2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தந்திரோபாய ஒற்றுமை

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 163)

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும்  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும்  

ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கைகோர்த்துக்கொண்ட பின்னர், எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ‘உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை, அல்லது எப்போது இணைத்துக்கொள்ளப்படும்’ என்பதாகும்?  

அப்போதைய சூழ்நிலையில், இது சாத்தியப்படப்போவதில்லை என்பது, வௌிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருப்பினும், இந்தக் கேள்வி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.   

இந்தக் கேள்விக்கு பதிலளித்திருந்த அன்டன் பாலசிங்கம், “போர்த் தந்திரோபாயம் தொடர்பான, அபிப்பிராய வேறுபாடுகளே, புளொட் இயக்கம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைத்துக்கொள்ளப்படாமைக்குக் காரணமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், “உமா மகேஸ்வரன், மக்களைப் பெருமளவில் ஒன்றுதிரட்டி, தேசிய இராணுவமொன்றை அமைத்து, மரபுவழிப் போரை முன்னெடுக்க விரும்புகிறார். அவர், ஏனைய இயக்கங்கள் முன்னெடுக்கும் கெரில்லாப் போர் முறையை விமர்சிப்பதால், அவர் தலைமையிலான புளொட் இயக்கத்துக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையில் இந்தத் தந்திரோபாயம் தொடர்பான அபிப்பிராய பேதம் நிலவுகிறது. ஒரே நாளில் தேசிய இராணுவமொன்று உருவாக்கப்பட முடியாது. கெரில்லாப் போரானது, காலவோட்டத்தில் மக்களின் போராக மாறும். இதை, உமா மகேஸ்வரன் விரைவில் உணர்ந்துகொள்வார். அப்போது, அவரை இணைத்துக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்” என்று அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார்.   

இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இந்த ஒற்றுமை அரசியல் ரீதியில் வலுவடைய வேண்டுமானால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இதில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவியது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் வெறுத்தன என்பது மிக வௌிப்படையானது. அந்த நிலையில், கூட்டணியினரை ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைத்துக்கொள்வது என்பதன் சாத்தியக்கூறு, துளியளவும் இருக்கவில்லை.  

என்னதான், தமிழ் மக்கள் மத்தியில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், இலங்கை அரசாங்கத்தையும்  சர்வதேசத்தையும் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கிகாரம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கே இருந்தது. தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை வெறுக்க, இது கூட ஒரு காரணம் என்று, சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மக்களோடு, மக்களாக நிற்காது, அவர்களது பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், தென்னிந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்துவருவதை சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிரான, கடுமையான விமர்சனமாக முன்வைத்தார்கள்.   

இப்படித் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களைவிட, மக்களோடு மக்களாக நின்று, அவர்களுக்காகப் போராடும் போராளிகளே, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது.   

மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியலையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் கடுமையாக விமர்சித்தார்கள். ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் (ஈரோஸ்) தலைவர் பாலகுமாரன், “அமிர்தலிங்கம் ஒரு சந்தர்ப்பவாதி; அவர் மீது, எமக்கு நம்பிக்கையில்லை” என்று வௌிப்படையாகவே கூறியிருந்தார்.   

ஆனால், ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கம் பற்றி, அமிர்தலிங்கத்திடம் இருந்து நேர்மறையான கருத்துகளே வௌிப்பட்டன. “தமிழ்ப் போராளிகள் ஒன்றிணைய வேண்டுமென்றே, எப்போதும் விரும்பினேன்” என்று தெரிவித்த அமிர்தலிங்கம், “வெறுமனே பெரிய இயக்கங்கள் மட்டும் ஒன்றிணைவது போதாது; அனைத்துச் சிறிய ஆயுதக் குழுக்களும் கூட, இதனுடன் ஒன்றிணையும் போதுதான், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, வினைத்திறனாகச் செயற்பட முடியும்” என்று குறிப்பிட்டார்.   

ஆயினும், ஒரு விடுதலை அடையப் பெறுவதற்கு, ஆயுதப் போராட்டம் மட்டும் தனித்த வழிமுறையல்ல, என்பதையும் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், “ஈழம் என்ற கருத்துருவாக்கத்துக்கு சர்வதேச அங்கிகாரத்தையும் ஏற்புடைமையையும் ஏற்படுத்த, நாங்கள் முயற்சிக்கிறோம்” என்றும் கூறினார். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணையுமா, என்ற கேள்விக்கு பதிலளித்த அமிர்தலிங்கம், “போராளி இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அவசியம். நாங்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்; விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும், இன அழிப்பைத் தவிர்ப்பதற்குமாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.   

ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கம் வடக்கு, கிழக்கு உட்பட, புலம்பெயர் தேசங்களிலும் பெரும் பரபரப்பு அலைகளை ஏற்படுத்தியிருந்தது.   

இதேவேளை, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் விடுதலைப்புலிகள் இணைந்துகொண்ட 1985 ஏப்ரல் 10 அன்று, அவர்கள், மிகப்பெரிய தாக்குதலொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர்.   

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கிருந்த பொலிஸார், பொலிஸ் நிலையத்தைக் கைவிட்டு, யாழ்ப்பாணக் கோட்டையில் அமைந்திருந்த இராணுவ முகாமுக்குள் தஞ்சம் புகுந்தனர். இந்தத் தாக்குதலில், பொலிஸ் நிலையத்திலிருந்த பல்வேறு ஆயுதங்களும் விடுதலைப்புலிகள் அமைப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன.   

இந்தத் தாக்குதல் நடந்த மறுதினம், விடுதலைப் புலிகள் அமைப்பு, சென்னையிலிருந்து இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் அறிவிப்பை வௌியிட்டிருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பலம்பெற்று வந்தாலும், அரசியல் ரீதியில் நோக்கினால், இந்தத் தாக்குதலும்  ஜே.ஆருக்குச் சாதகமானதாகவே இருந்தது; அல்லது, இதையும் ஜே.ஆர், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் என்றே கூறலாம்.  

மார்கிரட் தட்சரின் விஜயம்  

இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் முன்னெடுக்கப்படுவது ‘பயங்கரவாதம்’ என்பதே, ஜே.ஆரினதும் அவரது அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருந்தது.   

இலங்கை அரச படைகள் நடத்தும் தாக்குதல்களானவை, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்பதே, ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்த வியாக்கியானம்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பொது இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம், ஜே.ஆரின் இந்தப் ‘பயங்கரவாத’ வியாக்கியானத்துக்கு வலுச்சேர்ந்துக் கொண்டிருந்தது.   

மேலும், 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, நடந்த தாக்குதலானது, பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சரின் இலங்கை விஜயத்துக்கு ஒருநாள் முன்பாக இடம்பெற்றிருந்தது.   

மறுநாள், இலங்கை வந்த பிரித்தானிய பிரதமர் தட்சரைச் சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத் தாக்குதலானது, தட்சரின் வருகையை அவமதிக்கும் வகையில் அமைந்ததாகக் குறிப்பிட்டதுடன், இந்தக் குழுக்கள், தமிழ் மக்களைப் பயங்கரவாதம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்ததாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.  

1985 ஏப்ரல் 13ஆம் திகதி, பிரித்தானியப் பிரதமர் தட்சர், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அந்த உரையில் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகள் அடங்கியிருந்தன. “எம்மிரு நாடுகள் உட்பட, பல நாடுகளையும் பாதித்துக்கொண்டிருக்கும், இன்று வேகமாகப் பரவும் நோயான பயங்கரவாத வன்முறைகளுக்கு, நாம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, இலங்கையில் பயங்கரவாதத்தோடு போராட, நீங்களெடுக்கும் முயற்சிகள் பற்றி, என்னால் பரிதாபம் கொள்ள முடிகிறது. வாக்குச் சீட்டால் செய்ய முடியாததைத் துப்பாக்கி ரவையால் சாதிக்க முயல்பவர்களுக்கு, வன்முறையைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராக, திடமான பதில் வழங்கப்பட வேண்டும்” என்று பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடையதும், பிரித்தானியாவின் உடையதுமான உறுதியான நிலைப்பாட்டை, தட்சர் எடுத்துரைத்திருந்தார்.   

தொடர்ந்து, சுதந்திரம், பொறுப்புணர்வு, நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகிய விழுமியங்கள் பற்றிப் பேசியவர், தமது பிரச்சினையை அமைதி வழியிலும், ஜனநாயக ரீதியாகவும் எடுத்துரைக்கும் சிறுபான்மை சமூகங்களுடன், இணைந்து செயற்பட, அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.   

மேலும், தோல்வியடைந்த சர்வகட்சி மாநாட்டு முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசியவர், உங்களுடைய ஜனாதிபதியின் முன்மொழிவின் அடிப்படையிலான தீர்வை, சர்வகட்சி மாநாட்டின் மூலம் எட்டமுடியாது போனது பற்றி, தான் வருத்தம் கொள்வதாகத் தெரிவித்ததுடன், சமூகங்களுக்கிடையில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகள், கலந்துரையாடல்,  நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே தீர்க்கப்படமுடியும் என்று, தான் உறுதியாக நம்புவதாகவும் தட்சர் குறிப்பிட்டிருந்தார்.  

பயங்கரவாதமும் பயங்கரவாத எதிர்ப்பும்  

சர்வதேச ஆதரவைப் பொறுத்தவரையில், இந்தக் காலப்பகுதியில் ஜே.ஆர், வெற்றி கண்டுகொண்டிருந்தார். இதில், ராஜீவ் காந்தி தலைமையிலான, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது.   

இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்தை, ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று ஒன்றுபடுதலுடன் எதிர்கொண்ட, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமது வன்முறைத் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரிக்கத் தொடங்கின. 

1985 ஏப்ரல் 25ஆம் திகதி, புளொட் அமைப்பு, கொழும்பு நகரை அண்டிய பிரதேசமொன்றில் அமைந்த பொலிஸ் நிலையமொன்றின் மீது, தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.   

1985 மே மாத ஆரம்பத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப், விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புகள், வடக்கில் அரச படைத்தளங்கள் மீது, தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.   

இதில், மே 09ஆம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், இராணுவ அதிகாரியும், ஐந்து வீரர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள். இதற்குப் பதிலடியாக, இராணுவம் ஊருக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில், ஏறத்தாழ 75 அப்பாவிப் பொதுமக்கள் பலியானதாகச் சிலர் பதிவு செய்கிறார்கள்.   

வடக்கு, கிழக்கில் கொடூர வன்முறைகள் நித்திய நிலையாக மாறியிருந்தன. மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் முன்னெடுத்த தாக்குதல்கள், ஜே.ஆரின் ‘பயங்கரவாதம்’ என்ற கருத்துக்கு வலுச்சேர்த்ததுடன், அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பாக, பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிசமைத்தது.   

அரசாங்கம் நடத்திய பதிலடித் தாக்குதல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக, ஜே.ஆராலும் ஜே.ஆர் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியாலும் நியாயப்படுத்தப்பட்டன.  இந்த வியாக்கியானத்தின் படி இந்தியா, மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகம், தமக்கு ஆதரவாக இருக்கும் என்பதே ஜே.ஆரின் கணக்கு.   

இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் அணுகுமுறை தொடர்ந்து இரண்டு வழிமுறைகளைக் கொண்டிருந்தது. அரசியல் ரீதியில் ராஜீவ் காந்தி, ஆயுத இயக்கங்கள் தொடர்பிலான நிலைப்பாட்டை ஓரளவு மாற்றியிருந்தாலும், இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கான ஆதரவை, தொடர்ந்து வழங்கிக் கொண்டுதான் இருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், ‘ஆயுதம் மூலமாக விடுதலை’ என்ற எண்ணத்திலும், ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ், இராணுவ ரீதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வெற்றிகொள்வது, என்பது ஜே.ஆரின் திட்டமாகவும் இருந்தது.   

ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களோ, ஜே.ஆரோ எதிர்பார்க்காத வகையில், ராஜீவ் காந்தி வேறொரு திட்டத்தைக் கொண்டிருந்தார். அதற்கான காய்நகர்த்தல்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருந்தது.   

அதில் முக்கியத்துவம் மிக்கதொரு காய்நகர்த்தலாக, இலங்கைக்கான புதியதொரு தூதுவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.  

(அடுத்த திங்கட்கி​ழமை தொடரும்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .