2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 26 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில் 

“சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம் இனவாத சிந்தனைகளால் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வார்த்தைகள் பெரும் சாட்சி. சோறும் புட்டும் வடையும் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்த உணவுகள். ஒவ்வொரு சமூகத்துக்குமான பாரம்பரிய அடையாளங்களில், அவர்களின் உணவுக்கும் பங்குண்டு. அது, தலைமுறைகளாக அந்தச் சமூகங்களுக்குள் கடத்தப்பட்டு வருவதுண்டு. 

ஒரு தரப்பின் உணவுப் பழக்க வழக்கங்கள்தான் உயர்வானது; மற்றவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கீழானது என்கிற சிந்தனை, மனிதன் சமூகக் கூட்டங்களாக வாழ ஆரம்பித்தது முதல் இருந்து வருகின்றது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பிராந்தியத்தின் தட்ப வெப்பம், வளம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கத்தைக் கொண்டிருக்கும். உலகம் பூராவும் இதுதான் நிலைமை. 

இன்றைக்கு உலகம் கணினிகளுக்குள்ளும் அலைபேசிகளுக்குள்ளும் சுருங்கிவிட்டாலும், எந்தப் பிராந்தியத்தின் உணவை எங்கு வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்கிற போதும், ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பாரம்பரிய உணவில் தங்கியிருக்கவே செய்யும். அது அவர்களுடைய அடையாளங்களைத் தக்க வைக்கும் போக்கிலானவை.

ஒவ்வொருவருக்குமான தனி அடையாளம் என்பதுதான், அரசியலின் அடிப்படை. அப்படிப்பட்ட நிலையில், ஒரு சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலை என்பது, ஆதிக்க போக்கிலானதுதான். அத்தோடு, பீட்சாவை உயர்வாகக் குறிப்பிடுவது என்பது, கொலனித்துவ அடிமை மனநிலையாகும். ஆதிக்க மனநிலையும் அடிமை மனநிலையும் ஒருங்கே இருக்கும் சீழ் பிடித்த மனநிலையை, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி வெளிப்படுத்தி இருக்கிறார்.ஒரு சமூகத்தின் பாரம்பரிய அடையாளத்தையும் அதுசார் அரசியல் உரிமைகளையும் நிராகரித்துக் கொண்டு, எந்தவோர் உயர்வான தன்மைகளையும் யாரும் தீர்வாக முன்வைக்க முடியாது. சோறு, புட்டு சம்பந்தமான எகத்தாளத் தொனி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடி மாண்டவர்களுக்கான நினைவேந்தலை, நிராகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதே தெரியவில்லை. புட்டுத் தேவையில்லை; உயர்வான பீட்சா போதுமானது என்கிறார்கள். இதை ராஜபக்ஷர்களும் அடிக்கடி கூறி வருவார்கள். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினையே விடுதலைப் புலிகள்தான் என்கிற அளவுக்குள் விடயத்தைச் சுருக்கி வந்திருக்கிறார்கள். 

எப்போதுமே உண்மை இதுவல்ல; பௌத்த, சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக, சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் போக்கிலேயே, தமிழர் அரசியல் போராட்டம் முளைத்தது. அதை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பு வழிநடத்தி இருக்கின்றது. வழிநடத்திய தரப்பை அழித்துவிட்டாலோ அகற்றிவிட்டாலோ தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லையென்றோ, பௌத்த சிங்கள பேரினவாதம் ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்களை நீட்டவில்லை என்றோ கருத முடியாது. 

1966ஆம் ஆண்டு டட்லி அரசாங்கத்துக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரச கரும மொழியாக தமிழ் மொழியை முன்மொழியும் சட்டமூலத்தை டட்லி அரசாங்கம் கொண்டு வந்தது. அதற்கு எதிராக, சுதந்திரக் கட்சியும் அதன் இணக்க சக்திகளாகச் செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகளும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. அப்போதும் தமிழ் மக்களுக்கு எதிராக, ‘மசாலா வடை’ அடையாளத்தை முன்னிறுத்தி, இனவாதத்தைக் கக்கினார்கள். டட்லி அரசாங்கம் செல்வாவிடம் சரணடைந்து விட்டதாகக் காட்டுவதற்காக ‘’டட்லியின் வயிற்றுக்குள் மசாலா வடை’’ என்றார்கள். 

சோறு, புட்டு என்பவற்றுக்கு எதிரான எகத்தாளத் தொனிக்கு எதிராக, இம்முறை தமிழ்த் தரப்பு காத்திரமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றது. சமூக ஊடகங்கள் தொடங்கி, நாடாளுமன்றம் வரையில் புட்டின் பெருமை பற்றியெல்லாம் பேசினார்கள். புட்டோடு என்ன வகையான கறிகளும் பழங்களும் சேர்த்து உண்ண வேண்டும் என்கிற பெரிய பொழிப்புரையையே எழுதினார்கள். 

இதனை ஒரு கட்டத்தில், தங்களின் வர்த்தக விளம்பர நோக்கில், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கையாண்டதையும் கண்டோம். ஒடுக்கப்பட்டு வருகின்ற இனமொன்று, தன்னுடைய பாரம்பரிய அடையாளங்களின் வழிதான், தன்னுடைய அரசியலைத் தக்க வைத்துக் கொள்கிறது. பாரம்பரிய அடையாளங்கள் என்பது, சமய நம்பிக்கை, உணவுப் பழக்க வழக்கம், ஆடை, அணிகலன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

தமிழ் மக்கள் தாயகத்தில் இருந்தாலும், புலம்பெயர்ந்து சென்றாலும் தங்களுடைய அடையாளங்களைக் கொண்டு சுமந்து வந்திருக்கிறார்கள். அதுவும் புட்டையும் இடியப்பத்தையும் பாற்சொதியையும் பனிக்குளிர் தேசங்களிலும், பிரதான உணவாகக் கட்டிக் காத்து வருகிறார்கள். 

தங்களின் அடுத்த தலைமுறையின் நாக்கிலும், இந்த உணவுகளின் சுவையைப் பதிய வைக்கிறார்கள். கறிகளின் காரத்தின் (உறைப்பின்) அளவில் வேண்டுமானால் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், கறியும் அது தரும் சுவையும் பெருமளவு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களிடம், ஒரே மாதிரியாகப் பேணப்படுகின்றது. அதுதான், காலங்களும் சூழலும் தாண்டி, அடையாளங்களைக் கொண்டு சுமப்பதாகும். 

ராஜபக்ஷர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்கிறார்கள். அவர்களின் முன்னால், மனித உரிமைகளுக்கும் நீதி நியாயங்களுக்கும் இடமில்லை. ராஜபக்ஷர்களின் நிலைப்பாடுகளே, ‘ஒற்றை நீதி’ என்றாகிவிட்ட நாட்டில், மாவீரர் நினைவேந்தலைப் பொதுவெளியில் முன்னெடுப்பது என்பது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. 

அதுவும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கும் போது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, அதையும் பிரயோகிக்கின்றார்கள்.  நீதிமன்றங்களின் ஊடாகத் தடையுத்தரவு பெறப்படுகின்றது. கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட நினைவேந்தலுக்கான வெளி, ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்படுகின்றது. 

அப்படியான நிலையில், மாவீரர் நினைவேந்தலை, எவ்வாறு பேணிப் பாதுகாத்து, முன்னேறுவது என்று, தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. பல தடவைகள் நெருப்பாற்றைக் கடந்து வந்த சமூகமாக, இப்போதுள்ள தடைகளையும் சவால்களையும் பெரும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். புலம்பெயர்ந்து சென்றாலும், எப்படி பாரம்பரிய அடையாளங்களைத் தமிழ் மக்கள் கொண்டு சுமக்கிறார்களோ, அப்படித்தான் பொது வெளியில் நினைவேந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும் வீடுகளுக்குள் நினைவேந்தலைப் பேண முடியும். 

அதாவது, ‘தமிழர் சுதந்திரமாக வாழ்வதற்காகப் பல்லாயிரம் இன்னுயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன; அந்த உயிர்கள், எமக்காக மாண்டிருக்கின்றன’ என்று நம்பும் ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும், உள்ளத்தில் அவர்களுக்காக நினைவேந்துவதும், அடுத்த தலைமுறையிடம் அவர்களின் தியாகத்தைக் கொண்டு சேர்ப்பதுமே இப்போதைய தேவையாகும். 

அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த இனமாக, தமிழ் மக்கள் அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறான நிலையில், வீடுகளிலும் உள்ளத்திலும் தீபமேற்றி, அஞ்சலித்து, நினைவேந்தல் தடைகளையும் தகர்த்தெறிய முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X