2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எதிர்த்தரப்பா, கைகோர்ப்பா?

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அதிரன்   

புதிய தேர்தல் முறையில், பெரும்பான்மை பெறும் கட்சிகூட, ஆட்சியமைப்பதற்குக் கையேந்தும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். கிழக்கில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், எத்தனை கட்சிகள் போட்டியிடும், யார் யாரிடம் கையேந்துவார்கள் என்பது சுவாரசியமான விடயப்பரப்பு.  

கிழக்கைப் பொறுத்தவரையில், புதிதாக உருவான கட்சிகளாகட்டும், இடைக்காலத்தில், ஆரம்ப காலத்தில் இருந்து செயற்படும் கட்சிகளாகட்டும், ஒரு சிலவற்றைத் தவிர, எதற்குமே முழுமையான ஆதரவு (வாக்குத்தளம்) இருப்பதாக இல்லை.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்), தமிழர் விடுதலைக் கூட்டணி, தேசிய காங்கிரஸ், பொதுஜன பெரமுன (மொட்டு), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி உள்ளிட்டோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனப் பல கட்சிகள், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வடக்கு, கிழக்கில் யாரெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களையும் வெறுப்புகளையும் முன்வைத்தாலும், அதன் மீதான நிரந்தரமான வாக்குப்பலத்தைச் சிறிதளவுக்கு குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, இல்லாமல் செய்துவிடுவதென்பது, செல்லாக்காசான எண்ணமாகும்.   

இலங்கையின் உள்நாட்டு அரசியலில், எது நடந்தாலும் அது, வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் சக்திகளை மீறியதாக இல்லை. அதற்கடுத்துத்தான் இந்தியா, மேற்கத்தேயக் காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. இந்த அழுத்தம்சார் அரசியலுக்குள், நின்று நீடிக்கக் கூடியவர்கள் மாத்திரமே, அரசியல் ‘வியாபாரம்’ செய்ய முடியும்; இது நிதர்சனமாகும்.   

இந்த அளவில்தான், கிழக்கில் தமிழர் தரப்பில் புதிய அரசியல் கட்சி உதயம் என்கிற விடயத்தைப் பார்க்க வேண்டும். ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், கிழக்கில் புதிய அரசியல் கட்சிக்கான பிள்ளையார் சுழி, கொழும்பில் இடப்பட்டதாகவும் அதற்குக் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்டதாகவும் செய்திகள் பரவின.  

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, அகில இலங்கைத் தமிழர் மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுகூடி, ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன என்றும் கூறப்பட்டது.   

ஆனால், அதற்கான ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பில் கைச்சாத்திடப்படுவதற்கான சந்திப்பில், அது முழுமையாகக் கைகூடவில்லை எனத் தெரிகிறது.  

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், கிழக்குத் தமிழர்களின் சார்பில், அதி உச்சபட்ச உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ், ஓரணியில் போட்டியிட வைப்பதற்காக, ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை எடுத்திருந்தது.   

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவரின் ஊடகச் செயலாளர் முருகன் (ஸ்டாலின்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் துணைத் தலைவர் க.யோகவேள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி. சிறிதரன் (சுகு), அகில இலங்கைத் தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கா.விக்கினேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.  

ஆனால், மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பில், டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்த போதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் வருகை தராமல், மாநகர சபை உறுப்பினர் ஒருவர் வருகை தந்திருந்தார். தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.   

இந்த அறிவிப்பின்போது, கருத்துத் தெரிவித்த வீ.ஆனந்தசங்கரி, “தமது கட்சி இணைந்து கொள்வது தொடர்பில், எங்களது மத்திய குழு கூடி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலே, முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, பொதுச் சின்னத்தில், புதிய அமைப்பு உருவாக்கப்படும் போது, அதற்குள் த.வி.கூட்டணி இருக்குமா என்ற கேள்வியையே தோற்றுவித்திருக்கிறது.  

இதேவேளை, கிழக்கில் தமிழரின் அரசியல் பலத்துக்காக, கிழக்குத் தமிழர் ஒன்றியம் உருவாக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், கட்சிகளுடனான தனித்தனிச் சந்திப்புகள், மாவட்ட மட்டக் கூட்டங்களை அடுத்து, பட்டிருப்பு இராசமாணிக்கம் மண்டபத்தில், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், “தம்மால் அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துக் கட்கிகளும் வருகை தந்ததாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.   

அதன் பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான நகல்கள் அனுப்பப்பட்ட பின்னர், அதற்கு, ஐந்து கட்சிகள் பதில் கொடுத்திருந்தன. தற்போது அவற்றை இணைந்து, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது மூன்று கட்சிகள் மாத்திரம் கையொப்பம் இட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

அதேநேரத்தில், கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது முதல், த.ம.வி.பு கட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது என்ற வகையில், தொடர்ந்தும் அதையே எதிர்பார்க்கும். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.   

இரண்டாவது மாகாண சபையில் முதல் பாதிவரையிலும் இது தொடர்ந்தது. கிழக்கின் மூன்றாவது மாகாண சபையில், மஹிந்த ராஜபக்ஷவின் பொது ஜன பெரமுன கட்சி, கிழக்கில் முதல் முறையாகப் போட்டியிடவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத் தவிர்த்து விட்டு, அது போட்டியிடுமா என்ற சந்தேகம் பலரிடத்தில் உள்ளது. இந்தக் கேள்வியே, யாருடன் இக்கட்சி சேரும் என்பதற்கான பதிலையும் அளித்துவிடுகிறது.   

இதற்குப் பதில் கிடைத்தால், கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இணையுமா, கையொப்பமிடுமா என்பதற்கும் முடிவு வந்துவிடும்.   

எவ்வாறாயினும், அடுத்து நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். பொதுஜன பெரமுனவின் மொட்டுடன் இணைந்து பிள்ளையானின் த.ம.வி.பு கட்சி, கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகியன போட்டியிடும். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளில் தமிழர்கள் போட்டியிடுவார்கள்.   

இந்த நிலையில், கிழக்கில் தமிழர் தரப்பிலிருந்து பலமானதோர் எதிர்க்கட்சியாகவேனும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உருவாகுமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.  

ஆனால், கிழக்கில் இரண்டாவது மாகாண சபைக் காலத்தில், நாட்டில் ஏற்பட்ட தேசிய அரசியல் மாற்றத்தை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து, ஆட்சியை அமைத்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருந்தது. அந்தவகையில், இம்முறையும் இந்தக் கூட்டு, ஆட்சியை அமைக்க எத்தனிக்கும்.   

இருந்தபோதும், ஆட்சியமைப்பு எப்போதும் பேரம் பேசுதலுடன் கைகோர்ப்பாகத்தான் அமையும் என்பது மாத்திரம் உறுதி. ஏனென்றால், கிழக்கின் தலைவிதி அப்படி.   

இந்தத் தலை விதியுடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து கொள்கிறது என்று மாத்திரம் சொல்லிக் கொள்ளலாம். இப்போதும், கிழக்கில் ஒரு பலமான தமிழ்த் தரப்பு எதிர்க்கட்சி இல்லாமல் போவதையிட்டுக் கவலைப்பட்டுக் கொள்வோம்.  

செயற்குழுவுக்கான உறுப்பினர்களைப் பங்காளிக் கட்சிகள் நியமிக்கும் போது, அந்தந்தக் கட்சிகள் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தங்கள் கட்சி உறுப்பினர்களாக்கி, அவர்களை 50 சதவீதத்துக்குக் குறையாமல் தெரிவு செய்யும் போது, இந்த அரசியல் கூட்டு அணியின் கட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும்.  

இப்போதைக்கு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சியும் அது சார்பில் நடைபெற்றுவரும் செயற்பாடுகளும் பேசப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் ஞாபகத்தில் வந்துதான் போகிறது.  

கிழக்கில் தேர்தல் சூடு பிடிக்க முன்னரே, தமிழ் அரசியல் கட்சிகள் தம்மைத் தயார்படுத்தும் படலம் ஆரம்பித்திருக்கிறது. இது காத்திரமானதொன்றாக இருக்கட்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X