2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா...

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசியலில் இழவு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது சில தருணங்களில் அதிகாரத்துக்கான அவாவாக வெளிப்பட்டுத் தொலைக்கும். அந்த அபத்தத்தை கடந்த வாரம் கண்டோம். 

ஒரு மரணத்தை முதலீட்டாக்கி, அரசியல் இலாபம் பார்க்கும் செயல், 'இலங்கை அரசியல்' அதன் அடியாளத்தில் தேக்கி வைத்திருப்பது, பேராசையையே என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. 

"மலை சரிந்துவிட்டது" என்போர், கடந்த 20 ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்வில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர், சரிந்தது மலையா, வேறெதுவுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

 மரணம் ஒருவரைப் புனிதனாக்கமாட்டா. உணர்வுபூர்வமான கதைகளும் அனுபவப் பகிர்வுகளும் பத்திரிகைகள் எங்கும் குவிகின்றன. 

ஆனால், மலையக மக்கள் இன்னமும் லயன் வீடுகளில் தான் வசிக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைவால் மோசமாகப் பாதிக்கப்படுவோர், மலையகத் தோட்டங்களில் வசிப்போரே என உலக வங்கி தெரிவிக்கிறது. மலையகத் தோட்டப்புறத்தில் உள்ள குழந்தைகளில், 36%மான குழந்தைகளுக்கு வளர்ச்சிக் குறைபாடு உண்டு. இது மெல்லக் கற்கும் குழந்தைகள், இடைவிலகல் எனக் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவை, சில அடிப்படையான தகவல்கள் மட்டுமே. 

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கை இன்னமும் அப்படியே இருக்கிறது. தோட்டத் தொழிலாளர், தமக்கு நியாயமான சம்பளம் கேட்டுப் போராட முற்பட்டது, இது முதல் தடவையல்ல. தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டித் தங்களை அரசியலில் வலிமைப்படுத்திக் கொண்டு, முடிவில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் விருந்துபசாரங்களிடையே சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களிடம் நாங்கள் எதைஎதையோ வென்று தந்து விட்டதாக, வீரம் பேசிவந்த மலையகத் தொழிற்சங்க, அரசியல் தலைவர்களின் கேலிக்கூத்து நாம் அறியாததல்ல.

மலையகத் தோட்டத் தொழிலாளர் என்ற வாக்கு வங்கியையும் அவர்களிடம் வசூலிக்கின்ற சந்தாப் பணத்தையும் தவிர வேறெதைப் பற்றியும் மலையகத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கோ, அரசியல் தலைமைகளுக்;கோ அக்கறை இல்லை. மலையக அரசியல் தலைமைகளின் துரோகம், அப்பட்டமாகவே வெளிப்பட்ட ஒரு பிரச்சினை, மேல் கொத்மலை நீர்மின் திட்டம் தொடர்பானதாகும்.

மலையகத் தமிழ் மக்களுக்கு, ஒவ்வொரு தேர்தலின் போதும் வழங்கப்படுகிற வாக்குறுதிகள், தேர்தல் முடியும் முன்னரே மறக்கப்படுகின்றன. 

மலையகத் தொழிலாளரின் பிரச்சினை, வெறுமனே ஊதியம் தொடர்பானது மட்டுமல்ல. இன்று அவர்களது இருப்பு, மிரட்டலுக்கு உள்ளாகிறது. அவர்களது கல்வி, மருத்துவ உரிமைகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. அவர்களது பிரதேசம், சட்டத்தின் உதவியுடனும் சட்டத்தைப் புறக்கணித்தும் பறிக்கப்படுகின்றன. அடிப்படையான வசதிகள் கூட, மிகுந்த புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. இவை அப்பட்டமான தேசிய இன ஒடுக்கல்.

கொலனிய காலத்திலிருந்து, தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். என்றாலும், அப்போது தொழிலாளர்களுக்கு இருந்த சில உரிமைகளும் சலுகைகளும் உத்தரவாதங்களும் இப்போதைய தனியார் மயமாக்கப்பட்ட தோட்டங்களில் இல்லாமல் போய்விட்டன. அவர்களுடைய குழந்தைகளுடைய எதிர்காலம், தோட்டங்களுக்குள்ளேயே அதி குறைந்த ஊதியத்துக்கு, அதிகூடிய உழைப்பு என்று முடங்கிப்போகும் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம், அவர்களினதும் அவர்களினது குழந்தைகளினதும் அடிப்படை உரிமைகளில் முக்கியமானவையான கல்வி வாய்ப்பு, நோயற்ற வாழ்வு போன்றவற்றையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால், அதை எந்தவொரு மலையும் சாத்தியமாக்கவில்லை. 

கடந்த காலங்களில், இலங்கையின் ஏனைய பின்தங்கிய பகுதிகள் கண்டுள்ள வளர்ச்சியையும் தோட்டங்கள் கண்டுள்ள வளர்ச்சியையும் ஒப்புநோக்கின், இப்போது அரங்கேறியுள்ள 'இழவு அரசியல்' எதைச் சாதித்தது என்று விளங்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .