ற குற்றச்சாட்டையும்  அனைவரும் அறிந்திருந்தனர். 2019இல் மீண்டும் ஆட்சிப்படி ஏறியிருக்கும் ராஜபக்‌ஷக்களுக்கு ,2015இற்கு முன்னர் வௌியுறவுக் கொள்கை தொடர்பிலான தமது அணுகுமுறையில் இருந்த தவறுகள், குறிப்பாக, ‘பெரியண்ணன்’ தொடர்பிலான தமது அணுகுமுறைத் தவறுகள் தௌிவாகப் புரிந்திருப்பதையே, கோட்டாவின் ஆரம்பகால நடவடிக்கைகள் உணர்த்தி நிற்கின்றன.   

இலங்கை தொடர்பிலான இந்தியாவின் எதிர்பார்ப்பு என்பது, மிகவும் நேரடியானதும் தௌிவானதுமாகும். இலங்கையினது சர்வதேசக் கொள்கை எப்படிக் கட்டமைந்தாலும், அதில் ‘இந்தியாவுக்கு முதலிடம்’ வழங்கவேண்டும் என்பதே, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். அதுபோலவே, இந்தியாவும் ‘அயலவர்களுக்கு முதலிடம்’ என்ற வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிக்கிறது.   

தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைச் சமன் செய்ய, இந்த வௌியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு அவசியமாகிறது. இந்தியாவின் இந்த எதிர்பார்ப்பு, இலங்கை அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்படும் வரை, இந்தியா, இலங்கையின் ஏனைய முடிவுகளில் தலையிடாது என்று உறுதியாக நம்பலாம்.   

ஜனாதிபதி கோட்டாபயவின் முதற்கட்ட நடவடிக்கைகள், இந்தியாவை அலட்சியப்படுத்தாத ‘இந்தியாவுக்கு முதலிடம்’ என்ற சர்வதேச அணுகுமுறையைக் கையாள விளைகிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.   

இதை ஜனாதிபதி கோட்டாபயவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கும் வரை, இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் இந்தியா வலுவான தலையீடு எதையும் செய்யாது. ஜனாதிபதி கோட்டாவின் எதிர்பார்ப்பும் இதுதான்.  

இங்குதான் தமிழ் அரசியல் தலைமைகள், பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலம் முதல், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவிடம் சரணாகதியடைந்த அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள்.   

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழர் விவகாரம் என்பது, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ‘துருப்புச் சீட்டு’. இந்திய நலன்களுக்கு எதிராக, இலங்கை செயற்படும் போது, இலங்கையில் தலையிடுவதற்கு, இந்தியாவுக்கு இருக்கும் வௌிப்படையனதொரு காரணம் இலங்கையின் இனப்பிரச்சினை.   

அதனால்தான், இலங்கையின் தமிழர் தலைமைகளைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆகவே, இலங்கை அரசாங்கம், இந்திய நலன்களைப் பாதிக்காது, தமது காய்களை நகர்த்தும் வரையில், தமிழர் விவகாரம் பற்றி, அர்த்தபூர்வமான எந்தவோர் அழுத்தத்தையும் இந்தியா வழங்கப் போவதில்லை.  

 இந்தச் சந்தர்ப்பத்தில், வெறுமனே 13ஆம் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியா இலங்கைக்கு சொல்லுமேயன்றி, வேறெதையும் தமிழ்த் தலைமைகள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.   

ஆகவே, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்த அர்த்தபூர்வமான முன்னகர்வுகளும் ஏற்படாவிட்டாலும், தமிழ்த் தலைமைகளால் அதுபற்றி எதுவும் செய்யமுடியாத நிலைமை ஏற்படப்போகிறது.   

இந்திய-சீன-அமெரிக்க நலன்களை, ராஜபக்‌ஷக்கள் சரியாகச் சமன் செய்து, தமது காய்நகர்த்தல்களை முன்னெடுத்தால், தமிழ்த் தலைமைகளுக்கு இந்தப் ‘பூகோள அரசியலில்’ காய்நகர்த்தல் செய்ய இடமேயில்லாமல் போய்விடும்.   

ஆகவே, இந்தச் சூழலில், ராஜபக்‌ஷக்களுடனான அரசியல் ஊடாட்டங்களினூடாகத் தமது நலன்களை அடையப்பெற்றுக் கொள்வது, அல்லது இந்தியாவுடனான உறவுகளில் ராஜபக்‌ஷக்கள் மீண்டும் சறுக்கும் வரை காத்திருப்பது என்ற இரண்டு தெரிவுகளே, தமிழ்த் தலைமைகளிடம் இருக்கின்றன. இது ஒரு வகை ‘செக் மேட்’ நிலைதான்.  

‘தமிழ்நாடு’ என்ற காரணத்தைத் தாண்டி, இந்தியாவுக்குத் தமிழர் சார்பாகப் பலமான அழுத்தம் தரக்கூடிய எந்த சக்தியும் இல்லை. ஆனால், ‘தமிழ்நாட்டின்’ ஆதரவுச் சக்தியை நீர்த்துப்போகச் செய்யும் அரசியல் தந்திரோபாயங்கள் மிகப் பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

இலங்கையின் தமிழர் பிரச்சினையை, உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதைத்தாண்டி, கேலிக்கூத்தாக மாற்றுவதற்காகவே, தமிழ்நாட்டில் கோமாளிக் கட்சிகள் பல களமிறக்கப்பட்டுள்ளன. இது இலங்கைத் தமிழர் பிரச்சினையை, தமிழ்நாட்டின் அரசியல் மய்யவோட்டத்திலிருந்து நீக்கும் பணியை மிகவிரைவாகச் செய்து வருகிறது.  

 மறுபுறத்தில், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்கும் அறிவையும் திராணியையும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்‌ஷக்கள்,தமது காய்நகர்த்தல்களை சரியாக முன்னெடுக்கும் வரை, ‘பெரியண்ணனை’ அதிருப்தியாகாத வரை, இலங்கைத் தமிழ் தலைமைகளின் நிலையும் இனப்பிரச்சினைத் தீர்வின் நிலையும் ‘செக்மேட்’ தான்!    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X