2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.காசிநாதன்

துரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் - இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள தொல்லியல் துறை என்பது அரசாங்கத்துக்கு வேண்டாதவர்களுக்கு “போஸ்டிங்” கொடுப்பதற்காக வைத்துள்ள துறை என்பது தமிழகத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சிக்கும் தெரியும். ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உதயச்சந்திரன் “தமிழர் பண்பாட்டு” வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியிருப்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் மகிழ்வை தந்திருக்கிறது.  “கீழடி” அகழ்வாராய்ச்சி ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல்துறை முதலில் ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வைச் செய்த அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டது எல்லாம் சர்ச்சையானது. அது மட்டுமின்றி, பிறகு ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே மிகப்பெரும் சர்ச்சையானது. தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் முதன் முதலில், கீழடி ஆய்வுகள் குறித்துப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறகு அரசியல் கட்சிகள் அனைத்துமே இதை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் “கீழடி” பற்றிய முழக்கம் கேட்கத் தொடங்கியது. “தமிழர் நாகரிகத்தை மறைக்க முயற்சி” என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் போர்க்குரல் எழுப்பின. இந்தச் சூழ்நிலையில்தான், 110 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கீழடியில் 4 மற்றும் 5ஆம் கட்ட ஆய்வுகளை உதயச்சந்திரன் தலைமையிலான தொல்லியல்துறை செய்து வருகிறது.  

தமிழக அரசாங்கமே இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், 4ஆம் கட்ட ஆய்வில் கிடைத்த அரும்பொருள்கள் குறித்து ஒரு தனி புத்தகத்தை மாநில தொல்லியல்துறை வெளியிட்டாது. இப்படி வெளியிட்டதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பாண்டியராஜனுக்கும் தொல்லியல் துறை முதன்மை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரனுக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார். அ.தி.மு.கவில் உள்ள ஓர் அமைச்சர் ஸ்டாலின் பாராட்டைப் பெற்றார் என்றால் அது கீழடி அகழாய்வில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு “தமிழர் நகரிகம்”, “பண்பாடு” தொடர்பான இந்தக் கீழடி ஆய்வில் அரசியல் கட்சிகள் “அரசியல் செய்யாமல்” தமிழர் சமுதாயத்தின் நகரிகத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ததைப் பார்க்க முடிகிறது. 

நான்காம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருள்கள் இன்றைக்கு தமிழர் நாகரிகத்தைக் கம்பீரமாக எழுந்து நிற்க வைத்துள்ளது. இதுவரை பண்டைய தமிழ்சங்கம், வணிக மையங்கள், உரோமாபுரி, பிற இந்திய மாநிலங்களுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் 40க்கும் மேற்பட்ட தொல்லியல்துறையின் அகழாய்வுகளில் கிடைத்தன. அந்த “40” ஆய்வுகளில் இருந்து இந்த “கீழடி” ஆய்வு முற்றிலும் வேறு விதமான அரிய தகவல்களை அள்ளிக் கொண்டு வந்து “கோபுரமாக” குவித்திருக்கிறது. தமிழர்களின் நாகரிகத்தின் அடையாளமாக - ஆதாரமிக்க சான்றுகளாக இன்றைக்கு கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. 

கீழடி, நான்காவது அகழாய்வில் 5820 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளும் வந்துவிட்டன. “தமிழர், நாகரிகம் பண்டைய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த நாகரிகம்” என்பதை அறிவிக்கும் விதத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் பிரமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கீழடி ஆய்வில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. “கீழடி பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது” என்பது இந்த அகழாய்வில் கிடைத்துள்ள மிக முக்கியமான இந்திய வரலாற்றுக்கே பாடம் எடுக்கும் கண்டுபிடிப்பு. இதுவரை தமிழர்களின் நகரமயமாதல் கி.மு. 3 நூற்றாண்டை சேர்ந்தது என்றுதான் ஆதாரங்கள் இருந்தது. ஆனால் இப்போது கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் மத்தியில் “நகரமயமாதல்” இருந்துள்ளது என்பது ஆதாரபூர்வமாகக் காணப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்ப் பிரமி எழுத்துகள் கி.மு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கூற்றுதான் இருந்து வந்தது. இப்போது அது கி.மு 6ஆம் நூற்றாண்டுக்குரியது என்பது உறுதி செய்யப்பட்டு தமிழ்ப் பிரமி எழுத்துகள் வரலாறு நூறாண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளது. கறுப்பு, சிவப்பு நிறப் பானைகளில் காணப்படும் இந்தப் பிரமி எழுத்துகள் வரலாற்று பொக்கிஷமாகக் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் கி.மு 3ஆம் நூற்றாண்டில்தான் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியது என்று இதுவரை நம்பியிருந்தார்கள். ஆனால், கீழடி ஆய்வில் தமிழர்கள் கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, தமிழர்களின் எழுத்தறிவு வரலாறு 300 ஆண்டுகள் முன்பு சென்றுள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. சான்றோர்கள் வாழ்ந்த பூமி தமிழர் பூமி என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த “கீறல்கள்” சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சமமாக இருக்கிறது என்ற அரிய தகலும் கிடைத்திருக்கிறது. 

தமிழர்கள் வளர்த்த விலங்குகள் பட்டியலில் திமில் காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றின் எலும்புத் துண்டுகள் “கீழடி ஆய்வில்” கண்டறியப்பட்டுள்ளன. அப்படிக் கண்டெடுக்கப்பட்டுள்ள 70 எலும்புத் துண்டுகளில் திமில் காளை, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்பு துண்டுகள் 53 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது மட்டுமின்றி, சில துண்டுகளில் வெட்டு காயங்கள் இருப்பது தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம், சங்க கால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததும், கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்ததும் தெரிய வந்திருக்கிறது. 

தமிழர் பெண்களின் வரலாறு பற்றியும் கீழடி ஆய்வில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் கல் மணிகள், சுட்டு வளையல்கள், தந்த வளையல்கள் உள்ளிட்ட 4,000 பொருள்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அலங்காரப் பொருள்கள் சங்க கால சமூகம் வளமும் செழிப்பும் மிகுந்து விளங்கியதற்கு சான்றாவணங்களாக இருக்கின்றன. தமிழ்குலப் பெண்கள் விளையாடும் விளையாட்டுப் பொருள்களான வட்டச் சில்லுகள் ஏறக்குறைய 600 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த “வட்டச் சில்லு” தற்போது மதுரை வட்டாரத்தில் “பாண்டி” விளையாட்டு என்று பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 80 சதுரங்க காய்களும் இந்தக் கீழடி அகல்வாய்வில் எடுக்கப்பட்டுள்ளன என்று விளையாட்டுத்துறையில் பழங்காலத் தமிழர்களின் ஆர்வத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.

“கீழடி ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களைப் பத்திரப்படுத்த உலகத் தரத்தில் மத்திய அரசாங்கமே ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ளன. இந்நிலையில், “150 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் அருங்காட்சியகம் ஒன்று உலக தரத்தில் அமைக்கப்படும்” என்று கீழடியில் ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். அதே நாளில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கீழடிக்குச் சென்று ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். “சங்ககாலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு அல்ல. கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும், “கீழடி பண்பாடு காலம் கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும் கீழடித் தமிழர்களுக்குத் தந்துள்ள மிகப்பெரிய பெருமை. தமிழர்களின் நாகரிகத்துக்குக் கிடைத்துள்ள மிக உறுதியான ஆதாரபூர்வமான சான்றிதழ். சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் அரசியல் யுகத்தில், தமிழின நாகரிகத்தின் அடிப்படையில் “கீழடி” யின் பெருமை பேசப்படுகிறது.

ஒரு தொல்லியல் ஆய்வு இவ்வளவு பெரிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துமா என்று அனைவரும் வியப்படையும் வண்ணம் “தமிழர் நாகரிகம்” குறித்த விழிப்புணர்வு தமிழக மக்கள் மத்தியில் உத்வேகமாக கிளர்ந்து எழுந்துள்ளது.

இந்த உணர்ச்சிப் பெருக்குக்கு இரை போடும் விதமாக அரசியல் கட்சிகளும் கீழடி நோக்கி பயணம் மேற்கொள்கின்றன.   ‌


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .