ஜே.ஆரின் ‘கொழும்பு முன்மொழிவுகள்’

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 121)

ஜே. ஆரின் அதிகார விளையாட்டு  

ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று பிரபலமாக விளிப்பதற்குப் பின்னால், நிறைய நியாயங்கள் இருக்கின்றன.  

 முற்றுமுழுதான அதிகாரத்தை அடைவதற்கு, ஜே.ஆர் செய்த காய்நகர்த்தல்கள் ‘மாக்கியாவலி’யின் இளவரசனை ஒத்தவை. தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்துகிற அதேவேளை, எதிரியின் பலத்தைச் சிதைக்கும் கைங்கரியத்தை, ஜே.ஆர் சிறப்பாகவே கையாண்டார்.   

ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் களையப்பட்டு, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார்.  

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிமாவின் வாரிசுகளான அநுர - சந்திரிக்கா இடையே எழுந்த அதிகாரப் போட்டியை, தனக்குச் சாதகமாக்கிய ஜே.ஆர், பின்னணியில் அநுர குழுவை ஆதரித்ததன் வாயிலாக, ஏற்கெனவே அரசியல் தோல்வியில் உழன்று கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை இருகூறாக்கினார்.   

அடுத்ததாக, தனது இரண்டாம் கட்ட அரசியல் எதிரிகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தினூடாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறச் செய்தார்.   

தான் மறைமுகமாக ஆதரித்த, அநுர பண்டாரநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவராக்கினார். இப்பொழுது கிட்டத்தட்ட முழு நாடாளுமன்றமும் ஜே.ஆரின் கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஜே.ஆரின் கையிலிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. ஜே.ஆருக்கும் உட்கட்சியில் பிரச்சினைகள், பிளவுகள் இருந்தன. ஆனால் அவையனைத்தும், ஒன்றிணைந்த புள்ளியாக ஜே.ஆர். இருந்தார்.   

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, முதன் முறையாக, இரவோடிரவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கியிருக்கக்கூடிய அதிகாரபலம் ஜே.ஆருக்கு இருந்தது. ஆனால், அந்த நோக்கம் அவரிடம் இருந்ததா என்பதுதான் கேள்விக்குரியது. ஏனெனில், அவரது நடவடிக்கைகள் அதற்கு மாற்றான போக்கையே சுட்டிக் காட்டின.   

மறைமுகமாகத் தன்னுடைய இராணுவத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் செயற்பாடுகளை ஜே.ஆர் தொடங்கியிருந்தார். ஆனால், மறுபுறத்தில் இந்திய, அமெரிக்க அரசியல் அழுத்தங்களின் காரணமாக, மீண்டும் பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, இலங்கைக்கு அழைத்திருந்தார்.   

 1983 நவம்பர் ஏழாம் திகதி, கோபால்சாமி பார்த்தசாரதி இலங்கை வந்தார். ஜே.ஆரை சிலமுறை சந்தித்து, நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பார்த்தசாரதி, இம்முறை மிகத் தௌிவானதொரு கோரிக்கையை ஜே.ஆரிடம் முன்வைத்தார்.   

கடந்த முறை பார்த்தசாரதியின் விஜயத்தின்போது, மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பலப்படுத்துவதுடன், அதை நடைமுறைப்படுத்துவதே தன்னால் இயலக்கூடியது என்று ஜே.ஆர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இம்முறை நடந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட அபிவிருத்தி சபைகள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையோ, தமிழ் மக்களையோ திருப்திப் படுத்தாது என்பதை பார்த்தசாரதி தௌிவுபட ஜே.ஆருக்கு எடுத்துரைத்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது இந்தச் சமரசத்துக்காகத் தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து இறங்கி வருதையும் சுட்டிக்காட்டினார்.  

 பிராந்திய சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பார்த்தசாரதியின் கோரிக்கையாக இருந்தது. பிராந்திய சபைகள் என்பது ஜே.ஆருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. நவம்பர் 10ஆம் திகதி வரை பேச்சுவார்த்தைகள் நீடித்தன. இந்தக் காலப்பகுதியில் பார்த்தசாரதி, ஜே.ஆருக்கு நெருக்கமாகவிருந்த அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.   
“கொழும்பு முன்மொழிவுகள்”  

இறுதியாக நவம்பர் 10ஆம் திகதி, ஜே.ஆரும் பார்த்தசாரதியும் ஒரு சமரசத்தை எட்டியிருந்தனர். மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வில் விடாப்பிடியாக நின்ற ஜே.ஆர், ஒரு மாகாணத்துக்குள் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றிணைவதற்குச் சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார்.   

அந்த நிபந்தனைகளாவன:

 (1) ஒரு மாகாணத்துக்குள்ளாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டுமே இவ்வாறு ஒன்றிணைய முடியும்.   

(2) அம்மாவட்ட அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள், இந்த இணைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதுடன்,

 (3) குறித்த இணைவுக்கு, குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள், சர்வஜன வாக்கெடுப்பொன்றில் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.  

 (4) திருகோணமலைத் துறைமுகம், முற்றுமுழுதாக மத்திய அரசாங்கத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் ஒரு மாகாணத்துக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைவதற்கு, ஜே.ஆர் சம்மதித்தார். இது, ‘கொழும்பு முன்மொழிவுகள்’ என்றும் விளிக்கப்பட்டது.   

இது பற்றி, உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி செயலகம், இலங்கையில் வன்முறைகள் தணிய இது உதவும் என்றதுடன், இதற்குப் பிரதியுபகாரமாகத் தமிழர் தரப்பு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடும் என்றும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.   
மறுபுறத்தில் பார்த்தசாரதிய, ‘கொழும்பு முன்மொழிவுகளை’ பிராந்திய சபைகள் அமைக்கப்படுவதற்கானதொரு படிநிலையாகவே பார்த்தார்.  

சென்னையிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், பெரும் அரசியல் தர்மசங்கடச் சிக்கலுக்குள் இருந்தார் என்று சொன்னால் மிகையல்ல. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்பது இந்தியாவின் (இந்திராவின்) அழுத்தம்.  

 தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடக் கூடாது, அதிலிருந்து கீழிறங்கக் கூடாது என்பது புலம்பெயர் தமிழர்களினதும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களினதும் அழுத்தம்.   

இதற்கிடையே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரின் நாடாளுமன்ற ஆசனங்கள் பறிபோயிருந்தன. அ. அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோயிருந்தது. தாய் மண்ணிலிருந்தும் தமிழ் மக்களிலிருந்தும் அந்நியப்பட்டுக் கொண்டேயிருந்தனர்.  

 தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக உருப்பெறத் தொடங்கியிருந்தது. மறுபுறத்தில், அமிர்தலிங்கத்துக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் சார் சக்திகள், கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்து வந்தன. அ. அமிர்தலிங்கம், எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், ஆதரவை விட எதிர்ப்பே விஞ்சி நிற்கின்ற சூழல் நிலவிக்கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ‘கொழும்பு முன்மொழிவுகளை’ப் பரிசீலிக்க வேண்டிய சூழல் அமிர்தலிங்கத்துக்கு அமைந்தது.   

‘கொழும்புப் பிரகடனத்தை’ விடுதலைப் புலிகள் அமைப்பு, பகிரங்கமாக நிராகரித்தது. ‘இது வெறுமனே, ஜே.ஆரின் காலங்கடத்தும் தந்திரோபாயம்; இதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சிக்கிவிடக்கூடாது’ என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இதைப் பரிசீலிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. விரைவில் ‘கொழும்பு முன்மொழிவுகள்’ பற்றிய, தமது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு இருந்தது.   

கூட்டணியின் நிலைப்பாடு  

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜே.ஆர், இந்தியாவின் தலைநகர் புது டெல்லிக்கு வருகைதர வேண்டிய சூழல் உருவானது. 1983 நவம்பர் 23 முதல் 29 வரை, பொதுநலவாய அரசுகளின் தலைவர்களின் மாநாடு, புது டெல்லியில் நடைபெறவிருந்தது. இதில் கலந்து கொள்ளவே ஜே.ஆர் புது டெல்லி வரவிருந்தார்.   

இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்பாகக் கருதிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னுடன் பேச்சுவார்த்தையொன்றுக்கு, ஜே.ஆருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ஜே.ஆர், பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு ஆரம்பமாகுவதற்கு இருதினங்கள் முன்பே, புது டெல்லி சென்றிருந்தார். இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, கோபால்சாமி பார்த்தசாரதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.   

மறுபுறத்தில், ஜே.ஆருடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டை அறிய, சென்னையிலிருந்த அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். இவர்களோடு, இலங்கையிலிருந்து கலாநிதி நீலன் திருச்செல்வமும் அழைக்கப்பட்டிருந்தார்.   

1983 நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தினங்களில் புது டெல்லியில் பார்த்தசாரதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ‘கொழும்பு முன்மொழிவுகள்’ தொடர்பில், அமிர்தலிங்கம் திருப்திப்படவில்லை. 

இரண்டுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், இணைய முடியும் என்ற முன்மொழிவைத் தாம் வரவேற்றாலும், அதை ஒரு மாகாணத்துக்குள் மட்டுமே செய்ய முடியும் என்பதையும், அதைச் செய்யச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்ற நிபந்தனைகளையும் தம்மால் ஏற்கமுடியாது என்று அமிர்தலிங்கம் குழுவினர் தெரிவித்தனர்.   

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து இறங்கி வரவே முடியாது என்று அமிர்தலிங்கம் தெரிவித்தார். அத்தோடு, இணைந்த வடக்கு-கிழக்குக்கான தமிழ்பேசும் பொலிஸ் கட்டமைப்பை ஸ்தாபித்தல் அவசியம் என்பதையும் அமிர்தலிங்கம் எடுத்துரைத்தார். வடக்கு-கிழக்கு இணைவின் போது, அம்பாறை மாவட்ட மக்கள் தனித்துச் செல்ல விரும்பினால், அவர்களது விருப்பின்படி எதிர்காலத்தில் அவர்கள் பிரிந்து செல்லலாம் என்பதையும் அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.   

ஜே.ஆரின் பதில்  

இந்த நிலையில் நவம்பர் 21ம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டுடன் புது டெல்லியை வந்தடைந்தார். டெல்லி வந்த ஜே.ஆரை சந்தித்த பார்த்தசாரதி, ‘கொழும்பு முன்மொழிவுகள்’ தொடர்பான அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டை ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார்.   

அவற்றைச் செவிமடுத்த ஜே.ஆர், ஒரு மாகாணத்துக்குள்ளான ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைவதற்கு அப்பிரதேசங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையைக் கைவிடத் தயார் என்றார். ஆனால், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும் அதற்கு, இணங்க முடியாது என்றும் தெரிவித்தார்.   

மேலும், தமிழ்பேசும் பொலிஸ் அமைப்பதையும் எதிர்த்த ஜே.ஆர், வேண்டுமானால் சட்ட அமுல்ப்படுத்தல் அதிகாரம் சிலவற்றை மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் பகிர்வது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றார்.   

சினங்கொண்ட அமிர்தலிங்கம்  

ஜே.ஆரின் இந்த நிலைப்பாட்டை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து கீழிறங்கி மாற்றுத் தீர்வைப் பரிசீலிக்கவும் ஜே.ஆரோடு பேசுவதில்லை என்ற கட்சியின் முடிவை மீறிப் பேசவும் முடிவெடுத்தமைக்கே பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்டிருந்த நிலையில், ஜே.ஆரின் இந்த முன்மொழிவுகள் அவரைச் சினங்கொள்ளச் செய்தன.  

 “இந்த முன்மொழிவுகளுக்கு நான் இசைந்தால், தாய்நாட்டுக்கு அல்ல, நான் சென்னைக்குக் கூடப் போக முடியாது” என்று பார்த்தசாரதியிடம் கொதித்த அமிர்தலிங்கம், “வடக்கு-கிழக்கு இணைப்பு, தனியான பொலிஸ் என்ற இரண்டு நிலைப்பாட்டிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். அமிர்தலிங்கத்தின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை என்பது பார்த்தசாரதிக்குப் புரிந்திருந்தது.  

ஜே.ஆர் - இந்திரா சந்திப்பு  

இந்த நிலையில்தான், 1983 நவம்பர் 23ஆம் திகதி மாலை இந்திரா காந்தி மற்றும் ஜே.ஆர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது. இராஜதந்திரமாகக் காய்நகர்த்திய இந்திராகாந்தி, இலங்கையில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை, இந்தியா  முழுமையாக ஆதரிக்கிறது என்று ஜே.ஆருக்கு நம்பிக்கை வழங்கினார். அத்தோடு, தாம் இலங்கையில் பிரிவினையை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஜே.ஆருக்கு உறுதி வழங்கினார்.   

ஆனால், ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வொன்றை எட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தப் பிரச்சினை இந்தியாவைப் பாதிப்பதையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அதிகரித்துவரும் அகதிகளின் வருகையையும், தமிழ் நாட்டில் ஏற்பட்டுவரும் உணர்வலைகளின் எழுச்சியையும் எடுத்துவிளக்கி, இதற்கு உடனடியாகத் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்றும் ஜே.ஆரைக் கேட்டுக் கொண்டார்.   

இதற்குப் பதிலளித்த ஜே.ஆர், தன்னுடைய சூழ்நிலையைத் தௌிவுபடுத்தினார். தமிழ் மக்கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திவிடுவார்களோ என்ற அச்சம், சிங்கள மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட ஜே.ஆர், தமிழ் மக்களுக்குச் சார்பாக ஏதாவது செய்தால், அது சிறிமாவோ பண்டாரநாயக்க தரப்பினால், தனக்கெதிரான பிரசாரமாகச் சிங்கள மக்களிடையே முன்னெடுக்கப்படும்; அது தன்னுடைய ஆதரவுத் தளத்தையே சிதைத்துவிடும் என்று இந்திரா காந்திக்கு எடுத்துரைத்தார். மேலும், முன்னேற்றங்களேதுமின்றி அந்தச் சந்திப்பு நிறைவுக்கு வந்தது. இந்திரா காந்திக்கு ஜே.ஆர் மீது நம்பிக்கை இருக்கவில்லை. அதேபோல, இந்திரா காந்தி மீது ஜே.ஆருக்கு நல்லதோர் அபிப்ராயம் இருக்கவில்லை.   

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போனாலும், இந்திரா காந்தி மீதான தனது விசனத்தை 24ஆம் திகதி இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டின் ஆரம்பநாள் பேச்சில், ஜே.ஆர் நாசூக்காக முன்வைத்தார். இது இந்திராவை மிகவும் சினமடையச் செய்திருந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


ஜே.ஆரின் ‘கொழும்பு முன்மொழிவுகள்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.