2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜே. ஆரின் ‘மூவழிப் பாதை’

என்.கே. அஷோக்பரன்   / 2017 நவம்பர் 27 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 120)

இந்திராவின் பதற்றம்

 டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17 இல், அ. அமிர்தலிங்கம் குழு, சந்தித்திருந்தது.  

இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தி, பெரும் சவாலாகக் கருதிய விடயங்களில் ஒன்று, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகும் நிலைமையாகும்.   

1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம், நிறைவேற்றியிருந்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின்படி, இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும் பிரிவினைக்குத் துணைபோகமாட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்று மாத காலத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருந்தது.   

அதைச் செய்யாதவிடத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். ஆறாவது திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை எடுப்பதில்லை என்பதில் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் உறுதியாக இருந்தனர். அப்படிச் செய்வது அவர்களது அடிப்படைக் கொள்கைக்கும் அவர்கள் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட மக்களாணைக்கும் முற்றும் முரணாக அமையும்.   

ஆறாவது திருத்தம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியலுக்கு எதிரான ஜே.ஆர். ஜெயவர்தனவின் ‘செக்மேட்’ காய்நகர்த்தல் தான். ஆறாவது திருத்தத்தின் கீழ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் சத்தியப்பிரமாணம் செய்தால், அவர்களது ‘தனிநாட்டு’ கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடும். அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாது விட்டால், அவர்கள் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் செல்ல நேரிடும். இதில் எது நடந்தாலும், அது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பலமிழக்கச் செய்யும். ஆகவே, அதை ஜே.ஆர் வெற்றியாகவே பார்த்தார்.   

ஆனால், இதற்குள் இன்னொரு விடயம் இருக்கிறது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் வளர்ந்து வருவதையும், அதன் பின்னணியில் இந்தியா, குறிப்பாக இந்திய உளவுத்துறை இருக்கிறது என்பதையும் ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.   

தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் முகமான, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மேலும் முன்னணிக்கு வருவதற்கான சூழலை அது உருவாக்கும். 

அதன்பின் இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகி, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக, முன்னெடுத்து, ஆயுத ரீதியில் தமிழ் மக்களின் அரசியலை எதிர்கொள்ள ஜே.ஆர் முடிவெடுத்திருக்கலாம். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தத் தர்க்கத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கின்றன. சிலர் இதனை ஜே.ஆரின் ‘மூவழிப்பாதை’ என்று அடையாளப்படுத்துகிறார்கள்.   

ஜே.ஆரின் ‘மூவழிப்பாதை’  

இலங்கை இனப்பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பில் ஜே.ஆர் மூன்று சமாந்தர வழிகளைக் கையாண்டார்.   

முதலாவது, தனது இராணுவத்தைப் பலப்படுத்துதல்; அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.   

இரண்டாவதாக, தமிழர் அரசியலிலிருக்கும் மிதவாதிகளைப் பலமிழக்கச் செய்தல்; இது தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் அரசியலில் முன்னணிக்கு வர உதவும்.  

 மூன்றாவதாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி, இராணுவரீதியாக அவர்களைத் தோற்கடித்தலுடன், தமிழர் தாயகம் என்று கருதிய பிரதேசங்களில், திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தி, ‘தமிழர் தாயகம்’ என்பதன் அடிப்படைகளை இல்லாது செய்தல்.   

இந்த ‘மூவழிப் பாதையை’ ஜே.ஆர் கனகச்சிதமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார். இந்திரா காந்தியின் இலங்கை தொடர்பான இருவழிப்பாதை அணுகுமுறை, அதாவது, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் மற்றும் ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம் ஆகிய இரண்டு தரப்புகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அதேவேளையில், மறைமுகமாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வளர்த்தல் ஆகிய இரு சமாந்தர வழிமுறைகளைக் கையாண்டார்.   

இந்தத் தந்திரோபாயமானது, ஜே.ஆரின் ‘மூவழிப்பாதைக்கு’ சாதகமானதாகவே இருந்தது. பேச்சுவார்த்தைகள் தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி, ஜே.ஆர் இந்த இனப்பிரச்சினையை எதிர்காலத்தில் இராணுவ ரீதியில் அணுகுவதற்கு வழிசமைப்பதாக இருந்தது.   

ஜே.ஆரும் அமெரிக்காவும் இந்தியாவும்  

ஜே.ஆர், இந்திராவையும் இந்தியாவையும் நம்பவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு பற்றிய அச்சம் ஜே.ஆருக்கு இருந்தது. அதனால்தான், இந்தியாவை முற்றாகப் புறக்கணிக்க முடியாதநிலை ஜே.ஆருக்கு இருந்தது. இந்தியாவுக்கெதிரான பாதுகாப்பாக மட்டுமல்லாமல், உள்நாட்டிலே வளர்ந்து வரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவும் இராணுவத்தைத் தயார் செய்ய ஜே.ஆர் பல முயற்சிகளை முன்னெடுத்தார்.   

அதன் முக்கிய படிதான், அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துதல். அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனுடன் ஜே.ஆர் நல்ல உறவை வளர்த்திருந்தாலும், அமெரிக்கா நேரடியாகத் தனக்கான ஆதரவைத் தரவில்லை என்ற வருத்தம் ஜே.ஆருக்கு நிறையவே இருந்தது.   

இந்தப் பின்னணியில்தான், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளம் முக்கியத்துவம் பெற்றது. இதற்கான ஒப்பந்தத்தை 1983 ஓகஸ்ட்டில் இலங்கையும் அமெரிக்காவும் இந்தியாவின் வெளிப்படையான கடும் அதிருப்திக்கு மத்தியில் ‘புதுப்பித்திருந்தது’.   
இதைத் தொடர்ந்து, 1983 ஒக்டோபர் முதலாம் திகதி, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வய்ன்பேர்கர், இலங்கைக்கு மிகக் குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார். இது இந்தியாவை மேலும் அதிருப்திக்குள்ளாக்கிஇருந்தது.  

 அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வய்ன்பேர்கரின் விஜயத்தை, ‘இலங்கையில் எடுத்த தேநீர் இடைவேளை’ என்று குறிப்பிட்டிருந்தாலும், இந்தியா இதை, இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு உறவின் பகுதியாகவே பார்த்தது.   

ஆகவே, ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள் இந்தியாவுக்கும் இந்திராவுக்கும் புரிந்திருந்தன. இதன் அடிப்படையில்தான் ஒக்டோபர் 17 ஆம் திகதி, அமிர்தலிங்கம் குழுவினரோடு நடந்த பேச்சுவார்த்தையில், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை இந்திரா காந்தி கோடிட்டுக்காட்டியிருந்தார்.  

 ஆனால், நவம்பர் நான்காம் திகதியோடு, மூன்று மாத காலக்கெடு முற்றுப் பெறும் சூழலே இருந்தது. இந்தச் சில நாட்களில் ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைகளை ஏற்று, ஒரு தீர்வுக்கு இணங்கப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.   

பார்த்தசாரதியை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முற்கொண்டு செல்வதில், ஜே.ஆர் துளியும் அக்கறை காட்டவில்லை. மாறாக, அவரது எண்ணம் பேச்சுவார்த்தைகளைக் காலந்தாழ்த்துவதிலும் அதேநேரத்தில், ஏனைய சர்வதேச உறவுகளைக் குறிப்பாக, இராணுவம் மற்றும் அரசியல் ரீதியில் பலப்படுத்துவது தொடர்பில்தான் இருந்தது.   

இதற்கான நடவடிக்கைகளை அவர் மிகநீண்ட காலமாகவே முன்னெடுத்துக் கொண்டிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியாவுடன் மட்டுமல்லாது, இஸ் ரேல் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் பலமான உறவுப்பாலங்களை கட்டியெழுப்புவதில் அவர் மும்முரமாகச் செயற்பட்டார்.   

ஜே.ஆர், தனது சகோதரரும் இலங்கையில் புகழ்பெற்ற வழக்குரைஞர்களில் ஒருவருமான, எச்.டபிள்யூ. ஜெயவர்தனவை, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தனது விசேட தூதுவராக அனுப்பி, அந்நாடுகளுடன் பலமான உறவுப் பாலங்களைக் கட்டியமைப்பதில் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்.   

வோல்டேர்ஸின் விஜயம்  

இந்த நிலையில்தான், 1983 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனின் விசேட தூதுவராக லெப். ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸ் இலங்கை வந்திருந்தார்.   

வோல்டேர்ஸை இந்திய விரோதப் போக்காளராகவே இந்தியா பார்த்தது. அவரது இலங்கை விஜயம், இந்தியாவை மேலும் விசனம் கொள்ளச் செய்தது. ஜே.ஆரைச் சந்தித்த வோல்டேர்ஸ், தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தையை இந்தியாவின் துணையோடு முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.  

ஏனென்றால், இந்தியாவோடு இந்த விடயத்தில் முரண்படுவதானது இந்தியாவைக் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுவதாக அமையும். மேலும், இலங்கையின் இனப்பிரச்சினை இன்னும் முறுகல் நிலையை அடைந்தால், இந்தியா இராணுவ நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கலாம் என்றும் வோல்டேர்ஸ் சுட்டிக்காட்டினார்.   

இது, ஜே.ஆருக்கும் இலங்கைக்குமான ஆலோசனையாக இருந்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைப்பதாக இருந்தது. இந்தியாவுடனான முரண்பாட்டை அமெரிக்கா விரும்பவில்லை; அத்தோடு, அத்தகைய முடிவை இலங்கை எடுக்குமானால், அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் உதவியும் இருக்காது என்பதையும் இது உணர்த்தியது.  

மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கத்தையும் அதனடிப்படையிலான ‘இந்தியக் கோட்பாட்டையும்’ மேற்கும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.   

இது, ஜே.ஆரை நிச்சயம் அதிருப்தியடைய வைத்திருக்க வேண்டும். ஆனால், இஸ் ரேலினூடான ஆயுத வழங்கல், மேலும், அமெரிக்க, இஸ் ரேல், பாகிஸ்தான் உளவுத்துறைப் பங்களிப்பு, இராணுவப்பயிற்சி என்பவை தொடர்பில் ஜே. ஆரும், வோல்டேர்ஸும் இணங்கியதாகத் தெரிகிறது.   

இதனடிப்படையில் வோல்டேர்ஸின் உதவியுடன் இஸ் ரேலுடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்த, தனது மகன் ரவி ஜெயவர்தனவை நேரடியாக இஸ் ரேலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ஜே.ஆர்.   

 மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை அமெரிக்காவுக்குப் பெரிதும் சாதகமாகப் பயன்படுத்த வோல்டேர்ஸ் விரும்பினார். இஸ் ரேலை இலங்கை அங்கிகரிக்க வேண்டும்; திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்த அனுமதித்தல், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.   

இவற்றை அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பரிசீலித்தாக வேண்டிய சூழல் ஜே.ஆருக்கு இருந்தது. இதுதான் சர்வதேச அரசியல். 

இந்தியா, வோல்டேர்ஸின் விஜயத்தை மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே பார்த்தது. ஏற்கெனவே, இலங்கையில் புதிய ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சாதகமான ஒன்றாகவும் தனக்குப் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் பார்த்த இந்தியா, அமெரிக்க, இஸ் ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இராணுவரீதியில், மிக நெருக்கமான தொடர்பை இலங்கை பேணுவதை, மிகப்பெரும் சவாலாகவே கருதியது.   

இந்தச் சூழலில் இலங்கை இனப்பிரச்சினை என்பதுதான், இந்தியா, இலங்கை மீது பெரும் அழுத்தத்தை வழங்கத்தக்க ஒரே ‘துருப்புச்சீட்டு’. ஆகவே, அதை முன்கொண்டு செல்வதில் இந்தியா மும்முரம் காட்டியது.   

பார்த்தசாரதிக்கு அழைப்பு  

கோபால்சாமி பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜே.ஆருக்கு அழுத்தத்தை இந்தியா வழங்கியது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மூலம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீடினூடாக, ஜே.ஆருக்கு இந்தச் செய்தி இந்தியாவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

மறுபுறத்தில், இந்திய விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் பார்த்தசாரதியை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.   

இதையெல்லாம் விட, முக்கியமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வேர்னன் வோல்டேர்ஸும் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறியிருந்தார். ஆகவே, பார்த்தசாரதியை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது மட்டுமே, ஜே.ஆர் முன்னிருந்த ஒரேயொரு வழியாக இருந்தது. ஆனால், முடிந்தளவுக்கு கால இழுத்தடிப்புச் செய்வதில் ஜே.ஆர் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டவில்லை.   

பதவியிழந்த கூட்டணியினர்  

மீண்டும் பார்த்தசாரதி, இலங்கை வருவதற்கு முன்னதாக, 1983 நவம்பர் நான்காம் திகதியோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகியிருந்தன. வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரதான ஜனநாயக பிரதிநிதித்துவம், திட்டமிட்டுச் சட்ட ரீதியில் இல்லாதொழிக்கப்பட்டது.   

சட்டரீதியாகச் செய்வதால் மட்டும் ஒருவிடயம் சரி என்று ஆகிவிடாது. இதைத்தான் அமெரிக்க சிவிலுரிமைப் போராட்டத்தின் முக்கிய தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் “ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை யாவும் சட்டபூர்வமானவையே என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

 மகாத்மா காந்தி ஒரு முறை, “மனச்சாட்சி சம்பந்தமான விடயங்களில் பெரும்பான்மையோரின் சட்டத்துக்கு இடமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.   

புதிய எதிர்க்கட்சித் தலைவராக அநுர  

எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்திருந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவரானார்.   

அதுகூட, ஜே.ஆரின் உதவியுடன்தான். சந்திரிகா - அநுர முரண்பாடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்திருந்தது. அநுர பண்டாரநாயக்க தலைமையில் மைத்திரிபால சேனநாயக்க உள்ளிட்ட மூவர், ஒரு தனிக்குழுவாகச் செயற்பட்டனர். ஜே.ஆரின் உதவியுடன், இவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளாக அங்கிகரிக்கப்பட்டிருந்தனர். இதன் அடிப்படையில்தான் அநுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.   

நீண்ட இடைவெளியின் பின், ஜே.ஆரின் அழைப்பின் பேரில் மீண்டும் பார்த்தசாரதி 1983 நவம்பர் ஏழாம் திகதி இலங்கை வந்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .