2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்.  

அரசியல் என்பது, நண்பர்களைக் காட்டிலும், எதிரிகளும் துரோகிகளும் நிறைந்திருக்கும் களம். சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, எதிரிகளோடு கைகோர்க்கவும் துரோகிகளை மன்னிக்கவும் வேண்டி வரலாம். அதற்கான உதாரணங்கள், தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகம் உண்டு.   

ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்குச் சென்ற தரப்புகள் கூட, கடந்த காலங்களை மன்னித்து, மறந்து, அரசியல் தேவைகளுக்காக ஒன்றாகக் கைகோர்த்து, கூட்டணிகளை அமைத்திருக்கின்றன. அதன் இறுதிச் சாட்சியாக, ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளம், இன்னமும் எஞ்சியிருக்கின்றது.   

அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகள், தங்களுக்குள் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக, முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை, மாற்று அணிக்காக இயங்கிய பேரவைக்காரர்களும் கல்வியாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலமையாளர் ஒருவர் முன்னெடுத்திருந்தார்.அது, பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முதல் நாளே, ஒன்றுமேயில்லாமல் முடிந்து போயிருக்கிறது. 

அன்றுமுதல், தொடர்ச்சியாக இரு தரப்பும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன; ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் வெளிப்படுவது எல்லாமும் கடந்த காலத்தில் ஒப்புவிக்கப்பட்ட அதே பதில்கள் மாத்திரமே ஆகும். அவற்றைக் காணும் போது, மாற்று அணி குறித்து, நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் ஏமாற்றமடைவார்கள்.  

கடந்த காலத்தில், பேரவையில் ஒன்றாக இயங்கிய விக்னேஸ்வரனும் கஜனும், தமக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே, நிபந்தனைகளை விதித்துக் கொள்கிறார்கள்.   

புலிகள், கூட்டமைப்பைக் கட்டமைப்புச் செய்தபோது, புலிகளுக்கு எதிராக, அரச படைகளோடு ஒத்து இயங்கிய புளொட் உள்ளிட்ட தரப்புகளைக் கூட, அழைத்துப் பேசினார்கள். அப்போதுகூட, நிபந்தனைகளை எல்லாம் விதித்துக் கொண்டிருக்கவில்லை.   

‘காலமும் களமும் தங்களின் முன்னால், கூட்டமைப்பு என்கிற ஜனநாயக வடிவ அரசியல் சக்தியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பை வழங்கியிருக்கின்றது; ஆகவே, சில இடங்களில் இறங்கிச் செயற்படுவதில் தப்பில்லை’ என்றே புலிகள் கருதினார்கள்.   

அன்றைக்கு, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாமைக்கு புளொட்டே காரணம். வரலாறு இப்படியிருக்க, “ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கும் எந்தவோர் அணிக்குள்ளும் தங்களால் வரமுடியாது; ஏன், பேச்சுவார்த்தை நடத்தவே வரமுடியாது” என்று, முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது என்பது, கஜனின் மீதும், முன்னணி மீதும் பல கேள்விகளை எழுப்புகின்றது.  

தொடர்ச்சியாகக் ‘கொள்கைக் கூட்டு’ப் பற்றி, கஜன் பேசி வருகிறார். அப்படியானால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புளொட்டை அழைத்து, புலிகள் கலந்துரையாடியது, கொள்கைகளைக் கைவிட்ட நிலையிலா? தமிழ்த் தேசிய அரசியலிலும், அதற்கான போராட்டக் களத்திலும் புலிகள் அளவுக்குக் கொள்கை பற்றியும் அதற்கான அர்ப்பணிப்புப் பற்றியும் பேசும் தரப்புகள் இதுவரை எழவில்லை. அப்படியான நிலையில், கஜனின் நிலைப்பாட்டை, மக்கள் இரசிப்பார்களா என்பது தொடர்பிலாவது, அவரின் ஆலோசகர்கள் எடுத்துக்கூற வேண்டும்.  

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு, கஜன் வழங்கியிருக்கின்ற செவ்வியில், ‘சுரேஷ் பிரேமசந்திரன் இந்தியாவின் ஆணைகளை ஏற்றுச் செயற்படுகிறார்’ என்று தொடங்கி, ‘கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்’ என்பது வரை, மீண்டும் ஒப்புவித்திருக்கிறார். ‘அவர் அங்கம் வகிக்கும் அணிக்குள், தங்களால்ச் செல்ல முடியாது’ என்கிறார். ‘எந்தவொரு காரணத்துக்காகவும் விக்னேஸ்வரன் தவிர்ந்து, வேறொரு தரப்புடன், தங்களால் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. அல்லது இணங்க முடியாது’ என்கிறார். ஏனெனில், பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்திருக்கிற ‘தேசிய பசுமை இயக்கம்’ என்கிற கட்சியையோ, அனந்தி சசிதரனின் ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சியையோ தனித்தனிக் கட்சிகளாக அங்கிகரித்துக் கைச்சாத்திட முடியாது என்கிறார்.   

ஐங்கரநேசனும் அனந்தியும் விக்னேஸ்வரனின் அணியாகவே கருத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாகவே கூறியிருக்கின்றார். இந்த விடயம், புதிய கூட்டுக்குள் விக்னேஸ்வரனும் தானும் மாத்திரமே சம பங்காளிகள் என்கிற வரையறைகளைக் கஜன் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதனைத்தாண்டி, இன்னொருவர் பங்காளிக் கோசத்தை எழுப்புவதை அவர் விரும்பவில்லை. அதன்போக்கில்தான், அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினை சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தவிர்க்கிறார் என்பது மீண்டும் வெளிப்படுகின்றது.  

கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கே, மீண்டும் செல்ல வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புலிகளுக்குப் பின்னர், ஓரளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தரப்பாக (தேர்தல் வழியில் வெற்றிபெற்ற) தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது.   

ஆனால், அப்போது, கூட்டமைப்புக்கான உருவாக்கத்துக்கான ஒப்பந்தத்தில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்டன; சம அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதுதான், தேர்தல் வெற்றிகளையே பல ஆண்டுகளாகக் கண்டிராத அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைக் கூட்டமைப்பில் சம பங்காளியாக்கியது. அந்தக் கூட்டமைப்பின் வழி, அரசியற்களம் கண்ட கஜன், இன்றைக்கு ஐங்கரநேசன், அனந்தியின் கட்சிகளை அங்கிகரிக்க மாட்டேன்; கைச்சாத்திடும் அந்தஸ்தை வழங்க மாட்டேன் என்கிற தோரணையில் பேசுகிறார்.   

கட்சியொன்று, தனக்குள்ள ஆதரவின் அடிப்படையில், தேர்தலின் போது ஆசனங்களைக் கோருவது என்பதுவும் கூட்டணியொன்றுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, தரநிலைப்படுத்தியே அங்கிகரிப்பேன் என்பதுவும் வெவ்வேறானவை.  

தேர்தல்களில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயார் என்று குறிப்பிட்டு விக்னேஸ்வரன், தனக்குக் கடிதம் எழுதியதாக (அந்தக் கடிதத்துக்கு பதிலளிக்காது) ஊடகங்களில் வெளிப்படுத்தி, தன்னுடைய கனவான்(?) தன்மையையும் அரசியல் நாகரிகத்தையும்(?) கஜன் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னரே, அந்தக் கடிதம் குறித்து விக்னேஸ்வரன் ஊடகங்களில் பேசினார்.  

தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ, அதன் பின்னரான தனிநாட்டுக் கோரிக்கை குறித்தோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்றைக்குமே நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி இருக்கவில்லை.   

சமஷ்டிக் கோரிக்கையை, தமிழரசுக் கட்சி முன்வைக்கும் போது, காங்கிரஸின் ஸ்தாபகரான ஜீ.ஜீ பொன்னம்பலம், தென் இலங்கையோடு சேர்ந்து, அதனை எதிர்த்திருக்கிறார். இன்றைக்கும் காங்கிரஸின் யாப்பில், அரசியல் இலக்குகளில் சமஷ்டியோ, தனிநாட்டுக் கோரிக்கையோ இல்லை. அப்படியான நிலையில், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் கட்டத்துக்கு, விக்னேஸ்வரன் இறங்கி வந்தது என்பது, மாற்று அணியொன்றைப் பலப்படுத்தும் தேவைகளின் அடிப்படையிலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  

கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, அதனைப் புலிகள் அனுமதிக்கவில்லை. கூட்டமைப்புக்காக எழுதப்பட்ட யாப்பு வரைபுகள், கிடப்பில் போடப்பட்டன. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்யுமாறு பலமான கோரிக்கைகள் எழுந்தன. அது, தமிழரசுக் கட்சியால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது.   

ஆனால், கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முதன்முதலில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் இன்னமும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும், சின்னத்தைப் பெறவில்லை என்பதுவும் சந்தேகத்துக்குரிய விடயங்களாகவே தொடர்கின்றன. காங்கிரஸின் கடந்த கால வரலாற்றில் உள்ள கறுப்புப் பக்கங்களைக் கடப்பதற்காக, முன்னணி என்கிற கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வியும் எழுகின்றது.  

ஏனெனில், புதிய கூட்டுக்காகச் சிலவேளை கஜன் உடன்பட்டால், அவர் அந்தக் கூட்டின் பங்காளியாக, எந்தக் கட்சியின் பெயரோடு கைச்சாத்திடுவார்? தேர்தல் ஆணையகத்தில், கட்சியாக அங்கிகாரம் பெறாத முன்னணியைக் கூட்டணியொன்றின் பங்காளியாக, உத்தியோகபூர்வமாக எப்படி  இணைத்துக் கொள்ள முடியும்? இப்படிப் பல கேள்விகளுக்கு, கஜன் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நேர்மைத் தன்மை குறித்து, மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு முதல், அவர், அதற்கான பதிலை மக்களிடம் சொல்ல வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் கட்டத்தில், கஜன் காட்டும் முரட்டுத்தனம், முட்டாள்தனமானது மாத்திரமல்ல; சந்தேகத்துக்கும் உரியது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .