தேசியப் பட்டியலும் கதைகளும்

ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதிசயமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார்.  

 ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும்.   

வைரமுத்து எழுதிய பிறகுதான், தாம் கவனிக்கத் தவறிய அதிசயங்களை நினைத்துப் பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த அதிசயங்கள் போல், நமது அரசியலரங்கில் நடந்திருக்கிறது. அது - அட்டாளைச்சேனைக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முஸ்லிம் காங்கிரஸ் வழங்கத் தீர்மானித்திருப்பதாகும்.  

தூசு படிந்த கதை  

அட்டாளைச்சேனைக்கு 15 வருடங்களுக்கு முன்பிருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வழங்குவேன் என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கி வந்தார்.   

2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வழங்குவதாக, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்க மேடைகளில் வாக்குறுதியளித்திருந்தார்.   

அப்போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளராகப் பதவி வகித்த மசூர் சின்னலெப்பைக்கு, மு.கா தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், கடைசிவரை அந்தப்பதவியைப் பெறாத நிலையிலேயே, மசூர் சின்னலெப்பை மரணித்தார்.  

இதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் மேடைகளிலும், அட்டாளைச்சேனைக்குத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வழங்குவதாக, மு.கா தலைவர் பகிரங்கமாக மீளவும் வாக்குறுதி வழங்கினார்.   

ஆனாலும், அந்த வாக்குறுதியின் மீது, அட்டாளைச்சேனை மக்களுக்கு இறுக்கமான நம்பிக்கை ஏற்படவில்லை. அட்டாளைச்சேனை மக்களில் பெரும்பான்மையினர், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர். மு.கா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து, கடந்த தேர்தல்கள் வரை, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில், மு.காவுக்கு வீதாசார ரீதியில் அதிகளவு வாக்குகளை வழங்கி வருகின்ற ஒரு பிரதேசமாக, அட்டாளைச்சேனை அடையாளம் பெற்று வருகிறது.  

எனவே, தேசியப்பட்டியலின் பெயரால் இரண்டு தடவை தாம் ஏமாற்றப்பட்ட பின்னரும், கட்சியின் மீதான அபிமானம் காரணமாக, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு அட்டாளைச்சேனை மக்கள் வாக்குகளை வழங்கினார்கள்.  

பங்கு வைக்கப்பட்ட தேசியப்பட்டியல்  

பொதுத் தேர்தல் நடைபெற்று சுமார் இரண்டரை வருடங்கள் கழியும் நிலையிலும், அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவேயில்லை.   

ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்தன. மு.கா தலைவர், அவற்றில் ஒன்றைத் தனது மூத்த சகோதரருக்கு முதலிலும், பின்னர், அதை மீளப்பெற்று திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக்குக்கும் வழங்கினார்.   

 மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் முக்கியஸ்தரான எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் பல தடவை மு.கா தலைவரிடம் வேண்டிக் கொண்ட போதிலும் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை.  

கண் விடுத்த தலைவர்  

இவ்வாறானதொரு நிலையில்தான் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.   

 முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்த,  பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி அணியினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் பிரதேசங்கள் முழுவதும் மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.   

இந்த நிலைவரம், முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.  

கூடவே, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்கவுள்ளதாக மு.கா தலைவர் தெரிவித்திருக்கிறார்.  

அட்டாளைச்சேனைக்குத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், நஸீருக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் உள்ளன என்பதை, இந்தப் பத்தியில் பல தடவை நாம் எதிர்வு கூறியிருந்தமையும் இங்கு நினைவுகொள்தல் பொருத்தமானதாகும்.  

அச்சம் என்பதில்லை  

இவை ஒருபுறமிருக்க, இத்தனை ஆண்டுகளாக அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படாத தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில் வழங்குவதற்கு மு.கா தலைமை முன்வந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை பாமரர்களும் அறிவார்கள்.   

ஆனாலும், “எதிர்க் கட்சியினர் மீதான அச்சம் காரணமாக, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கவில்லை” என்று, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது, மு.கா தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார்.  

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்கியமைக்காக, மு.கா தலைவருக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.  

எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நஸீரின் பெயர் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், அவரின் பதவியை இராஜிநாமா செய்திருக்கிறார். அதனால், அந்தப் பதவிக்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீரை நியமிக்குமறு, தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்றின் படமொன்று, சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது.   

ஆனால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உத்தியோகபூர்மாக அறிவிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. அந்த அறிவித்தல் வெளிவந்து, சத்தியப் பிரமாணம் செய்யும் வரையில் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினரில்லை.  

ஆனாலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர் என்றுதான் நஸீரை மு.கா தலைவர் உட்பட பலரும், பகிரங்கமாக மேடைகளில் வைத்து, விளித்து வருகின்றனர். ஆனாலும், உத்தியோகபூர்வமாக நஸீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் வரையில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.கா பிரமுகர்களில் அதிகமானோரின் மனதில், சொல்ல முடியாததொரு ‘திக், திக்’ இருப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.   

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்குத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுதியளித்து விட்டு, பின்னர் அதனை வழங்காமல் விட்ட மாதிரி, நஸீருக்கும் நேர்ந்து விடுமோ என்கிற சந்தேகம் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு உள்ளது.   

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான், இராஜிநாமா செய்தமை போன்ற ஒரு கடிதத்தை ஹசன் அலியிடம் வழங்கிய மு.கா தலைவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கப் போவதாகக் கூறியிருந்தார்.  

 ஹசன் அலியை அழைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையாளரிடம் மு.கா தலைவர் சென்ற போதும், அதைக் கூறியிருந்தார். கடைசியில், சல்மான் இராஜிநாமா செய்வதாக எழுதிய கடிதம் மட்டுமே, ஹசன் அலிக்குக் கிடைத்தது. இந்தக் கசப்பான அனுபவம் நஸீருக்கும் நடந்து விடுமோ என்கிற அச்சம், நஸீருடைய அபிமானிகள் பலரிடமும் உள்ளது.  

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா தலைவர் ஹக்கீம், “பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினராக நஸீர் சத்தியப் பிரமாணம் செய்வார்” என்று அறிவித்துள்ளார்.  

சட்டப் பிரச்சினை  

இது ஒரு புறமாக இருக்க, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, சட்டப்படி நஸீர் பெற்றுக் கொள்ள முடியாது என்கிற பிரசாரமொன்று, மிகத் தீவிரமாக உலவி வருகின்றமை குறித்தும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.   

ஒரு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, கட்சியொன்றின் தேசியப்பட்டியல் வேட்பாளராகப் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் அல்லது அந்தக் கட்சி சார்பாக அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் மாத்திரம்தான், அந்தக் கட்சிக்குரிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், மேற்படி இரண்டு நிபந்தனையையும் பூர்த்தி செய்ய முடியாதவராக நஸீர் உள்ளார். எனவே, நஸீருக்குத் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்பதுதான், மேற்சொன்ன பிரசாரத்தின் சுருக்கமாகும்.   

இது தொடர்பில், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட்டிடம் வினவியபோது, அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது. “மேற்சொன்ன நிபந்தனைகளில் ஒன்றைத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை முதலாவதாகப் பெற்றுக் கொள்ளும் நபர் ஒருவர் பூர்த்தி செய்திருத்தல் அவசியமாகும். ஆனால், முதலாவதாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காகப் பெயர் குறித்து அறிவிக்கப்படும் நபர், மேற்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எந்தவித தேவையும் கிடையாது” என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மட் விவரித்தார்.  
எனவே, தேசியப்பட்டியலில் நஸீருடைய பெயர் இல்லை என்பதோ, கடந்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் நஸீர் போட்டியிடவில்லை என்பதோ, தற்போது தேசியப்பட்டியலைப் பெற்றுக் கொள்வதற்கு தடையாக, நஸீருக்கு இருக்கப் போவதில்லை.  

எது எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, வாக்குகளைப் பெறுவதற்காக, அல்லது யாராருக்காயினும் வாக்குகளை வழங்காமல் செய்வதற்காக வழங்கப்படும் அனைத்து விதமான அன்பளிப்புகளும் தேர்தல் கால இலஞ்சமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ளவர்களின் வாக்குகளைக் குறி வைத்து, அந்த ஊருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை மு.காவுக்கு உண்டு.   

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பலருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக வேண்டும் என்கிற பாரிய கனவுகள் உள்ளன.   

சில வேட்பாளர்கள் இந்த ஆசையை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைத் சின்னத்தில்தான் மு.காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் மு.கா வெற்றி பெற்றாலும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எவருக்கும் பிரதேச சபைத் தவிசாளர் பதவி வழங்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.   

 காரணம், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், (மு.கா தலைவர் கூறியது போல், எட்டாம் திகதி நஸீர் சத்தியப் பிரமணம் செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்), அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் பதவியையும் அட்டாளைச்சேனைக்கு வழங்க மு.கா தலைமைப் பீடம் விரும்ப மாட்டாது.  

பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி அணியுடன் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி வந்தவர்களில் பாலமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் முக்கியமானவர்.   

இவர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். அன்சில் போட்டியிடும் வட்டாரத்திலிருந்து மு.கா சார்பாக ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, மு.கா மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தது.   
எது எவ்வாறிருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சவால்களுக்கு மத்தியில், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இனியும் வழங்காமல் விட்டு, அந்த ஊரைப் பகைப்பதற்கு ஹக்கீம் விரும்ப மாட்டார்.  

எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை நிச்சயமாக அனுபவிக்கும் என்று நம்பலாம்.    


தேசியப் பட்டியலும் கதைகளும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.