2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும்

எம். காசிநாதன்   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கச் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல் வியூகங்களுக்கு தமிழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது.   

தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை தி.மு.க” என்ற முணுமுணுப்பு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது.

ஆனால், டிசெம்பர் 16ஆம் திகதியன்று, கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ்- தி.மு.க உறவை, முன்னெடுத்துச் செல்லும் முக்கிய திருப்பமாக, இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இந்தச் சிலை திறப்பு அதற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணிக்கான மிக முக்கிய களமாகவும் அமையும் சூழல் உருவாகியிருக்கிறது.   

அண்டை மாநிலமான கர்நாடகாவில், இதற்கு முன்பு ஜனதாத் தளத்தின் சார்பில், குமாரசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் சங்கமம் ஆனார்கள். ஆனால் அப்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். 

அதன் பிறகு, இப்போது சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழாவை நடத்துகிறார்.  

தேசிய அளவில் புதிய அணி உருவாகும் வாய்ப்பை, இதற்கு முன்பு தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதிதான் முன்னெடுத்துச் சென்றார். மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவ கவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், டொக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமரானதில் தமிழகத்தில் அமைந்த கூட்டணி முக்கிய  பங்காற்றியது.   

குறிப்பாக, “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று முழங்கி, நெருக்கடி நிலைமைக்குப் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக வர முக்கிய பங்கு வகித்தவரும் கருணாநிதிதான்.   

“இந்திராவின் மருமகளே வருக; நிலையான ஆட்சி தருக” என்று சோனியா காந்தியைப் பிரதமராக்குவேன் என்று, முதன் முதலில் குரல் எழுப்பியவரும் கருணாநிதிதான். தேசிய முன்னனி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி போன்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணிகள் அமைவதில், கருணாநிதி முன்னிலையில் நின்றார்; தமிழகமும் முன்னணி வகித்தது.   

அதேபோல், பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைப்பதிலும் கருணாநிதியும் தமிழ்நாடும் முன்னிலை வகித்தது. “கெட்ட மரத்தில் உள்ள நல்ல பழம்” என்று, வாஜ்பாயைப் பாராட்டி, அவர் பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. ஆகவே இப்போது, பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் அணி அமைப்பதில் ஸ்டாலினும், தி.மு.கவும் முன்னணியில் நிற்கிறது.  

 தமிழகம் எப்போதெல்லாம், தேசிய அளவில் அணி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அப்போதெல்லாம் டெல்லியில், தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைந்திருக்கிறது. தேசிய அரசியலுக்கு, குறிப்பாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிராக, முதலில் தமிழகத்திலிருந்து குரல் எழுவதோ, அணி அமைப்பதோ அகில இந்திய அளவில் எதிரொலிக்கும். இதுவே, மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களின் நம்பிக்கை.   

இந்தத் தருணத்தில் கருணாநி இல்லை. ஆனால், அவரது சிலை திறப்பு அதற்குப் பயன்படுகிறது. அகில இந்தியத் தலைவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தலைவர்கள், சென்னையில் டிசெம்பர் 16ஆம் திகதி கூடுவார்கள்.   

அதற்கு முன்பு, டிசெம்பர் 10ஆம் திகதி டெல்லியில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இது போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார். நவம்பர் 22ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டத்தை, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.   

அக்கூட்டம், இப்போது டிசெம்பர் 10ஆம் திகதி நடக்கிறது. அதிலும் தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் டெல்லியில் கூடுகின்றன.   

ஆனால், இரண்டுமே மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது (ஸ்டாலின், சந்திரபாபுநாயுடு) என்பதுதான் வருகின்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் எப்படித் தேசிய அரசியலில் இருக்கப் போகிறது என்பதற்கு அச்சாரமாக, இருக்கிறது.  

அகில இந்திய அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தி.மு.கவுக்குக் ‘செக்’ வைக்கும் விதத்தில், ஒரு குழப்பம் தமிழகத்தில் முளைத்தது. அக்கட்சியின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன், “வைகோவும், விடுதலை சிறுத்தை அமைப்புகளின் தலைவர் தொல் திருமாவளவனும் தோழமையாக இருக்கிறார்கள். கூட்டணியில் இல்லை” என்று ஒரு பேட்டியில் கூறி, “தி.மு.கவுடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணியாக உள்ளன” என்றார்.   

ஆனால், தி.மு.க தரப்பிலோ, இதில் என்ன தவறு இருக்கிறது என்றே எண்ணினார்கள். தி.மு.கவுடன் கூட்டணி யார் யார் என்பதை துரைமுருகன் முடிவு செய்ய முடியாது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்களைப் பற்றி மட்டுமே கூற முடியும். அதைத்தான் அவரும் செய்தார்.   

ஆனால், வைகோவின் பேட்டி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. “ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வைகோ சொன்ன மறுநாள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை, ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோவும், வீரமணியும் சேர்ந்து நடத்தும் போராட்டத்தைத் தி.மு.க ஆதரிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டார்.   

இந்த அறிக்கை, வைகோ தி.மு.க கூட்டணியில் இருக்கிறார் என்பதற்கான பதில் என்றாலும், தி.மு.க தரப்பில் வைகோ கூட்டணியில் இருக்கிறார் என்று அறிவிக்கவில்லை. அதற்குக் காரணம், “தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததே தவிர, வைகோ கூட்டணியில் இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்தக் கட்சியும் தேர்தல் அறிவிக்கும் முன்பே கூட்டணி கட்சிகள் பற்றிய விவரத்தை அறிவிப்பதில்லை. அந்த வகையில்தான் நாங்களும் அறிவிக்கவில்லை” என்கிறார் தி.மு.க பிரமுகர் ஒருவர்.   

இறுதியில் வைகோவே நேரடியாக அறிவாலயம் வந்தார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறது என்ற தோற்றத்தை அவரே ஏற்படுத்தி விட்டுப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, “தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று அறிவித்து விட்டுச் சென்றார். அதற்கு முதல் நாளே, திருமாவளவன் அறிவாலயத்துக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்து, “விடுதலை சிறுத்தைகள், தி.மு.க உறவு வலுவாக உள்ளது” என்று கூறிச் சென்றார்.   

பிறகு காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஆதரவு எதிர்க்கட்சிகள் எல்லாம் கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து, தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் கலந்து கொண்டனர். இந்த கட்சிகள் எல்லாம் தி.மு.கவின் தலைமையில்தான் இருக்கின்றன என்ற செய்தி விடுக்கப்பட்டுள்ளது.   

இந்தப் பின்னணியில்தான் கூட்டம் முடிந்த மறு நாள், “கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறக்கச் சம்மதித்துள்ளார்” என்ற தகவலை தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. ஆகவே, தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி அமைவதற்கும், தேசிய அளவில் டெல்லியில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைவதற்கும் களம் சென்னையில் தயார் படுத்தப்பட்டு விட்டது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சி அதிக எம்.பிக்கள் வெற்றி பெற்றால் பிரதமர் என்பது காங்கிரஸ் அல்லாத இந்த கட்சிகளின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கும் என்று தெரிகிறது.   

பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை, இந்த எதிர்க்கட்சிகள் இப்போது அறிவிக்க வேண்டாம் என்பது அவர்களுக்குள் எழுதிக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இருக்கிறது.   

ஆகவே தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் விதமாக தமிழகம் மாறுகிறது. அதற்கான முஸ்தீபுகளில் தி.மு.கவும் மற்றக் கட்சிகளும் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .