2024 மே 02, வியாழக்கிழமை

‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’

எம். காசிநாதன்   / 2019 மே 20 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. 

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அமையுமா அல்லது ஆட்சி கலைவதற்கான காரணமாக உருவெடுக்குமா என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடப்பது இடைத் தேர்தல் என்றாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாகச் சுற்றி, அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி மீதான தாக்குதல், பிரதமர் மோடி மீதான தாக்குதல் என்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஸ்டாலின் மீதான தாக்குதல், தினகரன் மீதான தாக்குதல் என்று பிரசாரத்தை முடித்தார். 

ஆனால், நடிகர் கமல்ஹாசனின் பிரசாரம்தான் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தை திடீரென்று அகில இந்திய அளவில் திசை திருப்பியது. “மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேதான், முதல் இந்துத் தீவிரவாதி” என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் வெடிகுண்டை வீசினார். உடனே பா.ஜ.கவும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவும் கமல்ஹாசன் மீது தாக்குதலைத் தொடுத்தன. 

அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜி, எல்லையைத் தாண்டி “கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்” என்றார். பின்னர் ஒரு கட்டத்தில் “ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு கமல்ஹாசன் பேசுகிறாரா என்பதை இந்தியஉளவுத்துறை விசாரிக்க வேண்டும்” என்றே கோரிக்கை விடுத்தார். 

அதேநேரத்தில் கமலின் இந்த ‘இந்து தீவிரவாதி’ பிரசாரத்துக்கு திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அ.தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தி.மு.க கூட்டணியின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினோ நடிகர் கமலின் பேச்சுப் பற்றி கருத்துக் கூறவில்லை. 

அதேநேரத்தில் எதிர்பாராத விதமாக, குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் உடன் பதில் சொல்லாத பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமலின் கருத்துக்கு மறு கருத்துச் சொன்னார். “எந்த ஓரு் இந்துவும் தீவிரவாதியாக இருப்பதில்லை” என்று சுடச்சுட பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.

ஆகவே, கமலின் ‘இந்து தீவிரவாதி’ பிரசாரம் ஏதோ ஓர் அரவாக்குறிச்சி இடைத் தேர்தலில் சிறுபான்மையின சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல, அந்த பிரசாரத்தின் பின்னணி அகில இந்திய அளவில் இருக்கிறது என்பது பிரதமர் உடனே பதிலளித்த விதத்தில் எதிரொலித்தது. 

தமிழ்நாடு தேர்தல் களம், இதுவரை இந்து, இந்து அல்லாதோர் என்ற பிரசாரக் களத்தைப் பார்த்தது இல்லை. பா.ஜ.க பல வருடங்களாகத் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும், இந்த முறை போல் இந்து மத உணர்வுகள் அடிப்படையில் இவ்வளவு ஆவேசமாக பிரசாரத்தை மேற்கொண்டதில்லை. சமூக வலைத்தளங்களிலும் முழு வீச்சில் பிரசாரம் நடைபெற்றதில்லை. 

அதற்கு முக்கியக் காரணம், இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்தார். அவர் மீது சிறுபான்மை மக்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதற்காக தி.மு.கவில் உள்ள இந்து வாக்காளர்கள் கருணாநிதியிடம் கோபித்துக் கொள்ளவில்லை. 

அ.தி.மு.கவின் சார்பில் ஜெயலலிதா களத்தில் இருந்தார். அவரை பொதுமக்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவும் கூட, இந்துக்களின் உணர்வுகளின் ஆதரவாளராகவே பார்த்தனர். உ.பியில் ராமர் கோவில் கட்ட கரசேவைக்கு தமிழகத்தில் இருந்து தொண்டர்களை அனுப்பியது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவளித்தது என்று பா.ஜ.கவை விட, ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருந்தார். ஆகவே அவரது தலைக்கு மேல் சென்று, இந்துமத உணர்வாளர்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க நம்பவில்லை. 

அதேபோல், “கருணாநிதி இந்து மத விரோதி” என்று பிரசாரம் செய்து அனைத்து இந்துகளின் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என்றும் பா.ஜ.க. நினைக்கவில்லை. அதனால் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த தேர்தல்களில் பா.ஜ.க, இந்துமத உணர்வுகள் அடிப்படையில், ஏன் இந்துத்துவா பிரசாரத்தை முன் வைத்துச் செல்வதில் பின்னடைவு பெற்ற நிலையிலேயே இருந்தது. 

ஆனால் தற்போது ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்ற நேரத்தில், திராவிட இயக்க உணர்வுகளைப் பின்னுக்குத்தள்ளி இந்துத்துவா களத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலை பா.ஜ.க சந்தித்தது. 

பா.ஜ.கவின் இந்தப் பிரசாரத்துக்கு மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் அ.தி.மு.கவும் ஒத்துழைத்தது. ஆகவேதான், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டு கண்டனக் கணைகளைத் தொடுத்தன. குறிப்பாக தி.கவை விட தி.மு.க மீதுதான் அதற்காகக் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி, “இந்துக்கள் யாரும் தி.மு.கவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்றே பிரசாரத்தை சூடுபிடிக்க வைத்தன.

அதன் தொடர்ச்சியை அரவாக்குறிச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏப்ரல் 18ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர்களுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள், தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டாம் என்று கருதும் வாக்காளர்கள் எல்லாம் கணிசமாக வாக்களித்துள்ளார்கள் என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் உருவாகலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. 

அந்த வேளையில், ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், நடிகர் கமல்ஹாசனின் கட்சி இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வரும் என்ற எண்ணம் பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அ.தி.முகவை வழி நடத்திய ஜெயலலிதாவின் இடத்தில் வைத்து, நடிகர் கமல்ஹாசனை அவர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே, இவரை முன் நிறுத்தி இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் முழு வீச்சில் கொண்டு வந்து விட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இந்துத்துவா மற்றும் இந்துத்துவா அல்லாதோர் என்ற அரசியல் மட்டுமே தமிழகத்தில் நடக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் விரும்புகிறார்கள். 

திராவிட அரசியலைப் பின்னுக்குக் கொண்டு சென்று, இந்துத்துவா அரசியலை முன் வைக்க, தமிழக மக்களின் மனதில் பதிய வைக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத இந்தத் தருணமே தக்க தருணம் என்று பா.ஜ.கவின் சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அதன் தாக்கமே நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சும் அதற்கும் உடனடியாக வட இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கமும் ஆகும். 

சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் தற்போது தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளிடம் உள்ள இந்து வாக்காளர்கள் மத்தியிலும் நடிகர் கமல்ஹாசன் இடம்பிடித்துக் கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க இந்துத்துவா எண்ணம் கொண்ட மக்களைக் கடுமையான பிரசாரத்தின் மூலம் அதிகப்படுத்தி அந்த ஆதரவை பா.ஜ.க பெற்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம். 

அதை நிறைவேற்றும் வகையில்தான், இந்த நான்கு இடைத் தேர்தல்களில் குறிப்பாக அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு அகில இந்திய முக்கியத்துவம் கிடைத்தது.

திராவிட அரசியல் பற்றிப் பேசுவதற்கு இப்போது தி.மு.கவிலும் சரி, அ.தி.மு.கவிலும் சரி, முக்கியத் தலைவர்கள் இல்லை என்பதைத் திடமாக பா.ஜ.க நம்புகிறது. தி.மு.க ஆரம்பித்து 70 வருடங்கள்; அ.தி.மு.க தொடங்கி 47 வருடங்கள். இந்நிலையில் திராவிட இயக்கக் கொள்கைகள் பலவீனமடைந்து விட்டன என்று இந்துத்துவா ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ஆகவே, இந்துத்துவாக் கொள்கையை, முழு வீச்சில் தமிழகத்தில் பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்து விட முடியும் என்பது பா.ஜ.கவின் தொலைநோக்கு கணிப்பு. 

‘இந்துத்துவா என்ற துருவத்துக்கு பா.ஜ.க; எதிர் துருவத்துக்கு நடிகர் கமல்ஹாசன்’ ‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது அரங்கேறி விட்டது. விழித்துக் கொள்ள வேண்டியது திராவிட இயக்கங்கள் தானே தவிர, தமிழக மக்கள் அல்ல. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .