2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தி.மு.க - பா.ஜ.க உறவு எதிர்காலக் கூட்டணிக்கு முன்னோட்டமா?

எம். காசிநாதன்   / 2019 ஜூலை 22 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதித்துவம் ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகிறது.   

சென்ற முறை, அ.தி.மு.கவுக்கு 37 எம்.பி.க்கள் இருந்தார்கள். மாநிலத்திலும் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக, பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை.   

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, சாதித்த ஜல்லிக்கட்டு விவகாரம் போல் கூட, ‘நீட்’ பரீட்சை உள்ளிட்ட மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிகழ்விலும் சாதனை புரிய இயலவில்லை. அ.தி.மு.கவின் ஆட்சியை நடத்துவது மட்டுமே முன்னுரிமை என்ற நிலையில், தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயற்படுவதால், பல்வேறு மாநில உரிமைகள் பற்றிக் கடிதம் எழுதுகிறார்; பிரதமரை நேரில் சந்திக்கிறார். அதைத் தவிர்த்து அப்பிரச்சினைகளில் மாநிலத்துக்குத் தேவையான நல்ல முடிவுகளை, மத்திய அரசிடமிருந்து பெற்றிட இயலவில்லை.  

ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க, நாடாளுமன்றத்தில் தனது இருப்பைக் காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. எம்.பி.க்களாகப் பொறுப்பேற்கும் முன்பே தேசிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகல் வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் மும்மொழித்திட்டம் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு அறிவித்தது.   

தமிழ்நாட்டில் 1967இல் இருந்து, இரு மொழித் திட்டமே அமுலில் இருக்கிறது. மூன்றாவது மொழியான ஹிந்தி, தமிழ்நாட்டில் மத்திய அரசு பாடசாலைகளில் இருக்கிறது. ஆகவே, இது ஹிந்தியைத் தமிழகத்தில் திணிக்கும் வேலை என்று தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்தது. “மீண்டும் ஒரு ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்துக்குத் தயார்” என்றெல்லாம் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.   

அதைத் தொடர்ந்து, இரு நாள்களிலேயே, தேசிய புதிய வரைவுக் கல்விக் கொள்கையை மாற்றி, மும்மொழித்திட்டம் என்பதைத் திருத்தி, தனது அறிக்கையைக் கொடுத்தார் கஸ்தூரி ரங்கன். இப்போது புதிய வரைவு கல்விக் கொள்கை மீதான கருத்துக் கேட்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க இதற்கென ஒரு தனிக் குழுவை அமைத்து, ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.  
இதற்குப் பின்னர், தென்னக ரயில்வேத் துறையில், யாரும் தமிழில் கடிதப் போக்குவரத்து நடத்தக் கூடாது என்று தெற்கு ரயில்வே பொது முகாமையாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். இது பூகம்பத்தை கிளப்பியது. தி.மு.க எம்.பிக்கள் நேரடியாகச் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது முகாமையாளரைச் சந்தித்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரும் உடனே, அந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.   

இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படாமலேயே தி.மு.க எம்.பிக்களின் அழுத்தத்தால் சென்னையிலேயே தீர்வு காணப்பட்டது.   

மூன்றாவதாகக் கிளம்பிய சர்ச்சை, இந்தியாவில் உள்ள தபால் துறைக்கு ஆள் எடுக்கும் விவகாரம். இதுவரை ஆங்கிலம், ஹிந்தி தவிர தமிழ் உள்ளிட்ட அந்தந்தப் பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறைப் பரீட்சைகள் நடைபெற்று வந்தன. ஆனால், மத்திய அரசாங்கம் திடீரென்று, இம்முறை அந்தப் பரீட்சைகள் தமிழில் கிடையாது என்று அறிவித்தது. அத்துடன் 14.7.2019 அன்று பரீட்சையையும் நடத்தி முடித்து விட்டது.   

இந்நிலையில் இதற்கும் தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து, இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து, தமிழில் பரீட்சை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   

மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பி, இராஜ்ய சபைத் தலைவர் முன்னிலையில், “துறை அமைச்சர் வந்து விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்று, திருச்சி சிவா வாதிட்டார். இந்நிலையில், அவைக்கு வந்து விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தமிழ் அல்லாத மொழியில் நடத்தப்பட்ட அஞ்சல் துறை பரீட்சை இரத்துச் செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் எப்போதும் போல் இந்தப் பரீட்சை நடத்தப்படும்” என்று அறிவித்தார்.   

மத்திய அரசு நடத்திய பரீட்சை ஒன்று, இரத்து செய்யப்பட்டது ஒரு சாதனை. இந்த அறிவிப்பு தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றி என்று மறுநாள் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அஞ்சல் துறைப் பரீட்சை, இனித் தமிழில் தொடர்ந்து நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.  

இந்தச் சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். அதில் குறிப்பாக இந்தி, கன்னடம் போன்ற மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், தமிழ் மொழி இடம்பெறவில்லை. தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்தித்து முறையிட்டார். அதற்குப் பலன் கிடைத்துள்ளது.   

18.7.2019 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘சரவணபவன் ஹோட்டல்’ அதிபரும், சமீபத்தில் இறந்தவருமான ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்புதான் அது. ஆகவே, தமிழில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவருகிறது என்பது, தி.மு.கவின் சார்பில் செய்த முயற்சியால் கிடைத்ததுதான்.   

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.கவும் பா.ஜ.கவும் பரமவிரோதிகள் போல் கடுமையான பிரசார தாக்குதலில் ஈடுபட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமராக இருந்த நரேந்திரமோடி மீதே தனது தாக்குதலைத் தொடுத்தார்.   

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.கவுக்குத் தமிழ்நாட்டில் தனித்து நின்றே ஜெயிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கூட, வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், தி.மு.கவின் வெற்றி, அதன் எம்.பிக்கள் பா.ஜ.கவுக்குத் தேவையில்லை என்ற நிலையில், மத்தியில் தனிப்பெருங்கட்சியாக பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.   

இது போன்ற சூழலில் தி.மு.கவின் பல கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படுவதன் பின்னணி பலரையும் குழப்பியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க பெற்ற வெற்றி, பா.ஜ.கவுக்கு அக்கட்சியின் மீது ஒரு மரியாதையைக் கொடுத்துள்ளது. தேசிய அளவில் அக்கட்சிக்கு மதிப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.   

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க வீற்றிருப்பதால், அக்கட்சியின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்து, முடிந்த விடயங்களில் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்பதே, தி.மு.க தரப்பில் மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எண்ணமாக இருக்கிறது.   

பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் சித்தாந்த ரீதியாகத் தி.மு.கவுடன் வேறுபாடுகள் இருக்கிறதே தவிர, காங்கிரஸின் மீதுள்ளது போன்றதோர் எதிர்ப்பு இல்லை. காங்கிரஸை, பா.ஜ.க தனது வருங்கால வளர்ச்சிக்கு எதிரான போட்டிக் கட்சியாக நினைக்கிறது. ஆனால், தி.மு.கவை அந்த கோணத்தில் பாரதிய ஜனதாக் கட்சி கருதவில்லை. பா.ஜ.க வலுவான மாநிலங்களில், தி.மு.கவால் அக்கட்சிக்கு ஆபத்தும் இல்லை; அச்சுறுத்தலும் இல்லை.  

இது போன்ற அரசியல் கணிப்புகளால், தி.மு.கவை எதிரிக் கட்சியாகப் பார்க்க, பா.ஜ.க விரும்பவில்லை. அதற்கு மாறாக, ‘அவசரகாலச்சட்டததை எதிர்த்த கட்சி தி.மு.க’ என்ற எண்ணம், பா.ஜ.கவில் உள்ள பல தலைவர்களுக்கும் இருக்கிறது.   

அதை விட தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டியதன் விளைவாகத்தான் காங்கிரஸ் சென்ற முறை பெற்ற எம்.பி.க்களுக்கு மேல் வெற்றி பெற முடிந்தது என்பதும் பா.ஜ.கவுக்குப் புரிகிறது. அதே போல், தி.மு.கவைப் பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி காங்கிரஸுடன் வைத்தால்தான், தமிழகத்தில் பயன் இருக்கும் என்ற ஒரு சிந்தனைதானே தவிர, பா.ஜ.க மீது தி.மு.கவுக்கு வெறுப்பு இல்லை.   

காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தியின் இராஜினாமா, அக்கட்சிக்குள் நடக்கும் கூத்துகள், கர்நாடகாவில் அரசாங்கம் கவிழும் சூழ்நிலைக்குச் சென்ற காங்கிரஸின் கோஷ்டி அரசியல் எல்லாமே, தி.மு.கவை யோசிக்க வைத்துள்ளது. காங்கிரஸுடன் இனிமேலும் தொடர்ந்து நெருக்கம் காட்டுவது தி.மு.கவின் எதிர்காலத்துக்குப் பலனளிக்காது என்ற எண்ணவோட்டம் அக்கட்சிக்குள் பல முன்னணித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.   

ஆகவேதான், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து, பல்வேறு விடயங்களில் தி.மு.கவின் கோரிக்கையை ஏற்று, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் பல அறிவிப்புகளைச் செய்து வருகிறது.   

இந்தப் பரஸ்பர உறவு, எதிர்காலத்தில் கூட்டணியாக மாறுமா? இது அனைவர் மனதிலும் எழும் கேள்வி. தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசாங்கம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறது. அடுத்துச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக செயற்படுகிறது.   

ஆகவே, இப்போதுள்ள இந்த நெருக்கம் உறவாக மட்டும் இல்லாமல், கூட்டணியாகவும் மலர்ந்தால்தான் 2021இல் ஆட்சிக்கு வரும் தி.மு.கவுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துடன் ஒரு நெருக்கம் பிறக்கும் என்பதே தற்போதைய அரசியல் செல்நெறியாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X