2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜெரா

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது?

யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் கொண்டிருப்பதால்தான் என்னவோ, இந்த மாதிரியான கிராமங்களுக்கு, அதிகளவில் ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. நெடுங்கேணிச் சந்தியில் இருந்து ஓட்டோவில் புறப்பட்டால், 1000 ரூபாய்க்குக் குறையாத தொகையும், காலை - மாலை என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பஸ்ஸில் பயணித்தால் 90 ரூபாய்க்குக் குறையாத தொகையும் அறவிடப்படுகின்றது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் புனரமைக்கப்படாத பாழ் வீதியில் வாகனம் செலுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்லவே. எனவே இந்தப் பெருந்தொகை அறவீட்டிலிருக்கும் நியாயத்தையும் ஏற்கவேண்டும். விடுதலைப் புலிகள் காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகளைத் தான், மக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது மாகாண சபையும் தொண்டு நிறுவனங்களும் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்தபோதும், திருத்த வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றன. காரணம் கேட்டால், இந்த வீதியைத் திருத்துமளவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என, நிர்மாணதாரர்கள் இடைநடுவே விட்டு விலகிவிட்டனர் என்கின்றனர், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள்.

மருதோடை! இங்கு எப்போதிலிருந்து தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் எவையும் தேடிப்பெறுவதற்கில்லை. ஆலய வரலாறாகப் பாதுகாக்கப்பட்டவையும், போர்களில் அழிந்துவிட்டன. ஆனால், வவுனியா மாவட்டத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இந்தக் கிராமத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும், வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் பிரபலமான பரிகாரி மரபொன்று இங்கிருந்ததென்பதும், விசாரித்து அறியக்கூடிய வரலாறாக இருக்கின்றது. 1980ஆம் ஆண்டுகளில் இந்தக் கிராமத்துக்கு அருகில் உருவாக்கப்பட்ட டொலர் பாம், ஹென்பாம், சிலோன் தியேட்டர், தனிக்கல்லு முதலான பெரும் பண்ணைகள், பொருளாதார வலுவையும் விவசாயச் செழிப்பையும் மேலோங்கச் செய்திருக்கின்றன. பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட வயல் விதைப்பும் கால்நடை வளர்ப்பும், இந்தக் கிராமத்தை வளப்படுத்தியிருக்கின்றன.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் (1983) ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதவியா என்ற பெரும்பான்மையினத்தவருக்கான குடியேற்றத்தின் விளைவாக, வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றின் எல்லைக் கிராமங்கள் வரைக்கும் வன்முறைகள் இடம்பெற்றன; படுகொலை இடம்பெற்றன. ஒதியமலை படுகொலைகளை, அவ்வளவு இலகுவில் தமிழர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த மாதிரியான கொலைகளுக்குப் பின்னர், இராணுவத்தினருக்கும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர் நிலைமைகள் காரணமாக, இப்பகுதிகளை விட்டு நிரந்தரமாகவே மக்கள் வெளியேறினர். இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டில் போர் முடிவுக்கு வரும் வரைக்கும், இந்தப் பகுதிகள் சூனியப் பிரதேசமாகவே இருந்தன. இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டிலேயே மக்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பினர். மருதோடைக்கும் இதேநிலைதான். இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டில், இக்கிராமத்தின் பூர்வீகக் குடிகள் மீளக்குடியேறியிருந்தாலும், இடம்பெயர்வதற்கு முன்பிருந்த அத்தனை குடிகளும் மீளத்திரும்பவில்லை. போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், இந்தியாவுக்குச் சென்றவர்கள், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள் போக, எஞ்சிய மிகச் சொற்பமான குடும்பங்களே ஊர் திரும்பின.

அவ்வாறு ஊர் திரும்பியவர்கள், மருதோடை கிராமத்தின் முன்பகுதிக்குரியவர்களாக இருந்தனர். தங்கள் காணிகளைத் திருத்தி, வீட்டுத்திட்டங்களைப் பெற்று, விவசாயத்தில் செழிப்பும் பெற்றுவிட்டனர். இப்போது பிரச்சினை யாருக்கெனில், இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளுக்குத்தான். இவர்கள், மருதோடையின் நாவலடி பகுதியைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பியிருக்கின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து இந்தியாவிலிருந்தும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மருதோடை நாவலடிக்கு மக்கள் மீளத் திரும்பத் தொடங்கினர். இதுவரைக்கும் 37 வரையான குடும்பங்கள், தங்கள் ஊருக்கு வந்திருக்கின்றன.

இவ்வாறு வந்திருப்பவர்களில் அநேகம் பேரிடம், தங்கள் காணிகள் தொடர்பான ஆவணங்கள் எவையும் இல்லை. போரிலும், இடப்பெயர்விலும் அனைத்தும் தவறவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் இடம்பெயர்ந்து போகும்போது குழந்தையாகச் சென்றவர்கள், இப்போது குடும்பமாகி, அவர்களுக்கு நான்கு குழந்தைகளுடன் வந்துநிற்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான், திருமதி வேலாயுதம். இந்தியாவிலிருந்து, மருதோடை திரும்பியிருக்கிறார்.

“நாங்க, 83ஆம் வருசத்தில திடீர்னு புறப்பட்டோம். எல்லாப் பக்கமும் வெடிச் சத்தம். அம்மா, அப்பாவோட சகோதரங்கள் எல்லாரும் ஓடினோம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக் பாம், அப்பிடியே மன்னார் வழியா இராமேஸ்வரம் போயிட்டம். அங்க இருந்து 35 வருசத்துக்கு அப்புறமா ஊர் திரும்பியிருக்கோம். அம்மா, அப்பா, ஒரு சகோதரினு எல்லாரும் அங்கயே மோசம் போய்ட்டாங்க. இன்னும் ரெண்டு சகோதரிகள், அங்க முகாம்லயே இருக்காங்க. நான் மட்டும் என் குடும்பத்தோட வந்திருக்கேன்...” என்றார், திருமதி வேலாயுதம்.

இங்கு உங்கள் ஊர் நிலைமைகள் எப்படியுள்ளன என்ற கேள்விக்காக குறுக்கிட்டோம். அதற்கு அவர், “எதிர்பார்த்து வந்தமாதிரி ஏதுமில்ல. காணியைக் கண்டுபிடிக்கிறதே சிரமமாயிருக்கு. நட்டிருந்த மரம், கிணறு, மலசலகூடம் இதுகள வச்சி அடையாளம் கண்டோம். ஆனால் அதுக்குக் கூட, இப்ப தடைபோட்டிருக்காங்க” என்றார்.

சடசடவென அடித்து வந்த மழை, பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. பிரதேச செயலகம் அமைத்துக் கொடுத்திருக்கும் மிகச் சிறியளவிலான கொட்டகைக்குள், நாலா பக்கமும் சாரல் அடிக்கிறது. நிலத்தில் பெருங்குற்றிகளைப் போட்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். சமையலிலிருந்து, மழை நீரின் குளிரைப் போக்குவது வரைக்குமான அனைத்துக் காரியங்களுக்கும், அந்த அடுப்புப் பயன்படுத்தப்படுகின்றது. மழைக்கு அந்தத் தற்காலிக கொட்டகைக்குள் ஒதுங்கியிருக்கும்போது ரவீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதைக்கத் தொடங்கினார். அவருக்கு வயது 70ஐத் தாண்டுகிறது. அந்தக் கிராமத்தின் மூத்த குடிமகன்.

“நான் தான் சின்ன வயசிலயே, இந்தக் காட்டை வெட்டிக் காணியாக்கினன். உறுதி கூட தந்திருந்தாங்க. எல்லாமே கைவிட்டுப்போச்சி. இப்ப வந்து காணியத் துப்பரவாக்கினா, வன வள பாதுகாப்புத் திணைக்களம் விடுறாங்க இல்ல. இதெல்லாம் பாதுகாக்கப்பட்ட காடாம். 30 வருசத்துக்கு முதல், நாங்க பூர்வீகமா இருந்து விவசாயம் செய்த காணிகள் இது. பாருங்க, கிணறுகள் கூட இடிஞ்சி போய் அப்படியே இருக்கு. மலசலகூடங்கள் இருக்கு. இதெல்லாம் காட்டுக்குள்ள எப்படி வரும்? நாங்க நட்ட மரங்கள் கூட, காடாகி அப்பிடியே நிற்குது. நாங்கள் இந்தியாவில் இருக்கும்போது வரச்சொன்னாங்க. இங்க வந்ததும், சொந்தக் காணிக்க கூட விடுறாங்க இல்ல. இரவில் பிள்ளைகளோட, நிம்மதியா நித்திரை கொள்ளக்கூட முடியுதில்ல. காடுதானே; ஒரே பாம்பு. இன்றைக்குக் கூட ரெண்டு பாம்பு அடிச்சிட்டம்” என அவர் சொல்லும் சமநேரத்தில் திருமதி வேலாயுதம்,  “இந்த இலட்சணத்தில, எப்பிடி எங்க சகோதரங்கள இங்க வரச்சொல்லி கூப்பிடுறது?” என்று கேள்வியெழுப்புகிறார்.

அவரின் நியாயமான கேள்விக்குத் தற்போதைக்கு பதிலில்லைத்தான். அரசாங்கத்திடம் கூட நியாயமான பதிலில்லை. இந்த விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துவெளியிட்ட அப்போதைய கூட்டு எதிரணியின் ஊடகப் பேச்சாளர், “450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாசிகள், வவுனியா வடக்கில் மருதோடை எனும் கிராமத்தில் குடியேறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமான செயல்” எனக் குறிப்பிட்டார். போர் நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீளவும் அதே இடத்துக்கு மீளத் திரும்புவது, எவ்வகையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் குடியேற்றமாக மாறும் என, அவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதே கருத்தோடிருந்த தரப்பினரின் கைக்கு, தற்போது அதிகாரமும் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி என்ன நடக்குமோ என்ற பயம், அங்கு மீள்குடியேறியிருப்பவர்களிடம் அதிகமாகவே அவதானிக்க முடிந்தது.

அடர்ந்த காட்டுக்கு நடுவில் பாதுகாப்பற்ற கொட்டில்கள், சரியான சுகாதார, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட மீள்குடியேற்ற கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்படாத மீள்குடியேற்றம் என, இக்கிராம மக்களின் அவலம் இன்னமும் நீடிக்கிறது.

ஆனால், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புதிதாகக் குடியேறியவர்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கின்றனர். உணவுப் பொருட்கள், குடிநீர் வசதி, தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்திருக்கின்றனர்.

மக்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், ஒருவரும் சில விடயங்களைக் குறிப்பிட்டார்.

“இந்தக் கிராமத்துக்கு மீள்குடியேற்றம் செய்திருக்கும் மக்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, சில தொண்டு நிறுவனங்கள் மிகச் சொற்பமான உதவிகளையே செய்திருக்கு. அவையும் தங்களால இயன்றதைத்தான் செய்யமுடியும்? பக்கத்து ஊர் மக்கள் உணவுப் பொருள், குடிநீர் உதவிகளச் செய்யினம். பலம்பொருந்திய அரச திணைக்களமான வன வளத் திணைக்களம், இந்த மக்கள குடியேறவோ, தங்கட காணிகளத் துப்பரவாக்கவோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கு. இப்பிடியொரு தடை இருக்கிறபடியால், மற்றைய அரச திணைக்களங்களாலயும் முழுதாக உதவிகள வழங்க முடியாமல் இருக்கு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில, எல்லாம் குடியேறின மக்களுக்கு உடனடியாகச் சகல வசதிகளும் செய்து குடுக்க வேணும் என்று முடிவெடுக்கப்பட்டதுதான். ஆனால், இங்க எதுக்கும் வன வளத் திணைக்களம் அனுமதிக்கேல்ல. ஆனா, இதே கிராமத்தின்ர மறுபக்கம் பாருங்கோ, 300க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள, உண்மையாகவே காடுகளா இருந்த பகுதிய அழிச்சுக் குடியேற்றி இருக்கினம். ஊஞ்சால்கட்டி, கொக்காச்சாங்குளம், முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டிருந்த கிராமம். இப்பவும் தமிழாக்கள் வயல் செய்யினம். அந்தக் கிராமங்கள அடாத்தப் பிடிச்சு, காடுகள அழிச்சு, சிங்கள மக்களக் குடியேற்றியிருக்கினம். இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கு. அதுவும் காடுகள அழிச்சு நடந்ததுதான். அதுக்கெல்லாம் எந்தத் தடையும் இல்ல. ஆனால் தமிழ்ச் சனம் சொந்த ஊருக்கு திரும்புறதுக்குத்தான் தடை” எனக் கொந்தளித்த பிரதேச சபை உறுப்பினரின் பேச்சில், உண்மையும் உண்டு. அவர் அந்தப் பகுதியையே சேர்ந்தவராக இருந்தபடியால், கிராமம் பறிபோகின்ற கவலையையும், நமக்கு வெளிப்படுத்தினார்.

இந்த விடயம் பற்றி வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டபோது, “இந்தக் காடுகள் பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டு, எட்டு வருடங்கள் ஆகின்றன. இரண்டாயிரத்துப் பத்தாம் (2010) ஆண்டு, வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எமது கடமை, அரச சட்டங்களைப் பாதுகாப்பது. எனவே அதை மீறி யாரும் செயற்பட அனுமதிக்கமாட்டோம். வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் எதிர்க்கின்றனர்”என்றார் பொறுப்பாக.

இந்தியாவிலிருந்து தம் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளைக் கொண்டிருக்கும் மருதோடை - நாவலடியின் கதை இது. எல்லைக் கிராமத்தின் கதை இது. ஊர் திரும்பியும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற அகதி வாழ்க்கையைத் தொடரும் அந்த மக்களை, தற்போது பெய்துவரும் கனமழையும் வெகுவாக வாட்டுகின்றது. ஆனாலும் அந்த மக்கள், சொந்த நிலத்தை மீட்பதற்காக எல்லாத் துயரங்களையும் தடைகளையும் தாங்கி, அங்கேயே தங்கியிருக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .