2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

கண்காணிப்பு அரசியல்: குழலூதும் கண்ணன்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 மே 25 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் படுக்கையறைகள் உளவுபார்க்கப்படும் போது, நீங்கள் என்ன உணர்வீர்கள்? 

அந்தரங்கம் என்றவொன்றே இல்லை என்பதை அறியும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

 உங்களுக்கு எவ்விதத்திலும் உறவற்ற ஒருவனோ, ஒருத்தியோ உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

 இன்றைய காலகட்டத்தில், இவை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். 
கண்காணிப்பு என்பது சர்வவியாபகமாய் மாறிவிட்ட உலகில், யாருமே விதிவிலக்கல்ல என்ற உண்மை, எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. 

இதைச் சொன்னது எந்த அமைப்போ, நிறுவனமோ, அரசோ அல்ல. தமது உயிரைத் துச்சமாக மதித்து, மனிதகுலத்தின் மாண்புக்காக இவ்வுண்மையை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்தவர்கள் சில தனிமனிதர்கள். 

இது அவர்கள் பற்றிய கதை; நம்மைப் பற்றிய கதை; மொத்தத்தில் நாம் கண்காணிக்கப்படுவது பற்றிய கதை.

இரண்டு நிகழ்வுகள், இவ்வாரம் கண்காணிப்பு அரசியலின் தன்மையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளன. 

முதலாவது, அமெரிக்க இராணுவம், ஈராக்கில் நிகழ்த்திய போர்க் குற்றங்களையும் அமெரிக்காவின் இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களையும் உலகுக்கு அம்பலப்படுத்தியமைக்காகத் தண்டிக்கப்பட்ட பிராட்லி மேனிங் (இப்போது செல்சியா மேனிக்) தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

இரண்டாவது, இவரது அம்பலப்படுத்தல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் யூலியன் அசான்ஜ் மீது சுமத்தப்பட்டிருந்த  பாலியல் குற்றவியல் வழக்குகளிலிருந்து ஸ்வீடன், அவரை விடுவித்திருக்கிறது. 

இவை, இரண்டு பிரதான விடயங்களைப் பேசுபொருளாக்கியுள்ளன. 
முதலாவது, இவ்விருவரும் தங்கள் செயல்கள் மூலம் கவனம் பெற வைத்த, ‘கண்காணிப்பு அரசியல்’. 

இரண்டாவது, இருவரதும் செயலான ‘குழலூதுதல்’ (whistleblowing) என அழைக்கப்படும் அம்பலப்படுத்துதல் செயற்பாடு பற்றியதாகும். 

நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம், நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் உளவு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன என்பதை, அண்மையில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

விக்கிலீக்ஸ், இதன் முதல் பகுதியை ‘வால்ட்-7’ என்ற பெயரில் வெளியிட்டது. இவை, வெளிப்படுத்தியுள்ள தகவல்கள், மிகவும் ஆபத்தானதும் நம்பிக்கையற்றதுமான சூழலை நோக்கி, நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தியுள்ளன. 

நமது கணினியில் செயல்படும் இயங்குதளங்களில் (Operating Systems) ஊடுருவக்கூடிய மல்வேர்களை (Malware) உருவாக்கி, அதன் உதவியோடு எம்மைக் கண்காணிக்க வழியேற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ.

இதன் மூலம், நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கமெராவையும் ஒலிவாங்கியையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மல்வேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கண்காணிப்பு, கணினிகளுடன் முடிந்து விடுவிடுவதில்லை. கணினியைப் போலவே, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களுக்குள் புகுந்து, ஆக்கிரமிக்கும்படியான மல்வேர்களும் செயலிகளும் (Apps) உருவாக்கப்பட்டிருக்கின்றன.  

இந்தச் செயலிகளும் மல்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கமெராவையும் மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் இயக்கவியலும். 

‘பூச்சிய நாட்கள்’ (Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக,  ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கான 24 இரகசிய செயலிகளை, கடந்தாண்டு சிஐஏ உருவாக்கியுள்ளது. 

இந்தச் செயலிகள் வாட்ஸ் ஆப், வைபர், வீபோ போன்ற சமூகத் தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும் தொலைபேசி அழைப்புகளையும் வீடியோ அழைப்புகளையும் சிஐஏயிற்கு இரகசியமாக அனுப்பி வைக்கின்றன. 

இதைப் போலவே அப்பிள் தொலைபேசிகளின் இயங்குதளமான ஐ.ஓ.எஸ்க்கான செயலிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கண்காணிப்பின் அடுத்த கட்டமாக, இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் (Smart Television) கட்டுப்பாட்டையும் பெறக்கூடிய வழிவகைகளை உருவாக்கியிருக்கின்றது சிஐஏ. ‘அழும் தேவதை’ (Weeping Angel) எனப் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்  தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து, பேசும் உரையாடலை ஒட்டுக்கேட்கவியலும். 

இவ்வுபகரணங்களைப் பயன்படுத்தாமல் அணைத்து வைத்தாலும், இதை ஒட்டுக் கேட்கவியலும். நவீன தொழில்நுட்பம் அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

எனவே, நாமெல்லோரும் விரும்பியோ, விரும்பாலோ கண்காணிக்கப்படுகிறோம். இவற்றைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியவர்களில் முதன்மையானவரான எட்வேட் ஸ்னோடன் கண்காணிப்பின் ஆபத்தான பக்கங்களை இவ்வாறு விளக்குகிறார்:

“எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும்படியான ஒரு கட்டமைப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியிருக்கிறது. அதன் மூலம் குறிப்பான தேவையின் அடிப்படையில் இல்லாமல், தகவல் பரிமாற்றங்களின் பெரும்பகுதி தானாகவே ஒட்டுக் கேட்கப்படுகிறது. உங்கள் மின்னஞ்சல்களை அல்லது உங்கள் மனைவியின் தொலைபேசியை, நான் பார்க்க விரும்பினால், அந்த ஒட்டுக் கேட்பை செயல்படுத்த வேண்டியதுதான் தேவை. உங்கள் மின்னஞ்சல்கள், கடவுச் சொற்கள், தொலைபேசிப் பதிவுகள், கடன் அட்டைகள் எதை வேண்டுமானாலும் நான் அணுக முடியும்.”

ஸ்னோடன், நீண்டகாலம் சிஐஏயிலும் அமெரிக்கப் பாதுகாப்பு ஆணையகத்திலும் பணியாற்றியவர். அமெரிக்காவுக்காக எல்லா நாடுகளையும் உளவு பார்த்தவர்.

 கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் சம்பளத்துடன், ஹவாய் தீவில் சொந்தமாகப் பண்ணை வீட்டுடன் வாழ்க்கையை நடத்தியவர். 

அமெரிக்காவின் இச்செயல்களை ஏற்றுக் கொள்ள மறுத்து, அம்பலப்படுத்துபவராக மாறியவர். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் இச்செயலை வெளிப்படுத்தியவர். அவரது எச்சரிக்கை வார்த்தைகள் கலக்கம் தருபவை. அவர் சொல்கிறார்: 

“எதெல்லாம் சாத்தியம் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியாது. அவர்கள் செய்ய முடிபவற்றின் வீச்சு, திகிலூட்டக் கூடியது. உங்கள் கணினிகளில் வேவு மென்பொருளைப் புகுத்த முடியும். நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்கள் கணினியை அடையாளம் கண்டு கொள்ள முடியும். எத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் செயல்படுத்தினாலும், நீங்கள் பாதுகாப்பாக இருக்கவே முடியாது.”

இவ்வாறான ஆபத்தான சூழலிலேயே நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவுக்கு விரோதமாக நாம் எதையும் செய்யவில்லை. எனவே, நாம் கண்காணிக்கப்படுவதால் பிரச்சினை இல்லை என நீங்கள் நினைக்கக்கூடும். 

கண்காணிக்கப்படுவதன் ஆபத்தை வெறுமனே அமெரிக்கா சார்ந்து மட்டும் கணிப்பிட்டு விடக்கூடாது. இதன் ஆழ அகலங்கள் பெரியவை. அமெரிக்கா, தனக்கு ஆதரவான அரசுகளுடன் ஒத்துழைக்கிறது. கண்காணிப்புத் தகவல்களைப் பரிமாறுகிறது.

இதனால், நீங்கள் உங்கள் நாட்டின் அரசாங்கத்துக்கெதிராக முன்வைக்கும் கருத்துகள், பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் என அனைத்தும் கிடைக்கவேண்டியவர்கள் கைகளில் கிடைக்கிறது. இவை அரசாங்கங்கள் மாற்றுக் கருத்துகளை மறுக்கவும் எதிர்ப்புக் குரல்களை நசுக்கவும் பயன்படுகின்றன. 

இன்னொரு வகையில், எம்மை நாமே கண்காணிப்பதற்கு, இலகுவான வகையில் வழிகளை அமைத்துக் கொண்டுள்ளோம். ‘உங்கள் மனதில் என்ன இருக்கிறது?’ என்பதைப் பகர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். ‘புதிதாக உள்ளதைப் பகர்க...’ என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நாம் இருக்கிற இடம், உண்ணும் உணவு முதல் எமது அனைத்து விருப்பங்களையும் தெரிவுகளையும் நாமே வெளிப்படுத்துவதற்கான வழிகளை சமூக வலைத்தளங்கள் உருவாக்கி வைத்துள்ளன. 

பேஸ்புக் முதன்முதலாக அமெரிக்க இராணுவத்தின் நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 

இந்த ஆபத்தின் ஒருமுனையில், தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி அரசுகள் கண்காணிப்பை நியாயப்படுத்துகின்றன. மறுபுறம், தனிமனித சுதந்திரத்தினதும் தங்களுக்குரிய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் இழக்கிறோம். 

இவையனைத்துக்கும் மேலாக, இச்செயல்கள் தனிப்பட்ட நபர்களினால் பல தீய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. 

இவ்வாறான கண்காணிப்புப் பணியில் இருக்கும் ஒருவரால், அரசுக்காகத் திரட்டப்பட்ட தகவல்களைத் தனிமனிதத் தேவைகளுக்குப் பயன்படுத்த இயலும். 

உதாரணமாக, அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களைச் சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். 

ஆகவே, தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதைத் தாண்டிய ஆபத்துகளைத் தன்னுள் உட்பொதித்துள்ளது.

இன்று, இவை தொடர்பான விவாதங்களின் தொடக்கப்புள்ளி ‘தேசியப் பாதுகாப்பு’ என்பதாகும். நாட்டின் பாதுகாப்புக்கு தனிநபர் அந்தரங்கங்களை விட்டுக்கொடுக்கும் தியாகம் தேவை என்று அமெரிக்காவும் ஏனைய அரசுகளும் சொல்கின்றன. 

தனி நபரை விடத் தேசம் பெரிது; தனி நபரது அந்தரங்கம் பறிபோவதை விட, தேசத்தின் பாதுகாப்புக் காக்கப்பட வேண்டியது என வாதிடப்படுகிறது. 

இங்கு எழுகின்ற முக்கியமான வினா எதுவெனில், இத்தகைய கண்காணிப்பு ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை’ மட்டும்தான் குறிவைக்கின்றதா? அப்படியென்றால் அமெரிக்காவிலும் பல்வேறு மேற்குலக நாடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்திருக்க முடியுமல்லவா? 

உண்மையில் நடப்பது யாதெனில், பயங்கரவாதிகளைப் பிடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பு தனது தோற்றத்தை நியாயப்படுத்திக் கொள்கிறது. 

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்த வகையானதும் ஜனநாயக ரீதியான அரசு எதிர்ப்பு கூட இடம்பெறக்கூடாது என்பதே இந்தக் கண்காணிப்பின் இறுதி நோக்கம். 

இப்போது மேற்கு, கிழக்கு என்ற வேறுபாடு ஏதுமின்றி, உலகளாவிய ரீதியில் அரசுகள் மென்மேலும் சர்வாதிகாரத் தன்மையுடையனவாக மாறிவருகின்றன. கண்காணிப்பு அதைத் தக்கவைக்கும் பிரதான கருவியாயுள்ளது.

இப்போது நடப்பது யாதெனில், மேற்குலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் விளைவால் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள், பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட, அபாயகரமாகத் தோன்றுகின்றன. 

ஏனெனில், ஒரு குண்டுவெடிப்போ, பயங்கரவாதச் செயலோ, ஆட்சியதிகாரத்தை அசைக்காது. ஆனால், மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் அதைச் சாதிக்க வல்லன.எனவே, அதைக் கட்டுப்படுத்தக் கண்காணிப்பு அவசியமாயுள்ளது. 

குண்டு வைக்கும் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளைப் பிடித்து அழிப்பது சுலபம். ஆனால், நாடு முழுக்கத் திரண்டு வரும் மக்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகப் போர்க்குணம்மிக்க போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தும் போது, அரசுகளுக்கு சமாளிப்பது பிரச்சினையாகிறது.

இவை கண்காணிப்பு அரசியலின் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. அரசாங்கங்கள் நாட்டின் பாதுகாப்புக்குக் கண்காணிப்புத் தவிர்க்கவியலாதது என வாதித்து அதை நியாயப்படுத்துகின்றன.
ஆனால், தனிமனித உரிமைகளை மனிதர் விட்டுக்கொடுக்கும் போது, தமது அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதற்கான முதற்படியை எடுத்து வைக்கின்றனர் என்பதே உண்மை. இன்று, இக்குழலூதிகள் மிக முக்கியமான சவாலொன்றை அமெரிக்க மக்களுக்கும் உலகில் உள்ள மக்களுக்கும் விடுத்துள்ளனர்.

நாம், எமது படுக்கையறைகளை உளவு பார்ப்பதை அனுமதிக்கப் போகிறோமா என்பதுதான் அச் சவால். தேசப் பாதுகாப்பின் பேரால் அதை அனுமதிப்பது,  எம் எதிர்கால சந்ததியினரையும் என்றென்றைக்கும் பாதிக்கும். இவ்வாறான செயல்கள் ஐனநாயகத்தின் பெயரால் பாசிசத்தை செயற்படுத்தும் வேலைகளன்றி வேறில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X