2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்

காரை துர்க்கா   / 2019 மே 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர்.  

அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன.  

அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். 

தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார்.  

இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம்.  

“எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம். 

“அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார். 

“யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம்.  

“அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார். 

“இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார்.  

இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார்.  

‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும்.  

இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா. 

“பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார். 

முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன.  

முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார்.  

எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம்.  

ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது. 

வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது.  

பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம்.  

கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. 
பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன.   

பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும்?  

போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன.   

ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு  உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன. 

தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது.  

தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம். 

இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும்.  

போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .