இஸ்‌ரேலின் அண்மைக்காலக் கொடூரத்தனங்கள்

இஸ்‌ரேல் எனும் நாடு மீது, உலகளவில் பரவலான விமர்சனங்கள் இருப்பதை நாமனைவரும் அறிவோம். உலகில், யூதர்களுக்கென இருக்கின்ற ஒரு நாடாக இருந்தாலும் கூட, பலஸ்தீனர்களுக்கும் இஸ்‌ரேலியர்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள், பலம்பொருந்திய நாடான இஸ்‌ரேல் மீதான கடுமையான விமர்சனங்களாகவே வந்து சேர்கின்றன.  

இஸ்‌ரேல் மீதான இந்த விமர்சனங்களை, இஸ்‌ரேல் மீதான வெறுப்பு என வாதிடுவோரும் உள்ளனர். அதன் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இஸ்‌ரேலுக்கான அனுதாபங்களும் கூட காணப்பட்டே வந்துள்ளன. 

ஆனால், அந்நாட்டில் கடந்த வாரமும் இந்த வாரமும் இடம்பெற்ற இருவேறான சம்பவங்கள், அந்நாடு மீது காணப்பட்ட அடிப்படையான கருணைப் பார்வைகளையும் கூட இல்லாது செய்துள்ளன என்பது தான், கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.  

இஸ்‌ரேலின் பிரதமராக இருக்கின்ற பெஞ்சமின் நெதன்யாகு, வலதுசாரித் தலைவராவார். உலகில் அண்மைக்காலப் பிரச்சினைகளுக்கு, கடும்போக்கு வலதுசாரிகளின் பங்கு மிக முக்கியமானது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இதில் முக்கியமானவர். ஆனால், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், வலதுசாரியாக இருந்துகொண்டு, உலக ஜனநாயகத்தின் தலைவர் எனுமளவுக்கு மதிக்கப்படுபவராகவும் இருக்கிறார்.  

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் நெதன்யாகுவின் அண்மைக்கால நடவடிக்கைகள், கடும்போக்கு வலதுசாரித்துவத்தை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதைத் தான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.  

இஸ்‌ரேலின் வரலாறு, பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்த ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பிக்கும் நிலையில், இஸ்‌ரேலின் நடவடிக்கைகளை ஒன்றும் புதிதாக விமர்சிக்கத் தேவையில்லாத நிலைமையே காணப்படுகிறது. ஆனால், அண்மைய இரு சம்பவங்களும், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், மேலும் மோசமான ஒரு நிலைமையை நோக்கிப் பயணிப்பதையே எடுத்துக் காட்டுகின்றன.  

முதலாவதாக, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட, மிக மோசமான தாக்குதல்கள் அமைந்திருக்கின்றன. பலஸ்தீனர்களால் அனுஷ்டிக்கப்பட்ட காணி தினத்தன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, உண்மையான துப்பாக்கிச் சன்னங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதோடு, பல நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில், பல்வேறு தடுமாற்றங்கள் காணப்படுகின்ற போதிலும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என, பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் 700க்கும் மேற்பட்டோர், துப்பாக்கிச் சன்னங்களால் காயமடைந்தோராக உள்ளனர்.  

காணி தினத்தன்று, எல்லையை நோக்கி வருவோர் மீது தாக்குதல் நடத்தப்படுமென, இஸ்‌ரேல் ஏற்கெனவே எச்சரித்திருந்தது என்பது உண்மையானது தான். அதுவும், உண்மையான துப்பாக்கிச் சன்னங்கள் பயன்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள், வன்முறைகளைப் பயன்படுத்தினர் என்பதுவும் உண்மையானது தான்.  

ஆனால், கற்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோர் மீது, துப்பாக்கியால் சுடுவதென்பது, எந்தளவுக்கு நியாயமானது என்ற, யதார்த்தபூர்வமான கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறதல்லவா? எங்கள் வீட்டுக்குக் கல் எறிபவர்கள் மீது, திருப்பிக் கல்லால் எறிவதென்பது ஒரு விடயம்; மாறாக, கல் எறிபவர்கள் மீது ஆட்லறிக் குண்டுகளை வீசுவதென்பது, எந்தளவுக்கு நியாயமானது?  

இத்தனைக்கும், அந்த வீடு, தங்களுடையது தான் என்று கோரக்கூடிய உரிமை, கல் எறிபவர்களுக்கு இருக்கும் போது, அவர்களுடைய கோபத்தையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறதல்லவா? அவர்களின் காணி தினமே, 1976ஆம் ஆண்டு, ஆயுதமேந்தியிருக்காத 6 பலஸ்தீனர்கள், இஸ்‌ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து தானே அனுஷ்டிக்கப்படுகிறது? அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு, தமது பகுதியிலிருந்து தாம் வெளியேற்றப்படக் கூடாது என்ற கோரிக்கை தானே காரணமாக இருந்தது?  

ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களால், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படும் போது, அதற்கான பதில் தாக்குதல்களை நடத்துவதென்பது வேறானது. அவ்வாறான பதில் தாக்குதல்களின் போதும், பொருத்தமான அளவுக்குப் பலத்தைப் பிரயோகிப்பதென்பது அவசியமானது. ஆனால், திட்டமிட்ட, ஆயுதங்கள் மூலமான தாக்குதல்கள் வேறானவை. மாறாக, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, வெறுமனே சாதாரண மக்களின் ஆர்ப்பாட்டம், அதன் போது ஏற்பட்ட வன்முறை ஆகியன தான். அதற்கான பதில் என்பது, சாதாரண மக்கள் மீதான நடவடிக்கை போன்று அமைய வேண்டுமல்லவா?  

இஸ்‌ரேல் முன்வைக்கின்ற குற்றச்சாட்டு என்னவென்றால், இந்தப் போராட்டக்காரர்களோடு, ஹமாஸ் குழுவினரும் இருந்தார்கள், அதன் காரணமாகவே தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்தது என்பதாகும். 

இதுவரை வெளியாகியிருக்கின்ற தகவல்களின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட 16 பேரில் ஒருவர், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவராவார். இதற்குப் பதிலளிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு, மக்களோடு சேர்ந்து தான் தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் இருந்தாரே தவிர, தமது குழு அதில் பங்குபற்றியது என்பதற்கான ஆதாரம் அதுவல்ல என்கிறது.  

இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஹமாஸ் இருந்ததோ, இல்லையோ; இந்தப் போராட்டத்தின் போது அக்குழுவும் பங்குபற்றியதோ, இல்லையோ என்பது, கேள்விகளாகத் தான் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் தாண்டி, இந்தப் போராட்டங்களில் பங்குபற்றியவர்களில் மிகப்பெரும்பான்மையானோர், சாதாரண பொதுமக்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு, ஆர்ப்பாட்டத்தில் ஹமாஸ் உட்பட எக்குழுவைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினாலும், இஸ்‌ரேல் இராணுவத்துக்கோ, பொதுமக்களுக்கோ, பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு, அங்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மையானது.  

எனவே தான், இத்தாக்குதல்களைத் துளியும் நியாயப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. இவ்வளவுக்கு மோசமான அளவுக்குத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அமைதியாகவேனும் இஸ்‌ரேல் இருந்திருக்கலாம். மாறாக, தாக்குதல்களைத் தொடர்ந்து, மாபெரும் தற்கொலைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திவிட்டதைப் போன்று, கொண்டாட்டங்கள் இருந்தமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. நாட்டின் பிரதமரோ, 16 பேரைக் கொன்று, 1,000க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய இராணுவத்தைப் பார்த்து, பாராட்டுத் தெரிவிப்பதாகக் கூறுகிறார்; நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, சுயாதீன விசாரணைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார். இவையெல்லாம், மோசமான ஆட்சியாளர்களுக்கான அறிகுறிகளாகவே காணப்படுகின்றன.  

இவ்வாறு, மோசமான இத்தாக்குதல்கள் இடம்பெற்று, இஸ்‌ரேல் மீதான உலகக் கவனம் காணப்பட்ட நிலையில் தான், இஸ்‌ரேலில் தங்கியுள்ள, சட்டரீதியற்ற குடியேற்றவாசிகளைக் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தில், அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்துடன், இஸ்‌ரேல் கைச்சாத்திட்டது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 37,000 குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர், மேற்கத்தேய நாடுகளில் குடியமர்த்தப்படுவர்; மிகுதிப் பிரிவினர், இஸ்‌ரேலில் குடியமர்த்தப்படுவர் என்பது தான், அத்திட்டமாக அமைந்தது. அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இஸ்‌ரேல் பிரதமர், அந்த ஒப்பந்தத்தை மிகவும் பாராட்டிப் பேசியிருந்தார். இஸ்‌ரேலைப் பொறுத்தவரை, மிக முக்கியமான ஒரு மாற்றமாக அமைந்தது.  

ஆனால், அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுச் சில மணிநேரங்களிலேயே, அவ்வொப்பந்தத்தை அமுல்படுத்துவதைப் பிற்போடுவதாக, பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அவ்வொப்பந்தத்துக்கு எதிராக, உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்தே, இம்முடிவு எடுக்கப்பட்டது. உள்நாடு எனும் போது, அவரது வாக்காளர்கள் எனக் கூறுவது தான் பொருத்தமானது. பிரதமர் நெதன்யாகு எந்தளவுக்குக் கடும்போக்கு வலதுசாரியாக இருக்கிறாரோ, அந்தளவுக்குக் கடும்போக்கு வலதுசாரிகளாகவே, அவரது வாக்காளர்களும் இருக்கிறார்கள் என்பதை, இது காட்டியது.  

தேசமற்றுப் போயிருந்த யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடான இஸ்‌ரேல், வன்முறைகள் காரணமாகவும் பாகுபாடுகள் காரணமாகவும், தமது நாட்டிலிருந்து தப்பியோடி வந்திருக்கின்ற குடியேற்றவாசிகளுக்கு அடைக்கலம் வழங்காது, அவர்களை நாடற்றவர்கள் நிலைமையில் விடுவதென்பது, எவ்வாறு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையும்?  

மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் ஒன்றும், இஸ்‌ரேலுக்குப் புதிதானது அன்று. ஆனால், முன்னைய காலங்களை விட அதிகமாக, ஐக்கிய அமெரிக்காவின் தலைமைத்துவத்தின் ஆதரவை, அந்நாடு கொண்டுள்ளது என்பது, இன்னமும் முக்கியமானது. வழக்கமாகவே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவென்பது பலமாகவே இருந்தாலும், கடந்த ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், கொள்கை ரீதியான வேறுபாடுகள் காணப்பட்டு வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதியில், இஸ்‌ரேலுக்கெதிரான ஐ.நா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தில் வாக்களிக்காது விட்டு, தீர்மானமொன்று நிறைவேறவும், ஒபாமாவின் நிர்வாகம் வழிவகுத்திருந்தது. ஆனால், தற்போதைய நிர்வாகம், முழுமையான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது, இஸ்‌ரேலின் போக்கை வைத்துப் பார்க்கும் போது, ஆபத்தானதாக அமையுமென்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.    


இஸ்‌ரேலின் அண்மைக்காலக் கொடூரத்தனங்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.