2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திம்புப் பேச்சுவார்த்தை - (3)

என்.கே. அஷோக்பரன்   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 173)

இரண்டாம் நாள் அமர்வுகள்  

எச்.டபிள்யூ. ஜெயவர்தன, இலங்கை அரசாங்கத்தின் தீர்வுத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்திருந்தன.  

முதல்நாள் அமர்வுகள் பற்றி, இலங்கையின் ஊடகங்கள், குறிப்பாக அரச ஊடகங்கள் கருத்து வௌியிடும்போது, தமிழர் தரப்பைப் ‘பயங்கரவாதிகள்’ என்று விழித்திருந்தன.   

இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பித்தபோது, குறித்த விடயம் தொடர்பில் தமிழர் தரப்பு, கடும் கண்டனத்தை வௌியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குறித்த விடயத்தைத் திருத்திக்கொள்ள, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது.  முதல் நாளில், எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த அரசாங்கத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில், பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளில் கலந்துரையாடப்பட்டது.   

1984இல் நடந்த சர்வகட்சி மாநாட்டின் முடிவின் போது, ஜே.ஆர் ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக மாநிலங்கள் வரையிலான ஐந்தடுக்குப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டத்தைத்தான், திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான குழு, இனப்பிரச்சினைக்கான தீர்வாக, திம்புவில் வைத்து மீண்டும் சமர்ப்பித்திருந்தது.   

1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்துக்குப் பின்னர், மீளக்கூடிய சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் அரசாங்கத்தால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக மாநிலங்களின் சபையை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த முன்மொழிந்திருந்தது. படிநிலையின் அடித்தளத்தில், ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்கள் ஸ்தாபிக்கவும், அதற்கு அடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும், மூன்றாவது மட்டத்தில் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் ஆனால், அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணையவிரும்பும் பட்சத்தில், அவை இணைந்து மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாக முன்மொழியப்பட்டிருந்தது. அத்தகைய இணைவுக்கு, அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினரின் ஒப்புதல் தேவை என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இதைவிடவும், மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்குமென்றும், மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை மாகாண அல்லது மாவட்ட அமைச்சராக ஜனாதிபதி நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இந்த மாவட்ட, மாகாண சபைகளுக்கான சட்டவாக்க அதிகாரம், நாடாளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டதாகவும், இவை நிறைவேற்றும் சட்டங்களை, நாடாளுமன்றம் அங்கிகரிக்கும் பட்சத்தில்தான் அவை வலுவுடையதாக அமையும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. 

மேலும் இந்த மாவட்ட, மாகாண சபைகளின் நிர்வாக அதிகாரத்தில் பல, மத்திய அமைச்சர்களால் தமது அதிகாரத்திலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களாகவே முன்மொழியப்பட்டிருந்தன.   

மாவட்ட, மாகாண சபைகளுக்கென்று குறித்து ஒக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மிகக் குறைவானதாகவும், பெருமளவில் அர்த்தமற்ற அதிகாரங்களாகவுமே காணப்பட்டன என்பது, இங்கு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகிறது.   

சுருங்கக்கூறின், இந்த மாவட்ட, மாகாண சபைகள் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பாக அல்லாமல், பெருப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்பாகக் கருதப்பட வேண்டியனவாகவே அமைந்திருந்தன.  ஆகவே, நிர்வாக அதிகாரமும் மத்திய அமைச்சர்களின் அதிகாரத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்டதாகவே அமைக்கப்பட்டிருந்தது.   

இந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படுமென்றும், இதில் 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில் போதியளவு பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இதைவிட ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

குறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இது தமிழர் தரப்பை மேலும் விசனத்துக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்தது. அரசியல் தீர்வொன்று எட்டப்படுமானால் அதற்காக தனிநாடு என்ற தமது கோரிக்கையிலிருந்து இறங்கி வருதவதற்குத் தயாராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கூட, சர்வகட்சி மாநாட்டில் குறித்த முன்மொழிவுகளை, “அவை, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது” என்று கூறி நிராகரித்திருந்தது. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் தனிநாடு என்ற நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத்தயாராக இல்லாத தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு, துளிகூட இருக்கவில்லை.  

 அமிர்தலிங்கம் மிகத் தௌிவாக, தாம் இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவிடம் எடுத்துரைத்திருந்தார். “இந்த முன்மொழிவுகளைச் சர்வகட்சி மாநாட்டிலேயே, தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். நீங்கள் முன்னேற்றகரமான முன்மொழிவுகளுடன் வாருங்கள்; அப்படிப் பொருத்தமான தீர்வு முன்மொழிவுடன் வரும்போது, தமிழ் மக்கள் உரிய பதிலைத் தருவார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.   

இதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழர் தரப்பை, மாற்று முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், இதை ஏற்கத் தமிழர் தரப்புத் தயாராக இருக்கவில்லை. அவர்களது நிலைப்பாடு, வேறானதாக அமைந்திருந்தது. அவர்கள் அதைத் திட்டவட்டமாக அரசாங்கத் தரப்புக்கு எடுத்துரைத்தார்கள்.   

அதாவது, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணை ஊடாக, தனிநாடொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களாணையைத்  தமிழ் மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, தனிநாடு என்பதுதான் தம்முடைய நிலைப்பாடு. அதற்கு மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் சுயமரியாதையோடு வாழத்தக்க மாற்றுத் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் வழங்குமானால், அதைக் கருத்தில்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, அமிர்தலிங்கம் மிகத் தௌிவாக எடுத்துரைத்திருந்தார்.   இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள், இந்த இழுபறி நிலையிலேயே கழிந்திருந்தன. அரசாங்கத் தரப்பின் மீதும், திம்புப் பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருக்கும் விதம் குறித்தும் தமிழர் தரப்பு, கடும் அதிருப்தியைக் கொண்டிருந்தது.  

 அதை அவர்கள், இந்தியாவிடம் பதிவு செய்திருந்தார்கள். திம்புப் பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கம் மேம்பட்டதொரு முன்மொழிவைச் சமர்ப்பிப்பார்கள் என்று தமிழர் தரப்பு, குறிப்பாக அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்பார்த்திருந்தது.   ஆனால், ஏற்கெனவே தாம் நிராகரித்த சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் சமர்ப்பித்த அதே தீர்வையே, இலங்கை அரசாங்கம் மீண்டும் சமர்ப்பித்திருந்தமை, திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பயனற்றதாக மாற்றியிருந்ததாக அமிர்தலிங்கம் விவரித்தார்.   

இந்தியாவுக்கும் இது தர்ம சங்கடமான நிலையொன்றைத் தோற்றுவித்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தமிழர் தரப்பு முறித்துக்கொள்வதை இந்தியா விரும்பவில்லை, ஆகவே, பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு, தமிழர் தரப்பை இந்தியா கேட்டுக்கொண்டது.  

மூன்றாம் நாள் அமர்வுகள்  

மூன்றாம் நாள் அமர்வுகள், புதிய அதிர்ச்சியொன்றோடு ஆரம்பமாகி இருந்தது. ஏற்கெனவே, குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில், எதிர்மறையான பிரசார அணுகுமுறையையே, இலங்கை அரசாங்கம் கையாண்டுகொண்டிருந்த நிலையில், குறித்த நாளில், இலங்கையில் வௌியான அரசுக்குச் சொந்தமான தேசிய நாளிதழ் ஒன்றில், ஜனாதிபதி ஜே.ஆரைக் கொல்வதற்கு, ஈழ மாணவர் புரட்சிகர இயக்கத்தை (ஈரோஸ்) சேர்ந்த இருவர், அவ்வமைப்பின் உயர்மட்டத் தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வைத்து அவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வௌியாகியிருந்தது.   

மூன்றாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகிய போதே, ஈரோஸ் அமைப்பும், அதனோடு இணைந்து தமிழர் தரப்பின் ஏனைய அமைப்புகளும் குறித்த செய்தியை மறுத்ததுடன், குறித்த செய்தியானது ஜே.ஆரால் பரப்பப்படும் வதந்தி என்றும், தபாலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, ஜனாதிபதி ஜே.ஆரைப் படுகொலை செய்ய வந்தவர்கள் என்ற கட்டுக்கதை அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்று, ஈரோஸ் அமைப்பு குறிப்பிட்டது.   இதைத் தொடர்ந்து, ஒரு தரப்பின் பிழைகளை மறுதரப்பு சுட்டிக்காட்டுவதிலும், குற்றங்குறைகள் கூறுவதிலுமே கழிந்திருந்தது. குறிப்பாக, படுகொலை முயற்சிகள் தொடர்பாகவும், யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாகவும் இருதரப்பும் மறுதரப்பை, மாறி மாறிக் குற்றஞ்சுமத்தியது.   

பேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களம்; ஆனால், அப்போதைய சூழலில் திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களமாக அல்லாது, குற்றங்குறை சாட்டுவதற்கான களமாகவே மாறியிருந்தன என்பது, மிக வருத்தத்துக்குரியது.   

மாறி மாறிக் குற்றஞ்சாட்டிய வாதப்பிரதிவாதங்கள் ஒருவாறு ஓயந்த பிறகு, “நாம் சமர்ப்பித்திருந்த தீர்வுத் திட்ட முன்மொழிவைச் செயலாற்றுவதற்கான அடிப்படையாகக் கொண்டு, குறித்த அதிகாரப் பகிர்வுக் கூறுகளுக்கான அதிகாரங்கள் பற்றி, நாம் கலந்துரையாடலாம்” என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன முன்மொழிந்திருந்தார்.  அதாவது, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்குப் பொறிமுறையை மாற்றாது, அதற்குள்ளான கட்டமைப்புகளுக்கான அதிகாரங்கள் பற்றிப் பேசவே எச்.டபிள்யூ.ஜெயவர்தன தயாராக இருந்தார்.   

தமிழர் தரப்பின் நிலைப்பாடு வேறாக இருந்தது. அவர்கள் குறித்த ஐந்தடுக்குப் பொறிமுறை சீராக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்ட, மத்தியிலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களை மட்டும் கொண்ட மாவட்ட, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.  

 ஏனென்றால், ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள் எப்போது வேண்டுமானாலும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட முடியும். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழாக வரும்போது, அவை உள்ளூராட்சி மன்றங்களையொத்த அமைப்புகளாகவே அமையுமே அன்றி, அதிகாரப் பகிர்வுக் கூறாக அமையாது. இது, தமிழ் மக்கள் கோரி நிற்கும் தனிநாட்டுக்கு ஏற்புடையதொரு மாற்றுத் தீர்வல்ல என்பது, தமிழர் தரப்பால் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டு இருந்தது.   

தற்போது, திம்புப் பேச்சுவார்த்தைகளில் தேக்க நிலையொன்று உருவாகியிருந்தது. பேச்சுவார்த்தைகள், உடையும் தருவாயில், இதற்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாத நிலையை எட்டியிருந்தன.   உடனடியாக இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இதன் காரணமாக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி உடனடியாகத் திம்பு விரைந்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .