வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்

அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன.  

உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன.  

இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நிகழ்வுகளல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நிகழ்வுகள்.   

அம்பாறையில் தொடங்கப்பட்ட இனவாத வன்முறைகள், ஒரு கட்டத்தை மீறிச் செல்லவில்லை. எனினும், அந்த விடயத்தில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கரிசனைகள், முஸ்லிம் மக்களிடம் உள்ளன.  

ஆனால், கண்டியில் திகணவிலும் தெல்தெனியாவிலும் தொடங்கி கட்டுகஸ்தோட்டை, அக்குரணை வரை நீடிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிகத் திட்டமிடப்பட்ட ஒழுங்கில் நடந்தேறியிருக்கின்றன.  

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் உடல்களை, கொழும்பில் ஒரே இடத்தில் தகனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அந்தத் தகன நிகழ்வே, தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்துக்குக் காரணமாக அமைந்தது. அதை நினைவுபடுத்தும் வகையிலேயே, கண்டியில் நடந்த கலவரங்களும் அமைந்திருக்கின்றன.  

பெப்ரவரி 22ஆம் திகதி, நடந்த விபத்தில் காயமடைந்தவர், மார்ச் மாதம் மூன்றாம் திகதி மரணமடைகிறார். ஐந்தாம் திகதி அவரது இறுதிச்சடங்கு நடப்பதற்கு முன்னதாகத் தொடங்கிய வன்முறைகள், இறுதிச்சடங்குடன் இன்னும் தீவிரமடைந்தன.  

திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்றும், வெளியில் இருந்து வந்தவர்களே வன்முறைகளில் ஈடுபட்டனர் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தனர்.  ஏற்கெனவே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்த இடங்களில் எல்லாமே, இதுபோன்றுதான் கூறப்பட்டு வந்துள்ளது.   

எவ்வாறாயினும், இந்த வன்முறைகள், எல்லைமீறிச் செல்லும் வரை, அதைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும், சிங்கள, பௌத்த பேரினவாத வன்முறைகள் அடிப்படையில் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

சுதந்திரத்துக்குப் பின்னர், நீடித்து நிலைத்திருக்கும் இனவாதத்துடன் பிணைந்த, அரசியல்தான் அடிப்படையான காரணம். பௌத்த, சிங்கள பேரினவாதம், முன்னர் இதேபோன்றுதான், தமிழர்களைக் குறிவைத்துச் செயற்பட்டது. இப்போது அது, முஸ்லிம்களை இலக்கு வைக்கிறது.   அதற்காகத் தமிழர்கள் இப்போது இலக்கு வைக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை. அவர்கள், இரகசியமாக, வெளியே தெரியாத வகையில் குறிவைக்கப்படுகிறார்கள்.  

ஆனால், முஸ்லிம்களும் அவர்களின் சொத்துகளும், தொழில் முயற்சிகளும் இப்போது வெளிப்படையாகக் குறிவைக்கப்படுகின்றன. இந்தநிலையில், கண்டியில் நடந்து முடிந்த கலவரங்களுக்கு யார் காரணம், இதன்மூலம் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கு என்ன? 

அதிகரித்து வரும் முஸ்லிம்களின் சனத்தொகை, அவர்களின் வெற்றிகரமான வணிக முயற்சிகள் பற்றிய அச்சம்தான், இத்தகைய இனவாதத்துக்குக் காரணம் என்று சப்பையான நியாயங்களைக் கூறமுடியாது.  

அதற்கும் அப்பால், நாட்டை உறுதியற்ற நிலைக்குத் தள்ளுதல், அமைதியற்ற சூழலை உருவாக்குதல், அரசியல் இலாபங்களை அடைதல் என்பன, இந்த இனவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முக்கியமான காரணங்களாகும்.  

2015 இற்குப் பின்னர், சற்று உறக்க நிலையில் இருந்த சிங்கள, பௌத்த பேரினவாதம், உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணி வெற்றி பெற்றதும் தான் மீண்டும் உயிர்ப்படைந்திருக்கிறது.  

ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ, கைப்பற்றுவதற்காகவோ, தென்னிலங்கை அரசியல் சக்திகள், இனவாதத்தைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்கியதில்லை.   

கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, இதைத் தெளிவாகக் கூறியிருந்தார். நாட்டின், இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை வைத்து, அரசியல் நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.  இது தமிழர்கள் காலம்காலமாகப் பெற்று வந்த அனுபவம்தான். இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பெற முனைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இனவாதத் தீயை மறுதரப்பு கட்டவிழ்த்து விட்டு, காரியத்தைச் சாதித்துக் கொள்ளும். அதே பாரம்பரியம் இப்போதும் பின்பற்றப்படுகிறது.  

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற நிலையும், அதைச் சாதகமாக்கிக் கொண்டு, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளும் இந்த வன்முறைகளுக்குப் பிரதான காரணம் என்பதில் சந்தேகமில்லை.  

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் வெறுமனே, அவர்களின் சொத்துகளை அழிப்பது மாத்திரம் என்று யாரும் கருதி விட முடியாது. நாட்டில் உறுதியற்ற நிலை காணப்படுகின்ற சூழலில், இங்கு சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற கருத்தை உருவாக்குவதும், அரசாங்கத்துக்கான ஆதரவை மீளப்பெறும் நிர்ப்பந்தத்தை முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்படுத்துவதும், இந்தக் கலவரங்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம்.  

பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சிகளிலும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் தோல்விகள் காணப்பட்ட நிலையில்தான், இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. 

சட்டம், ஒழுங்கு அமைச்சு, பிரதமரின் கையில் இருந்த போதுதான், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில் இவை நிகழ்ந்தேறியிருக்கின்றன.  

இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு ஒழுங்கில்தான், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியவரும்.  

முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் கூட, இதேபோன்ற வன்முறைகள் அளுத்கம உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்றன. அப்போது போலவே, இப்போதும் பொதுபலசேனாவின் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.  

முன்னைய ஆட்சிக்காலத்தில், பொதுபலசேனாவின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால், வெறுப்படைந்த முஸ்லிம்கள், அதை 2015 ஜனாதிபதி தேர்தலின்போது வெளிப்படுத்தினார்கள்.  

இப்போதும் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு சூழல்தான் உருவாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள நிலையில், முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் மக்களும் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  

ஏனென்றால், இத்தகைய வன்முறைகளின் பின்னால் இருந்த சக்திகளின் எதிர்பார்ப்புகளும் அதுவாகத்தான் இருக்கும். 

அரசாங்கத்தைவிட்டு, முஸ்லிம்களை அந்நியப்படுத்துதல் அவர்களின் முதல் இலக்காக இருக்கலாம்.  
ஏனென்றால், முஸ்லிம்கள் எடுக்கக்கூடிய அத்தகையதொரு முடிவு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எதிரணியின் முயற்சிகளுக்கு வாய்ப்பாக மாறும். அதை எதிர்பார்த்துத்தான், இத்தகைய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கலாம்.  

அது நடந்துவிடாமல் போனாலும் கூட, தற்போதைய அரசாங்கம் உறுதியற்றது; மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை. என்ற குற்றச்சாட்டுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் என்பது, வன்முறைகளின் பின்னால் இருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.  

இந்த அரசாங்கத்தக்கு சர்வதேச அளவில் இருக்கின்ற ஆதரவை உடைத்து, உள்ளகப் பிரச்சினைகளையும் அதிகப்படுத்தும்போது, தானாகவே ஆட்சி வீழ்ந்து விடும். அதற்கான உள்ளடி வேலைகள் மிகத் தீவிரமாகவே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.  

ஆக, அம்பாறையிலும், கண்டியிலும் நடந்தேறிய கலவரங்கள், முஸ்லிம்களின் பார்வையில் தமக்கெதிரான வன்முறைகளாக, இனவாதமாகத் தெரிந்தாலும், அதற்கு அப்பால் உள்ள அரசியலை சாதாரணமாகக் கருதி விடமுடியாது.  

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும் இடையில் நடக்கின்ற உச்சக்கட்ட மோதல்களின் விளைவே இது. மஹிந்த ராஜபக்ஷவின் எதேச்சாதிகார ஆட்சியிலும், இது நடக்கிறது. மைத்திரி - ரணில் நல்லாட்சியிலும் இது நடக்கிறது.  

ஆக, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தீர்மானிப்பது, நாட்டில் நடக்கின்ற ஆட்சிமுறையல்ல என்பது உறுதியாகியிருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மோதும் அணிகளைப் பொறுத்த விடயமே அது.  

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, சிறுபான்மை இனங்களைப் பலிக்கடாவாக்கும் அரசியலும், சிங்கள, பௌத்த பேரினவாதமும், நீடிக்கும் வரை, இலங்கைத் தீவில் அமைதி திரும்பப் போவதில்லை. அதைத்தான் அம்பாறை, கண்டி வன்முறைகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன. 

  • Mohamed Irfan Friday, 09 March 2018 04:09 AM

    superb article..

    Reply : 0       0


வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.