விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது

சுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்கு வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.   

புதிய முறையில், முதன் முறையாகக் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் ஒரு மாதமாகியும் இன்னமும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி சபைகளை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது.   

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உரிய நேரத்தில் வர்த்தமானியில் வெளியிட, தேர்தல் ஆணைக்குழுவினால் முடியாமல் போனமையே இதற்குக் காரணமாகும்.   

உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட வேண்டியுள்ளதாலும், ஒவ்வொரு சபையிலும் உறுப்பினர்களில் 25 சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்ததாலுமே இந்த நிலை உருவாகியிருக்கிறது.  

வடக்கிலும் தெற்கிலும் பல சபைகள் கூடினாலும், பெரும் நிர்வாகப் பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளன. தேர்தல் மூலமாகச் சில கட்சிகள் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருக்கின்ற போதிலும், எதிர்க்கட்சி வரிசைகளில் அமரப்போகும் ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை, அதை விட அதிகமாக இருப்பதே அதற்குக் காரணமாகும்.   

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட வடக்கில் பல சபைகளில், ஆசன எண்ணிக்கையில் முதலிடத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.   

தேர்தல் நடைபெற்ற 340 சபைகளில் 170 சபைகளில் இந்தப் பிரச்சினை தோன்றியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது. 239 சபைகளில் முதலிடத்தைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தாம் முதலிடத்தைப் பெற்ற சபைகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட சபைகளில், தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் இருப்பதாகக் கூறுகின்றது. 

எனவே முதலித்துக்கு வந்துள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க, தமக்கு எதிராகப் போட்டியிட்ட ஏனைய சில கட்சிகளின் ஆதரவைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.   

விகிதாசாரப் படி ஆசனங்களைக் கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கும் போது இந்தப் பிரச்சினை உருவாகலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்ப்பார்த்தார் போலும்.   

எனவேதான் அவர், 1978 ஆம் ஆண்டு விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் போது, வெற்றி பெற்ற கட்சிக்கு போனஸ் ஆசனங்களை வழங்கி, அக்கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதனால் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் ஆசனங்களுக்கும் இடையிலான விகிதாசாரம் மாறுபடுகிறது தான். ஆனால், நிலையான சபைகளை உருவாக்க அது உதவுகிறது.  

அதேவேளை, ஒரு கட்சி குறைந்த பட்சம் இத்தனை வீதம் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற வெட்டுப்புள்ளி புதிய முறையில் இல்லை. இதனால் மிகச் சிறிய கட்சிகளும் ஓரீர் ஆசனங்களைப் பெற்றுள்ளன.   

இதுவும் தனிக் கட்சியொன்றுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமைக்கு காரணமாகிறது. போனஸ் முறையையும் வெட்டுப்புள்ளியையும் அறிமுகப்படுத்தி, சபைகளின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த ஜே.ஆர் எடுத்த நடவடிக்கை, சரியானது என்றே இப்போது தென்படுகிறது.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏதோ இந்தப் புதிய தேர்தல் முறையைத் தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியதைப் போல் அதைக் குறை கூறியிருந்தார்.   

இது தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறையொன்றல்ல. 2003 ஆம் ஆண்டிலிருந்து தெரிவுக்குழு ஒன்றினால் ஆராயப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.   

அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தேர்தல் முறைப்படி, தொகுதி வாரியாக 70 சதவீத உறுப்பினர்களும் விகிதாசார முறையில் 30 சதவீத உறுப்பினர்களும் (70:30) தெரிவு செய்யப்பட இருந்தனர்.   

தற்போதைய அரசாங்கம் அதை 60:40 என்ற சதவிகிதமாக மாற்றியது. அத்தோடு 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துக்காகவும் இந்த அரசாங்கம் சட்டத்தை மாற்றியது.   

இந்தத் தேர்தல் முறையையும் அதன் திருத்தங்களையும் சகல பிரதான கட்சிகளும் ஆதரித்தன என்பதே உண்மை. எந்தவொரு கட்சியும் தற்போதைய சிக்கல்களை முன்கூட்டியே காண தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே, எவரும் வேறு எவரையும் குறை கூற முடியாது.  

கலப்பு முறையின் பிரதான குறை, அதனால் சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுவதே. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொகுதி வாரியாக மட்டுமே, இவற்றுக்கான தேர்தல் நடைபெற்றது.  

 பின்னர், 1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்காக விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அப்போதும் ஏறத்தாழ தொகுதி வாரியாகத் தெரிவு செயய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையே பேணப்பட்டு வந்தது.   

கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, பழைய தொகுதிகளை மாற்ற எவரும் விரும்பவில்லை. எனவே தொகுதி வாரியாக, அதே எண்ணிக்கையில் உறுப்பினர்களை தெரிவு செய்துவிட்டு, விகிதாசார முறைப்படி மேலும் சிலரை நியமிக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாகவே உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது.   

விகிதாசார ரீதியாக நியமிக்கப்படும் உறுப்பினர்களின் சதவீதம் 30 இதிலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்ட போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. அதன் பிரகாரம் நாட்டில் இருக்கும் 341 உள்ளூராட்சி மன்றங்களிலும் மொத்தமாக 4,486 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரிக்கப்பட்டது.   

சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளே விகிதாசார ரீதியாக நியமிக்கப்படும் உறுப்பினர்களின் சதவிகிதத்தை முப்பதிலிருந்து நாற்பதாக அதிகரிக்க வேண்டும் என்றனர். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருந்த போதிலும், அவ்வாறு உறுப்பினர்கள் அதிகரிப்பால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமைக்கு அவர்களும் முக்கிய காரணமாகியுள்ளனர்.   

புதிய முறைப்படி தொகுதி அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த முறையில் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தெரிவாவர். பின்னர் ஒவ்வொரு கட்சியும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி சபையின் சகல தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப் படி அந்தந்தக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்று கணக்கிடப்படும்.   

விகிதாசாரப்படி ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் தொகுதி வாரியாக நடைபெற்ற தேர்தலில் கிடைக்காவிட்டால், குறைந்த ஆசனங்கள் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் மூலம் வழங்கப்படும். அதனால் தான் பழைய முறையை விடப் புதிய முறையில் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.   

விகிதாசாரப்படி ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்களை விட, அதிகமாகத் தொகுதி வாரியாக நடைபெற்ற தேர்தலில் ஆசனங்கள் கிடைத்தால், மேலதிகமாகக் கிடைத்த ஆசனங்கள் குறைக்கப்பட மாட்டாது. விகிதாசாரப்படி குறைவாக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளுக்கு முன்னர் கூறியதைப் போல் கிடைக்க வேண்டிய ஆசனங்களும் குறைக்கப்பட மாட்டாது. அதனால் உறுப்பினர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. இம்முறை இவ்வாறு 364 உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர்.   

புதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு சபையிலும் உறுப்பினர்களில் 25 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும். குறைந்தால் இரண்டாவது பட்டியல் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும் போது, ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்களை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு ஒவ்வொரு கட்சியும் அந்தந்த சபைக்கு நியமிக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும்.   

வெற்றி பெற்ற கட்சிகள் தொகுதி வாரி தேர்தல் மூலமாகவே அனேகமாக விகிதாசார ரீதியில் தமக்கு கிடைக்க வேண்டிய அல்லது அதைவிட ஆசனங்களைப் பெற்றுக் கொள்கின்றன.   

எனவே, இரண்டாவது பட்டியலைப் பாவிக்க அனேகமாக அக்கட்சிகளுக்கு அவசியம் ஏற்படாது. எனவே, அக் கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்கவும் அவசியம் ஏற்படாது. அக்கட்சிகளின் தொகுதி வாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பர். எனவே, 25 சதவீதத்தை அடையும் வரை, அக்கட்சிகளின் சார்பிலும் தோல்வியடைந்த கட்சிகளே பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.   

திக்வெல்ல பிரதேச சபையில், ஒரு கட்சிக்குத் தொகுதி வாரியாக ஆசனங்கள் கிடைக்கவில்லை. அக்கட்சிக்கு விகிதாசார முறைப் படி இரண்டாவது பட்டியல் மூலம் ஏழு உறுப்பினர்களை நியமித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அந்த ஏழு ஆசனங்களுக்கும் பெண் உறுப்பினர்களையே நியமிக்க வேண்டியுள்ளது.  

அங்கு வெற்றி பெற்ற கட்சிக்கு கூடுதலாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனேகமாக ஆண்களாகவே இருக்கின்றனர். தோல்வியடைந்த கட்சிக்கு குறைவாகவே உறுப்பினர்களை நியமிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுவும் பெண்களைத்தான் நியமிக்க வேண்டியுள்ளது.  

அதற்கென்ன என்று பெண்ணியம் பேசுவோர் கேட்கலாம். ஆனால், நாட்டில் எந்தவொரு கட்சியும் அவ்வாறு பெண்களை மட்டும் நியமிக்க விரும்புவதில்லை. இது அநீதியானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கூறியிருந்தார்.   

பெண் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திய எவரும், குறைந்தபட்சம் பெண்களாவது இந்த நிலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை. ஒரு கட்சி சட்டப்படி ஆண்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது அக் கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி என எவரும் கூறப் போவதில்லை. சமூகத்தில் பெண்களும் ஆண்களும் சமமானவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.  

ஒரு கட்சிக்குத் தொகுதி வாரியாகவோ அல்லது இரண்டாவது பட்டியல் மூலமாகவோ மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்குக் குறைவாகக் கிடைத்தால், அக்கட்சி பெண்களை நியமிக்கத் தேவையில்லை.  

 அது குறைவாக ஆசனங்களை வெல்லும் கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகையாகவே கருதப்படுகிறது. பெண்களை நியமிக்காதிருத்தல் சலுகை என்றால், அங்கும் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் என்றே சூசகமாகக் கூறப்படுகிறது.   

ஒரு சபையில் அவ்வாறான பல சிறிய கட்சிகள் இருந்தால், அக்கட்சிகள் பெண் உறுப்பினர்களை நியமிக்கப் போவதுமில்லை. வெற்றி பெற்ற கட்சிகள் மேலே விவரிக்கப்பட்டதைப்போல் இரண்டாவது பட்டியலைப் பாவிக்கப் போவதுமில்லை. அவ்வாறான சபைகளில் 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது. அங்கு சட்டம் மீறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணைக்குழுவால் அதைத் தடுக்க எதையும் செய்ய முடியாது. இம் முறை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இவ்வாறான ஏழு சபைகள் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது.   

முன்னர் நடைமுறையில் இருந்த தொகுதிவாரி மற்றும் விகிதாசாரத்தேர்தல் முறைகளில் இருந்த நல்ல அம்சங்களை ஒன்று சேர்த்து, சிறந்ததொரு தேர்தல் முறையை ஆக்குவதே புதிய கலப்புத் தேர்தல் முறையின் நோக்கமாகியது. ஆனால், சகலருமாகச் சேர்ந்து, பழைய முறைகளின் நல்ல அம்சங்களோடு, மோசமான அம்சங்களையும் சேர்த்துத்தான் புதிய முறையை வகுத்துள்ளனர்.   

தொகுதிவாரித் தேர்தல் மூலம் கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு விகிதாசாரமாக ஆசனங்கள் கிடைப்பதில்லை என்றார்கள். இப்போது அவ்வாறு ஆசனங்கள் கிடைக்கின்றன. ஆனால், விகிதாசாரப்படி சபைகளின் ஆட்சி கட்சிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன 231 சபைகளில் முதலிடத்தைப் பெறும் போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, வெறும் 37 சபைகளிலேயே முதலிடத்தைப் பெற்றள்ளது.  

விகிதாசார முறைப்படி தொகுதிக்கு ஓர் உறுப்பினர் இல்லை என்றார்கள். இப்போது அவ்வாறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், தொகுதிகள் இல்லாத உறுப்பினர்களும் புதிய முறைப்படி இருக்கிறார்கள். இறுதியில் ஜே. ஆர். ஜெயவர்தனவின் விகிதாசார முறையே சிறந்தது என்று கூற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. 

விருப்பு வாக்கு முறையே அவரது முறையில் இருந்த பெரும் பிரச்சினையாகும். மூன்று விருப்பு வாக்குக்குப் பதிலாக,  ஒரு விருப்பு வாக்கை அறிமுகப்படுத்தியிருந்தால் அந்தப் பிரச்சினையையும் வெகுவாக குறைத்துக் கொள்ள முடிந்திருக்கும்.   


விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.