2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும்

கே. சஞ்சயன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.  
முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை அவர், விடுதலைப் புலிகளுடன் பயணித்தவர்.  

போர் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயங்களில் அகமுரண்பாடுகள் ஏற்பட்டபோது, ஊடக அமையத்தில், தமது கருத்துகளை முன்வைத்து, அந்த நிகழ்வுகளில் காணப்பட்ட சில தடைக் கற்களை அகற்றியவர்.  
இதுவரை அரசியல் கருத்துகளை, ஊடக சந்திப்புகளில் வெளிப்படுத்தாத அவர், இம்முறை நேரடியாகவே அரசியல் ‘பந்தை’ எடுத்து ஆடியிருக்கிறார்.  

ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையிலும், முன்னாள், மூத்த போராளி என்ற வகையிலும் அவர் வெளியிட்டிருக்கின்ற கருத்து, ஒரு தனிநபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே அமைந்திருக்கிறது. அவரால் இலக்கு வைக்கப்பட்டவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆவார்.  

தமிழ் அரசியல் பரப்பில், சர்ச்சைகளின் நாயகன் சுமந்திரன் தான். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருப்பது வழக்கம். அவற்றை அவ்வப்போது, அவரும் உருவாக்கிக் கொள்கிறார்; அவரைச் சுற்றியிருப்பவர்களும் உருவாக்கிக் கொள்கின்றனர்.   

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், யாழ்ப்பாணத்தில் சுமந்திரனைத் தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டே, பெரும்பாலான கட்சிகள் பணியாற்றின.  

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அதி தீவிர பிரசாரங்களே, அவரை இன்னும் கூடுதலாகப் பிரபலப்படுத்தியிருந்தது. அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாகியது.  

தற்போதும் கூட, பொதுத்தேர்தலில், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் சுமந்திரன் மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தொடுக்கப்படும் விமர்சனங்கள், தாக்குதல்களுக்கு அப்பால், சுமந்திரனைத் தோற்கடிப்பது ஒரு, தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரல் போல, முன்னெடுக்கப்படுகிறது.  

சுமந்திரனைத் தோற்கடித்து விட்டால், தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டு விடும்; தமிழ் ஈழம் கிடைத்து விடும்; சர்வதேச விசாரணை வந்து விடும்; இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டி விடும்; சமஷ்டி கிடைத்து விடும் என்பன போன்ற மாயைகள் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் ஒன்றில், பிரசாரங்களின் மூலம் இதுபோன்ற மாயைகள் கட்டியெழுப்பப்படுவது வழக்கம் தான். வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களைக் கவிழ்ப்பது போலத் தான், இதுபோன்ற மாயைகளின் மூலம் அவர்களைக் கவர்வதும் ஒரு பிரசார உத்தியே.  

எவ்வாறாயினும், சுமந்திரன் இப்போது எல்லாத் தரப்பினாலும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக அவரை இலக்கு வைத்திருப்பவர் தான், முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா.  
சுமந்திரன் மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் செல்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல.  அந்தக் குற்றச்சாட்டுகளில் சில, அவரால் மட்டுமன்றி, ஏனைய பலராலும் முன்வைக்கப்பட்டு வருபவை என்பதை மறந்து விடக்கூடாது.  

அவற்றை உதாசீனப்படுத்தி விடவும் முடியாது.  தேர்தல் வேளையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு, சுமந்திரனுக்கு உள்ளது. அதனை அவர், முறையாகச் செய்வாரா, செய்கிறாரா என்பது வேறு விடயம்.  

அதேவேளை, சுமந்திரன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அல்லது, கோருகின்ற உரிமை, பசீர் காக்கா என்ற முன்னாள் போராளிக்கு மாத்திரமன்றி, அனைவருக்கும் இருக்கிறது.  

அது ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. இதில் யாரும் தலையீடு செய்ய முடியாது. அதை விமர்சனமும் செய்ய முடியாது.  

அதேவேளை, யாழ். ஊடக அமையத்தில் முன்னாள் மூத்த போராளியான பசீர் காக்கா, ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில், முன்வைத்திருக்கின்ற கருத்தில் உள்ள ஆபத்தை, இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதும் அவசியமே.  

தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்கு, சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று, அவர் கூறியிருக்கிறார்.  

அதற்காக, மாவீரரின் பெற்றோர், தலைவர் பிரபாகரனை நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுமந்திரனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.  

ஒரு இலட்சம் வாக்குகளைப் பெறுவேன் என்ற சுமந்திரனின் கனவைத் தோற்கடிப்பது, முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோரின் கடமை என்றும், அதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  

சுமந்திரனைத் தோற்கடிப்பது துயிலுமில்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

சுமந்திரனைத் தோற்கடிப்பதற்காக, ஆயுதப் போராட்டமும், போராளிகளும், மாவீரர்களும், அவர்களின் தியாகங்களும், புலிகளின் தலைவர் பிரபாகரனும், பணயம் வைக்கப்பட்டிருப்பது தான் பலருக்கும் உறுத்தலாக இருக்கின்ற விடயம்.  

விடுதலைப் புலிகள், தமக்கு எதிரான எவரையும், வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததில்லை.  

இயக்கத்தில் இருந்து பிரிந்து போன கருணாவைப் புலிகள் ‘துரோகி’ என்று கூறியிருந்தாலும், பிரபாகரன் அவ்வாறு ஒருபோதும் வெளிப்படையாகக் கூறியதில்லை.  அது ஒரு வகை நாகரிகம்; பண்பாடு.  கருணா பற்றிய விமர்சனங்களைப் பொதுவெளியில் முன்வைப்பதற்கு, ஒருபோதும் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை.  

அதுபோலவே, பெரும் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனி வழிக்குக் கொண்டு சென்ற அதன் தலைவர் ஆனந்தசங்கரி, புலிகளை எதிர்த்துக் கொண்டு, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது கூட, அவரை வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று புலிகள் கோரவில்லை.  

டக்ளஸ் தேவானந்தாவை, அரசியல் களத்தில் இருந்து அகற்றுவதற்குப் புலிகள் பல்வேறு இரகசியத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அவர் மீது பகிரங்க விமர்சனங்களைக் கூறி, நேரத்தை வீணடித்ததில்லை.  

தனிநபர்களுக்கு எதிரான பிரசாரங்கள், அவர்களைப் பலப்படுத்தி விடக்கூடாது, பிரபலப்படுத்தி விடக் கூடாது என்பது, அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  தமக்குச் சமதையானவர்களாக, அவர்களைக் கருதச் செய்து விடும் என்பதாலும் கூட, அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.  

அதுபோலத் தான், சுமந்திரனைத் தோற்கடிப்பதற்கான வேலையைச் செய்வதற்கு, பிரபாகரனையோ, மாவீரர்களையோ பணயம் வைப்பது மிகையானது.  

‘அவர்கள்’ யாரும் தனிமனிதர்களும் எவருக்கும் ஒப்பானவர்களும் அல்ல; அவர்களின் இலட்சியங்கள், தனிமனிதர்களை இலக்கு வைத்ததும் அல்ல. அவர்களின் உயர்ந்த இலட்சியத்தை, தனிமனிதர் ஒருவரை தோற்கடிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்வதும், அந்தத் தோல்வியின் மூலம், அவர்களின் இலட்சியம் அடையப்பட்டு விட்டதாகத் திருப்தி காண முனைவதும், அபத்தமானது.  

தனியரசுக்கான இலட்சியத்தைக் கொண்டவர்களின் தியாகத்தை, தனிநபர்களின் தோல்விக்குள் சுருக்கிக் கொள்ள முடியாது.  

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், தேர்தலில் சுமந்திரன் வெற்றிபெற்று விட்டால், அதன் பின்னால் வரக்கூடிய ஆபத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.  

அவ்வாறான ஒரு நிலை வந்தால், அவமானப்பட்டு நிற்கப் போவது, இங்கு பணயம் வைக்கப்பட்டுள்ள, தலைவர் பிரபாகரனும் விடுதலைப் போராட்டமும் மாவீரர்களும் தான்.  

அவர்களின் மீது பற்றுள்ளவர்களே தோற்கடியுங்கள் என்று அழைப்பு விடுத்தும், பயனற்றுப் போய் விட்டால், அது யாருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.   

அரசியல் என்பது சாக்கடை. அதில் சேறு குளித்தவர்களால், குருதியில் குளித்துப் போராடியவர்களின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது.                                    

அதைவிட, சுமந்திரன் வெற்றி பெற்று விட்டால், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதை, அழுத்தமாகக் கூறுபவர், இன்னும் பலமடைந்து விடுவார். அது கூட, கவனத்தில் கொள்ளப்படவில்லை.   

சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டுமா- இல்லையா என்பதை விட, தமிழ்த் தேசியமும் தமிழரின் போராட்டமும் அதனை முன்னெடுத்தவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும்.  

அந்த கௌரவத்தைக் கெடுத்து விட்டு, தேர்தலில் ஒரு தனிமனித வெற்றியையோ, தோல்வியையோ கொண்டாட முனைவது மிகமிக அபத்தம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X