பெண்களின் குரல்கள் ஓங்குமா?

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் நீக்கமும் அதன் பின்னர் ஏற்பட்ட களேபரங்களுமே, இன்றைய மலையக அரசியலில் சூடுபிடித்துள்ளன.   

இதைத் தவிர, நீண்டகால போராட்டங்களின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சியால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த வெற்றியை, மலையக மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.   

கட்சி அரசியலில் ஊறிப்போன மலையக வரலாற்றை, அதிலிருந்து மாற்றிவிடுவது இயலாத காரியம். மாதச்சம்பளத்தில், சந்தா கட்டும் தொழிலாளர் வர்க்கம் இருக்கும்வரை, மலையகத் தொழிற்சங்கங்களின் ஆணிவேரைக் கூட அசைத்துவிட முடியாது. இந்த நம்பிக்கையில்தான், மலையகத் தொழிற்சங்கங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன.   

ஒருவரது பெயரை நீக்குவதும் புதிய பெயரைப் புகுத்துவதும் அரசியல் மேடைகளில் ஒருவரையொருவர் சாடுவதுமாக, மலையக அரசியல் களரி நகர்கின்றது. ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்ளும் களத்தில், மக்களே பலியாடுகள். எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமலேயே வீதியில் அணிதிரளும் ஆடவரின் முகங்களும் நகைப்புமே, அவர்களது போராட்டம் எத்தகைய வலிமைபெற்றது என்பதைப் பறைசாற்றி விடுகின்றன.   
இவ்வாறு இருக்க, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 25சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்பதே, இன்றைய அரசியலில், பேசுபொருளாக மாறியுள்ளது.   

பெண்களுக்கு 25சதவீத இடஒதுக்கீடுகளை வழங்காத கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமென்று, தேர்தல்கள் திணைக்களத்தின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியதால், 25சதவீத இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக, அவர்களைச் சல்லடை போட்டுத் தேடும் பணியில், கட்சிகள் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன.   

பிரதான கட்சிகள் சில, பெண்களுக்கு இட ஒதுக்கீடுகளை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அரசியலில் ஆர்வமுள்ள பெண்களைத் தேடுவது சிரமமான காரியம் என்றும் கூறியுள்ளன. சில கட்சிகள் அவசரஅவரமாக மகளிர் பிரிவை ஸ்தாபித்து வருகின்றன. குறிப்பாக, அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக் கிளைகள், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.   

பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த நாடுகளில், முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய நாடு என்ற பெருமை இலங்கையைச்சாரும்.   

1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட, அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கைக்கென இத்தகைய வரலாறு இருந்தும்கூட, இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 சதவீதத்தை இதுவரை தாண்டியதில்லை. உலகில் பெண் பிரதிநித்துவம் மிகக் குறைந்த நாடாக இலங்கையே முன்னிலை வகிக்கிறது.  

உலகில், பெண் பிரதிநித்துவத்தை அதிகம் கொண்ட நாடாக ருவண்டா விளங்குகிறது. ருவண்டா நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு 63.8 சதவீதமான பெண்கள் தெரிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.   

17 நாடாளுமன்றங்களைத் தாண்டிய, இலங்கை அரசியல் வரலாற்றில், இதுவரை 122 பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, சிறுபான்மையினத்தவர் சார்பாக, ஆறு தமிழ்ப் பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளனர். 

இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமை திருமதி மொலமுறேவைச் சாரும். சர்வஜன வாக்குரிமை வழங்கிய டொனமூர் (1931-1947) சட்டமன்றத்திலேயே இவர் இலங்கையின் சட்டவாக்கத்துக்கு முதல் பெண்ணாகத் தெரிவுசெய்யப்பட்டார்.   

இந்நிலையில், தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள், பெண்களை நாட்டின் அரசாங்கத் தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.   

இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநித்துவத்தை 30சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென்று, பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்ததன் விளைவாகவே, அரசியலில் 25 சதவீத இடஒதுக்கீடு தற்போது சாத்தியமாகியுள்ளது.   

இலங்கையின் மாகாண சபைகளில் மொத்தம் 4.1 சதவீதமும் உள்ளூராட்சி மன்றங்களில் 2.3 சதவீதமுமே பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.   

இலங்கை நாடாளுமன்றத்தின் 68 வருடகால வரலாற்றில், மலையகப் பெண்கள் ஒருவர்கூட இதுவரை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனுஷா சிவராஜா போட்டியிட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.  

மத்திய மாகாண சபை மற்றும் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில், பெண்கள் அங்கத்துவம் வகித்தாலும் மலையகப் பெண்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, அத்தொகை பன்மடங்கு இல்லை என்பதே உண்மை.   

இவ்வாறு இருக்க, பெண்கள் அமைப்புகள் போராடி வென்ற 25சதவீத இடஒதுக்கீடு, மலையகத்தில் எவ்வாறு சாத்தியமாகப் போகிறது என்பதே கேள்வியாகவுள்ளது.  

தேயிலைத் தளிர்களைப் பறித்தால் மட்டுமே சம்பளம்; அதிலும் 18 கிலோகிராமுக்கு அதிகமாகக் கொழுந்து பறித்தால் மட்டுமே முழுச்சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்ட களத்தில், மழை, இடி, மின்னல், காற்றையும் கடந்து, பொதி சுமக்கும் கழுதைகளாகக் கூடைகளுடன், மலைகளுக்கு விரையும் பெண்கள் ஒருபுறமிருக்க, அவர்களது உழைப்பைச் சுரண்டித் தங்கத்தலைவனுக்கு தம்பட்டம் அடிக்கும் நாயகர்களாக, போராட்டக்களத்தில் மலையக ஆடவரைப் பார்க்க முடிகிறது.   

தேர்தலில் புள்ளடியிடுவதும் தொழிற்சங்கத்துக்கு சந்தாப்பணம் கட்டுவதும், தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் வெற்றிப் பேரணியில் தலைவனுக்குப் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் தவிர, மலையகப் பெண்கள், வேறு எந்த அரசியல் களத்திலும் பங்கேற்றதாக வரலாறில்லை.   

மலையகப் பெண்களைப் பொறுத்தளவில் வாக்களிக்கும் உரிமையைக்கூட ஓர் ஆணே நிர்ணயிக்க வேண்டியுள்ளது. ஆண் ஒரு தொழிற்சங்கமென்றால் அந்தத் தொழிற்சங்கத்திலேயே பெண்ணும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படுகிறது.   

தேயிலை மலையில் குவிந்திருக்கும் பெண்களுக்குத் தலைவராக ஓர் ஆணே தெரிவுசெய்யப்படுகிறார். தலைமைத்துவப் பண்புகள் இருந்தும்கூட, பெண்ணொருவரைத் தலைவியாகத் தெரிவுசெய்யும் நிலைக்கு, மலையகம் இன்னும் மாற்றமடையவில்லை.   

தோட்ட நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் கங்காணி, கணக்குப்பிள்ளை, தோட்டக் குமாஸ்தா, தோட்ட நிர்வாகி என அனைத்துத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகரித்து உள்ளது.   

ஓரிரு தோட்டங்களில் மட்டும் பெண்கள் பெயர் சொல்லுமளவுக்கு நிர்வாக மட்டத்தில் உள்ளனர். தோட்டங்களில் பிள்ளை பராமரிக்கும் தொழிலுக்கு மட்டும் தோட்ட நிர்வாகங்கள், பெண்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றன. இவ்விடயத்தில் தோட்ட நிர்வாகிகளைப் பாராட்டியே ஆகவேண்டும்.  இவ்வாறு இருக்க, மலையக மக்களின் சந்தாப்பணத்தில் வாழும் தொழிற்சங்கங்கள், தேர்தலில் 25சதவீத இடஒதுக்கீடை, எவ்வாறு மலையகப் பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போகின்றன என்பது பெருங்கேள்வியாக எழுந்துள்ளது.   

இந்தத் தொழிற்சங்கங்கள், தங்களது தொழிற்சங்கத்தில் பெண்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம் என்பதைப் பறைசாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடும்படி சில பெண்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்கள் அடையாளப்படுத்திய பெண்களில் ஓரிருவரைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் மலையக அரசியல் மேடைகளில்கூட பார்த்ததில்லை. ஏன்? போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களில்கூட அவர்களது வீரியமான முகத்தைக் காணக்கிடைப்பதில்லை.   

ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், பெண்கள் அணி என்ற ஒரு பிரிவை உருவாக்கியிருந்தாலும் அந்தப் பெண்கள் அணியின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இதுவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. மலையக இளைஞரணியின் செயற்பாடுகள் மட்டுமே ஊடகங்களில் கொட்டை எழுத்துகளில் பிரசுரமாகின்றன. 

அரசியலில் நீடித்து நிலைப்பதற்காக, இளைஞரணியினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்றிட்டங்களும் ஊடகங்களில் எப்படியாவது இடம்பிடித்து விடுகின்றன. ஆனால், தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெண்கள் அணியினரை காணக்கிடைப்பதே இல்லை. குறிப்பிட்டுச் சொன்னால், கண்டியில் இயங்கிவரும் செங்கொடிச் சங்கத்தைத் தவிர, வேறு எந்த பெண்கள் அணியும், வீரியத்துடன் மக்கள் பணி ஆற்றியதாக மலையகத்தில் வரலாறு இல்லை.   

செங்கொடிச் சங்கத்தைத் தவிர, அனுஷா சிவராஜா, சரஸ்வதி சிவகுரு, அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் மட்டுமே, மலையக அரசியலில் பெண் தலைவிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.   

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவியும் மத்திய மாகாண முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சரும் மலையகத்திலிருந்து முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமைக்குரியவருமான அனுஷிசியா சிவராஜா என்ற பெண் ஆளுமையே, மலையகத்தில் இன்றுவரை தலைசிறந்த பெண் தலைவியாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்.   

இவருக்கு அடுத்தபடியாக சாந்தினிதேவி சந்திரசேகரனும் சரஸ்வதி சிவகுருவும் மலையகப் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். பல்வேறு காரணங்களால் சாந்தினிதேவி சந்திரசேகரனால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. அரசியலிலிருந்து ஓரம் கட்டப்பட்ட அவரது இடத்துக்கு, அவரது புதல்வி செல்வி அனுஷா சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

மலையக மக்கள் முன்னணியின் நிர்வாகக் குழுவில், மிக முக்கிய பதவியை வகிக்கும் அனுஷாவை மட்டுமே அதிகமான அரசியலில் மேடைகளில் காணமுடிகிறது. 

சட்டத்தரணியாகத் தொழில்புரிந்து வரும் இவரைப் போன்ற பல பெண் ஆளுமைகள், மலையக அரசியலில் தடம்பதிக்க வேண்டுமென்பதே பல பெண்ணியவாதிகளின் கனவாக உள்ளது. எப்படியும் இவரை எதிர்கால அரசியலில் மேடைகளில் நிச்சயம் காணலாம்.   

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் மத்திய மாகாணத்தில் அங்கம் வகிக்கும் ஒரே பெண்ணாக சரஸ்வதி சிவகுரு மலையகத்தில் வலம்வருகிறார். எனினும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பல மேடைகளின் பின்னாசனத்தில் மட்டுமே இவரைப் பார்க்கக் கிடைக்கிறது.   

இவர்களைத் தாண்டி, பெயர் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஒருவரும் இதுவரை மலையகத்தில் அடையாளப்படுத்தப்படவில்லை. மலையகத்தைப் பொறுத்தளவில் மலையகப் பெண்களின் அவல வாழ்வை எடுத்துரைப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை மாற்றத்துக்கும் அவர்களின் அடையாளமாக ஒரு பெண் கட்டாயம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.   

 தேயிலைத் தோட்டப் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்கள், உரிமை மீறல்கள், வீட்டு வன்முறைகள், வன்கொடுமைகள் என்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை, மேல்தட்டு வர்க்கத்தினரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, அவர்களது குரலாக ஒலிப்பதற்கு, ஒரு குரல் தோட்டங்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  

இங்குதான் மலையகத்தின் பிதாமகர்கள் எங்ஙனம் பணியாற்றப் போகின்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.  மலையக அரசியலில், குடும்ப அரசியலும் தொடர்வதால் சாதாரண பெண்களுக்குத் தேர்தலில் நிற்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.   

“சாதாரண பெண்களுக்குச் சந்தரப்பத்தை வழங்க நாங்கள் முன்வந்தாலும் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்வருதில்லை” என்றே, மலையகத் தலைமைகள் ஆண்டாண்டு காலமாகக் கூறிவருகின்றனர். சாதாரண பெண்களை அரசியலில் பங்கேற்கச் செய்வதற்காக, மலையகக் கட்சிகள் இதுவரை எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன?   

அரசியலில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கான தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கியுள்ளனவா, அரசியல் தொடர்பிலான பயிற்சிகளை வழங்கியுள்ளனவா?  ஒரு கருமமும் ஆற்றாமல், மலையகப் பெண்கள் அரசியலில் பங்கேற்க முன்வருவதில்லை என்று மட்டும் கூறிச் சமாளித்து விடுகின்றனர்.   

குடும்பம் என்ற வரையறைக்குள் வாழும் பெண்கள், அதைத் தாண்டி பயணிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட நியதியாக உள்ளது. இந்தக் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணும் பாரிய சவால்களை எதிர்கொள்ளவே செய்கிறாள். குறிப்பாக, இவ்வாறான பெண்களுக்கு, ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் சமூக மட்டத்தில் எழுப்பப்படுகின்றன. இதுவே, பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு பெருந்தடையாக உள்ளது.   

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் ‘சூரியா பெண்கள் அமைப்பு’, ‘விடியல்’ எனப் பல பெண்ணிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இந்த அமைப்புகளினூடாக பெண்களுக்கென ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இவ்வாறான பெண்ணிய இயக்கங்கள், பெண்களை அரசியலில் பங்கேற்கச் செய்வதற்காகப் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், மலையகப் பகுதிகளில் அவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அரிதாகவே உள்ளது.  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவானது, தோட்டப்புறப் பெண்களை ஒன்றிணைத்து, ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி வருகின்றது. இந்தக் கூட்டங்களில் எத்தகைய தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.   

இதைத் தவிர, ‘பிரிடோ இயக்கம்’ பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை, தோட்டப்புற மக்களுக்கென நடத்தி வருகின்றது. இதைத் தாண்டி, மலையகத்தில் வேறு எந்தத் தலைமைத்துவ பயிற்சிகளும் பாசறைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், ஏனைய மாவட்டங்களில் பெண்கள் அரசியலில் குதிப்பதற்குத் தயார்படுத்தப்பட்டே உள்ளனர்.  

“எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், நேரடியாகப் போட்டியிடத் தயார்நிலையில் 37 பெண்கள் உள்ளனர். நாம் கட்சிசார்பற்ற அமைப்பு; எனவே எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவோம். அது அவர்களுக்கு வலிமை. தவறினால் சுயேட்சையாகப் போட்டியிடுவோம். எம்மைச் சேர்க்கும் கட்சி நிச்சயம் வெற்றியடையும்” என்று, அம்பாறையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ‘வேள்வி’ (VELVI- பெண்களுக்கான சமய சமூக பண்பாடு பொருளாதார அபிவிருத்திக்கான மன்றம்) என்ற அமைப்பு சூளுரைத்துள்ளது.   

பெண்கள் அரசியலில் பிரவேசிக்க எத்தகைய தயார்படுத்தல்களுடன் இருக்கின்றார்கள் என்பதை, வெளிமாவட்ட ங்களிலிருந்து வரும் இவ்வாறான சூளுரைகள் பறைசாற்றுகின்றன. ஆனால், இவ்வாறான சூளுரைகளை மலையகத்திலிருந்து எதிர்பார்க்க முடியவில்லை. ‘யார் ஆண்டால் நமக்கென்ன’ என்ற பொடுபோக்கு நிலையே இன்னும் மலையகத்தில் நீடித்து வருகிறது.   

மலையகப் பிதாமகர்களைப் பொறுத்தவரை, தேயிலைத் தொழிற்றுறையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அதற்கு, பெண் தொழிலாளர்களே தேவை. எனவே, பெண்களை அந்தத்துறைக்குள் சிறைப்படுத்துவதே, மலையகத் தலைமைகளின் விருப்பமாக உள்ளது.   
 இதைத் தவிர, கற்றுத் தேர்ந்த பெண்கள், அரசியல் மட்டத்தில் மிளிர்ந்துவிடுவார்கள் என்பதற்காகவே, அவர்களுக்கென சில துறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.   

மலையகத்தில் பெண்களுக்கான தொழிற்றுறைகளாக, தேயிலை தொழிற்றுறை, ஆசிரியர் துறை (இது உன்னதமான பணி), பிள்ளைப் பராமரிப்புத் துறை, ஆடைத்தொழிற்றுறை இந்த நான்கு துறைகளே வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.   

இதைத் தாண்டிக் கோலோச்சிய பெண்களை விரல்விட்டு எண்ணுமளவிலேயே உள்ளனர். இன்று பல்கலைக்கழகம் வரை சென்று திரும்பிய பெண்களும் யுவதிகளும் இந்தத் துறைகளையே அதிகம் நாடிச் செல்கின்றனர்.   

ஏனைய தொழிற்றுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்ச உணர்வும் அரசாங்க தொழிற்றுறை என்ற மாயையும் இதற்குப் பிரதான காரணிகளாக அமைந்துள்ளன. இவ்வாறு இருக்கும் பெண்களை, மலையகத் தலைமைகள் அந்த வட்டத்துக்குள் இருந்த எவ்வாறு வெளிக்கொணரப் போகின்றார்கள்?   

200 வருட காலங்களாக, ஆண்களின் பிடியில் மட்டுமே சிக்கித்தவிக்கும் மலையக அரசியலில், பெண்களின் குரல்களும் ஓங்கிஒலிக்க வேண்டும். பெண்களுக்காக பெண்கள் மட்டுமே குரல்கொடுக்கும் நிலை உருவாக வேண்டும். ஆண்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டு நிரம்பி வழியும் மாகாண சபைகள், மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகளில் பெண்களும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.   

ஆண்களின் ஓங்கிய குரல்களால் கதிகலங்கும் நாடாளுமன்றத்தில் பெண்களின் குரலும் உயரவேண்டும். இவையனைத்தையும் சாத்தியமாக்க, தடைகளைத் தகர்த்தெறிந்து மலையக பெண்கள் அரசியலில் பங்கேற்பது அவசியம். மலையகத்தின் ஆண்தலைமைத்துவ ஆட்சிக்கு முடிவுகட்ட பெண்கள் தயாராக வேண்டும்.   இதற்கான ஏற்பாடுகளை, முன்னாயத்தங்களைச் செய்ய, பெண்ணிய அமைப்புகள், சமூக நிறுவனங்கள் முன்வர வேண்டும். அரசியலைக் கற்றுத்தேர்ந்த பெண்கள் கூட்டம் நாளைய உலகை ஆள்வதற்குத் தயார்படுத்தப்படல் வேண்டும்.  

 பெண்கள் மத்தியில், பயிற்சிப் பாசறைகள், விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, அரசியல் தொடர்பிலான ஆர்வம் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டுவிடும்.   

மலையகத்தின் பெண் ஆளுமைகளாக திகழும், மூத்த பெண் அரசியல்வாதிகளான அனுஷா சிவராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன்  போன்றோர் கட்சிபேதங்களை மறந்து, ஒன்றிணைந்து, மலையகப் பெண்களை அரசியலில் உள்வாங்குவதற்கான முயற்சிகளை, தோட்ட மட்டத்திலிருந்து ஆரம்பிக்க முன்வருவார்களாயின், மலையகத்தில் பெண்களுக்கான 25சதவீத இடஒதுக்கீடு சாத்தியமாகும்.   

மலையகப் பெண்களும் குடும்பம், தொழில் என்ற வட்டத்துக்குள்ளிருந்து வெளிவர வேண்டியது அவசியமாகும். நாட்டின் அரசியலில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை உணர்ந்து, அரசியலில் கால்பதிப்பதற்கான ஆற்றலைத் தாங்களாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   

 பல்வேறு போராட்டங்களின் பின்னர், பெண்களுக்கான அரசியல் களம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியைத் தக்கவைப்பது பெண்களின் கைகளிலேயே உள்ளது.  


பெண்களின் குரல்கள் ஓங்குமா?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.