2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்

காரை துர்க்கா   / 2019 ஜூன் 25 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்?   

அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்?   

‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கின்றான்’ என்கிறார் ரேபியா என்ற அறிஞர். அவ்வகையில், தமிழ் மக்களுக்கு இறுதியாக உறுதிமொழி வழங்கியவராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் விளங்குகின்றார். “தமிழர்கள் விரும்பாத இடங்களில் இருந்து, புத்தர் சிலைகளை அகற்றுவோம்”.   இதுவே, தமிழ் மக்களுக்குத் தேரர் வழங்கிய உறுதிமொழி ஆகும். 

இதன் மறுவடிவம், ஜனநாயக நாடான இலங்கையில், தமிழர்களது பிரதேசங்களில் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பதாகும்.   

நம்நாட்டின் தலைவிதியை, அடியோடு மாற்றக் கூடிய வல்லமை பொருந்தியவர்களாக, அன்று தொட்டு இன்று வரை, தேரர்கள் உள்ளனர். ஒருபுறம், அவ்வாறானதொரு தேரராகவும் மறுபுறம் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல்வாதியாகவும் இருக்கின்ற தேரரால் உறுதிமொழி வழங்கப்பட்டு உள்ளது.   

ஏப்ரல் 21, பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இலங்கை அரசியலில் தேரர்களின் வகிபாகம் மேலும் அதிகரித்து வருகின்றது. முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தங்களது பதவிகளைத் துறக்க வேண்டும் எனக்கோரி அத்துரலிய ரத்ன தேரரே கண்டியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தேரரது உண்ணாவிரதம் அழைத்து வரவுள்ள ஆபத்துகளை ஊகித்து உணர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதவிகளைத் துறந்தனர்.   

இதனையடுத்து, அடுத்த கட்டமாகத் தேரர் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் எனத் தமிழர் பகுதிகளுக்கான விஜயங்களை மேற்கொண்டார். இதன்போது, அந்தந்த மாவட்டங்களில் இந்துமத குருமார்கள், பொது அமைப்புகளைச் சந்தித்தார்.   

இந்தச் சந்திப்புகளில் இந்து - பௌத்த சகோதரத்துவம் தொடர்பில் கூடுதல் அக்கறை காண்பித்து வந்தார். “10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு, பௌத்த - இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது” என, வவுனியாவில் கருத்துத் தெரிவித்திருந்தார்.    

அத்துடன், அடிப்படைவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பௌத்த - இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

21/4 குண்டு வெடிப்பை அடுத்தே, அடிப்படைவாதத்தைத் தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பௌத்த - இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டுமெனத் தேரர் வேண்டுதல் செய்கின்றார்.   

ஆனால், அதையும் தாண்டி 70 ஆண்டுகளாக மாறிமாறி ஆண்ட  பேரினவாத அரசாங்கங்களால், திட்டமிடப்பட்டு இல்லாமல் செய்யப்பட்ட, தமிழ் மக்களது சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்வை, பிறரது தொல்லைகள் இல்லாமல், மீள வழங்குமாறு அவர்கள் கோருகின்றனர்.    

மேலும், கிழக்கு மாகாணத்தில், ஹிஸ்புல்லாஹ், தமிழ் மக்களின் காணிகளை பெயர் மாற்றி, முஸ்லிம் குடியேற்றங்களாக மாற்றியுள்ளார். ஆசிரியர் நியமனங்களிலும் அதிகளவு முஸ்லிம்களை உள்ளீர்த்துள்ளார் என, யாழில் தேரர் உரையாற்றினார்.     

ஹிஸ்புல்லாஹ், தமிழ் மக்களின் காணிகளைப் பெயர் மாற்றி, முஸ்லிகளைக்  குடியேற்றினார் எனின், அதனை ஏன் அரசாங்கங்கள் தடுக்கவில்லை, ஏன் தமிழ் மக்களின் காணிகளைப் பாதுகாக்கவில்லை?  ஏன், ஹிஸ்புல்லாஹ்களைத் தட்டிக் கேட்கவில்லை? தமிழ் மக்களது காணிகளை, ஹிஸ்புல்லாஹ்கள் பிடிக்கலாம்; அதில் முஸ்லிம்களுக்கான குடியேற்றங்களை ஸ்தாபிக்கலாம். அப்படியெனின்,  அவர்களுக்கு அதற்கான துணிவு எப்படி வந்தது, யார் கொடுத்தது?  

இனப்பிரச்சினையின் ஆணி வேராக இருப்பதே, அரசாங்கங்களால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட, தமிழ் மக்களது காணி அபகரிப்பும் அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரினவாதக் குடியேற்றங்களுமே என்பதைத் தேரர் மறந்து விட்டார் போலும். 

சுதந்திரம் கிடைத்த மறு ஆண்டே, (1949) கல்லோயா விவசாயத் திட்டம் என்ற போர்வையில் கிழக்கில் சிங்கள மக்களுக்கான குடியேற்றங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டன.   

உண்மையில், கிழக்கு மாகாணத்தில் தங்களது இருப்பு, ஏனைய இரு இனங்களது ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அது தொடர்பில் இதுவரை கண்டு கொள்ளாதவர்கள், இப்போது ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்?   

திருகோணமலையில் பெரியவிளாத்திக்குளம் மகாதிவுல்வௌ எனவும் முதலிக்குளம் மொறவௌ எனவும் தொடராகப் பல சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கை விழுங்கி விட்டன. கிழக்கு மாகாணத்தில் 1948இல் மிகவும் சொற்ப அளவில் இருந்த பெரும்பான்மை மக்களது விகிதாசாரம் இன்று மாகாணத்தில் மூன்றில் ஒரு பங்கினராக உயர்ந்து விட்டது.   

இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலகம் எனவும் முல்லைத்தீவில் வெலிஓயா (மணலாறு) பிரதேச செயலகம் எனவும் சிங்கள மக்களுக்கு எனத் தனியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.   

இந்நிலையில் முல்லைத்தீவு செம்மலையில் தமிழ் மக்களது பூர்வீகமான நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் படையினர் விகாரை ஒன்றைக் கட்டி உள்ளனர். தற்போது அது தங்களுடையது எனவும் தமிழ்ப் பயங்கரவாதிகள் அடாத்தாகக் கோருவதாகவும் பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் கோரி வருகின்றனர்.   

தமிழ் மக்களது வரலாற்று மண்ணில் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தால் அடாத்தாக முப்பது ஆண்டுகளாக, மாற்றான் காணியில் வாழ்ந்து வரும் மணலாற்று (வெலிஓயா) சிங்களவாசிகளே, செம்மலையில் பிள்ளையார் கோவிலை அகற்றுமாறு, பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.   

தமிழ் மக்களுக்கு எதிராக 2009 மே வரை இடம்பெற்ற போரில் பேரினவாதம் தங்களது நலன் கருதி முஸ்லிம்களையும் இணைத்தே பயணித்தது; அல்லது அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தது. முஸ்லிம்களைத் தமிழ் மக்கள் பக்கம் சாராது, கவனமாகப் பார்த்துக் கொண்டது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்களது முதுகெலும்பு (பலம்) உடைக்கப்பட்டு விட்டது. ஆனால், மறுபுறம் தற்போது பேரினவாதத்தால் முஸ்லிம் இனத்தினது வளர்ச்சியை ஜீரணிக்க முடியாது உள்ளது. எப்படி அதனைத் தடுக்கலாம் என இருந்தவர்களுக்கு, ஏப்ரல் குண்டுவெடிப்பு, பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கதையாகி விட்டது. ஒரு சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்ட தாக்குதல், நொண்டிச் சாட்டாகி விட்டது.   

இன்று இது, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரான போராக உருமாற்றம் கண்டுள்ளது. இந்தப் போரில், பேரினவாதம் தமிழ் மக்களையும் இணைத்துப் பயணிக்க விரும்புகின்றது; திட்டம் வகுக்கின்றது. இதன் மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய்களைப் பறிக்க முயற்சிக்கின்றது.   

முதலாவது, சிறுபான்மை இனங்களுக்கிடையிலான (தமிழ், முஸ்லிம்) உறவு வலுப்படாது, கொதி நிலையில் வைத்திருப்பது;கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகக் கோரிக்கையில், பிக்குகளது பங்களிப்பு உள்நுழைந்தமையும் இதன் பரிமாணமே. அடுத்தது, நேற்று வரை முறுகலில் இருக்கும் தமிழ்- சிங்கள உறவுகளைச் சீர் செய்யலாம் எனக் கருதுகின்றது.   

இதேவேளை, கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகம் அமைக்க அரும்பாடுபடுகின்ற தேரர்கள், திருகோணமலை கன்னியாவில், முல்லைத்தீவு நீராவியடியில் என இன்னும் பல இடங்களில் தமிழ் மக்களது மனங்கள் நோகும்படியாக நடந்து கொள்கின்றமை விந்தையானது.   

தமிழ் மக்கள், புத்தபெருமானது போதனைகளை மதிக்கின்றார்கள்;  போற்றுகின்றனர். அதற்காகத் தங்கள் பிரதேசங்களில் அவரை நிரந்தரமாகப் பேணப் பயப்பிடுகின்றனர். ஏனெனில், கடந்த காலங்களில், ஒரு புத்தர் சிலையை அடுத்து வந்த பல சிங்களக் குடியேற்றங்களால், தங்கள் இருப்பு இல்லாமல் போய் விட்டதைக் கவலையுடனும் இயலாமையுடனும் தமிழ் மக்கள் மீட்டுப் பார்க்கின்றனர்.   

இதற்கிடையே, வவுனியா பிரதேச செயலகத்தில் பிரித்ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பணியாளர்களும் வெண்ணிற ஆடை அணிந்து வருமாறும் பிரதேச செயலர் அறிவித்து உள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கான தமிழ் பேசும் அலுவலர்கள் பணியாற்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் பௌத்தமத வழிபாடுகள் திணிக்கப்படுகின்றன.   

தமிழர்கள் விரும்பாத இடங்களிலிருந்து புத்தர் சிலைகளை அகற்றுவோம் எனத் தேரர் வாக்குறுதி வழங்குகையில், தமிழர்கள் விரும்பாத போது, பௌத்த போதனைகளை வலிந்து அவர்களுக்கு போதிப்பது, பௌத்தர்கள் அணியும் ஆடைகளை அணியச் சொல்வது, எவ்வகையில் நியாயம்? எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .