2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இந்தி(யா)ரா காண் படலம்

என்.கே. அஷோக்பரன்   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 110)

இந்திய விஜயம்  

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார்.   

1983 ஓகஸ்ட் 11ஆம் திகதி எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன, டெல்லியை சென்று அடைந்திருந்தார். அதேதினத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், விமானம் மூலம் சென்னையை வந்தடைந்திருந்தார்.   

சென்னை வந்த அமிர்தலிங்கத்தை, இந்திய உள்துறை அமைச்சர் பென்டகன்டி வெங்கடசுப்பையாவும் இந்திய வௌிவிவகாரச் செயலாளர் கே.எஸ்.பாஜ்பாயும் சென்னையில் வரவேற்றனர். இதற்காக இவ்விருவரும் டெல்லியிலிருந்து சென்னை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்திரா-எச்.டபிள்யு. ஜெயவர்த்தன சந்திப்பு  

டெல்லி வந்திருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை, நடந்துமுடிந்திருந்த 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு பற்றி விடயத்துடன் ஆரம்பமானது.   
இந்திரா காந்தி, அண்மையில் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் பற்றி இந்திய நாடாளுமன்றமும் இந்திய மக்களும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் இதுபோன்ற வன்முறைகளையும் கொலைகளையும் பாகுபாட்டையும் கண்டித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.   

அதுவும் குறிப்பாக, பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக அது நிகழ்த்தப்படுவது பெரிதும் கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறினார். மேலும், இலங்கையின் சுந்திரத்தையும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்தியா மதிப்பதாகக் குறிப்பிட்ட இந்திரா காந்தி, மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதில்லை; ஆனால், இரு நாட்டு மக்களிடையே உள்ள கலாசார, வரலாற்று மற்றும் ஏனைய நெருங்கிய தொடர்புகளின் காரணமாக, அதுவும் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் காரணமாக, அங்கு நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைப் பாதிக்காது என்று கூறமுடியாது என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் எடுத்துரைத்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்தான நிலைமைகள் பற்றி இந்திரா காந்தி கொண்டிருந்த அக்கறையை உணர்ந்து கொண்ட எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன, இலங்கையில் நிலைமை விரைவாக சுமுக நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அகதிகள் பலரும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்தார்.   

ஆனால், ஓகஸ்ட் 11 திகதி வரையில் அகதிகள் பெருமளவுக்குத் தமது வீடுகளுக்குத் திரும்பிய பதிவுகள் இல்லை. குறிப்பாக, கொழும்பிலிருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுசென்று சேர்ப்பிக்கப்பட்ட, கொழும்பில் சொத்துகளைக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இன்னமும் யாழ்ப்பாணத்திலேயேதான் இருந்தனர்.   
ஆனாலும், எச்.டபிள்யூ.ஜெயவர்தன, நிலைமை விரைவில் சுமுகமாகிக் கொண்டு வருவதாக இந்திரா காந்தியிடம் தெரிவித்ததுடன், வீடுகளை, சொத்துகளை இழந்தவர்களுக்கு அதை மீட்பதற்காகவே அரசாங்கம் சொத்துகள் மற்றும் கைத்தொழில் புனரமைப்பு அதிகாரசபையை (REPIA - Rehabilitation of Property and Industries Authority) அமைத்துள்ளதாகவும் இதனுதவியுடன் தமிழ் மக்கள் தமது வீடுகளைப் புனரமைக்க முடியுமென்றும் தெரிவித்தார்.   

அத்தோடு, அரசாங்கம் தமிழர்களின் சொத்துகளை கபளீகரம் செய்ய அல்லது சுவீகரிக்கப் பார்க்கிறது என்ற கருத்தில் துளியேனும் உண்மையில்லை என்றும் இந்திரா காந்தியிடம் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன எடுத்துரைத்தார்.   

இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி பிரதமர் நிதியைக் கொண்டு, தான் இலங்கைக்கான நிவாரண நிதியம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதற்கு உதவித் தொகை பொதுமக்களிடமிருந்து குவிந்தவண்ணமுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், உடனடி நிலைமைகளைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் திருப்தி செய்யும், தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிரந்தரத் தீர்வொன்றை, எட்டுவதற்கான செயற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.   

இதற்குப் பதிலளித்த, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, ஏற்கெனவே ஜனாதிபதி அத்தகைய செயற்பாடொன்றை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஆனால், அத்தகைய செயற்பாடு வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானால், எல்லாத் தரப்பு மக்களையும் ஜனாதிபதி ஜே.ஆர் தன்னுடன் அரவணைத்துச் செல்வது அவசியமென்றும், அதற்காகவே ஜனாதிபதி ஜே.ஆர், சர்வ கட்சி மாநாட்டை நடத்தத் தீர்மானித்திருந்ததாகவும் தெரிவித்ததுடன். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அடிப்படையாக அமையத்தக்கதாக, ஜே.ஆரினால் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்படவிருந்த ஐந்து அம்ச நடவடிக்கைத் திட்டத்தை, இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்தார்.  

 மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பிலான சட்டங்களை, முழுமையாக அமுல்படுத்துதல்; அரசியலமைப்பில் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அதன் பயன்பாட்டை முன்னெடுத்தல் (கவனிக்க: தேசிய மொழி, உத்தியோகபூர்வ மொழி அல்ல), வன்முறை கைவிடப்படும் என்ற நிபந்தனையின் பாலான பொதுமன்னிப்பு வழங்கப்படுதல் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல், பயங்கரவாதமும் வன்முறையும் நிறைவுக்கு வரும்போது, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின்  செயற்பாட்டைத் தொடராதிருத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படுதல் ஆகிய ஐந்து அம்சத் திட்டத்தை ஜே.ஆர் முன்வைக்கவிருந்ததாக எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார்.   

இதைவிடவும், பிரிவினைக் கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், சிறையில் குற்றவாளியாகக் காணப்படாது, வழக்கு விசாரணை முடியாது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது பற்றி கலந்துரையாடவும் வேறும் ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டுள்ள வேறேதும் விடயங்களை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ஜே.ஆர் தயாராக இருப்பதாகவும் இந்திரா காந்தியிடம் எச்.டபிள்யூ.ஜெயவர்தன எடுத்துரைத்தார்.   

எச்.டபிள்யூ.ஜெயவர்தன சொன்னவற்றைக் கேட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்தி செய்யப் போதுமானவை அல்ல என்று தனது எண்ணத்தை வௌிப்படுத்தினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான், முக்கிய விடயத்தை இந்திரா காந்தி முன்வைத்தார்.   

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருடன் இலங்கை அரசாங்கம், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று இந்திரா காந்தி கூறினார். இதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனது பிரிவினைக் கோரிக்கையை கைவிடும் வரையில் அவர்களுடன் பேசுவதில்லை என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.   

அப்படியானால் இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்த் தலைவர்களுடன் இதுபற்றிப் பேசத் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி தெரிவித்தார். இது பற்றித் தான் மேலும் பேசுவதற்கு முன்பு, ஜனாதிபதி ஜே.ஆருடன் பேச வேண்டும் என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார்.   

இத்துடன் இந்திரா காந்தியுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவுடனும் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்திரா காந்தியுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் மறுதினம் 1983 ஓகஸ்ட் 12 அன்று நடைபெறவிருந்தது.   

இந்த நிலையில் ஓகஸ்ட் 11 எம்.சிவசிதம்பரம் மற்றும் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோரோடு, சென்னை வந்திருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தன்னை வரவேற்ற உள்துறை அமைச்சர் வெங்கடசுப்பையா மற்றும் வௌிவிவகார செயலாளர் பாஜ்பாய் ஆகியோரோடு பேசினார். அதைத் தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை (எம்.ஜி.ஆர்) சந்தித்துப் பேசினார்.   

அதன் பின்னர், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்துப் பேசினார். இதனிடையே ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அமிர்தலிங்கம், இனப்பிரச்சினை தொடர்பில் இணக்கமான முயற்சிகள் நிராகரிக்கப்பட்டதால்தான், தமிழர்கள் தனிநாடு கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும் 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி, தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த பின்னரும் கூட, தாம் இணக்கமான தீர்வொன்றை எட்டவே ஜே.ஆரின் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முயற்சித்ததாகவும் அதனடிப்படையில்தான் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தாம் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்குத் தேவையான நிதியோ, அதிகாரங்களோ வழங்கப்படாத பட்சத்தில் அது வெற்றியளிக்கவில்லை எனவும் நிதியையும் அதிகாரத்தையும் தாம் கோரியபோது, தாம் அரசாங்கத்திடமிருந்து கடும் எதிர்ப்பையே சந்தித்ததாகவும் தெரிவித்தார்.   

அமிர்தலிங்கத்தின் இந்த ஆதங்கத்தில் நிறைய நியாயங்கள் இருக்கின்றன. தமிழ் ஆயுதக் குழுக்களின் எதிர்ப்பினாலும் அழுத்தத்தினாலும் பல கட்சிகள் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலிலிருந்து பின்வாங்கிய போது, வௌிப்படையான மிரட்டல்களை மீறியும் தமிழர் உருவாக்கிய விடுதலைக் கூட்டணி, அத் தேர்தலில் பங்கேற்றிருந்தது.   

பிரிவினையைக் கோரி, பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களில் போட்டியிட்டதே, அவர்கள் தனிநாட்டை விட்டிறங்கி நியாயமானதொரு தீர்வுக்கு சமரசமாகத் தயார் என்ற நல்லெண்ணத்தைச் சொல்லும் நேசக்கரத்தை நீட்டும் சமிக்ஞைதான்.   

இது ஜே.ஆருக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் நிச்சயம் தெரியும். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட, ஜே.ஆர் அரசாங்கம் விரும்பியிருந்தால், நிச்சயமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அச்சபைகளுக்குரிய அதிகாரங்களையும் நிதியையும் வழங்கி, அதை இயங்கச் செய்வதனூடாக அதற்கான முதற்படியை எடுத்திருக்கலாம்.   

ஆனால், அதைச் செய்யாது, மாவட்ட அபிவிருத்தி சபைகளை அதிகாரமோ, நிதியோ அற்ற வெற்று அலங்காரமாக வைத்துக் கொண்டு, மறுபுறத்தில் தமிழ் மக்கள் மீதான பாரிய அடக்குமுறையும் இன அழிப்பும் பிரயோகிக்கப்பட்டபோதும் அதற்கான நீதியோ நியாயமோ தர முன்பு தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தை விட்டு நீக்கத்தக்க ஆறாவது திருத்தத்தை கொண்டு வந்து, இணக்கப்பாடு விரும்பிய தமிழ்த் தலைமைகளைக் கூட பிரிவினையின் எல்லைக்குத் தள்ளிவிட்டு, பிறகு இந்திய பிரதமரிடம் சென்று, அவர்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டால்தான் நாம் பேசுவோம் என்பது என்ன வகையான நியாயம்? 

மீளிணக்கப்பாடு என்பது இருதரப்பு இசைவினாலும் உருவாக்கப்பட வேண்டியது. ஒரு தரப்புத் தான் நிற்குமிடத்தில் நின்று கொண்டு, மறுதரப்பை இறங்கி வரச் சொல்வது மீளிணக்கப்பாடு அல்ல.   

அது சரணாகதி. அப்படியானால், தமிழ்த் தரப்புப் பிரிவினை என்ற இடத்தில் நின்று கொண்டு, மீளிணக்கப்பாடு எப்படிப் பேசுவது என்ற கேள்வி வரும். ஆனால், கொள்கையளவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பிரிவினையை முன் நிறுத்தியிருந்தாலும் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களில் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிப் போட்டியிட்டதனூடாக, தாம் எவ்வளவு தூரம் இறங்கி வரத் தயார் என்பதை நடத்தையுடாகவே வௌிப்படுத்தியிருந்தார்கள்.   

நல்லலெண்ணத்துடன் மீளிணக்கப்பாட்டை ஜே.ஆர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை ஜே.ஆர் அரசாங்கம் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாது போனது, இந்த நாட்டின் துரதிஷ்டம் மட்டுமல்ல துயரமும் கூட.   

ஜே.ஆர் அரசாங்கத்தின் மீது, முற்றிலும் நம்பிக்கையிழந்திருந்த அமிர்தலிங்கம், இந்திய ஊடகங்களிடம், “இந்தியாவும் சர்வதேசமுமே இனி எமது இரட்சகர்கள்; நாம் ஜே.ஆர் மீதும் இந்த அரசாங்கத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவர்களோடு பேசுவதில் இனிப் பயனில்லை. அவர்கள் தமிழர்களை அழிக்கவே தலைப்பட்டிருக்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் தனது விரக்தியைப் பதிவு செய்தார்.   

ஓகஸ்ட் 12 ஆம் திகதி இந்திரா காந்திக்கும் எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுக்குமிடையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .