2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

இனநெருக்கடித் தீர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசம்: தமிழர் தரப்பு செய்ய வேண்டியது என்ன?

Johnsan Bastiampillai   / 2020 ஜூன் 29 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில், எந்தத் தரப்பு வெற்றிபெறும் என்பதை, ஓரளவு அனுமானிக்கக் கூடிய சூழ்நிலையே, தற்போது வரையில் நிலவுகின்றது. இத்தகைய அனுமானத்தின் மீது, பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரணிகளோ சவால்களோ, வெற்றிபெறும் தரப்புக்கு முன்னால் இல்லை.

எனவே, ராஜபக்‌ஷக்களின் தலைமையிலான இந்த அரசாங்கமே, தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும் என்பதற்கான நிகழ்தகவுகள், அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால், அந்த வெற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டமையுமா என்பதுதான் கேள்விக்குறியாக அமைகின்றது.

எது எப்படி இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இனநெருக்கடிக்கான தீர்வைக் கட்டாயம் காணுவோம் என்ற தொனியில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இப்போது அடிக்கடி பிரஸ்தாபித்து வருகின்றார்.

ஏறத்தாள 80 வருடங்களாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் இலங்கையின் இனநெருக்கடிக்கு, ஒரு சுமூகமான தீர்வைத் தரக்கூடிய வல்லமையுள்ளவராக, தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த மட்டுமே இருக்கிறார். வேறெந்த அரசியல்வாதிகள் மத்தியில், அத்தகைய நடத்தைப் பண்புகளோ, சிங்கள பௌத்த பேரினவாதிகளிடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஆளுமையோ கிடையாது.

எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றால், வாக்குறுதி கொடுத்திருப்பதுபோல், இனநெருக்கடிக்கான தீர்வைக் காண்பதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை.

சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு இடையே அரசியல் அதிகாரம் தொடர்பாகக் காணப்படும் பிளவுகளும் முரண்பாடுகளும், இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளில் எந்தளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது கடந்தகால வரலாறு.

இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளைப் பலவீனப்படுத்தி, அதைத் தனக்குச் சாதகமான அரசியலாக்கவே, எப்போதும் மற்றைய தரப்பு தருணம் பார்த்தக் காத்திருந்தது.

இவ்வாறு, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காணப்பட்ட பிரிவினை, முரண்பாடுகள் காரணமாகவே, இனநெருக்கடிக்குத் தீர்வுகாண முடியாமைக்கு முக்கியமான காரணமாகக் கொள்ள முடியும்.

இனநெருக்கடிக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முதலில், ஆட்சியாளருக்கு எதிராக, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட போராட்டம் ‘கண்டிப் பாதயாத்திரை’ ஆகும். 1957இல் ஆட்சியில் இருந்த சுதந்திரக் கட்சியின் ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தத்தை எதிர்த்து, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்தனவால், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி இந்தப் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர், டட்லி-செல்வா ஒப்பந்தம், 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் போன்றவை கைச்சாத்திடப்பட்ட பொழுதுகளில், தெற்கின் அரசியல் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதமாக இந்த ஒப்பந்தங்களைப் பிரயோகித்து இருந்தனர்.

குறிப்பாக, 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில், சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரால் இனநெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட புதிய அரசமைப்பு வரைபு நாடாளுமன்ற விவாதத்துக்கு வந்தபோது, ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி, அந்த வரைபை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே கிழித்தெறிந்து, ‘இதுபோன்ற தீர்வுத் திட்டங்களை முன்வைக்கக் கூடாது’ என்று பலமான எதிர்ப்பைத் தெரிவித்தது.

2003ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கை, இடைக்கால சுயநிர்ணய அதிகாரசபை உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள், நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று, சந்திரிகா பண்டாரநாயக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி எதிர்ப்புக் கூக்குரலிட்டது. இதையடுத்து, பிரதம மந்திரியாகப் பதவிவகித்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியமைத்த நல்லாட்சிக் காலகட்டத்தில், அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத் திட்ட முயற்சிகளை, மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவினர் பலமாக எதிர்த்தனர்.

2017ஆம் ஆண்டு, நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு-செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்த இரா. சம்பந்தன் உரையாற்றும் போது, மஹிந்த தரப்பினரிடம் பின்வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ‘பிரிக்கப்பட முடியாத நாடொன்றுக்குள், மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் தான் உதவவேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால், அதற்கு வேறெந்த வழிகளையாவது மேற்கொள்ளுங்கள். ஆனால், அதற்குப் புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஏற்கெனவே மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் இணங்கிக் கொண்டிருந்த அடிப்படையிலேயே, புதிய அரசாங்கமும் தீர்வுத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அப்படியானால், சமாதான முயற்சிகளுக்கு உங்களுகளால், ஏன் ஆதரவு வழங்க முடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறு இனநெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சிகளின்போது, சிங்கள அரசியல் கட்சிகள், பெரும்பாலும் இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டே காணப்பட்டுள்ளன.

கடந்த கால அனுபவங்கள் இவ்வாறு இருக்கையில், நடைபெறவுள்ள தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்றால், அவர் இன்று சொல்வது போல், இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் வெற்றியளிக்குமா என்ற கேள்விக்கு, ராஜபக்‌ஷ உண்மையில் விரும்பினால் ‘ஆம்’ என்றே பதிலளிக்க முடியும்.

இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளை, இனவாத முயற்சிகளாகவோ நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளாகவோ சோடிப்பதற்கும் தடைக்கற்களைப் போடுவதற்கும் ஒரு வலிமையான அரசியல் பின்னணி, சிங்கள தேசிய அரசியலில் இப்போது கிடையாது.

முழுமையான பௌத்த சிங்கள இனவாத சக்திகள், குறிப்பாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் உட்பட சுதந்திரக் கட்சியிலும் பெரும்பாலானவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவக் கட்சிகளாகக் காணப்படுகின்றன. எனவே, இவர்கள் மஹிந்தவை எதிர்த்துக் கொண்டு, இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பப் போவதில்லை.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, ரணில் தலைமையிலும் சஜித் தலைமையிலும் காணப்படுகின்றது. இவர்கள், இருவரும் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்து இருக்கிறார்கள். வெளிச்சக்திகளில் தூண்டுதல்களினால், மஹிந்த மேற்கொள்ள எத்தனிக்கும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், அது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது.

ஏனெனில், மஹிந்த மட்டுமே நாட்டையும் பௌத்தத்தையும் சிங்கள மக்களையும் பாதுகாக்கக் கூடிய ஒரு தலைவர் என்பது, பெரும்பான்மையான சிங்கள மக்களின் மனதின் ஆழத்தில் நன்றாகப் பதிந்துள்ளது. போரில் வெற்றி பெற்ற அவர், தமக்கு எப்போதும் நன்மையே செய்வார் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.

போரில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனநெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று உண்மையில் நினைத்திருந்தால், அவரால் அதை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியும். அவ்வாறு அவர், தீர்வைப் பெற்றுத் தந்திருந்தால், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவி இருந்திருக்க மாட்டார்.

ஆனால், இனி அமையலாம் என எதிர்பார்க்கப்படும் அவரது ஆட்சிக்காலத்தில், இனநெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிகழ்ச்சித் திட்டம், அவரையும் அவரது ஆட்சியையும் பொறுத்தமட்டில், முக்கியமற்றதாகவே காணப்படும். அதை முக்கியத்துவம் பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு, தமிழர் தரப்பிடமே உள்ளது.

இந்த இடத்தில்தான், தமிழர் தரப்பு பலம்மிக்கதோர் அமைப்பாகத் திகழ வேண்டும். அதன் மூலமே, சமாதானத் தீர்வு முயற்சிகள் தொடர்பான, உறுதிமிக்க அழுத்தங்களை வழங்க முடியும்.
வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியில் ஒருவரும் இந்தக் கட்சியில் இருவரும் என்று, பல கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தீர்வு முயற்சிகளுக்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. ராஜபக்‌ஷக்கள், இந்தக் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, இலக்கை அடைய முடியாதவாறு அணியணியாகப் பிரித்துவிடுவார்கள். பின்னர், தமிழ்க் கட்சிகளிடத்தில் ஒற்றுமை இல்லை எனப் பழியை, தமிழ்க் கட்சிகள் மேல், இலகுவாகப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடுவார்கள்.

எனவே, வடக்கு-கிழக்கில் பலம் மிக்கதாக இருக்கும் தமிழ் கட்சி ஒன்றில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை இம்முறை தெரிவுசெய்வது, காலத்தின் தேவையாக உள்ளது. வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளர்கள், இந்த விடயத்தில் தெளிவாகச் சிந்தித்து, தீர்மானம் எடுத்து, இரண்டு மாகாணங்களிலும் பலம்மிக்கதாகத் திகழும் ஒரு தமிழ்க் கட்சிக்கு வாக்களித்து, அவர்களைப் பலமானதோர் அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம், இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .