2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒற்றையாட்சியும் சாணக்கியமும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 193)

பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது.   

அதில் எந்தத் தவறும் உள்ளதென்று, எவரும் எழுந்தமானமாகச் சுட்டிக்காட்டிவிட முடியாது. அது அந்த ஏமாற்றமும், நம்பிக்கைத் துரோகமும் நிறைந்த வரலாறு தந்த ஆறாத வடுவின் விளைவால் எழும் நம்பிக்கையீனம். அந்த நம்பிக்கையீனத்தை, ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. அதற்கு மிகுந்த நல்லெண்ணமும், இடைவிடாத முயற்சியும் தேவை.   

மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு கவனித்து நோக்கப்பட வேண்டியது.   

மறுபுறத்தில், தமிழர் தரப்பு, சமஷ்டி ஆட்சியைக் கோரும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள் கருத்தியல் அன்றி, தமிழர்கள் பிரிவினை கோருகிறார்கள் என்ற கருத்துத்தான், பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகிறது.   

‘ஒற்றையாட்சி’, ‘சமஷ்டி’ என்ற இந்த ஆழமான கருத்தியல்களின் மிக மேலோட்டமான, பாமரத்தனமான புரிதலுடன், இவை வெகுசனத்திடம் கொண்டு சேர்க்கப்படுவதாலும், சில சமயங்களில் திட்டமிட்ட இனவாத, நாசகாரப் பிரசார தந்திரோபாய உத்தியாக, இத்தகைய தவறான பொருள்கோடல்கள் கையாளப்படுவதாலும், பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே, ‘சமஷ்டி’ என்பது ஒரு ஆபத்தான வார்த்தையாகவும் தமிழ் மக்களிடையே ‘ஒற்றையாட்சி’ என்பது தம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கியாளும் அரசுக்கட்டமைப்பாகவும், அதனால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகவும் உணரச் செய்கிறது.   

இந்தப் புரிதல் மற்றும் பொருள்கோடல் சிக்கலுக்குள் உட்பட்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடலானது, ஒற்றையாட்சி எதிர் சமஷ்டி என்ற அர்த்தமற்றதொரு சுழலுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இந்தச் சுழலைத் தக்கவைப்பதில் சந்தர்ப்பவாத, இனவாத, மற்றும் இன-மய்ய அரசியலினதும், அரசியல்வாதிகளினதும் பங்கானது மிக முக்கியமானதாகும்.   

தொழில்நுட்பவியல் ரீதியான விடயங்களை வெகுசனங்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் போது, அதனை எளிமையாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த எளிமைப்படுத்தலானது சந்தர்ப்பவாத அரசியலின் பிடிக்குள் சிக்கிக்கொண்டால், அது அதன் உண்மை அர்த்தத்துக்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலின் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக அமையத்தக்கதொரு திரிபுபடுத்தப்பட்ட பொருளையே வெகுசனங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. சமஷ்டிக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள கதி இதுதான்!  

‘சமஷ்டி’ என்றால் தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்தல் என்ற சிங்கள-பௌத்த பேரினவாத அரசியலின் விசமப் பிரசாரமானது, கோயபெல்ஸின் ‘பெரும் பொய்’ என்ற பிரசாரத் தந்திரோபாயத்தின்படி, இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் மனதில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.   

ஆனால், சமஷ்டிக்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் வழங்கியுள்ள ‘பிரிவினை’ என்ற பொருள்கோடலானது, சமஷ்டியின் உண்மை அர்த்தத்தை மறைக்கிறது என்பதை விட, சமஷ்டியின் நோக்கத்துக்கு முற்றுமுழுதும் எதிரானதோர் அர்த்தத்தை வழங்குகிறது.   

‘சமஷ்டி’ என்பதை ஓர் அரசானது, தனியரசுகளாகப் பிரிந்துபோகாது, அவை தம்மிடையே இறைமையையும், அதிகாரத்தையும் பகிர்வதனூடாக ஓர் அரசாகத் தொடர்வதற்கானதோர் உத்தி. ஆகவே, சமஷ்டி என்பது ஒற்றுமைக்கான வழியே தவிர, பிரவினைக்கானது அல்ல.   

ஆனால், இலங்கையின் பெரும்பான்மையின அரசியலினால் முன்னெடுக்கப்பட்ட விசமத்தனமான பிரசாரமானது, ‘சமஷ்டி’ என்பது பிரிவினைக்கானது என்ற தவறான புரிதலைப் பெரும்பான்மை மக்களிடையே, குறிப்பாக சிங்கள மக்களிடையே உருவாக்கி விட்டது. ஆகவே, தமிழ் மக்கள் சமஷ்டி கோரும் போதெல்லாம், அது சிங்கள மக்களிடையே, தமிழ் மக்கள் பிரிவினை கோருவதாகத்தான் சென்றடைகிறது.   

மறுபுறத்தில், தமிழ் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாததொரு தீயசொல்லாக, ‘ஒற்றையாட்சி’ ஆகிவிட்டது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது, தீர்வே கிடையாது; அதனை ஏற்கவும் முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கங்கணங்கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதனாலேயே சமரசத் தீர்வு காண விளையும் மிதவாத தமிழ் அரசியல் தலைமைகளும், தம்முடைய வாக்குவங்கி அரசியலைக் காப்பாற்றிக்கொள்ள, சில மாற்று உபாயங்களைக் கையாள வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.   

இதன் ஒரு பரிமாணமாகவே ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற சொற்றொடரை, புதிய அரசமைப்புக்கான முன்மொழிவில் கையாண்டிருந்தமையைக் காணலாம். இதனைச் சமஷ்டி கோரும் தமிழ் அரசியல் தலைமைகள் கடுமையாக விமர்சித்ததுடன், முற்றாக நிராகரித்தும் இருந்தன.   

உண்மையில் இங்கு, ஒற்றையாட்சி என்ற சொல்லோ, சமஷ்டியாட்சி என்ற சொல்லோ, எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை. அரசறிவியலும் சட்டமும் அறிந்த யாவருக்கும் இது புரியும்.  

இலங்கையைச் சமஷ்டி அரசாக, அரசமைப்பில் குறிப்பிட்டுவிட்டு, அதிகாரங்களை மத்தியில் குவித்துவிட்டால், சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும், அது தீர்வு கோரும் தமிழ் மக்களுக்கு எந்தவிதப் பயனையும் தராது.   

சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகள், மிகுந்த சாணக்கியத்துடன் செயற்பட்டிருக்குமானால், அவர்கள் தமிழர்களுக்கு சமஷ்டியை வழங்கியும், வழங்காமலும் இருந்திருக்க முடியும். இலங்கையை சமஷ்டி அரசு என்று பிரகடனப்படுத்திவிட்டு, மறுபுறத்தில், மத்தியில் அதிகாரக் குவிப்பை மேற்கொள்ளத்தக்கதொரு கட்டமைப்பை, அவர்கள்  முன்மொழியலாம். இதன் மூலம், தாம்  பிரிவினையைத் தடுக்கத்தக்க சமஷ்டித் தீர்வுக்குத் தயார் என்ற உயர் நிலைப்பாட்டையும் அவர்கள் உலகத்துக்கு முன்னால் சமர்ப்பித்திருக்கலாம்.   

இத்தகைய தீர்வை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. வெறும் பெயரளவு சமஷ்டி, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது. இதுதான், தமிழர்களுக்கு சமஷ்டி வேண்டும் என்று, மேலோட்டமாகச் சொல்வதிலுள்ள சிக்கல் ஆகும்.   

ஆனால், சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு, இந்தச் சாணக்கியம் இருக்கவில்லை. அவர்கள் தம்முடைய இனவாத வாக்கு வங்கிக்குத் தீனியாகத் தமிழர் எதிர்ப்பையும் சமஷ்டி எதிர்ப்பையும் முன்வைக்கவும், பயன்படுத்தவும் விரும்புகிறார்களேயன்றி, சாணக்கியத்தனமாக, தூரநோக்கத்துடன் தம்முடைய நலன்களைப் பாதுகாக்கத்தக்க வாய்ப்பொன்றை நழுவவிட்டிருக்கிறார்கள்.   

சர்வதேச அரசியலும், பூகோள அரசியலும், அரசியல் சாணக்கியமும் நிறைந்த சிங்கள அரசியல் தலைமைகளால் கூட, இதனைச் செய்ய முடியாதிருப்பதற்கு, பேரினவாத உணர்ச்சியும், சிங்கள-பௌத்த பேரினவாத பகட்டாரவார அரசியல் தலைமைகளின் மக்கள் செல்வாக்கும், ஆதிக்கமும் முக்கிய காரணங்களாகும்.   

ஆகவே தான், சாணக்கியத் தனமான சிங்களத் தலைமைகள் இத்தகைய சாணக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, பேரினவாத சிங்களத் தலைமைகளே அதற்கு முதல் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறார்கள். இதில் அந்தப் பேரினவாத சிங்கள அரசியல் தலைமைகளுக்குப் புரியாத விடயம், அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்துதான் செயற்படுகிறார்கள் என்பது.  

சமஷ்டியின் நிலைவரம் இத்தகையதாக இருக்கையில், மறுபுறத்தில் ஒற்றையாட்சிதான் வேண்டும் எனும் சிங்கள-பௌத்த தலைமைகளின் விடாப்பிடித்தனத்தை சாணக்கியமாகவும், தந்திரோபாய ரீதியிலும் கையாள்வதில் தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தவறி வருகின்றன என்பதுதான் கவலைக்குரிய விடயம்.   
‘ஒற்றையாட்சி’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமும், அது சுட்டும் கோட்பா ட்டின் பொருளும் காலவோட்டத்தில் பரந்துபட்ட மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இலங்கையின் ‘ஒற்றையாட்சி’ பற்றிய புரிதலானது, துட்டகைமுனு முழுத் தீவையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்ததன் பாலான புரிதல் என்று சில ஆய்வாளர்கள், மானுடவியல் மற்றும் வரலாற்றியல் சான்றுகளைச் சுட்டிக் குறிப்பிடுவர்.   

ஆனால், அவர்களே மஹாவம்சம் சுட்டும் அத்தகைய ஒற்றையாட்சிக் கோட்பாடும், நவீன மேற்கத்தேய ஒற்றையாட்சிக் கோட்பாடு ஒன்றல்ல என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள். இன்றைய இலங்கையின் ஒற்றையாட்சிக் கோட்பாடென்பது, சிங்கள-பௌத்த தலைமைகள் எத்தனை பிரயத்தனப்பட்டு துட்டகைமுனு கால ஒற்றையாட்சியுடன் ஒப்பிட விளைந்தாலும், பிரித்தானிய ‘வெஸ்ட்மினிஸ்டர்’ முறையை ஒத்த ஒற்றையாட்சியாகும். சுதந்திர இலங்கைக்கு சோல்பரி அரசமைப்புத் தந்த பிரித்தானியாவை ஒத்த ஆட்சிமுறை இது.   

ஆகவே, இலங்கையின் ஒற்றையாட்சியை துட்டகைமுனுவின் ஒற்றையாட்சியுடன் ஒப்பிடுவதானது அர்த்தமற்றது. மாறாக, பிரித்தானிய ஒற்றையாட்சி முறையுடன் ஒப்பு நோக்குவதே சாலவும் பொருத்தமானது.   

பிரித்தானியா (முழுமையான பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியம்) என்பது ஒரு முடியின் இறைமைக்குட்பட்ட அரசாகும். ஐக்கிய இராச்சியம் என்பது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளைக் கொண்டது. அது ஓர் ஒற்றையாட்சி அரசாகவே தன்னை அடையாளப்படுத்துகிறது. ஒட்டுமொத்த அரசும் ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்றத்தின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால், அதன் சமகாலக் கட்டமைப்பை உற்று நோக்கினால், மத்தியிலுள்ள ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்றமானது தன்னுடைய அதிகாரங்களை வேல்ஸ் சட்டசபை, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம், வடஅயர்லாந்து நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் பகிர்ந்தும், பரவலாக்கியும் உள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக, ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்துக்கு நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் அவதானிக்கலாம்.   

இந்த இடத்தில்தான் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில், பிரதம நீதியரசர் ப்ரயசத் டெப் குறிப்பிட்ட “இறைமையைக் பகிர்தல், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவை ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி முறை அரசா ங்கத்தை ஸ்தாபிக்க வழிவகுக்கும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.   

தமிழ்த் தலைமைகள், ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொல்விளையா ட்டுகளைக் கடந்து சிந்திக்குமானால், சிங்கள-பௌத்த தலைமைகளின் விடாப்பிடியான ஒற்றையாட்சி என்ற சொற்றொடரை ஏற்றுக்கொண்டே அதற்குள்ளாகவே தமிழ் மக்கள் வேண்டும் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்ளச் சாணக்கியமாக எத்தனிக்கலாம்.   

ஆனால், சிங்களத் தலைமைகளுக்குள் உள்ளது போலவே, சாணக்கியமான தமிழ்த் தலைமைகள் இதனை முயலும் போது, தீவிர தேசியவாதத் தமிழ்த் தலைமைகள் அதனைச் சரணாகதி அரசியலாக உருவகப்படுத்தி, தமிழ் மக்களிடையே அத்தகைய முயற்சிகளுக்கான ஆதரவைக் குறைத்து விடுகிறார்கள்.  
இந்த இடத்தில், இன்னொரு கேள்வி கட்டாயம் எழும். சிங்கள-பௌத்த பேரினவாத தலைமைகளின் தேவை என்பது, வெறும் ஒற்றையாட்சி என்ற சொல்தானா? பிரித்தானியாவைப் போல, ஒற்றையாட்சிக்குள் மிகப்பரந்துபட்டதோர் அதிகாரப் பகிர்வை, கிட்டத்தட்ட சமஷ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வைத் தர அவர்கள் தயாரா? இந்தக் கேள்விக்கான பதில் முக்கியமானது, ஆனால் இந்தப் பதில்தான் சாணக்கியமான தமிழ்த் தலைமைகளின் நிலையை இன்னும் சிக்கலுக்குள் தள்ளுவதாகவும், தீவிர தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்தவதாகவும் அமைகிறது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X