2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ்துறையில் களம் இறங்கத் தமிழர்கள் தய(கல)ங்குவது ஏன்?

காரை துர்க்கா   / 2017 நவம்பர் 14 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், பெரிய அளவிலான தொழிற்சந்தை நடைபெற்றது.   

அதில் சுமார் 44 நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான துறைசார் பணியாளர்களை (மனித வளம்) பெறும் பொருட்டு பங்கு பற்றியிருந்தன. அந்த நிகழ்வில், யாழ். மாவட்ட செயலாளர்  நா.வேதநாயகன் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.   

“தொழில் வாய்ப்புகளைத் தேடுவோர், தொழிலாளர்களைத் தேடுவோர், அதே போன்று தொழிற் பயிற்சியை வழங்குபவர்கள், இத்துறையிலுள்ள தொண்டு நிறுவனங்கள் என நான்கு (04) தரப்புக்கும் இவ்வாறான தொழில் சந்தைகள் பயனுறுதி மிக்கதாக அமையும்” என மாவட்டச் செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.   

அத்துடன் 25, 648 இளைஞர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வேலை வாய்ப்புகளைக் கோரி, தமது விவரங்களைப் பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.  

இது இவ்வாறிருக்க, இந்த தொழில் சந்தையில் ஸ்ரீ லங்கா பொலிஸ்துறையும் கலந்து கொண்டிருந்தது. தங்களது நிறுவனத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் மற்றும் அதற்கான வேதன விவரங்களை வெளிப்படுத்தி இருந்தது. இதன்போது, இங்கு வேலை வாய்ப்புகளை நாடி வந்தோரில், 76 பேர் பொலிஸ்துறையில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.   

அதாவது, 25, 648 இளைஞர்கள் யாழ். மாவட்டச் செயகத்தில், தமது பதிவுகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரி நிற்க, வெறும் 76 பேரே பொலிஸ்துறையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். நேர்முகத் தெரிவின்போது, இவ்வாறு விண்ணப்பித்த அனைவருமே சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அறுதியாகக் கூறவும் முடியாது.   

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி எரியும் முதன்மைப் பிரச்சினையாக உள்ளது. அதிலும் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் புரிவதைக் காட்டிலும் அரசாங்க வேலையை, மேலானதாக உயர்வானதாகக் கருதுகின்றனர்.  

‘கோழி மேய்ச்சாலும் கவுன்மேந்தில் மேய்க்க வேண்டும்’ என்பது யாழ்ப்பாண வாசிகளின் அடிப்படைச் சிந்தனையாகும். அரசாங்க வேலை வாய்ப்புகளை, அநேகர் எதிர்பார்த்து உள்ளனர். பத்து தொடக்கம் இருபது வெற்றிடங்கள் காணப்படுகின்ற அரசாங்க வேலைகளுக்கான விளம்பரங்கள் கோருகின்றபோது, ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அரசாங்கம் எவ்வாறாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் எனப் பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றது.   

தொழில் வாய்ப்புகள் இன்றிப் பல ஆயிரம் பட்டதாரிகள் பல ஆண்டுகளாகத் தவம் இருக்கின்றனர். அவர்கள், மாவட்டச் செயலகம் முன்பாகப் பல தடவைகள், பல நாட்களாகத் தொடர் போராட்டங்கள், இடைவிடாது நடாத்தி உள்ளனர். அரசாங்கத்தின் உறுதிமொழிகளை அடுத்து, அவர்கள் தங்களது போராட்டங்களை இடைநிறுத்தி உள்ளனர்.   
இந்தநிலையில், தற்போது தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன், தமக்கான நியமனங்களை வழங்க வேண்டும் எனக் கோரி, நாளை 15 ஆம் திகதி யாழ். செயலகம் முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.   

பொலிஸ்துறையினருக்குத் தகுந்த சம்பளம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சீருடைத் துணி, அது தைப்பதற்கான கொடுப்பனவு மற்றும் காலணி (சப்பாத்து) என மேலதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பட்டதாரியாக உள்ள இளைஞர்கள் பொலிஸ்துறையில் இணைந்து, அங்கு உயர் நிலையை அடையக் கூடிய ஏது நிலைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.   

அத்துடன், தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இணைவோருக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே பயிற்சிகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம், தமிழ் இளைஞர்களைப் பொலிஸ்துறையில் இணைந்து செயற்படுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது.   

வடக்கு மாகாண முதலமைச்சரும் பொலிஸ்துறையில் இணைந்து பணியாற்றுமாறு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறான ஓர் நிலையிலும், ஏன் தமிழ் இளைஞர்கள் பொலிஸ்துறையில் இணையப் பின்னடிக்கின்றனர் என்பது அவசியமாக ஆராயப்பட வேண்டிய ஓர் அலசல் ஆகும்.   

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் இராணுவம், கடற்படை, விமானப் படையினருடன் பொலிஸ்துறையினரும் இணைந்து ஈடுபட்டிருந்தனர். ஆகவே, அவ்வாறான பெரும் அழிவுகளை ஏற்படுத்திய நடவடிக்கைகளால் தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறாத காயங்களாகவே உள்ளன.  

‘பஞ்சம் மாறலாம் பஞ்சத்தில் ஏற்பட்ட வடு மாறாது’ என்பார்கள். அதேபோல, யுத்தம் ஓய்ந்திருக்கலாம்; ஆனால், அதில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளக் காயங்கள் ஓயாது, மீண்டும் மீண்டும் கடல் அலைகள் போல பாதிக்கப்பட்ட மனங்களில் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்தச் சீருடையினர் மீதான அச்ச உணர்வு அவர்களின் ஆதிக்கப் போக்கு, இன்னமும் முற்றாக அகலவில்லை. தமிழ் மக்களின் மனங்களில் குடியிருக்கின்றது.   

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் முப்படையினரும் அளவுக்கு அதிகமாக, மிதமிஞ்சி முகாமிட்டு, தமிழர் நிலங்களில் உள்ளனர். அரச காணி, தனியார் காணி என எங்கும் வாசம் செய்கின்றனர்.   

தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை, ‘இது படையினருக்கு சொந்தமான காணி. உள்ளே நுழைய வேண்டாம்’ என்ற வாசகம், அந்த பகுதிகளில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டு உள்ளதைக் காணலாம்.   

காணியின் உரித்துக்காரன் பூமியில் ஆமி நேவி. ஆனால், காணி உரிமைக்காரன் இன்னமும் அகதி. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இராணுவம் வேறு; விமானப் படை வேறு; பொலிஸ்துறை வேறு அல்ல. எல்லாமே ஸ்ரீ லங்கா சிங்களப் படையினரே.   
ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளால் படையினர் மீது வெறுப்புடனும் ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும் ஒரு தமிழ்க் குடிமகன் இருக்கையில், எவ்வாறு பொலிஸ்துறையில் இணைய இளைஞர்கள் முன் வருவார்கள்?   

ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கும் படையினருக்குமான இடைவெளி அதிகமாகவே காணப்படுகின்றது. அத்துடன், மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட கடுமையான யுத்தம் அவர்களை ஓர் அன்பராக, நண்பராகப் பார்க்காமல் அந்நியராகப் பார்த்தே பழகி விட்டது. (இயைபாக்கம்) இவ்வாறான ஒரு பாதகமான நிலைமையே தமிழர் மனங்களில் நங்கூரம் இட்டுள்ளது.   

மறுபுறம், படையினரும் புலிகள் மீண்டும் உயிர்த்து, எழுத்து விடுவார்கள் என நொண்டிச் சாட்டை, மீளமீளக் கூறி, தமிழர் பிரதேசங்களில் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். கடந்த எட்டு (மே 2009) வருட காலப் பகுதியில், புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான வலுவான எவ்வித சம்பவங்களும் நடைபெற்றதாக வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பதிவுகள் இல்லை.   

இல்லாத புலிக்கு ஏன் இவர்கள் கிலி கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்கள் தொடுக்கும் வினா? இன்னும் ஏன் புலிகளின் நிழலில் நாட்களை நகர்த்துகின்றனர். இன்னொரு விதத்தில் கூறின், இவர்கள் தமிழ் மக்களை இன்னமும் நம்பவில்லை என்றும் நோக்கலாம் அல்லவா? படையினர் அவர்களைச் சந்தேகக் கண்ணாடி ஊடாக பார்ப்பதாகவும் கருதலாம் அல்லவா?   

தற்போது கூட வரவிருக்கும் (?) புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அடம் பிடிக்கின்றனர். ஒருவர் தனது இல்லத்தில் பௌத்தனாக, இந்துவாக, கிறிஸ்தவனாக, இஸ்லாமியராக இருக்கலாம். வீட்டுக்கு வெளியே ஒரு சிறந்த இலங்கையனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.   

இவ்வாறான சிந்தனை இலங்கையர் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்குமாயின், இலங்கையை சிறப்பான இடத்தை நோக்கி நகர்த்தும். ஆக, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது, மறுவடிவில் சிங்கள மக்களுக்கு முன்னுரிமை என்பதாகும்.   

ஆகவே, நாட்டில் இவ்வாறான போக்குகள் தொடருகையில் தமிழ் பொலிஸ்துறை உத்தியோகத்தராக இருந்து, எவ்வாறு தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் எனத் தமிழ்க் குடிமகன் கருதலாம்.  

ஏனெனில், “கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியைக் கொண்டு, தமிழ்க் கல்வி முன்னேற்றத்துக்கான முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு, எமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. நாம் எத்தகைய பணிப்புரைகளை விடுத்தாலும் அதிகாரிகள் அதைச் செய்வதில்லை. வெறும் பெயருக்கே எனக்கு கல்வி அமைச்சு” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தனது மனக் குமுறலை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.   

 அமைச்சர் இராதாகிருஸ்ணனுக்கே அந்தக் கதி என்றால், இந்தத் தமிழ் பொலிஸ்துறையிலுள்ள சாதாரண கான்டபிளின் நிலைபற்றிச் சொல்ல வேண்டுமா?   
ஆகவே, இதற்கான பரஸ்பரம் நம்பிக்கைகளைக் கட்டி எழுப்ப வேண்டிய பெரும் பணி இலங்கை அரசாங்கத்தை சார்ந்ததே. அதற்காக அரசாங்கம் விசுவாசமாக வெளிப்படைத் தன்மையுடன் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.  

நாட்டின் பொலிஸ்துறையில் இணைந்து சேவையாற்ற அந்நாட்டிலுள்ள ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் (சிங்கள மக்கள்) முண்டியடிக்கும் அதேவேளை, மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த மக்கள் (தமிழ் மக்கள்) பின்னடிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .