2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மக்களும் சுயநிர்ணயமும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 184)

சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, ‘சகல மக்களும் சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுரிமையின் பாலாக, அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையைத் தீர்மானிப்பதுடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை முன்னெடுக்கிறார்கள்’ என்று வழங்கியது.   

 ஆனால், இதிலுள்ள ‘மக்கள்’ என்ற பதத்தின் அர்த்தம், நீண்டகாலமாகவே தொக்கி நிற்குமொன்றாகத் தொடர்ந்து வந்தது.   

சுயநிர்ணய உரிமையைக் கொலனித்துவ விலக்கத்துக்கு என மட்டுப்படுத்தப்பட்டதோர் உரிமையாக, மேற்குலகு நோக்கியதன் விளைவாக, ‘மக்கள்’ என்ற பதத்தை, நவீன அரசுக் கட்டமைப்பின் அடிப்படையில், அணுகும் போக்கே, அதுவரை கடைப்பிடிக்கப்பட்டது.   

உதாரணமாக, ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசாங்கத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும், ஒரு மக்களாகக் கருதப்பட்டனர். ஆகவே, அவர்களது சுயநிர்ணய உரிமையானது, அந்நிய ஆதிக்கத்திலிருந்து அவர்களுக்குச் சுதந்திரத்தை அளிக்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களுக்கு உள்ளிருந்த சிறுபான்மையினர், தம்மைத் தனித்ததொரு மக்களாகக் கருதமுடியாததாக, அந்த அணுகுமுறை அமைந்திருந்தது.   

இது, ‘மக்கள்’ என்ற பதத்துக்கான போதுமான பொருள்கோடலாக இருக்கவில்லை என்பது, நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்ததொரு குறையாகும். 1990ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காகச் சர்வதேச நிபுணர்களின் சந்திப்பை நடத்தியிருந்தது.   

அந்தச் சந்திப்பின் அறிக்கையானது, ‘மக்கள்’ என்ற பதத்தைப் பின்வருமாறு வரையறுத்தது. ‘மக்கள் எனப்படுவோர், பின்வரும் பொதுவான அம்சங்கள் சிலவற்றை, எல்லாவற்றையும் அனுபவிக்கும் தனிப்பட்ட மனிதர்களைக் கொண்ட குழு ஆகும்.  

(அ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம்.  

(ஆ) இனம் (race or ethnicity) என்றதோர் அடையாளத்தைக் கொண்டிருத்தல்.  

(இ) கலாசார ஒருமைத் தன்மை.  

(ஈ) மொழி ஒற்றுமை.  

(உ) மதம், கருத்தியல் இணைப்பு.  

(ஊ) ஆட்புல இணைப்பு.  

(எ) பொதுவான பொருளாதார வாழ்க்கை.  

மற்றும், குறித்த குழுவானது, ஒரு குறித்த எண்ணிக்கையைக் கொண்டதாக அமைய வேண்டும். எனினும், அவ்வெண்ணிக்கை பெரியதாக இருக்கத் தேவையில்லை. ஆயினும், இது ஒரு மாநிலத்துக்கு உள்ளான தனிநபர்களின் ஒன்றியத்தை விடப் பெரியதாக இருக்க வேண்டும்; குறித்த குழுவுக்குத் தாம், ஒரு மக்கள் என்று, அடையாளப்படுத்தும் விருப்பு இருக்க வேண்டும்; அல்லது, தாம் ஒரு மக்கள் என்ற பிரக்ஞை இருக்க வேண்டும்.  

மற்றும், குறித்த குழுவானது, அதன் பொதுவான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்கான, தமது அடையாளத்தை, வௌிப்படுத்தவதற்கான நிறுவனங்களை, வேறு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும்.  

 அதாவது, மேற்குறிப்பிட்ட பட்டியிலுள்ள அம்சங்களில் சிலவற்றையேனும் கொண்டிருக்கும் தனிமனிதர்களின் குழுவானது, அந்தக் குழு சாதாரண ஒரு சங்கத்தைவிட, அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதுடன், அந்த மனிதர்களின் குழு, தம்மைத் தனித்ததொரு மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பையும் அந்த அடையாளம் தொடர்பான பிரக்ஞையையும் கொண்டிருப்பதுடன், அதற்கான நிறுவனங்கள், அதனை வௌிப்படுத்துவதற்கான வேறு வழிமுறைகளைக் கொண்டிருந்தால், அந்தத் தனிமனிதர்களின் குழு, தனித்ததொரு ‘மக்கள்’ என்று கருதப்படும்.   

ஆகவே, அத்தகையதொரு தனிமனிதர்களின் குழு, ‘மக்கள்’ என்று அமையும் போது, சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தின்படி, சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.   

 யுனெஸ்கோவின் மேற்குறித்த மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காக, சர்வதேச நிபுணர்களின் சந்திப்பில் உதித்த வரைவிலக்கணத்தின்படி, சட்டரீதியாகப் பார்த்தால், ஒரு சிறுபான்மை இனம், ஒரு தனித்த மக்கள் கூட்டமாக ஆக முடியாததற்கான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என, தன்னுடைய ‘சிறுபான்மைக் குழுக்கள், தன்னாட்சி, சுயநிர்ணயம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் ஜேன் றைட் கருத்துரைக்கிறார்.   

 ஆயினும், சிறுபான்மைக் குழுவொன்றைத் தனித்ததொரு மக்களாக மேற்குறித்த வகையில் அங்கிகரிப்பதில் சுதந்திரம், இறைமையுள்ள பல்வேறு அரசாங்கங்களும் காட்டும் தயக்கத்துக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை.  

சுயநிர்ணய உரிமையானது அதன் வௌியக அடிப்படையில், அதாவது, அரசொன்றிலிருந்து பிரிந்து, தனியரசொன்றை ஸ்தாபித்தல் பிரிவினை எனக் கருதப்படும் போது, இறைமையுள்ளதொரு சுதந்திர அரசின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசியல் ஒற்றுமையையும் சிதைத்து, பிரிவினைக்கு வழிவகுக்குமொன்றாக கருதப்படுவதால்தான், சிறுபான்மை இனங்களைத் தனித்த மக்களாக அங்கிகரிப்பதற்கு அரசுகள் பின்நிற்கின்றன.   

 ‘மக்கள்’ என்பதற்கான மேற்குறித்த பதத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களை அணுகினால், அந்தப் பட்டியலிலுள்ள பல அம்சங்களை, ‘இலங்கைத் தமிழர்கள்’ திருப்தி செய்வதை அவதானிக்கலாம்.   

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கைத் தமிழர்கள்’ தம்மைத் தனித்துவமான மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பத்தைக் கொண்டிருப்பதுடன், அந்தப் பிரக்ஞை அவர்களிடம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது.   

அவ்வகையில் பார்க்கும் போது, ‘இலங்கைத் தமிழர்கள்’ என்பவர்கள், தனித்ததொரு மக்கள் கூட்டமாகிறார்கள்; ஆகவே அவர்கள், சுயநிர்ணய உரிமையுடையவர்கள் ஆகிறார்கள்.   

ஆனால், இதை அங்கிகரிப்பதற்கு, இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்களோ, இலங்கை அரசாங்கமோ, தயாராக இல்லாததற்கு வௌியகச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான பிரிவினை அச்சம் பிரதான காரணமாகும். இதனால்தான், கருத்தியல் ரீதியாகக் கூட, தமிழர்களை, இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை இனம் என்றே ஏற்றுக்கொள்கிறார்களே அன்றி, அவர்களைத் தனித்ததொரு மக்களாகவோ, தேசமாகவோ அங்கிகரிப்பதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை.   

மறுபுறத்தில், ‘இலங்கைத் தமிழர்கள்’ தனித்த மக்களே அல்ல என்பதற்கான வாதங்களையும் சிலர் முன்வைக்கிறார்கள். அந்த வாதத்தில் மேவி நிற்கும் பொருள் தவறென்றாலும், அதில் அவர்கள் மேற்கோள் காட்டும் தரவுகள் சில உண்மையானவை என்பதையும் மறுக்க முடியாது.   

உதாரணமாக, இன்று ‘இலங்கைத் தமிழர்கள்’ என்ற வரைவிலக்கணம், பெருமளவுக்கு வடக்கு, கிழக்கு என்ற இரு மாகாணங்களையும் தாயகமாகக் கொண்ட தமிழர்களைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று இன்று கருதப்படுவோர், வேறுபட்ட பிராந்தியங்களில், வேறுபட்ட சமூகக் கட்டமைப்பையும் சமூக வழமைகளையும் கொண்டிருந்தனர் என்பது தௌிவாகும்.  

‘இலங்கைத் தமிழர்களின் தேச வழமைகள், சமூக வழமைகள்” பற்றிய தன்னுடைய ஆய்வில், தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன், யாழ்ப்பாணத் தமிழர்கள், புத்தளம்-கற்பிட்டித் தமிழர்கள், திருகோணமலைத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள் ஆகியோர் வேறுபட்ட தேசவழமைகளைக் கொண்டிருந்தமையைக் கோடிட்டுக் காட்டுகிறார். அவற்றிடையேயான ஒற்றுமைகள் சிலவற்றை அடையாளம் காணக் கூடியதாக இருப்பினும், இன்றைய, இலங்கைத் தமிழர்கள் என்போர், வரலாற்றுக் காலத்திலும் இதே ஒருமைத் தன்மையான அடையாளப் பிரக்ஞையைக் கொண்டிருக்கவில்லை என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.   
ஆனால், இன்றைய சூழலில், ‘இலங்கைத் தமிழர்கள்’ ஒரு மக்கள் கூட்டமல்ல என்று நிறுவுவதற்கு, மேற்குறித்த நியாயம் பொருத்தமானதல்ல. ஏனெனில், ஏறத்தாழ கடந்த ஆறரை தசாப்த காலமாக, இலங்கைத் தமிழர்கள் தாம் ஒரு தனித்த மக்கள் கூட்டம், தனித்த தேசம் என்பதைத் தொடர்ந்து தேர்தல்களில், தாம் ஏகோபித்து வழங்கிய மக்களாணை மூலம் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.   

 ஆகவே, தம்மை மிகத் தௌிவாகத் தனித்ததொரு மக்கள் கூட்டமாக உணர்கின்ற, அந்தப் பிரக்ஞையோடு, தொடர்ந்து இயங்குகின்ற, அதற்கான சமூக, அரசியல் நிறுவனங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ள, மொழி, இன ரீதியாக இணைந்துள்ள, கருத்தியல் ரீதியான ஒருமைப்பாடுடைய, தமக்கான ஆட்புல எல்லைகளைத் தௌிவாக வரையறுத்துள்ள, பொதுவான பொருளாதார வாழ்க்கையைக் கொண்ட, ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஒரு தனித்த மக்கள் கூட்டத்தை, மக்கள் கூட்டம் இல்லை என்று, வெறுமனே சில வரலாற்று வாதங்களை முன்வைத்து மட்டும் நிராகரித்துவிட முடியாது.  

 மேலும், இலங்கைத் தமிழர்களை ஒரு மக்கள் கூட்டமாக நிறுவுவதில் உள்ள அதேவரலாற்று ரீதியான தடைகள், சிங்களவர்களை ஒரு மக்கள் கூட்டமாக நிறுவுவதிலும் இருப்பதை அவதானிக்கலாம்.   

இன்றுள்ள, ‘சிங்கள பௌத்த அடையாளப் பிரக்ஞையானது, முன்பு மிக விரிவாகப் பார்த்ததன்படி, அநகாரிக தர்மபாலவுக்குப் பின்னரான, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், உருவாகியதோர் அடையாளமாகும்.   
 அதற்கு முன்னர் அவ்வாறானதொரு பிரக்ஞை இருக்கவில்லை. ஆனால், இலங்கை என்ற நவீன தேசிய அரசு கட்டமைப்புக்குள் ‘சிங்கள பௌத்தர்கள்’ பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால், தம்மைத் தனி மக்களாக நிறுவ வேண்டிய தேவை அவர்களுக்கு எழவில்லை.   

மாறாகத் தாராளவாத ஜனநாயக முகமூடிக்குள், ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற ‘தேசிய அரசு’ என்ற அடிப்படைகளுக்குள் ஒளிந்துகொண்டே, தம்முடைய பெரும்பான்மை எண்ணிக்கைப் பலத்தால் தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களால் முடிகிறது.   

அதாவது, வௌிப்பார்வைக்கு தாராளவாத ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தம்முடைய ‘இனமத’ பெரும்பான்மைத் தேசியவாதத்தை, அந்த முகமூடிக்குள் முன்னெடுக்கிறது.   

இங்கு சிறுபான்மை இனங்கள், அந்தப் பெரும்பான்மை ‘இனமத’ தேசியத்தை எதிர்த்துத் தம்முடைய தேசியத்தை முன்னெடுக்கும் போது, தாராளவாத ஜனநாயக விழுமியங்களைப் பெரும்பான்மை, ‘இனம், மதம், தேசம் என்பவற்றைக் கையிலெடுத்துக் கொண்டு, சிறுபான்மையினரை இனவாதிகளாகச் சித்திரிக்கிறது. இது இலங்கையின் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலும் காணப்படும் ஒரு நிலையாகும்.   

இத்தகைய அரசுகள், சிறுபான்மையினரின் சுயநிர்யண உரிமையைப் பிரிவினைக்கான முதற்படியாகப் பார்க்கின்றன. ஆகவே, தமது ஆட்புலம், அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, அதைக் கடுமையாக எதிர்க்கின்றன.   

சுயநிர்ணய உரிமை என்பது, பிரிவினைக்கான வடிகால் என்பது சுயநிர்ணய உரிமை தொடர்பிலான பிழையானதொரு புரிதலாகும். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், 20ஆம் நூற்றாண்டில் பல புதிய அரசுகள் தோன்றியிருக்கின்றன. ஆனால், அதன் காரணமாக மட்டும், சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைக்கானதோர் அடிப்படையாகக் கருதிவிட முடியாது.   

அப்படியானால், இதற்கான தீர்வுதான் என்ன? நாம் முன்னர் பார்த்தது போலவே, உள்ளக சுயநிர்ணயம் என்பது, இந்தப் பிரிவினை அச்சத்தை இல்லாது செய்யும் ஒன்றாக அமைகிறது.   

அதாவது, சுயநிர்ணய உரிமையுள்ள மக்கள், சாதாரண நிலைகளின் கீழ் பிரிந்து செல்லும் உரிமை அன்றி, தமது அரசியல், பொருளாதார ஆட்சிக்கிரமத்தை உண்மையாகவும் சுதந்திரமாகவும் தீர்மானிப்பதற்கான உரிமையே உள்ளக சுயநிர்ணய உரிமையாகக் கருதப்படுகிறது.   

அப்படியானால், இலங்கையில் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை, அங்கிகரிக்கப்பட்டிருக்கிறதா?  

 (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .