சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்

இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பை, அண்மைய சில நாட்களாக ஆக்கிரமித்த மிக முக்கியமான விடயமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில் இடம்பெற்ற, தொலைக்காட்சி விவாதம் அமைந்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்குகின்ற போதிலும், அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை தொடர்பானதாகவே, அவ்விவாதம் அமைந்திருந்தது.  

நடுநிலை நோக்கிலிருந்து அல்லது தமிழ்த் தேசிய அரசியல் நோக்கிலிருந்து அவ்விவாதத்தை அவதானித்த போது, இரண்டு சட்டத்தரணிகளுக்குமிடையிலான அவ்விவாதத்தில், ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன், தெளிவான விளக்கங்களை அளித்திருந்தார் என்பது போலத் தென்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்காகவோ அவ்விவாதத்தை வேறு விதமாகப் பார்த்தாலும் கூட, “மூக்குடைபட்டார் சுமந்திரன்” என்று சொல்லுமளவுக்கு, அவ்விவாதத்தில் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை என்பது, மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.  

ஆனாலும் கூட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகக் காணப்படும் இலங்கையின் பேஸ்புக் பரப்பில், “மூக்குடைபட்டார் சுமந்திரன்” என்ற ரீதியிலான கருத்துகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

சுமந்திரன் என்பவர், சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதைத் தாண்டி, நாம் விரும்பியோ, விரும்பாமலோ, தற்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக உள்ளார் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.   
அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பதைத் தாண்டி, அரசாங்கத் தரப்பில் மதிக்கப்படும் ஒருவராக சுமந்திரன் இருக்கிறார் என்பது உண்மையானது.   

அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தனுக்குப் பிறகு, தலைமைப் பொறுப்பை ஏற்காவிட்டாலும் கூட (அதற்கான போதுமான ஆதரவைப் பெறுவது என்பது, கடினமாக இருக்குமென்றே தற்போதைய நிலையில் கருதப்படுகிறது), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான முடிவுகளில் தாக்கம் செலுத்துபவராக அவர் இருக்கப் போகிறார் என்பதும், வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று.  

இந்த நிலையில் தான், “சுமந்திரனாக இருந்தால் எதிர்ப்போம்” என்ற ஒரு பிரிவினரின் எதிர்ப்பு, கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. சுமந்திரனைத் துரோகியாக்கும் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அரசியலை எங்கு கொண்டு செல்லுமென்பது தான், கேள்வியாக இருக்கிறது.  

இதற்காக, எதிர்ப்பவர்களை மாத்திரம் குறைசொல்வதென்பது பொருத்தமற்றது. சுமந்திரன் மீது தவறுகளே இல்லையென்று கூறிவிட முடியாது. சிறந்த பேச்சாளரான அவர், தனது பக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தோல்வியடைந்து விட்டார் என்பது வெளிப்படையானது. அதற்கான முக்கியமான காரணமாக, ஊடகங்கள் குறிப்பாக, தமிழ் ஊடகங்கள், தொடர்பில் அவருக்குக் காணப்படும் அசௌகரியமான உறவு காணப்படுகிறது. தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும், சுமந்திரன் வேண்டுமென்றே தவிர்க்கிறார் என்பது, ஊடகப் பரப்பில் தொடர்ச்சியாகக் காணப்படும் விமர்சனமாக இருந்து வருகிறது.  

சுமந்திரன் தரப்பில் அதற்கான பதிலாக, “நான் சொல்லும் விடயங்களை, தமிழ் ஊடகங்களில் சில ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன. அதனால், ஒட்டுமொத்தமாக அவற்றைத் தவிர்ப்பது தான் சிறந்தது என உணர்கிறேன்” என்ற பதில் வழங்கப்படலாம். அவரின் பக்கத்திலும் நியாயமிருக்கலாம். 

ஆனால், “ஊடகங்களை சுமந்திரன் நம்புவதில்லை, அதனால் ஊடகங்களிடமிருந்து ஒதுங்குகிறார், அதனால் சுமந்திரனை ஊடகங்கள் நம்புவதில்லை, அதனால் அவரைப் பற்றிய சரியான செய்திகள் வெளியாகுவதில்லை, அதனால் ஊடகங்களை சுமந்திரன் நம்புவதில்லை, அதனால்...” என்று, நச்சுச் சுழலாக இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.  

அதேபோல், அடிமட்ட மக்களிடம், சுமந்திரன் போதியளவில் சென்று, அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி போதியளவில் செவிமடுப்பதில்லை, மேற்தட்டு அரசியலையே மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்நிலைமை, அண்மைக்காலத்தில் முன்னேறியிருக்கிறது என்று கூறப்பட்டாலும் கூட, இந்நிலை, ஆரம்பத்திலேயே மாற்றப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.  

ஆனால் இவற்றைத் தாண்டி, சுமந்திரன் போன்றோரின் அரசியல், தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்பது தான், நாங்கள் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சுமந்திரன் மீதான வெறுப்பென்பது, தற்போது கேலிக்குரியதாக மாறியிருக்கும் “மென்வலு” என்ற அரசியல் பாணியின் வெறுப்பென்பது தான் உண்மையாக இருக்கிறது. மென்வலு என்றால், அரசாங்கத்திடம் சரணாகதி அரசியல் செய்வதா என்று, சுமந்திரனின் விமர்சகர்கள் கூறுவதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.  

மென்வலு அரசியல் தவறானது என்றால், வன்வலு அரசியலை முன்னிறுத்துகின்றவர்கள், அதற்கான பதிலை வழங்க வேண்டும். உதாரணமாக, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால வரைவு அறிக்கையில், மென்வலு அரசியல் மூலம் சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெறுவதற்குச் சாத்தியமான விடயங்களை விட, வன்வலு அரசியல் மூலமாக எவ்வாறு அதிகமாகப் பெற முடியுமென்பதை, அந்த அரசியலை வலியுறுத்துபவர்கள் தெளிவாகக் கூற வேண்டியது அவசியமானதாகும். “மென்வலு அரசியல் கோழைத்தனமானது, அது எமக்குப் பொருத்தமானது அல்ல” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம், மறுதரப்பிடம் சரியான திட்டங்கள் உள்ளன என்று கூறிவிட முடியாது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்களை நடத்துவது தான் வன்வலு என்றால், மத்திய அரசாங்கத்துக்கு எந்தளவுக்கான அழுத்தத்தை வழங்குமென்பது, கேள்விக்குரியது. மாறாக, ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்படும். அதேபோன்று, “சர்வதேசத்திடம் சென்று முறையிடுவோம்” என்று கூறினால், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட்டுக் கதைக்கிறோம் என்று அர்த்தம். 

“நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்” என்றால், தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்துப் புரிதலுடன் காணப்படுகின்ற பெரும்பான்மையினத் தரப்புகளை, ஒதுக்கிவைப்பதற்கான நடவடிக்கையாக அது அமையுமென்பதை, மறந்துவிடக் கூடாது.

ஒன்றுமே இல்லாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டமா? தமிழ் மக்கள், தயாராக இல்லவே இல்லை. தமிழ் மக்களை விட, இவ்வாறு உணர்ச்சிவசப்படும் அரசியலை முன்னெடுப்பவர்கள் எவரும், நேரடியான போராட்டத்தில் பங்குபெறுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. 

இவ்வாறு, வன்வலுவால் சாதிக்கப்படக் கூடியன என்று, சொல்லிக் கொள்ளக்கூடியதாக எதுவுமே இல்லை.  

அண்மைய விவாதத்தில் சுமந்திரன் கூறியதைப் போன்று, இலங்கையின் அரசமைப்பில், சமஷ்டி என்ற வார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. சமஷ்டி என்ற “பெயர்ப் பலகை” அவசியமா, இல்லையெனில் சமஷ்டியின் குணாதிசயங்களை “ஒருமித்த ஆட்சியில்” உள்ளடக்குவது அவசியமா என்பது தான், தமிழ்த் தேசிய அரசியலில் எடுக்கப்பட வேண்டிய முடிவாக இருக்கிறது. பெயர்ப் பலகை தேவையில்லை என்று சொல்லிக் கொண்டே, இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதால், மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.  

இலங்கையின் அரசியல் சூழலில், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களும் கேட்கும் அனைத்தையும் தருவதற்கு, பெரும்பான்மைத் தரப்புத் தயாராக இல்லை என்ற உண்மையை, நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வகையாகப் பார்த்தால், பெரும்பான்மையினர் என்பவர்கள், தங்களின் ஆதிக்கம் குறைவடைவதை விரும்பப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இந்நிலையில், இவ்வாறான பெரும்பான்மையினரிடமிருந்து, எமது பிரச்சினைகளை ஓரளவுக்குத் தீர்க்கக்கூடிய அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வது தான், சாத்தியத்துக்குரியதாக உள்ளது.  

அதை, சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பெற்றுக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தால், அவர்களைப் பலப்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. அவர்களை விட, வேறு ஒரு கட்சியோ அல்லது தனிநபர்களோ, அதிக அதிகாரங்களைப் பெறுவதற்கான, முழுமையான திட்டங்களுடன் இருக்கிறார்கள் என்ற நிலை இருந்தால், அத்தரப்பினரைப் பலப்படுத்த வேண்டும். இறுதி முடிவாக, மக்களுக்கு எவ்வாறு நன்மை கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறதே தவிர, அதை யார் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை அல்ல. 


சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.