2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை

காரை துர்க்கா   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.  

“ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார்.  

“சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் விடயத்தில் என்ன செய்யலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?” எனக் கேட்டபோது, “சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே, தமிழ் மக்களுக்குப் பயன்மிக்கது. இதனால்கூட, தமிழ் இனத்துக்கு உடனடியாக விடிவு ஏதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், எங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த, தனித்துவமான, பலமான கட்சியும் தலைவர்களும் தேவையல்லவா?” எனக் கேட்டார்.   

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், அது சாத்தியப்படுமா, எங்கள் தலைவர்கள், அப்படிச் செய்வார்களா?” எனக் கேட்டபோது, “ஏன் முடியாது? 2015ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலின் போது, ‘நீயா நானா’ என முரண்டுபட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும், இன்று இணைந்துச் செயற்பட முன்வந்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. அது, மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளது. இருவரும் ஓரணியில், தமது இனத்துக்காக இணைந்து செயற்பட உள்ளார்கள். அன்று முரண்பட்ட இரண்டு ஜனாதிபதிகளும், இன்று தனிச் சிங்கள ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில், 150 ஆசனங்களைக் குவித்து, அறுதிப் பெரும்பான்மை அல்லது 113 ஆசனங்களுக்கு மேல் பெற்று, பெரும்பான்மை ஆட்சியமைக்க, வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், ஒருபோதும் நேரடியாக முரண்படாத சம்பந்தனும் விக்னேஸ்வரனும், ஏன் தமிழினத்துக்காகத் தங்கள் கட்சிகளுக்கு இடையிலான பகை மறந்து, ஒன்றுசேரக் கூடாது; ஒன்று சேர முடியாது?” எனத் தனது வாதத்தை நிறுவினார்.   

“சம்பந்தனது கட்சியும் விக்னேஸ்வரனது கட்சியும் ஒன்று சேர்ந்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காணாமற்போய் விடும்” எனவும் கூறினார்.  

அந்தக் காலங்களில், மன்னர்கள் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் சென்று, நாட்டில் தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் மக்கள் தங்களுக்குள் என்ன கதைத்துக் கொள்கின்றார்கள் எனத் தகவல்களைப் பெற்று, சிறப்பாக ஆட்சி நடத்தி வந்ததாக, சிறு வயதில் கதைகள் படித்த ஞாபகம் உண்டு.  

மக்களின் தேவைகளை இனங்காணல், மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்ளல் எனப் பல விடயங்களுக்கு, இது போன்ற ஊர் உலாவும் நடவடிக்கைகள் உதவும். இது, வினைத்திறனாக ஆட்சியை நடத்த வழிவகுத்தும் உள்ளது.  

அந்த வகையில், ‘மக்களின் மனங்களை அறிதல்’ என்ற விடயம் பிரதானமானது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள், கடந்த ஏழு தசாப்தங்களாக, தமிழ் மக்களின் மனங்களை அறிந்தும் அறியாதது போல நடந்து வருகின்றனர். இதுவே, நாட்டின் இனப்பிணக்கும் கூட.  

ஆனால், வடக்கு, கிழக்கில் அரசியல் செய்து வருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் கூட, தமிழ் மக்களின் மனங்களை அறியாத, அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாத மாந்தராகவே இருந்து வருகின்றனர்.  

“அரசியல் தீர்வு குறித்து, தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாகக் குறிப்பிட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. புலம்பெயர் புலிகளின் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்” என, இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.  

எனவே, அரசியல் தீர்வும் அதனூடாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரமும் கிடைப்பதற்கான அறிகுறிகள், மங்கலாகவே உள்ளன. ஏன், இல்லை என்றுகூடக் கூறலாம்.   

ஆகவே, கூட்டமைப்பினர் மாத்திரமல்ல, தமிழ் மக்கள் கூட்டணியோ தமிழ்த் தேசிய முன்னணியோ என, எவருமே அரசியல் தீர்வு குறித்து, அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தாலும் எதுவுமே நடக்கப்போவதும் இல்லை.  

இலங்கைத்தீவின் இனப்பிணக்கைத் தீர்க்க வேண்டும்; அதற்கான பரிகாரம் தேட வேண்டும் என்ற எண்ணமும் தேவையும், தமிழ் மக்களுக்கே அதிகப்படியாக உள்ளது. ஏனெனில், இனப்பிணக்கு காரணமாக அதிகப்படியான விலையைக் கொடுத்தவர்களும் அவர்களே.   

நிலைமைகள் இவ்வாறிருக்க, வருகின்ற பொதுத் தேர்தலில், இலங்கை வரலாற்றிலேயே மிகக் கூடுதலாக 143 கட்சிகள் போட்டியிடத் தயாராக உள்ளனவென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது போலவே, வடக்கு, கிழக்கிலும் ஏராளமான கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்க உள்ளன; களம் இறக்கப்பட உள்ளன. ஆகவே, வாக்குகளும் சிந்திச் சிதற உள்ளன.   இதைவிட, அதிகப்படியான கட்சிகளின் வருகையால், அதிகப்படியான மக்களுக்கு வாக்களிப்பில் ஈடுபட விருப்பமின்மையும் ஏனோதானோ என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.  

இவ்வாறாகப் பல கட்சிகள், பல சுயேட்சைக் குழுக்கள், மத அடிப்படையிலான சுயேட்சைக் குழுக்கள், பல முனைகளில் போட்டியிட்டு, தேர்தல் களம் போர்க்களம் போன்று மாறவுள்ளது.  

ஆயுதப் போர் நிறைவுற்ற பத்து ஆண்டுக் காலங்களில், தமிழ் மக்களது அடிப்படைக் கட்டுமானங்களோடு அரசியல் ரீதியாகவும் முன்நகர, கூட்டமைப்பால் முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், கூட்டமைப்பின் முழுமையான அதிகாரம், ஒரு சிலருடைய கைக்குள் சிறைப்பட்டு இருந்தமையே முதன்மைக் காரணம் எனலாம்.  

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் அதிகாரம் கூடுதலாகவும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது அதிகாரம் கூடுதலாகவும் உள்ளதாகத் தமிழ் மக்களிடம் கருத்தொன்று காணப்படுகின்றது. இது, தலைமைத்துவத்துக்கான எல்லை தாண்டி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே விடயங்களைத் தெரியப்படுத்தாத நிலை உள்ளதாகவும், தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் பலமான சந்தேகங்கள் உள்ளன.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என, இம்மாதம் 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் - மாட்டீன் வீதிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.  

இவர்கள், தமிழர் பிரச்சினை தொடர்பாக, ஜெனீவாவில் ஒன்றும் கொழும்பில் இன்னொன்றும், வடக்கு, கிழக்கில் பிறிதொன்றும் கதைப்பதாகவே, தமிழ் மக்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாகக் கதைத்து வருகின்றார்கள். பல தடவைகள் வெளிப்படையிலும் தெரிவித்துள்ளனர்.  

தமிழ் மக்களுக்கான சந்தேக வினாக்களுக்கு, கூட்டமைப்பின் தலைவர்கள் ஐயம் திரிபுற விளக்கம் கொடுக்கத் தவறிவிட்டார்கள். இவ்வாறாகத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தாத ஐய வினாக்களே, மாற்றுத் தலைமைத்துவத்துக்கு வழிகோலியது.  

மறுவளமாக, தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக் கதை, பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்றது. ‘இதோ வருகுது; அதோ வருகுது’ என எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத் தலைமை, இன்று வந்துவிட்டது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, மாற்றுத் தலைமை எனத் தமிழ் மக்களின் தேசிய அரசியலுக்குள் வந்துள்ளது.  

இதில், நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், சிறிகாந்தா, அருந்தவபாலன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் எனக் கணிசமான பிரமுகர்கள் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக உள்ளனர். சிவசக்தி ஆனந்தன், வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவராக உள்ளார்.  

கிழக்கு மாகாணத்தில், மாற்றுத் தலைமை மறைந்து விடுமா என்ற நிலைவரம் உள்ளது. இதைவிட, மாற்றுத் தலைமைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடும் சமர் நடைபெற்று வருகின்றது.  

இன்று, தமிழ் மக்களிடையே பாகப்பிரிவினைகள் அதிகரித்து வருகின்றது. மதம், சாதி, ஊர் என்ற அடிப்படையில், கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருகின்றன. அரசியல் நம்பிக்கையீனங்கள், பிற காரணங்களால் வெளிநாட்டு மோகமும் அதிகரித்தே வருகின்றது.  

ஒரு கட்சிக்குள்ளும் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனாலும், தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, தமிழ் மக்கள் விரும்பக் கூடிய ஒரு களம் தோன்றுமாயின், விட்டுக்கொடுப்புகளும் சகிப்புத்தன்மைகளும் கட்டாயமாகின்றன.  

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது, தமிழ் மக்களிடையே எழுச்சியும் இணையும்; இரு கட்சிகளுக்கு வளர்ச்சியும் காத்திருக்கின்றது.  

மன்னர் காலங்களைப் போல, தற்போது நகர்வலம் வரக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. ஆனாலும், ஊர்மனைக்குள் எங்கள் அரசியல் தலைவர்கள் சென்று, மக்களது விருப்பங்களைக் கேட்டால், அதிபர் கூறியதைப் பலர் ஆமோதிப்பார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X