2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மாகாண சபைத் தேர்தல்: மூக்கணாங்கயிறு பற்றிய பயம்

Johnsan Bastiampillai   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த அரசாங்கமும் இழுத்தடித்து வருகின்றது. பொதுவாகவே ஆட்சியாளர்கள், தமக்குச் சாதகமான ஒரு சூழல் வரும்வரை, தேர்தல்களை நடத்த விரும்புவதில்லை. அப்படியான ‘நல்ல நேரம்’ கைக்கூடி வரும் வரைக்கும், இந்த அரசாங்கமும் காத்திருக்கின்றது.    

ராஜபக்‌ஷர்களின் அரசாங்கமானது, பொதுவாகவே தேர்தல்களைக் கண்டு பின்வாங்குவதில்லை. அதை அவர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆயினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை, அது தொடர்பான சட்டத்தில் உள்ள விடயங்கள், தேர்தல் முறைமை எனப் பல காரணங்கள், தேர்தலொன்றை நடத்துவதற்கான இறுதி முடிவெடுப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.   

அதுமட்டுமன்றி, ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சியதிகாரத்தை, மேலும் பலப்படுத்தக் கூடிய விதத்தில், மாகாண சபைத் தேர்தல் முடிவகள் அமைவது இன்றியமையாதது. எனவே, இதுவெல்லாம் சந்திக்கின்ற ஒரு புள்ளியிலேயே, இம்முறை மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.  
1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட,  இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் தொடர் விளைவாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம், மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.    

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைத் தணிய வைப்பதற்காகவும் சிறிய அளவிலான அதிகாரப் பகிர்வை அல்லது, அதுபோன்ற மாயத் தோற்றத்தைக் காண்பிக்கவுமே, மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில், தமிழர்களை மையமாகக் கொண்டே இம்முறைமை உருவாக்கப்பட்டது.    

ஆயினும், தமிழர்களுக்கு மட்டும் மாகாண சபை முறைமையை வழங்குவது, பாரிய எதிர்ப்பலைகளைத் தோற்றுவிக்கும் என்ற யதார்த்தத்தை, முன்னுணர்ந்து கொண்ட  ஜே.ஆர். அரசாங்கம்,  அனைத்து மாகாணங்களுக்கும் இம்முறைமையை வழங்கியது.    

மாகாண சபை முறைமையால், தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களும் நன்மை அடைந்துள்ளனர். பிராந்திய ரீதியில் ஆட்சிக் கட்டமைப்பொன்று உருவானதுடன், நிறையவே அபிவிருத்திகளும் செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இம் முறைமையை மத்திய அரசாங்கம் எந்தக் கோணத்தில் நோக்கினாலும், மாகாண சபைகளால் மக்கள் நன்மை அடைந்தனர்.  

ஆனால், மாகாண சபை முறைமையைக் கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி முதற்கொண்டு, அநேகமான பெரும்பான்மையினக் கட்சிகள், மாகாண சபை முறைமையை ‘வெள்ளையானை’ என்றுதான் வர்ணிக்கின்றன. அத்துடன், மாகாண சபை முறைமையை மாற்றுவதற்கான அல்லது, நீக்குவதற்கான முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

வெள்ளை யானைகளை வைத்து வேலை வாங்க முடியாது. அவற்றைப் பராமரிக்க, பெரும் செலவு செய்ய வேண்டும். எனவேதான், ‘வெள்ளை யானை’ என்று மாகாண சபை முறைமை வர்ணிக்கப்படுகின்றது. நிஜத்தில் இல்லாத, கற்பனையான ஒரு விடயம் என்ற அர்த்தத்திலும், இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. எது எவ்வாறிருப்பினும், பெருந்தேசியக் கட்சிகள், மாகாண சபை முறைமைக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதற்குப் பல்வேறு மறைமுக காரணங்கள் இருக்கின்றன.   

அதிகாரத்தை, கொழும்பில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சியாளர்களுக்கு, மாகாண சபைகள்,  தலையிடியாக இருக்கின்றன. மத்திய அரசாங்கத்தின் மூக்கணாங்கயிற்றில், மாகாண சபைகள் பிணைக்கப்பட்டு இருந்தாலும், அந்த மூக்கணாங்கயிற்றையே அசைத்துப் பார்த்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.   

ஒரு சில சந்தர்ப்பங்களில், மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை, மாகாண சபைகள் எடுத்திருக்கின்றன. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள், பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ‘டென்சனை’ அதிகரிப்பனவாகவே காணப்பட்டன.    

தொடர்ச்சியாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு, தமிழ் தேசியம் வலியுறுத்தி வருகின்றது. ஆனால், ஒருபோதும் அவ்வாறான அதிகாரங்களை, எந்த அரசாங்கமும் வழங்காது. அப்படிக் கொடுத்தால், மாகாண சபைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறி, மூக்கணாங்கயிற்றை அறுத்துக் கொண்டு ஒடிவிடலாம் என்ற பயம், எச்சரிக்கை ஆகியன, எப்போதும் இருக்கின்றன.   
நல்லாட்சி அரசாங்கம் மட்டுமன்றி, ஒரு கட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ கூட, 13 இனை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் ‘13 பிளஸ்’ என்ற 13இற்கும் அப்பாலான தீர்வுகள் பற்றிப் பேசினார்கள். ஆனால், அவையெல்லாம் பேச்சோடு முடிந்தன.   

ஏனெனில், ‘சுயநிர்ணயம்’ என்ற வார்த்தையின் வீச்சை, ஆட்சியாளர்கள் அறிவார்கள். எந்த அடிப்படையிலும் தனிநாடோ, மாநிலமோ உருவாவதற்கு, ஒருபோதும் பெருந்தேசியம் இடமளிக்கப் போவதில்லை. இதைத் தவறு என்றும் கூற முடியாது.   

ஆனால், இந்தக் காரணங்களை அடிப்படையாக வைத்து, மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதோ, அந்த முறைமையை நீக்குவதற்கு முயற்சிப்பதோ ஏற்றுக் கொள்ள முடியாது. அது, இன்னுமொரு வகையான அதிகாரக் குவிப்பின் வடிவமாகவே நோக்கப்படும்.   

கிழக்கு, சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆயுட்காலம், 2017ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்து விட்டது. வடக்கு, மத்திய, வடமேல் மாகாண சபை ஆகிய 2018ஆம் ஆண்டில் காலாவதியாகின. மேல், ஊவா,  தென் ஆகிய மாகாண சபைகளின் ஆயுள், 2019இல் முடிவடைந்து விட்டது.   

எனவே, ஒவ்வொரு சபைக்கும் உரிய காலத்தில், தேர்தல் நடத்துவது என்றால் 2017 இலேயே முதலாம் கட்ட மாகாண சபைகளின் தேர்தல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது, ஒரே தினத்தில் எல்லா சபைகளுக்கும் வாக்கெடுப்பை நடத்துவது என்றால் கூட, 2019இல் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால்,நல்லாட்சி அரசாங்கம் அஞ்சி நடுங்கி, தேர்தலை நடத்தவில்லை. அதுபோல, பொதுஜனப் பெரமுன அரசாங்கமும் இன்னும் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.  

மாகாண சபைத் தேர்தல்கள் என்று வரும்போது, பொதுவாகவே அதிகாரப் பகிர்ந்தளிப்பு பற்றியும் வெற்றிக்கான சாத்தியம் பற்றியும் மத்திய அரசாங்கங்கள் சிந்திக்கின்றன.   

இந்நிலையில், 13ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவது பற்றிய பேச்சுகள் மேலெழுந்திருந்த நிலையில், இந்தியா தனது வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி, அது பற்றிய அழுத்தத்தைப் பிரயோகித்தது. எனவே, மாகாண சபை முறைமைகளை நீக்குவதற்கு, இந்தியா ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்பது, அரசாங்கத்துக்கு மீள உணர்த்தப்பட்டு இருக்கின்றது.  

மாகாண சபைகளுக்கான தேர்தலை, இனியாவது நடத்துமாறு அரசியல் கட்சிகளும் ஜனநாயக விரும்பிகளும் கோரி வருகின்றனர். அரசாங்கத்துக்குள் இருந்தும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முன்னுக்குப் பின் முரணான, கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. பல தரப்புகளும் தேர்தலை நடத்தக் கோருகையில், சில பிக்குகள், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.   

ஆளும் கட்சிக்குள் கணிசமானோர் மாகாண சபை முறைமையை விரும்பாமையால், தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதில், அமைச்சர் சரத் வீரசேகர போன்றோரது கருத்துகள் கவனிப்பைப் பெற்றுள்ளன. சரத் வீரசேகர, “காணி, பொலிஸ் அதிகாரங்களைக் குறைப்பது குறித்து ஆராய வேண்டும்” என்று கூறியுள்ளார். அதேநேரம், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், “மாகாண சபை முறைமையை நீக்க முடியாது. தேர்தல் முறைமை பற்றிய முடிவு எட்டப்பட்டதும் தேர்தல் நடத்தப்படும்”  என்று தெரிவித்துள்ளார்.   

நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி குறையத் தொடங்கியதும், அமுக்கி வைக்கப்பட்டிருந்த பல குழப்பங்கள் பூதம்போல வெளிக் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன. உள்ளக அரசியல் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி ஆகியவை, அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது எனும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளன.   

ஆகவே, மாகாண சபை முறைமையைத் தொடர்வதா, ‘13’ இனை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தலாம்? என்ற வழக்கமான தலையிடிகளுக்கு மேலதிகமாக, மேற்குறிப்பிட்ட விவகாரங்களும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எடுப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.   

மிக முக்கியமாக, தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில், அரசாங்கம் உள்ளது. தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.   

ஆனால், சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்களைச் சிதறடிக்கும் விதத்திலேயே ஆட்சியாளர்கள் தேர்தல் முறைமையை மாற்றுவார்கள் என்பது நமது அனுபவமாகும். இவ்வாறிருக்க, குறுகிய காலத்துக்குள் தாம் நினைத்தவாறு தேர்தல் முறைமை மாற்றியமைக்காமல் போனால், தேர்தலை இனியும் தாமதிக்க முடியாமல் போனால் பழைய முறைக்கே அரசாங்கம் செல்வதற்கு வாய்ப்புள்ளது.   

உண்மையில், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில், பழைய முறையா, புதிய முறையா என்பது இரண்டாவது பிரச்சினைதான். முதலாவது பிரச்சினை, எந்த முறையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதும், அதனூடாக சிறுபான்மை பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுமாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X