2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுயநிர்ணய உரிமை

என்.கே. அஷோக்பரன்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 183)

இலங்கைத் தமிழர்களை, ஒரு தேசமாக அங்கிகரித்தல் என்பதைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்துவம் வாய்ந்த திம்புக் கோட்பாடாக அமைவது, ‘தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்’ என்பதாகும்.   

சுயநிர்ணய உரிமை என்பது, வெளி வற்புறுத்தல்கள் இன்றி, ஒருவர், தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள், தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு, தமது தற்போதைய நாட்டில் இருந்து, விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே சுயநிர்ணய உரிமையாகும்.   

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், ஐக்கிய அமெரிக்க, பிரான்ஸ் அரசமைப்புகள் ஆகியவை, சுயநிர்ணய உரிமைக் கருத்தியலின் ஆரம்பமாக, பலராலும் கருதப்படுகின்றன.  

ஆயினும், நவீனகால சுயநிர்ணய உரிமைக் கருத்தியலானது, அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன், 1918இல் ஆற்றிய ‘பதின்னான்கு புள்ளி’ உரையிலிருந்து உதித்ததாகப் பலரும் மேற்கோள் காட்டுகிறார்கள்.   
‘ஆள்வதற்கான சட்டபூர்வ அதிகாரமானது, ஆளப்படுபவர்களின் அனுமதியிலிருந்து பிறக்க வேண்டும்’ என்ற வூட்றோ வில்சனின் கருத்தே, நவீன சுயநிர்ணய உரிமைக் கருத்தியலின் கருவாகக் கருதப்படுகிறது.   

முதலாவது, உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் சுயநிர்ணய கருத்தியல் அடிப்படைகளின் படி, பல புதிய அரசுகள் பிறந்தன. அவற்றின் பிறப்பானது, எதேச்சாதிகாரமான முறையில் உருவானதேயன்றி, சுயநிர்ணயம் என்பது சர்வதேச அங்கிகாரம் பெற்றதொரு பொதுவுரிமையாகக் கருதப்படவில்லை. அத்துடன், அத்தகைய பரந்துபட்ட உரிமையேதும் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாக, உடனடியாக அங்கம் பெறவில்லை.   

இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டபோது, 1945ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 1(2) மற்றும் 55(c) சரத்துகளானவை, மக்களின் சமவுரிமை, சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தன.   

‘இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னரான, ‘கொலனித்துவ விலக்க’ (decolonisation) காலகட்டத்தில் கொலனித்துவ விலக்கத்துக்கான அடிப்படையாக, கொலனித்துவத்துக்கு உட்பட்ட நாடுகளிலுள்ள மக்களின் சுயநிர்ணயம் கருதப்பட்டது. ஆயினும், அச்சுயநிர்ணயம் அந்நாடுகளிலுள்ள சிறுபான்மையினருக்கோ, மக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கோ உரியதோர் உரிமையாகக் கருதப்படவில்லை’ என அரசும் சுயநிர்ணய உரிமையும் என்ற தன்னுடைய நூலில் டேவிட் ரயிக் கருத்துரைக்கிறார்.   

கொலனித்துவ விலக்கத்தில், சுயநிர்ணயம் என்ற கருத்தியல் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், அது கொலனித்துவ நீக்கத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாக இருந்தது என்பதுடன், பரந்துபட்டதோர் உரிமையாகக் கருதப்படவில்லை என்பதும் முக்கியமானது.   

இந்த நிலை 1966இல் சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றின் உருவாக்கத்துடன் மாற்றமடைகிறது.   

சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்’ என்று வழங்கியது. 

இவ்வொப்பந்தங்களின் இந்தச் சரத்துகளின் ஊடாக, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது’ நேர்மறையானதோர் உரிமையாகச் சர்வதேச அங்கிகாரம் பெற்றது.   

 சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), ‘மக்களின் சுயநிர்ணய’ உரிமையை அங்கிகரித்திருந்தாலும், குறித்த உரிமை தொடர்பிலான பொருள்கோடல்களில் சிக்கல்கள் நிறையவே இருந்தன.   

குறிப்பாக, ‘மக்கள்’ என்ற பதம் பற்றியும் ‘தமது அரசியல் நிலையைத் தீர்மானித்தல்’ என்ற சொற்றொடர் தொடர்பிலான பொருள்கோடல்கள் சிக்கல்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு வழிவகுத்தன.   

இந்தச் சிக்கல்கள் தொடர்ந்த நிலையில், குறித்த சுயநிர்ணய உரிமையின் பயன்பாட்டைக் கொலனித்துவ நீக்கத்துக்கு மட்டுமாக மட்டுப்படுத்தும் பொருள்கோடல் மட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ‘நட்பான உறவுகள்’ பிரகடனம் (Friendly Relations Declaration) என்றறியப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1970ஆம் ஆண்டின் 26/25(XXV) பிரகடனமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது, எந்தவகையிலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள சமவுரிமையையும் இன, சமய, நிறப் பாகுபாடுகள் எதுவுமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தை கொண்டுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதாக பொருள்கொள்ளப்படாது’ என்று தீர்மானித்தது.   

இந்தத் தீர்மானமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையின்’ பயன்பாட்டை மிகக்குறுகியதான ஒன்றாக்கியது. அதாவது, நடைமுறை ரீதியில் பார்த்தால், கொலனியாதிக்கம், அந்நியப் படையெடுப்பு ஆகியவற்றுக்கு உட்பட்டிருக்கும் மக்களுக்கு மட்டுமே உரியதானதாக, ‘மக்களின் சுயநிர்ணய உரிமையை’ குறித்த ‘நட்பான உறவுகள்’ பிரகடனம் சுருக்கியிருந்தது.   

ஆகவே, கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, புதிய ‘தேசிய அரசு’களாக ஸ்தாபனம் பெற்றிருந்த அரசுகளுக்குள் இருந்த வேறுபட்ட மக்கள் கூட்டங்களுக்கு, சுயநிர்யண உரிமை உரித்தானதாகக் கருதப்படவில்லை. இதற்கு, அந்தத் தேசிய அரசுகளின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது முக்கிய காரணமாக அமைந்தது.   

சுதந்திரமும் இறைமையுமுள்ள அரசொன்றுக்குள்  வாழும் வேறுபட்ட மக்கள் கூட்டங்களுக்கு, சுயநிர்ணய உரிமை உரித்தானது என்று கருதப்பட்டால், அவை தன்விருப்பத்தின் அடிப்படையில் மட்டும், குறித்த அரசிலிருந்து பிரிந்து, தனித்த அரசை ஸ்தாபிக்கும் விருப்பம் கொண்டால், அது குறித்த அரசுகளின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதாக அமையும் என்ற அச்சம் காரணமாக,‘மக்களின் சுயநிர்ணய உரிமையானது’ மேற்குறித்த, மிகக்குறுகிய முறையில் பொருள்கோடல் செய்யப்பட்டது.   

 சுயநிர்ணய உரிமையின் இந்தப் பொருள்கோடல் மட்டுப்படுத்தலானது, சுயநிர்ணய உரிமையின் இரு வகைகளை உருவாக்கியது. முதலாவது, ‘உள்ளகச் சுயநிர்ணயம்’ என்றும், மற்றையது ‘வௌியகச் சுயநிர்ணயம்’ என்றும் வழங்கப்பட்டது.   

1998இல், ‘க்யூபெக் குறிப்புரை’ தொடர்பான கனடிய மீயுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ‘சர்வதேசச் சட்டங்களின் அங்கிகரிக்கப்பட்ட மூலங்களானவை, சுயநிர்ணய உரிமையானது, உள்ளக சுயநிர்ணயத்தினூடாகவே நிறைவேற்றப்படுகிறது என்று நிறுவுகின்றன. அதாவது, மக்கள் கூட்டமொன்றின் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசார அபிவிருத்திக்கான முன்னகர்வுகள், ஏலவேயுள்ள அரசொன்றின் கட்டமைப்புக்குள்ளாகவே நிறைவேற்றப்படுகிறது என்று நிறுவுகின்றன’.   

 வௌியகச் சுயநிர்ணயத்துக்கான உரிமையானது, மிகப்பாரதூரமான சந்தர்ப்பங்களில் மட்டும், அதுவும் கூட மிகக் கவனமாக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே எழும். ஆகவே, அரசொன்றுக்குள் வாழ்கின்ற அனைத்து மக்கள் கூட்டங்களுக்கும், அந்த அரசுக் கட்டமைப்புக்குள்ளான சுயநிர்ணய உரிமையுண்டு. இதுவே உள்ளக சுயநிர்ணயம் எனப்படுகிறது.   

உள்ளகச் சுயநிர்ணய உரிமையானது, அந்த அரசுக் கட்டமைப்பைத் தகர்த்து, புதியதோர் அரசை ஸ்தாபிக்கத்தக்கதோர் உரிமையல்ல. அத்தகையதோர் உரிமைதான் வௌியகச் சுயநிர்ணயமாகும். இது மிகக் குறைந்த, வரையறுத்த சந்தர்ப்பங்களிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதோர் உரிமையாகக் கருதப்படுகிறது.   

உதாரணமாக, அரசானது அதற்குள்ளான ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் மீது, திட்டமிட்டு இன அழிப்பை மேற்கொள்ளும் போது, குறித்த மக்கள் கூட்டம், வௌியகச் சுயநிர்ணய உரிமையின் மூலம் பிரிவினை கோருவது நியாயமானதாகக் கருதப்படும். ஆனால், பொதுவாக சுயநிர்ணய உரிமை எனும் போது, இன்றைய சூழலில், அது உள்ளகச் சுயநிர்ணய உரிமையையே சுட்டி நிற்கிறது என்பதுதான் நிதர்சனம்.   

இது பற்றி, தன்னுடைய ‘மக்களின் சுயநிர்ணயம் - ஒரு சட்டரீதியான மறுவாசிப்பு’ என்ற நூலில் கருத்துரைக்கும் அன்ரோனியோ கஸீஸ், ‘மக்களின் உள்ளகச் சுயநிர்ணயம் (அதாவது தமது அரசியல், பொருளாதார ஆட்சிக் கிரமத்தை உண்மையாகவும் சுதந்திரமாகவும் தீர்மானிப்பதற்கான உரிமை) என்பதே, தொடர்ச்சியான உரிமையாகும் என்றும், மக்களின் வௌியகச் சுயநிர்ணயம் (அதாவது பிரிவினை, அரசொன்றிலிருந்து பிரிந்து, தனியரசொன்றை ஸ்தாபித்தல்) என்பது, கொலனித்துவ விலக்க சந்தர்ப்பங்களுக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல் முன்னெடுக்கப்படும் மிகச் சொற்பமான சந்தர்ப்பங்களில் அதனைச் சரி செய்வதற்கும் மட்டுமே உரியதாகும்’ என்று கருத்துரைக்கிறார்.  

‘உள்ளகச் சுயநிர்ணயம்’ என்ற கருத்தியலானது, ஆரம்பகாலத்தில் சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான வித்து என்றும், அது இறைமையுள்ள சுதந்திர அரசொன்றின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டை என்றமைந்த கருத்தை மாற்றியமைப்பதாக அமைந்தது.   

‘வௌியகச் சுயநிர்ணயம்’ என்பது, பிரிவினையை மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே ஒதுக்கியதன் மூலம், இறைமையுள்ள, சுதந்திர அரசின் ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கின்ற அதேவேளையில், மக்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்த முடியும் என்ற ஏதுநிலையை, உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தியல் உருவாக்கியது. இது சுயநிர்ணய உரிமையுள்ள மக்கள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பிரிவினையை நாடமுடியாது என்ற நிலையை உருவாக்கினாலும், ஏலவேயுள்ள அரசுக் கட்டமைப்புகள் அவர்கள் கொண்டிருந்த தமக்கான அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார ஆட்சிக் கிரமத்தைத் தீர்மானிக்கும் உரிமையைப் பறைசாற்றியது. அந்த உரிமையை, ஒரு குறித்த மக்கள் கூட்டத்துக்கு எந்த அரசும் மறுக்க முடியாது.  

சுயநிர்ணய உரிமையின் தன்மை இவ்வாறானதாக இருக்க, சர்வதேச பொருளாதாரம் சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவை வழங்குவதன்படி சுயநிர்ணய உரிமையானது அரசுகளுக்கு, தேசங்களுக்கு, இனக்குழுக்களுக்கு, தனிமனிதர்களுக்கு உரியதல்ல; மாறாக மக்களுக்கு உரியது.   

அப்படியானால் ‘மக்கள்’ என்பவர்கள் யார் என்பதற்கான வரைவிலக்கணம் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகிறது. இது தொடர்பில், ‘தன்னாட்சி அரசாங்கம் தொடர்பான அணுகுமுறை’ பற்றிய நூலில் கருத்துரைத்த சேர் ஐவர் ஜென்னிங்கஸ், ‘மேலோட்டமாகப் பார்க்கும் போது மக்களே தீர்மானிக்கட்டும் என்று வழங்கும் சுயநிர்ணய உரிமை நியாயமானது. ஆனால், இதிலுள்ள அபத்தம் யாதெனில், மக்கள் என்பவர்கள் யார் என்று தீர்மானிக்கும் வரை, மக்கள் தீர்மானிக்க முடியாது என்பதாகும்’, என்று குறிப்பிடுகிறார்.   
சுயநிர்ணய உரிமையின் தன்மை இவ்வாறானதாக இருக்க, சர்வதேச பொருளாதாரம், சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ‘மக்கள்’ என்ற பதத்துக்கான வரைவிலக்கணம், மிக நீண்டகாலமாகத் தொக்கு நிலையிலேயே தொடர்ந்தது. அதற்கான பதில் 1990இல் கிடைத்தது.   
 (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .