2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும்

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூலை 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 103)

அமைச்சரவைக் கூட்டம்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது.   

இன அழிப்புத் தாக்குதல்களையும் வன்முறையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல், பாதுகாப்பை உறுதிசெய்தல், நிவாரணமும் நட்டஈடுகளும் வழங்குதல் பற்றியெல்லாம் அமைச்சரவைக் கூட்டம் அமைந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும்.   

ஆனால், அமைச்சரவையில் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கான பழி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதும், அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதும் சுமத்தப்பட்டது.   

ஜே.ஆர் அமைச்சரவையிலிருந்து பேரினவாத வெறிகொண்ட அமைச்சராக அறியப்பட்ட சிறில் மத்யூ, “அமிர்தலிங்கத்தை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” என்றும், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்” என்றும் அமைச்சரவையில் முன்மொழிந்தார்.   

சிங்கள மக்களைச் சினமூட்டியதுதான் இந்த வன்முறைகளுக்கு காரணம், ஆகவே, சிங்கள மக்களின் சினம் குறைக்க, ஒரு வழியை ஜே.ஆர் முன்மொழிந்தார்.   

அதாவது, அரசமைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதனூடாக, நாட்டில் பிரிவினையைத் தூண்டும் எந்தவொரு அரசியல் கட்சியையும் தடைசெய்ய வேண்டும் என்பதுதான் ஜே.ஆரின் முன்மொழிவு.   

இதை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கத்தக்கதாக அமைய வேண்டும் என்பதும் உள்ளடக்கம்.   

இவ்வாறான ஓர் ஏற்பாடு, சிங்கள மக்களின் சினத்தைக் குறைக்க வல்லது என்று ஜே.ஆரும் அவரது அமைச்சரவையினரும் நம்பினார்கள்.   

இந்த முன்மொழிவின்படி, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக இருப்போம், பிரிவினைக்குத் துணைபோக மாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஓர் ஏற்பாடு, அரசமைப்பில் ஒரு திருத்தமாக முன்வைக்கப்படத் தயாரானது.   

1983 ஜூலை 28 ஆம் திகதி பதுளையில் வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. மேலும் வன்முறை, லுணுகலையிலிருந்து பசறைக்கும் பரவியிருந்தது.   

நுவரெலியா மற்றும் சிலாபம் பகுதிகளிலிலும் வன்முறைகள் முளைவிடத் தொடங்கின.   
ஆனால், ஒப்பீட்டளவில் கொழும்பு, கண்டி, திருகோணமலை நகரங்கள் பெரும் இன அழிப்புக்குப் பின்னரான ஓர் அமைதியைக் கொண்டிருந்தன. நாடு முழுவதும் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணிவரை ஊரடங்கு அமுலிலிருந்தது.   

ஜே.ஆரின் தொலைக்காட்சி உரை  

இந்தநிலையில், கலவரம் ஆரம்பித்து ஐந்தாவது நாள்தான், நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகாரங்கள் பொருந்திய அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.   

பொதுவிலே இதுபோன்ற பெரும் இன அழிப்பு வன்முறைகள் இடம்பெற்றால், அந்த நாட்டின் தலைவர்கள், தொலைக்காட்சியில் தோன்றி, நடந்த பேரழிவு தொடர்பிலான தமது கவலையையும் வன்முறைகள் தொடர்பிலான தமது கண்டனத்தையும் பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு தமது ஆதரவையும் ஆறுதல் வார்த்தைகளையும் கூறுவது வழமை. ஆனால் ஜே.ஆரது உரை வேறு மாதிரி அமைந்தது.   

28 ஆம் திகதி பிற்பகலளவில் ஒளிபரப்பான ஜே.ஆரின் உரை இவ்வாறு அமைந்தது. “ஆழ்ந்த வருத்தத்துடனும் கவலையுடனும் நான் உங்கள் முன் உரையாற்றுகிறேன்.

என்னைச் சுற்றி நடந்த அழிவுகளைப் பார்க்கும் போதும், வன்முறைப் பிரவாகத்தின் எழுச்சியைப் பார்க்கும்போதும் அது மிகுந்த துயரைத் தருகிறது.   

இந்த வன்முறைகள் குறிப்பாக தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இதற்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே பல வருடங்களாக வளர்ந்து வந்த தவறான உணர்வுகளும் மற்றும் சந்தேகமுமே காரணம். நம்பிக்கையீனம் இருக்கும்போது, மனக்குறைகள் இருக்கும்போது, மக்களை வன்முறைகள் நோக்கிக் கொண்டு செல்வது இலகுவாகிறது.   

இந்த அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே நாம் உணர்கிறோம்.   

1956 இலிருந்து தான் சிங்கள-தமிழ் மக்களிடையே இந்தச் சந்தேகம் முதன் முதலில் ஆரம்பித்தது. 1976 இல் முதன்முறையாக நாம் நேசிக்கும் எமது தாய்நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கான, ஒன்றுபட்ட இலங்கையை இரண்டு தேசங்களாகப் பிரிப்பதற்கான இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2500 ஆண்டுகளாக ஒன்றுபட்டிருந்த ஒரு தேசத்தை பிரிப்பதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்.   

முதலில், இந்தப் பிரிவினைவாத இயக்கம், அஹிம்சை வழியிலமைந்தது. ஆனால், 1976 முதல் அது வன்முறையாக மாறியது. வன்முறை அதிகரித்ததுடன், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதப்படையினர், பொலிஸார், இந்த வன்முறை இயக்கத்துடன் ஒத்துப்போகாத அரசியல்வாதிகள், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும், கொல்லப்பட்டார்கள். 

 இது எந்தளவுக்குப் பெரியதாக வளர்ந்திருக்கிறதென்றால் வெறும் சொற்பப்பேரல்லாது நூற்றுக்கணக்கானவர்கள் இந்த இயக்கத்தால் கொல்லப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்தப் பயங்கரவாதிகளின் வன்முறை காரணமாக, சிங்கள மக்கள் எதிர்விளைவைக் காட்டியிருக்கிறார்கள்.   

இந்தப் பிரிவினைக்கான இயக்கம் மிக நீண்ட காலத்துக்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். இதைத் தடைசெய்யாத பொறுப்பை ஏற்க வேண்டிய அரசாங்கங்களில் நானும் அங்கத்தவனாக இருந்திருக்கிறேன்.   
சில நாட்கள் முன்பு சர்வகட்சி மாநாட்டைக் கூட்ட அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. முதலாவது காரணம், எல்லாக் கட்சிகளும் எனது அழைப்பை ஏற்கவில்லை; இரண்டாவதாக நடைபெற்ற வன்முறைகளும் ஊரடங்கும் காரணம்.   

அந்தச் சர்வ கட்சி மாநாட்டில், நாம் சில அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம் என்பதைச் சொல்வதுடன், அதைச் செய்த பின்னர், நாட்டைப் பிரிப்பதை சட்டவிரோதமாக்குவது தொடர்பில் அபிப்ராய ஒற்றுமையைக் கோருவதற்கு எண்ணியிருந்தேன்.   

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மாநாட்டை எம்மால் நடத்த முடியவில்லை. ஆனால், இப்போது அரசாங்கமானது சிங்கள மக்களின் தேசிய கோரிக்கையான நாட்டைப் பிளவுறச்செய்யும் இயக்கம் வளர இனியும் அனுமதிக்க முடியாது என்பதற்கும், அதற்கான ஆரவாரத்துக்கும் இணங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.   

ஆகவே, இன்று காலை அமைச்சரவையானது, முதலாவதாக தேசத்தைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்டவாக்க சபைக்குள் (நாடாளுமன்றத்துக்கு) நுழைவதைத் தடுக்கும் வகையிலும், இரண்டாவதாக தேசத்தை பிளவுபடுத்தும் நாட்டம் கொண்ட கட்சிகளை சட்டவிரோதமானவையாக்கி, தடைசெய்யும் வகையிலுமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.   

ஆகவே, இந்தத் தடை வந்ததும் அதன் உறுப்பினர்கள் சட்டவாக்க சபையில் அமர முடியாது. அந்தக் கட்சியினர் அல்லது நாட்டின் பிரிவினைக்கு பரிந்துபேசுவோர் தமது குடியியல் உரிமைகளை இழப்பதுடன், எந்தப் பதவியும் வகிக்க முடியாதவாறும் தமது உத்தியோகத்தில் ஈடுபடமுடியாதவாறும் இந்நாட்டின் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இணைய முடியாதவாறும் தடுப்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.  

இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதையிட்டு நாம் வருந்துகிறோம். ஆனால், நாட்டின் பிரிவினை தடுக்கப்படுவதோடு, பிரிவினைக்காகப் பேசுபவர்கள் அதைச் சட்டரீதியாகச் செய்ய முடியாத நிலை வரவேண்டும் என்ற சிங்கள மக்களின் இயற்கையான விருப்பையும், கோரிக்கையையும் வேறு எந்த விதத்திலும் திருப்திப்படுத்த முடியும் என்று எனக்கோ, எனது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை”.  

ஜே.ஆரின் உரைதந்த அதிர்ச்சி  

மேற்கூறிய விடயங்களை உள்ளடக்கிய ஜே.ஆரின் உரை, தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சியைத்தான் தந்தது. இதை ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் இவ்வாறு விவரிக்கிறார்: ‘பெரும் பாதிப்புகளை சந்தித்த நிலையிலும் ஜே.ஆரை ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் என்று பார்த்துக் கொண்டிருந்த, தமது வீடுகளிலும் அல்லது அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருந்த பல்வேறு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் இருந்த, ஜனாதிபதியின் அறிவிப்புகளில் ஏதாவது ஆறுதலை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த தமிழ் மக்களுக்கு கசப்பான ஆச்சரியமே எஞ்சியது.   

நடந்தவைகள் வருத்தத்துக்குரியவை; எனினும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிக்கெதிரான சிங்களவர்களின் மிகப் புரிந்துகொள்ளக்கூடிய எதிர்வினையே இது என்று அவர் கூறினார்.   

ஆகவே, அவர், தான் பிரிவினைவாதிகளோடு தளர்வாக நடந்து கொண்டதை ஏற்றுக்கொண்டு, நடந்த துன்பங்களுக்கான அரசாங்கத்தின் எதிர்வினையாக, பிரிவினைக்கு பரிந்துபேசும் கட்சியை தடை செய்யும் சட்டம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் பொதுச் சேவையாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுக்கச்செய்யும் நடவடிக்கையும் முன்வைக்கப்பட்டது’.  

 உண்மையில் ரஜீவ விஜேசிங்ஹ சொல்வதுபோல, ஜே.ஆரின் உரை தமிழ் மக்களுக்கு கசப்பான ஆச்சரியம் மட்டுமல்ல; அவ்வுரை அடிப்படை மனிதாபிமானத்துக்கும் முரணாகவே அமைந்தது என்பதுதான் உண்மை.  

பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதில் காட்டிய அக்கறையில் ஒரு பங்கையேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதில் அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர் காட்டவில்லை.   

இந்தியாவிலும் எதிர்வினை  

27 ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில், தமிழ் பேசும் மக்கள் மீது இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் பற்றியும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினர் மீதும் அவர்களின் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் விவாதம் நடைபெற்றது.   

சபையில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சராக அன்று இருந்த நரசிம்ம ராவ், “கொழும்பில் நடந்த வன்முறைகளினால் சில இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நிகழவில்லை” எனவும் இந்தியன் ஓவஸீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஒஃப் இந்தியா ஆகியவை எரியூட்டப்பட்டது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த, தான் முயன்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.   

இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவிலும், இந்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது.   

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி (வைகோ) “பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பீ.எல்.ஓவை) இந்தியா அங்கிகரித்தது போல, தமிழ் விடுதலை இயக்கத்தையும் இந்தியா அங்கிகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.   

மேலும், இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும் என்றும், இரத்தம் குடிக்கும் அரசாங்கத்தின் முகவராக இருக்கும், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்றும் கோரினார்.   

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 
சீ.ரீ.தண்டபாணியும் இந்தியா, இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று கோரினார்.   

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.கல்யாணசுந்தரம், “தமிழ் மக்கள் மீதான தாக்குதல், இந்தியாவின் மீதான தாக்குதல்” என்று கூறினார். “இந்தியா, தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.   

ஜனதா கட்சியின் தலைவரான ராஜ நாராயண், “இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஆராய இந்தியப் படைகளை, இந்திரா காந்தி அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.   

இந்திய மாநிலங்களிலிருந்தும், ஏனைய கட்சிகளிலிருந்தும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான வன்முறை பற்றி நடவடிக்கையெடுக்க இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.   

குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து கடுமையான அழுத்தம் இந்திரா காந்திக்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த 
எம்.ஜி. இராமச்சந்திரன், “பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையில் நடந்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பற்றி ஐ.நா பொதுச் சபையில் பேச வேண்டும்” என்றார்.   

தமிழ் நாட்டின் சர்வ கட்சிக் குழு, இலங்கைக்கு ஐ.நா படைகள் அனுப்பிவைக்கப்படுவதற்கு இந்திரா காந்தி அழுத்தம் தர வேண்டும் என்று கோரியது.   

ஆந்திர முதல்வர் என்.டீ.ராம ராவ், தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தார். கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெட்கே தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு “மத்திய அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.   

தமிழ் நாட்டில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன, தமது ஆதரவாளர்களை வீதிக்கிறக்கி, இலங்கையில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின.

  இந்த நிலையில், ஜூலை 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி 
ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.  
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X