2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் தேர்தல்

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்  

கொரோனா ​வைரஸ் தொற்று, மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என, இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கும் சூழலில், தேர்தல் எவ்வாறாயினும் நடந்துவிடக்கூடிய நிலையே, இப்பத்தி எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுவரையில் காணப்படுகின்றது.  

தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், இராஜாங்கனையில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.  
இதற்குமப்பால், மருத்துவர் சங்கத்தின் அறிவுரைகளையும் மீறிப் பாடசாலைகளைத் திறந்து, மாணவர்கள் மத்தியில் தொற்றை ஏற்படுத்தி, மீண்டும் பாடசாலைகளை மூடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.  

இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் இலங்கையில் காணப்படப்போகும் கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தையும் அதன் தாக்கத்தையும் பொறுத்தே, தேர்தலும் தீர்மானிக்கப்படப் போகின்றது என்ப​தே உண்மை.  

எனினும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தமக்கான அலையொன்று இருக்கும் போது, இந்தத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற அவாவில் உள்ளனர். இதற்காக அவர்கள், எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸோடு போட்டி போடுவார்களா, இல்லையேல் தேர்தல் பிற்போடப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில், தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.  

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தேர்தல் பிரசாரங்கள் வழமைக்கு மாறாக, ஒருவரை ஒருவர் நேரடியாக கூட்டிக்காட்டி பிரசாரம் செய்வதும், தமது கட்சிக்குள்ளேயே சக வேட்பாளரைத் தாக்கிப்பேசுவதும் என, அநாகரிக பிரசார யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.  

விருப்பு வாக்குமுறைத் தேர்தல் என்பதால், மக்கள் பிரதிநிதியாகுவது யார் எனப் போட்டி காணப்பட்டாலும், தற்போதைய பிரசார யுக்தி, அதி பயங்கரமானது என்பதை மறுப்பதற்கில்லை.  இந்நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள், சகவேட்பாளர்கள் சிலரே, தமது கட்சியின் ஒரு சில வேட்பாளர்களை, மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறிந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.  

இதன் ஒரு வெளிப்பாடாகவே, தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணியின் செயலாளரான விமலேஸ்வரியின் கருத்துகள் அண்மைய நாள்களாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, தமிழரசுக் கட்சிக்கு, கனடா ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட சுமார் 21 கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்ற கேள்வியாகும்.  

வடக்கு, கிழக்கில் தேர்தல் களத்தில் உள்ள சுயேச்சைகள் முதற்கொண்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகப் பிரசாரம் செய்து வருகின்றனரோ, அதற்கும் மேலாக அக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளரின் கருத்து, பாரதுரமானதாக அமைந்துள்ளது.  

விமலேஸ்வரி யார் என்ற கேள்வி எழலாம். இளைஞர் சேவைகள் மன்றத்தின், வவுனியா பிராந்திய உதவிப் பணிப்பாளராக இருந்து, பின்னர் மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஆளுமை மிக்க பெண். அரசியலானாலும் சரி, சமூக விடயங்களானாலும் சரி துணிந்து கருத்துகளை முன்வைக்கும் பெண் என்ற கருத்துள்ளது.  எனினும், இவர் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கீதாஞ்சலியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதற்கப்பால், தேர்தல் பிரசாரங்களிலும் பங்குகொண்ட சம்பவங்களும் உள்ளன.   

அதற்குமப்பால், நாமல் ராஜபக்‌ஷவால் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நீலப் படையணியின் செயற்பாடுகளிலும் பணியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் கூட, நெருங்கிச் செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான நிலையில், விமலேஸ்வரியின் கருத்துகள் எந்தப் பின்புலத்தில் இருந்து, தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன என்ற சந்தேகம் எழுவது யதார்த்தமே.  

தனி ஒரு வேட்பாளராக சுமந்திரனைத் தாக்குவதாக நினைத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, இன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஏனெனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எனப் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் நிதிகளுக்கு, என்ன நடக்கின்றது என்ற கேள்வி, அவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கு எழாவிட்டாலும் அல்லது, தமிழரசுக் கட்சியிடம் கேட்க வேண்டும் எனத் தோன்றாது விட்டாலும் கூட, தமிழ் மக்கள் மத்தியில் இந்த நிதி தொடர்பான சந்தேகம் காணப்பட்டிருந்தது.   

ஏனெனில், புலம்பெயர் தேசத்தில் இருந்து, கூட்டமைப்புக்கான நிதி அனுசரணை, அதிகளவில் உள்ளதாகக் கருத்து நிலவிவரும் நிலையிலேயே, விமலேஸ்வரியின் கருத்து, புரளியைக் கிளப்பிவிட்டுள்ளது.   

இதுபோன்று, வன்னித் தேர்தல் தொகுதியிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் வகையிலான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பல சுயேச்சைகளும் அரசியல் கட்சிகளும் களத்தில் உள்ளன.   

ஆறு ஆசனங்களைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில், 405 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே, வாக்குச் சிதறல் என்பது, அதிகமாகவே இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளப்போகின்றனர் என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.  


வன்னி நிலப்பரப்போடு எவ்வித தொடர்புமற்ற பல சிங்கள வேட்பாளர்கள், பொதுஜன பெரமுனவுடன் களமிறங்கி உள்ளனர். அதற்குமப்பால் பாரிய நிதி வளத்துடன் சுயேட்சையாகவும் தென்பகுதியில் இருந்து சிங்கள வர்த்தகரொருவர் களமிறங்கி உள்ளார். இவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகளும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளதுடன், தமிழ் மக்கள் சிலரும் இவ்வாறான வேட்பாளர்களுக்காக வாக்குப் பெறும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களப் பிரதிநிதித்துவம் இன்றிக் காணப்பட்ட வன்னித் தேர்தல் தொகுதியில், இம்முறை ஒருவரையாவது கொண்டு வந்துவிட வேண்டும் எனச் சிங்கள மக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் எண்ணியுள்ளது.  

இது வன்னித் தேர்தல் மாவட்டத்தை  உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும் எனக் கரிசனை கொண்டுள்ளனர்.  

ஆகவே, இவ்வாறான தேர்தல் சூழலில், வன்னித் தேர்தல் மாவட்டம், பாரிய இனப்பரம்பலை மாற்றியமைக்கும் களமாக மாறப்போவதைத் தமிழர்கள் உணரத்தலைப்பட வேண்டும்.   

இச் சூழலிலேயே, பிரதான தமிழ்க் கட்சிகளின் வாக்குகளை உடைத்து, தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில், பல தமிழர்களும் புதிய புதிய பெயர்களைக் கொண்ட கட்சிகளில் அறிமுகமாகிப் போட்டியிடுகின்றனர்.  

கடந்த காலங்களில், சுதந்திரக் கட்சியிலும் பொதுஜன பெரமுனவிலும் போட்டியிட்ட பல தமிழ் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வீணடித்த நிலையில், தற்போது தம்மைத் தமிழர்கள், தமிழர்களின் கட்சி என்ற கோசத்துடன், வன்னித் தேர்தல் தொகுதியில் களமிறங்கி உள்ளமையானது, தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் வீணடிப்பதற்கேயன்றி, பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்காக இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.  


இதற்குமப்பால், தமிழ் அரசியல் களத்தில் வாக்குச் சிதறல் என்பது, தவிர்க்க முடியாத நிலையில், தமக்கான பிரதிநிதித்துவத்தை ஆளுமையுள்ளதாகவும் அறிவார்த்தமாகவும் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைத் தவறவிடும் வாய்ப்புகள் உள்ளன.   

கடந்த காலங்களில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில், இன்று பல கட்சிகளாகத் தேர்தலை முகம் கொடுத்துள்ள தமிழர்கள், தற்போது தமது வாக்குச் சிதறல்களால் தமது பிரதிநிதித்துவத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை பெரும் துயரமே.  

இதற்குமப்பால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வாக்களிப்பு சதவீதம் குறைந்து செல்லும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்கள் விலகுவதானது, ஆரோக்கியமற்ற செயற்பாடாக இருக்கும் என்பதை உணரத்தலைப்பட வேண்டும்.  

ஆகவே, தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில், தமது தேர்தல் பிரசாரப் பணியில், முக்கிய பங்காக மக்களை வாக்களிப்புச் செய்யத் தூண்டுவது முக்கியமானதாக உள்ளது.  அதிகளவான வாக்களிப்பு இடம்பெறுமாயின் பிரதிநிதித்துவ இழப்பைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே, தமிழ் மக்கள், தமது வாக்களிப்பு சதவீதத்தைத் தமது தொகுதிகளில் அதிகரிப்பதனூடாகவே தமக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெற வாய்ப்பாக அமையும்.  

இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தில் எவ்வாறு உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதோ, அதேபோன்றே வன்னித் தேர்தல் தொகுதியிலும் உட்கட்சி வெட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில், டெலோவால் இளம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட வேட்பாளரொருவர், அக் கட்சியால் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில், டெலோவுக்கு மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்குள் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.  

இதில், மயூரன் இளம் வேட்பாளராக உள்ள போதிலும், அக்கட்சியின் பிரசாரங்களில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அக்கட்சியினர், “விருப்பு வாக்குத் தேர்தல் முறையில், அவ்வாறுதான் இருக்கும்” எனத் தெரிவித்து வருகின்றனர்.  

எனவே, தமது கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வீழ்த்திப் போட்டியிடும் இந்தத் தேர்தல் முறைக்குள், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு காப்பது என்ற கேள்வியும் அதிகமாகவே காணப்படுகின்றது.  

எனவே, வாக்காளர்கள் தீர்க்கமானதும் திடமானதுமான முடிவை எடுக்கும் பட்சத்திலேயே, இம்முறை தமிழ் மக்கள் தமது இருப்பைத் திடமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்ய முடியும் என்பது மறுப்பதற்கில்லை.    

தமிழ்க் கட்சிகள் என்ற முகமூடியுடன் போலிகள்

கடந்த காலங்களில், பெரமுனவின் பங்காளிகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாதவர்கள், தற்போது தாம் தனித் தமிழ்க் கட்சி என்ற போலி முகமூடியைப் போட்டு, மக்களிடம் வாக்குக் கேட்கிறார்கள் என, வன்னி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.  

வன்னித் தேர்தல் தொகுதி என்பது, ஒரு முக்கியமான தொகுதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், வெற்றிலைச் சின்னத்திலும் வெவ்வேறு சின்னங்களிலும் போட்டியிட்டவர்கள், தற்போது தாங்கள் தமிழர்கள்; நாங்கள் தமிழ் கட்சியிலேயே போட்டியிடுகின்றோம்; எங்களுடைய வேட்பாளர்களும் தமிழர்தான் என்கின்ற பிரசாரத்தை முன்னெடுத்துத் தங்களைத் தமிழர்களாகக் காட்டி, எமக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள், இந்தப் பொதுஜன பெரமுன என்று சொல்லப்படுகின்ற மொட்டுக் கட்சியினுடைய சகோதர சகோதரி வேட்பாளர்களாகவோ, அந்தக் கட்சிகள் பொதுஜன பெரமுனவினுடைய பங்காளிக் கட்சிகளாவோ அல்லது, கூட்டாளிக் கட்சிகளாகவோ இருப்பார்கள். இவர்கள், தமிழ்க் கட்சிகளில் தனித்துக் கேட்பதற்குக் காரணம், கடந்த காலங்களிலே எங்களுடைய மக்கள், அரசாங்கக் கட்சிக்களுக்குக் கணிசமான வாக்குகளைக் கொடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் தமிழ்க் கட்சி என்ற அந்த முகமூடியோடு, இப்போது வந்து மக்கள் முன் நிற்கிறார்கள்.  

அவர்களுக்குத் தெரியும் தங்களுக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது என்று. அவ்வாறு தெரிந்தும், ஏன் நிற்கிறார்கள் என்றால், தமிழ்ப் பிரதிநிதிகளைக் குறைப்பதற்காகவும் எங்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும் ஆகும். இவ்வாறு சுயேட்சைக் குழுக்களிலும் இதர கட்சிகளிலும் கேட்பவர்கள் 15,000 தொடக்கம் 20,000 வாக்குகளைச் சிதறடிப்பார்களேயானால், நாங்கள் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை இழந்துவிடுவோம்.   

வன்னித் தேர்தல் தொகுதி என்பது, இப்போது சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, இனப்பரம்பலை மாற்றுகின்ற ஒரு பிரதேசமாக, அவதானிக்கப்பட்டு வருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாகவே, நாம் எமது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் கருத்து எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது, இன்றைய அரசியல் போக்கில் உணரக்கூடியதாக இருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .