2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூற்சேர்க்கைக்கு 100 வருடம்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். மகேஸ்வரன்.

நூலகர்,

பேராதனைப் பல்கலைக்கழகம்

 

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின், நூற்சேர்க்கைக்கு 100 வருடங்கள் ஆகின்றன. இவ்வருடம், இந்நூலகம் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நிரலில், பல்வேறு நிகழ்வுகளை பல்கலைக்கழகமும் நூலகமும் நடத்தவுள்ளன.

முதற்கட்டமாக, நூலகப் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியைப் பல்கலைக்கழக மூதவை சபை வழங்கியிருக்கிறது. நூலகக் கண்காட்சி, நூலக விஞ்ஞானத்துறையில் சர்வதேசக் கருத்தரங்கு, பல்கலைக்கழக ஆய்வுகளை உள்ளடக்கிய ஆய்வு நூல் வெளியீடு, முதலியன மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட எட்டு இலட்சம் நூல்களைக் கொண்ட இந்நூலகம், தற்போது பிரதான நூலகத்துடன் எட்டுக் கிளை நூலகங்களைக் கொண்டு காணப்படுகிறது. கலைப்பீடத்துக்கும் முகாமைத்துவ பீடத்துக்கும் தொல்லியல், தமிழ், சிங்களம், சட்டம், மானிடவியல் பாடங்கள், உள்ளடங்கலான நூல்களைக் கொண்டதாகப் பிரதான நூலகமும், மருத்துவம், மிருகவைத்தியம், பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானம், இணைந்த சுகாதாரம், பொறியியல் ஆகிய ஏழு பீடங்களுக்கான நூலகங்களையும், விவசாய பீடத்தின் இரண்டாவது நுலகத்தை மகாஇழுப்பலத்திலும் கொண்டுள்ளது. 

இதன் நூற்றாண்டு வரலாற்றை நோக்கின், ஆரம்பத்தில் பல்கலைக்கழக கல்லூரி, 1921இல், கொழும்பு ‘ரெஜினா வலவ்வ’ என்ற காணியும் கட்டடமும் வாங்கப்பட்டு, இது ‘கொலேஜ் ஹவுஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டு, இங்கேயே பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில், பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்கப் பாடுபட்டவர்களுள் சேர். பொன் அருணாசலம், சேர் பொன் இராமநாதன், நீதிபதி அக்பார், ஜயதிலக்க, மார்க்ஸ், ஜேம்ஸ் பீரிஸ், டீ. ஆர் விஜயவர்தன ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களது பெயரிலேயே, பேராதனையில் மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுள் சேர். பொன். அருணாசலத்தின் மகன், அருணாசலம் பத்பநாபா இளமையிலேயே இறந்து போக, அவரது நூற்சேர்க்கையை, சேர் பொன் இராமநாதன், நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்தே, நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தின், இலக்கம் 1 தொடக்கம் 1,401 வரையான நூல்கள், அருணாசலம் பத்பநாபாவின் நூற்சேர்க்கையாகும். 

ஆரம்பக்காலத்தில், இங்கு நூல்கள் மாணவர்களுக்கு இரவல் வழங்கபட்டதுடன், மீளக்கொடுக்கத் தாமதமானால், ஒரு நாளைக்கு அதற்காக 25சதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நூலக அங்கத்தவராவதற்கு ரூபாய் 10 அறவிடப்பட்டுள்ளது. 

 ‘கொலேஜ் ஹவுஸ்’ கட்டடத்தில் ஓர் அறையிலேயே முதலில் நூல்கள் வைக்கப்பட்டன. முதல் வருடம், நூலகத்துக்காக ரூபாய். 750 ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே, ‘வில்லா வெனிசியா’ என்ற இரண்டு மாடிக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

1942இல் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்ட்டு 1952லேயே கட்டடங்கள் அமைக்கும் பணிகள் முடிவுற்று பேராதனையில் கற்ககைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1952 ஆம் வருடமே நூலகமும் பேராதனை கலைப்பீடக் கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. 1960 இல் ஆறு மாடிக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை, கலைபீட அறையிலேயே நூலகம் இயங்கிவந்தது. 

1952ஆம் ஆண்டு நூலகம் கொழும்பிலிருந்து பேராதனைக்கு கொண்டுவரப்பட்ட போது 1921இல் ஏப்பிரல் 8ஆம் திகதி ஒன்றில் தொடங்கிய பத்பநாபா நூற் சேர்க்கைகளும் கொண்டுவரப்பட்டன. எனவேதான் 2021 இல் இப்பல்கலைக்கழகம் நூற் சேர்க்கைக்கு 100 வருடம் எனக் கொண்டாடப்படுகிறது.  

இங்கு 100 வருடங்கள் கடமையாற்றிய நூலகர்களை பொறுத்தவரை 1925 ஆம் ஆண்டு  பல்கலைக்கழக கல்லூரி காலத்தில் ரெஜினட் ஸ்டீபன் என்ரைட் என்பவர் நியமனம் பெற்றுள்ளார். 1942ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது நூலகராக இவரே கடமை ஏற்றுள்ளார். 1952 வரை கடமையாற்றினார். நூலகர் பதவி என்பது சிரேஷ்ட பேராசிரியர் பதவிற்கு இணையானது. கல்விசார் உத்தியோகஸ்தர்களில் இப்பதவி. உபவேந்தருக்கு அடுத்தபடியான கௌரவமான பதவியாகும்.

1952இல் பேராதனைக்கு மாற்றப்பட்டு இலங்கைப் பல்கலைக்கழகம் இங்கிலாந்து மகாராணி எலிசபத் முன்னிலையில் அவரது கணவரான எடின்பெரோ 20.04.1954 இல்  உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இதன் போது இலங்கை  பல்கலைக்கழகம் பேராதனை “ More open than usual” என்ற வாசகத்துடன் திறந்து வைப்பதாக குறிப்பிட்டார்.  இதுவே இன்றைக்கும் நூலகத்தின் வாசகமாக காணப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் நூலக கட்டிடம் 01.07.1960இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நூலகம் 1921- 1942 சிலோன் இலங்கைப் பல்கலைக்கழக சஞ்சிகை நூலகம், 1942-1952 இலங்கைப் பல்கலைக்கழக நூலகம் (யுனிவசிட்டி ஒப் சிலோன் பேராதனை நூலகம்), 1972-1978 பேராதனை வளாக நூலகம், 1978 முதல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் என பெயர் மாற்றங்கள் பெற்று அழைக்கப்பட்டு வருகிறது. 

பல்கலைக்கழக கல்லூரி காலத்தில் 1925 தொடக்கமும் அதன் பின்னர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது நூலகராக ஆர். எஸ். என்ரைட் (1942-1952), இரண்டாவது நூலகராக  எஸ். சி. ப்ளொக் (1952-1963), மூன்றாவது நூலகராக  கே. டி. சோமதாச ( 1964-1970),   எச். எ. ஐ. குணதிலக்க  (1971-1979),  என். டி சேனாதீர (1982-2002),  ஹெரிசன் பெரேரா (2003-2009 ) திருமதி கலாநிதி பி. விஜேதுங்க (2012-2015) ஆகியோர் கடமையாற்றி உள்ளதுடன் எட்டாவது நூலகராக கட்டுரையாளர் இராசையா மகேஸ்வரன் (2015 முதல்) கடமையாற்றி வருகின்றார். 

1992 முதல் நூலகத்தில் கணணியுடனான நூல்பதிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  2001 ஆம் ஆண்டு கிளை நூலகங்களை இணைத்து, இணைய தொடர்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2002ஆம் ஆண்டு தொடக்கம் Alice for windows மென்பொருள் பாவிக்கப்பட்டு நூற் பதிவு, தேடுதல், விநியோகம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. 2016 இல் டிஜிட்டல் நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.  2020ஆம் ஆண்டு 30,000 சதுர அடிக் கொண்ட ஆறுமாடி புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

 இன்று 12,000 மாணவர்கள் 7,000 பட்டப்பின் படிப்பு மாணவர்கள் 3,000 உத்தியோகத்தர்கள் இதில் ஊழியர்கள் மற்றும்  900 பேர் விரிவுரையாளர்கள் என மொத்தமாக 22,000 பேர் நூலக பாவணையாளர்களாக உள்ளனர்.  2020 முதல் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நூலக அங்கத்தவம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 61 மொழிகளில் நூல்கள் உள்ளன. 1961 முதல் பல்கலைக்கழகத்தில் அரபி மொழிக் கற்கை ஆரம்பிக்கப்பட்ட பின் அரபி மொழி நூல்களும் உள்ளன.  நுண்கலை, தொல்லியல், செப்பேடு, சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், ஏடுகள் இச்சேர்க்கையில் காணப்படுகின்றன. 5,200 ஓலைச் சுவடிகளில் 16 மொழிகளில் காணப்படுகின்றன. 1,302 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியே மிகவும் பழமையானது. ஏனைய இலங்கை பல்கலைக்கழகங்களை விட ஓலைச்சுவடி சேர்க்கையே,  பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தினை முதன்மைப்படுத்துகிறது.  அரசர் கால ஓலைச்சுவடிகள், சுதேச மருத்துவ ஓலைச்சுவடிகள், நேரம் கணித்தல், சாஸ்திரம், அரச கால தண்டணைகள், பௌத்த திரிபிடக்க போன்ற விடயங்கள்  இதில் உள்ளடங்கும். 

இலங்கையில் அச்சடிக்கப்படும் வெளிடப்படும் சகல நூல்களிலும் ஐந்து பிரதிகள் சுவடிகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதனைச் சட்டப்படியான நூற் பிரதிகள் (Legal deposit) என அழைப்பர். இந்த ஐந்து பிரதிகளில் ஒரு பிரதி 1951ஆம் ஆண்டு முதல் பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப்படி ஒரு பிரதி சகல தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களிலும் இங்கு உள்ளன. இதில் கிட்டத்தட்ட 4,50,000 நூல்கள் உள்ளன. 1951க்கு முன் இவை இங்கிலாந்து நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 1891 ஆம் ஆண்டிலிருந்து 9,0000 சஞ்சிகைகள் உள்ளன. இவை நூலகத்தில் நூற்கட்டும் பிரிவினால் வருடத்திற்கான சஞ்சிகைகள் ஒன்று சேர்த்து கட்டப்பட்டுள்ளன. 1989 இல் முதல் நூற்கட்டும் பிரிவு இங்கேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன் சில தனியாளர்களிடம் கொடுத்தே நூல் கட்டப்பட்டுள்ளன. 

தமிழ் நூல்களை பொறுத்தவரை 1921 ஆம் ஆண்டிலிருந்தே 150,000 வரையிலான தமிழ் நூற் சேர்க்கையும் இங்கு காணப்பட்டு வருகிறது. இலங்கை சேகரிப்பு, சட்ட ரீதியான வைப்பு  தமிழ் நூல்கள் ஆகியவற்றோடு தனியான தமிழ் நூற் பிரிவுகள், இரவல் பகுதியிலும், தமிழ் நூல்கள் உண்டு. இவை தவிர அண்மையில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தனது நூற் சேர்க்கையையும் அண்மையில் அன்பளிப்பு செய்துள்ளார். 

1921 தொடக்கம் இதுவரை காலம் பட்டப்பின்படிப்பு, பட்டம் கற்றவர்களது ஆய்வு ஏடுகள் (Theses) சேர்க்கையும் இங்கு உள்ளது. இங்கு கடமையாற்றும் நூலகர்கள் மூலம் நாட்டிற்கு  பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.  நூலக துறையில் கற்பித்தல், பயிற்சி வழங்குதல், ஆலோசணை வழங்குதல், நூலகம் தொடர்பான நூல்களை எழுதி வெளியிடல், நூலகப் பாவணை  அதன் வளர்ச்சிக்காக ஆய்வுகளை செய்தல், அதனை தேசிய, சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்தல் போன்றன  மூலம் முக்கிய பங்களிப்பினை  நாட்டுக்கும்  சர்வதேசத்திற்கும் செய்து வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .