2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான ஜே.ஆரின் அழைப்பும் தமிழ்த் தலைமையின் மறுப்பும்

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூன் 05 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 95)

யார் காரணம்?

1983 மே மாத இறுதி முதலே, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியிருந்தன. 1983 ஜூலை மாதமளவில் அது மிகுந்த அளவில் அதிகரித்திருந்தது.   
இதேவேளை, வடக்கு-கிழக்கில் (குறிப்பாக வடக்கில்) தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் தாக்குதல்களும் கணிசமாகப் பெருகியிருந்தன.

பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம் என்ற போர்வையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் கொடுங்கோன்மைச் சட்டங்களை நிறைவேற்றி, அதனூடாக அரச படைகளுக்கு வரம்பிலாத அதிகார பலத்தை வழங்கியிருந்தது.   

பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னமோ அப்பாவித் தமிழ் மக்கள்தான். தமிழ் மக்களின் துயர்நிலை கண்டு, அதற்கு ஏதும் செய்ய இயலாத நிலையில், தமிழ்த் தலைமைகள் நின்று கொண்டிருந்தன என்பதுதான் உண்மை.  

 தமிழ் மக்கள் ஆயுதவழிசென்ற தமிழ் இளைஞர்களை ஆதரித்தார்கள் என்று குற்றம் சுமத்துபவர்கள், அல்லது தமிழ் மக்கள் ஏன் ஆயுதவழிப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்று கேள்வியெழுப்புபவர்கள் முதலில் இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் இனப்பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பத் தொடங்கியது, 1956 ஆம் ஆண்டு, ‘தனிச்சிங்களச் சட்டம்’ என்ற அடக்குமுறைச் சட்டத்தோடு என்று கூறலாம்.   

அன்றிலிருந்து தமிழ்த் தலைமைகள் அஹிம்சை வழியில், ஜனநாயக வழியில் இனப்பிரச்சினைக்குக் குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக்கொள்ளவே முயற்சித்துக் கொண்டிருந்தன. அத்தனை முயற்சிகளும் 20 வருடங்களாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் உதாசீனப்படுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் நிர்க்கதியான நிலையை அடைந்தபோதுதான், 1976 இல் ‘தனிநாடு என்பதே இனி ஒரே வழி’ என்ற முடிவுக்குத் தமிழ்த் தலைமை வந்தது.   

ஆனால், அதன் பின்னர் கூட, கொள்கையளவிலே தனிநாடு என்பதைத் தமிழ்த் தலைமைகள் முன்னிறுத்தியிருந்தாலும் ஜனநாயக ரீதியிலான அரசியல்த் தீர்வொன்றுக்காகவே அவர்கள் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். 

 ஆனால், அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். 1969 இன் இறுதிப் பகுதியிலேயே, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் தலையெடுக்கத் தொடங்கியிருந்தன. ஆனால், அன்று ஆயுதக்குழுக்களுக்குத் தமிழ் மக்கள் மத்தியில், எந்தச் செல்வாக்கும் இருக்கவில்லை. தமிழ் மக்கள் ஆயுதத் தலைமையை அங்கிகரிக்க ஏறத்தாழ 14 ஆண்டுகள் எடுத்திருந்தன.   

அடுத்தடுத்து, இலங்கை அரசாங்கங்கள் ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு கோரி நின்ற தமிழ்த் தலைமைகளுக்கு நியாயமான, குறைந்தபட்சத் தீர்வையேனும் வழங்கி, அதனை நடைமுறைப்படுத்தியும் இருக்குமானால் தமிழ் மக்கள், ஆயுதக்குழுக்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.   

தனிநாடு என்ற கொள்கையை முன்னிறுத்தித் தமிழ்த் தலைமைகள், சமஷ்டியையேனும் கோரின. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், ‘மாவட்ட அபிவிருத்திச் சபைகள்’ எனும் பல்லற்ற ஓர் அதிகாரப் பரவலாக்கல் தீர்வை முன்வைத்தபோது, அதனைக் கூட தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்டன. 

 ஆனால், அந்தப் பல்லற்ற தீர்வைக் கூட ஜே.ஆர் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதிகாரமும் நிதியும் இல்லாத ஒரு சபைக்குத் தலைவராக இருப்பதில் என்ன பயன் என்று கூறி, யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராக இருந்த ‘பொட்டர்’ நடராஜா, பதவி விலகிய அளவுக்கு, அரசியல் தீர்வுபற்றி ஜே.ஆர் அரசாங்கம் அக்கறையற்றுத்தான் இருந்தது. ஆனால், ஆயுதம் கொண்டு பயங்கரவாதத்தை அழித்தொழிப்போம் என்று ஜே.ஆர் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டது.   

ஜே.ஆர் குழப்பமான புதிர்  

ஜே.ஆரைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஒருபுறம் சிங்கள மக்களிடம், “நீங்கள் உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டுத் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; அமைதியாக இருங்கள்” என்று மன்றாடுகிறார். மறுபுறம், ‘கொன்று-புதைக்கும்’ அதிகாரத்தை அரச படைகளுக்கு வழங்குகிறார். மறுபுறத்தில் “தமிழ் மக்கள் பற்றி, நாங்கள் யோசிக்க முடியாது” என்று வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு செவ்வியளிக்கிறார்.  

மிகக் குழம்பிய நிலையில் ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருந்ததா, அல்லது இதன் பின்னால் பெரும் திட்டமேதும் இருந்ததா? என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.   

சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான அழைப்பு  

1983 ஜூலை 15 அன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனி கொல்லப்பட்டமையை, இலங்கை இராணுவம் பெரியதொரு வெற்றியாகப் பார்த்தது.

இலங்கைப் படைகள் மீதும், அரச சொத்துகள் மீதும் தாக்குதல்களை முன்னெடுத்த முக்கிய பயங்கரவாதியைத் தாம் முற்றுகையிட்டதில் இலங்கை இராணும் மகிழ்ச்சி கொண்டிருந்தது.

இராணுவமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் மோதிக் கொண்டிருந்த நிலையில், ஆங்காங்கே தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம், சர்வகட்சி வட்டமேசை மாநாடு ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தது.   

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு ஆராயப்படும் என்பது 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததொரு விடயமாகும். ஏறத்தாழ ஐந்து ஆண்டு காலமாக, அக்கறை கொண்டிராத சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டைத் திடீரென்று நடத்த ஜே.ஆர் அரசாங்கம் திட்டமிட்டது.   

ஆனால், முதலில் இது நாட்டில் நிலவும் பயங்கரவாதம் பற்றி ஆராய்வதற்காகவே என்றே கூறப்பட்டது.   

ஏற்கெனவே, அரசியல் அமைப்புக்கு ஆறாவது திருத்தம் ஒன்றை முன்வைக்கும் நோக்கம் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இருந்ததாக ஒரு செய்தி பரவியது. அதாவது, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் எதிராக, பிரிவினைக்கு ஆதரவாகத் தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் செயற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் புதிய சரத்துகளை உள்ளடக்கும் முயற்சியொன்றை ஜே.ஆர் அரசாங்கம் செய்யவிருந்தது.   

ஆனால், 1983 ஜூலை 17 ஆம் திகதி வெளிவந்த செய்திகள், சர்வகட்சி வட்டமேசை மாநாட்டையிட்டு, குறித்த ஆறாம் திருத்தத்துக்கான முயற்சிகள் உடனடியாக முன்னெடுக்கப்படாது என்ற கருத்தை முன்வைத்தன.   

கூட்டணியின் மறுப்பு  

1983 ஜூலை 18 ஆம் திகதி, வெளிவந்த செய்திகளின்படி, சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான அழைப்பை, அன்று பிரதான எதிர்க்கட்சியாகவும் தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதியாகவுமிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மறுத்திருந்தது.   

இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாடானது, நாட்டில் பயங்கரவாதம் பற்றி ஆராய்வதற்காக மட்டுமே கூட்டப்படுகிறதேயன்றி, தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அல்ல” என்று கூறியிருந்தார்.   

மேலும், “ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் இதில் பங்குபற்றுமானால், தாம் தமது முடிவை, மன்னாரில் நடக்கவிருந்த தமது மாநாட்டில் மீள்பரிசீலனை செய்வோம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

அத்தோடு, “குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாட்டில், தமிழ் பிராந்தியங்களின் சுயநிர்ணயம், ஆயுதப் படைகளை வாபஸ் பெறுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோருக்கான மன்னிப்பு ஆகியவை பற்றியும் ஆராயப்பட வேண்டும்” என்றார்.   

இதன் பின்னர், “பயங்கரவாதம் பற்றி ஆராய்வதற்கென கூட்டப்பட்ட சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலினுள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான பரிந்துரைகளும் உள்ளடக்கப்படும்” என்று ஜே.ஆர் அறிவித்திருந்தார்.  

சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கு வரவேற்பு  

நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிய மதபோதகர்கள், மிதவாதிகள் உள்ளிட்ட கற்றோர் குழாமிடமிருந்து, குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான அழைப்பு தொடர்பில் வரவேற்புக் கிடைத்தது. 

அங்லிக்கன் திருச்சபையில் பிதாவாக இருந்த வண. செலஸ் ரைன் பெனான்டோ, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக எழுதி வந்தவர்.   

1983 ஜூலை 19 ஆம் திகதி ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில், குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாட்டு அழைப்பை வரவேற்று எழுதிய அவர், ‘இலங்கையையும் இலங்கையின் மக்களையும் நேசிக்கும் அனைவரும் எமது நாடு எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதிக்கு நன்றியுடையவர்கள் ஆகின்றோம்’ என்று குறிப்பிட்டார்.   

ஊடகங்கள் மீது அடக்குமுறை 

ஒருபுறம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த ஜே.ஆர். அரசாங்கம், மறுபுறத்தில் 1983 ஜூலை 20 ஆம் திகதி, ஆயுதக் குழுக்களின் நடவடிக்கை பற்றி, ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதை முற்றாகத் தடைசெய்யும் அறிவிப்பை வெளியிட்டது.   

ஊடக சுதந்திரம் மீதான ஒரு பெரும் அடி இது. ஆனால், அவசர காலச்சட்டம், பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு, இத்தகைய அடக்குமுறைகளை ஜே.ஆர். அரசாங்கம் இலாவகமாக முன்னெடுத்தது.  

அத்துலத்முதலியின் உரை

1983 ஜூலை 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களுக்கு எது சரி என்று அரசாங்கம் நினைக்கிறதோ, அதனை அரசாங்கம் முன்னெடுக்கும். நீங்கள் வட்டமேசை மாநாட்டில் பங்குபற்றுகிறீர்களோ இல்லையோ, நீங்கள் எங்களை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ, நாம் நடைமுறைப்படுத்த விரும்புவதை, நாம் நடைமுறைப்படுத்தியே தீருவோம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர, உகந்தவழி எதுவென அரசாங்கம் நினைக்கிறதோ, அதனை அரசாங்கம் முன்னெடுத்தே தீரும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.   

தொடர்ந்து பேசிய அவர், “இதன் போக்கிலே, அப்பாவிகள் பாதிக்கப்படலாம். அதனைத் தவிர்க்க நாம் எம்மாலியன்றதைச் செய்வோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பயங்கரவாதத்துடன் சமர் செய்ய வேண்டும் என்றே எண்ணுகிறது என்று நான் நினைக்கிறேன். அப்படியிருக்கையிலே, அவர்கள் இந்த வட்டமேசை மாநாட்டிலிருந்து பின்வாங்குவதற்கான காரணங்கள் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. ஒரு ‘சிங்கள-பௌத்த’ கட்சி என்ற அடிப்படையில் இத்தகையதொரு மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நீங்கள் எப்படி மறுக்கலாம்? பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நீங்கள் முன்வராவிட்டால் நீங்கள் எப்படி ஒரு தேர்தலையோ, மக்களையோ எதிர்கொள்வீர்கள்? இந்தப் பாசிச பயங்கரவாதிகளை அடக்குவதில் எங்களோடு கைகோர்க்க உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். பயங்கரவாதத்துக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மஹஜன எக்ஸத் பெரமுனவுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நான் இந்தக் கட்சிகளுக்கும் சரத் முத்தெட்டுவெகமவுக்கும் தினேஷ் குணவர்த்தனவுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, தமிழ் மக்களது பிரச்சினையையும் வடக்கில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு பிரச்சினையையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்பதே. இந்தப் பிரச்சினை எல்லாத் தமிழர்களாலும் எதிர்கொள்ளப்படுகிறது; அரசாங்கம் இதனை நன்குணர்ந்துள்ளது. வட்டமேசை மாநாட்டுக்கு வாருங்கள்; நாங்கள் முழுப்பிரச்சினைக்கும் தீர்வு காண்போம்” என்றார்.   

என்ன பயன்?

இந்த உரையை அமைச்சர் அத்துலத்முதலி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே, இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘ரெலிகிராப்’ பத்திரிகைக்கு, ஜனாதிபதி ஜே.ஆர் வழங்கியிருந்த “தமிழ் மக்களைப் பற்றி நாம் யோசிக்க முடியாது” என்ற செவ்வியின் கருத்துகளையும் நாம் இங்கு  ஒப்பிட்டு நோக்கவேண்டும். 

ஆகவே, ஜே.ஆரினது செவ்வியும் அத்துலத்முதலியின் பேச்சும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைகிறது. பயங்கரவாதம் என்று அவர்கள் கருதுவதை, இல்லாதொழிக்க, அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதோடு, தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியோ, தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பு, வெறுப்புகள் பற்றியோ தமக்கு அக்கறையில்லை என்பதே அவர்களது வெளிப்படையான நிலைப்பாடாக இருந்தது.   

இத்தகைய நிலைப்பாடு கொண்ட அரசாங்கத்துடன் சர்வகட்சி வட்டமேசை மாநாட்டில் பங்குபற்றியும் என்ன மாற்றம் விளைந்துவிடப்போகிறது என்ற கேள்வி இதனை நோக்கும் யாவருக்கும் எழலாம். உறுதியான முன்முடிவுகளோடு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்போது, அதனால் விளையும் பயன் ஏதுமிருக்குமா?  

(அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .