2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்காக காத்திருத்தல்

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும்.   

எமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை.   

“தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.   

இதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதும், யாருடைய கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள் என்பதும், இப்போது இன்னும் தெளிவாகிறது.   

மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு, நீண்ட நாள்களுக்கு முன் விடுக்கப்பட்டாலும், பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்காமையால், இது சாத்தியமாகவில்லை என்று காரணமும் சொல்கிறார்கள்.  

இந்தத் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு, ஓராண்டுக்கு மேலாக நேரம் கிடைக்காமல் இருந்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய ஜனாதிபதியைச் சந்திக்கப் போதுமான நேரம் கிடைத்திருக்கிறது.  

இது, இந்தியா எதை முதன்மைப்படுத்துகிறது என்பதை விளக்கப் போதுமானது. ஆனால், தமிழ் அரசியல் தலைவர்கள், புதிய பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.   

இன்னொரு தேர்தல் வருகிறது. தீபாவளியைச் சொல்ல முடியாது. எனவே, இப்போது இந்தியாவைச் சொல்லுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் போலும்.   

தமிழ் மக்கள், யாரையும் நம்பாமல், தங்களது சொந்தக் கால்களில் நின்று, போராடி வெல்லும் வரை, தமிழ் மக்களின் விடிவு சாத்தியமில்லை.   

13 என்ற மாயமானை, இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இது, கொஞ்சம் வசதியானது. இந்தியா, ஈழத்தமிழர், அரசமைப்பு என்ற பல்வேறு பெட்டிகளில், இதை அடைக்கவியலும். தமிழருக்கான தீர்வில், இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்பவர்கள், இரண்டு விடயங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.   

முதலாவது, தமிழருக்கு, இந்தியா வலியுறுத்துகின்ற தீர்வு, என்ன என்பதாகும்.  

 இரண்டாவது, தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவதில், எந்த அடிப்படையில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்? யாருக்கு, யாரால், எப்போது, எங்கே இதுதொடர்பிலான உறுதிமொழி அளிக்கப்பட்டது.   

இவ்விரு கேள்விகளுக்கான விளக்கமான பதிலை, இந்தியாவை நம்பச் சொல்லுகின்ற தமிழ்த் தலைவர்கள், உடனடியாகச் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இவர்கள் மக்களை நம்பாமல், இந்தியாவை நம்பச் சொல்பவர்கள் ஆவார்.   

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து, எதுவித கருத்தும் தெரிவிக்காமல், வெறுமனே வெற்றுக் கோஷங்களால், தங்கள் தேர்தல் ஆசனங்களைக் காப்பாற்றுவதற்கான போட்டியில், இப்போதே இறங்கி இருக்கிறார்கள்.   

தமிழ் மக்களது அஹிம்சை வழியிலான போராட்டத்திலும் சரி, அதைத்தொடர்ந்த ஆயுத வழியிலான போராட்டத்திலும் சரி, போர் முடிவுக்கு வந்த நிலையில், ஏற்பட்ட புதிய நிலைமைகளின் அடிப்படையிலும் சரி, தமிழ் மக்களுக்கு ஆதரவாக, இந்தியா என்ன செய்தது என்ற கேள்வியை, மீண்டும் மீண்டும் நாம் கேட்டாக வேண்டும்.  

இந்தியா, இலங்கைக்குக் குழி பறிக்கிறது 

இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா, குழிபறித்து வந்துள்ளது. இதுதான் எமது கடந்த 50 ஆண்டு கால வரலாறு ஆகும்.  

இன்று, இந்தியா ஒரு பாசிச அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. இலங்கையும் அவ்வாறே.   
இந்தியா, தனது சொந்த மக்களையே நசுக்குகிறது; அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் வாழுகின்ற மக்கள், தங்களது உரிமைகளைக் கோரிப் போராடுகிறார்கள். அவர்களுடைய உரிமைகளையே வழங்காத இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலை முன்னின்று நடத்தி, தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வது, எவ்வளவு பெரிய ஏமாற்று.  

இன்று, இலங்கையும் இந்தியாவும் அடிப்படை ஜனநாயகத்தைத் தக்க வைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுதான், இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அரசியல்தீர்வு பற்றியும் அதற்கான இந்தியாவின் வலியுறுத்தல் பற்றியும் பேசுவது அபத்தமானது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .