2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா?

எம். காசிநாதன்   / 2017 ஜூன் 19 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது.   

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது.  

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘குதிரை பேரம்’ குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்ப, பேரவைத் தலைவர் தனபால், “இதுபற்றி நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளீர்கள். ஆகவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தார்.   

பேச அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷங்கள் போட்டு “எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு” என்று பதாகைகளை தூக்கிக் காட்டி சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டார்கள். இறுதியில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களையும் பேரவைத் தலைவர் வெளியேற்றினார்.  

முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நம்பிக்கை வாக்குப் பெறுவதற்கான தீர்மானம், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிருந்த அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கூவத்தூர் நட்சத்திர விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உத்தரவிட்டது.   
இவ்வளவு பரபரப்புகளுக்கு இடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற அன்று, சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவை வெளியேற்றி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்து, அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நம்பிக்கைத் தீர்மான வெற்றிதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.  

“பேரம் பேசி, பணம் கொடுத்து வாங்கப்பட்ட பெரும்பான்மையை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறது அ.தி.மு.க” என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் “ஆட்சியை கலைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளன.   

ஆட்சிக் கலைப்புக்கு எதிராக பேசும் தி.மு.கவே இந்த முறை, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  

ஆனால், பணப் பேரம் நடத்தி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு பெற்றதான தீவிரத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காக, இந்த ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தோம் என்கிறார் தி.மு.கவின் மூத்த தலைவர் ஒருவர்.  

நம்பிக்கை வாக்கெடுப்பு, பேரம் தொடர்பான சர்ச்சை, தமிழக சட்டமன்றத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் அ.தி.மு.கவுக்குள்ளும் போர்க்கொடி உயரப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. “முதலமைச்சராக இருந்து ஆட்சியை நீங்கள் நடத்துங்கள்; கட்சியை வழி நடத்தும் பொறுப்பை டி.டி.வி தினகரனிடம் கொடுங்கள்” என்று 25 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முறையிட்டுள்ளார்கள்.   

இதற்கு அவர் சம்மதித்தால், அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்குச் சென்று டி.டி.வி தினகரன், கட்சிப் பணிகளைச் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்த அதேநேரத்தில், தினகரனோ பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

ஆகவே, இன்றைய சூழ்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற்றாலும், அ.தி.மு.கவுக்குள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், இந்த 25 எம்.எல்.ஏக்களின் சந்திப்பு அமைந்திருக்கிறது.

ஆட்சிக்குள்ளும், கட்சிக்குள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புயல் காற்று மையம் கொண்டு வீசத் தொடங்கியிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.  

இப்படியொரு குழப்பமான சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் அ.தி.மு.கவுக்குள் எப்படிப் பனிப்போர் என்றாலும், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்ற நிலைதான் இன்று வரை இருக்கிறது.   

ஏனென்றால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ. பன்னீர்செல்வமோ, டி.டி.வி. தினகரனோ மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளவோ, முறைத்துக் கொள்ளவோ இப்போதைக்கு விரும்பவில்லை. அதேநேரத்தில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற நடத்தியதாகக் கூறப்படும் ‘குதிரை பேரம்’ குறித்த விசாரணை உயர்நீதிமன்றத்திலும் சூடுபிடிக்கும்; ஆளுநர் அளவிலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

‘குதிரைப் பேரம்’ குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால், அ.தி.மு.க அரசியலில் பெரும் குழப்பம் உருவாகும். அந்தக் குழப்பம் ஆட்சி இழப்பில் போய் முடியும் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பவில்லை என்றாலும், அரசியல் சட்ட ரீதியாகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமை இந்த அரசாங்கத்துக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழும்.  

அ.தி.மு.க மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைகள் அந்த அமைச்சர்களுக்கு எதிராக புறப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே, “அதிமுக அரசு ஒரு மெகா ஊழல் அரசு” என்ற செய்தியை, மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.   

அதனால், அக்கட்சியிடம் உள்ள மொத்த வாக்கு வங்கியைப் பல கூறுகளாகப் பிரிக்க இது உதவும். குறிப்பாக, அத்வானி ஒரு முறை “அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் இயற்கையான நட்பு கட்சிகள்” என்று கூறினார். அது உண்மை என்கிற நிலையில், அ.தி.மு.கவில் உள்ள தொண்டர்கள், அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்து வரும் அனுதாபிகள் பா.ஜ.க பக்கமாக திரும்ப முடியும் என்ற சிந்தனையோட்டம் தமிழக அரசியலில் இருக்கிறது.   

ஒருவேளை பா.ஜ.கவுக்கு வாக்களிப்பது பலனில்லை என்று அவர்கள் கருதினால், அந்த வாக்குகள் புதிய சக்தியாக வருவோர் பக்கம் திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. 

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் தனது பிறந்த நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருகிறார் என்று இப்போதே செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.   

தமிழக அரசியலைப் பொறுத்தவரை தி.மு.கவுக்கு ஏற்பட்ட நட்டம் அ.தி.மு.கவுக்குச் சாதகமாகப் போயிருக்கிறது. அதேபோல், அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட நட்டம் தி.மு.கவுக்குச் சாதகமாகப் போயிருக்கிறது. இதுதான் கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல்.  

இந்த அரை நூற்றாண்டில், பல புதிய கட்சிகள், புதிய சக்திகள் இந்த அரசியலைத் திசை மாற்ற முடிந்து தோற்றுப்போயுள்ளன. விஜயகாந்த் போன்ற திரைப்பட நடிகரே, அந்த முயற்சியில் தோற்றுப் போயிருக்கிறார். அது மட்டுமல்ல, இந்த இரு கட்சிகளையும் வீழ்த்திவிட்டு, மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அமைக்கப்பட்ட கூட்டணிகளும் வீழ்ந்து இருக்கின்றன.   

பிரதமராகும் முன்பு நரேந்திரமோடி அமைத்த, தமிழக கூட்டணி தோல்வியைச் சந்தித்துள்ளது. அதன்பிறகு, விஜயகாந்த் தலைமையில் ஆறு கட்சிக் கூட்டணியாலும் மாற்றுச் சக்தியை நிரூபிக்க முடியவில்லை. இப்போது வரப்போவதாகக் கூறும் ரஜினி காந்தும் அந்த வரிசையில் சேருவாரா அல்லது புதிய மாற்றத்தைக் கொண்டுவருவாரா என்பது தற்போதைக்கு மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.   

தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ‘திராவிட கட்சிகளின் அரசியல்’ இப்போது, அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்டுள்ள அதிரடிப் பிளவுகளால் பெருத்த சோதனைக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் அ.தி.மு.கவுக்குள் பிளவு ஏற்பட்டபோது, அந்தக் கட்சியின் வாக்குகள் பிளவு பட்ட அணிகளுக்கு மட்டுமேதான் விழுந்திருக்கிறது. வேறு கட்சிகளுக்குப் போகவில்லை.  

இன்றைக்கு பா.ஜ.கவைப் பொறுத்தவரை, மாற்று அரசியலை முன்வைக்க முனைகிறது. அதற்காக சூப்பர் ஸ்டார் துணையைத் தேடுகிறது. ஆனால், பா.ஜ.கவின் ஆசியுடன் அரசியலுக்கு வரும் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க வாக்காளர்கள் அனுசரணையாக இருக்கமாட்டார்கள் என்பதுதான் இன்றைய செய்தி.

ஏனென்றால், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, அ.தி.மு.க அரசியலில் பா.ஜ.க, ‘புகுந்து விளையாடுகிறது’ என்ற சந்தேகம் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.   

காலப்போக்கில் அந்தச் சந்தேகம் வெறுப்பாகவே மாறிக் கொண்டிருக்கிறது என்பதை பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்கள் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அரை நூற்றாண்டு திராவிட கட்சிகளின், ஆட்சி அத்தியாயத்தில் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பமும் கடந்து போகும் என்ற நிலைதான் தெரிகிறது.  

இந்த நிலையையும் மீறி, ரஜினியின் துணையுடன் தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற வேண்டுமென்றால் முதலில் காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்; ‘ஹைட்ரோ கார்பன்’ உள்ளிட்ட விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும்.  

இப்படி அடுக்கடுக்கான திட்டங்களைத் தமிழகத்துக்கு மத்திய அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்தால், பா.ஜ.கவின் மீது பாசம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.   

அதை விடுத்து, அ.தி.மு.கவுக்குள் குழப்பங்கள், தி.மு.கவுக்குள் குழப்பங்கள், ரஜினியின் வரவு போன்றவற்றின் மூலம் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளின் அரசியலுக்கு முடிவு கட்டி விடலாம் என்ற வியூகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X