2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம்

Editorial   / 2020 ஜனவரி 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விரான்ஸ்கி

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் தமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.   

அந்தப் புகைப்படம், ஈழத்து இணைய வெளிகளிலும் செய்தித் தளங்கள், ‘வட்ஸ் - அப்’ குழுமங்களிலும் ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு இணையான பரபரப்புடன் பலராலும் பகிரப்பட்டது.   

படத்தைப் பார்த்து, “இருபெரும் ஆளுமைகள்” என்று விக்னேஸ்வரனின் விசுவாசிகள் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். “ஆன்மீக அரசியல் பேசுகிறார்கள்” என்று, சில நக்கலான விமர்சனங்களை இன்னும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். “இருவருக்குமே அரசியல் சரிவராது” என்று, வேறுபலர் சொல்லிக் கொண்டார்கள்.  

இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், “ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்” என்று சொன்னார்.   

அந்தச் செய்தி, முதலில் வந்த அவர்களது படத்துக்கு இணையான ஏக பரபரப்புடன், மேலும் ஒரு கொசுறுச் செய்தியாக ஓடித்திரிந்தது.  

ஆனால், அதற்குப் பிறகு, நாடு திரும்பிய விக்னேஸ்வரன் விடுத்த நீண்ட ஊடகக் குறிப்பில், தனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பேசிய எல்லா விடயங்களையும் விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தார்.   

அந்த ஊடகக் குறிப்பு, எவ்வளவு விலாவாரியாக இருந்தது என்றால், தனது தாடி அழகாக இருந்தது என்று, ரஜனி சொன்னார் என்றளவுக்கு விவரமாகவும் ‘பாபா’ படம் ஏன் தோற்றது என்று தான் கூறிய விளக்கத்தை, ரஜினிகாந்த் ‘ம்’ கொட்டி ஆமோதித்துக் கேட்டுக்கொண்டார் என்ற தகவல்களை வெளிப்படுத்தும் அளவுக்கு ஆழமாகவும் காணப்பட்டது.  

இந்த அறிக்கையின் சாராம்சத்தையும் ரஜினியுடனான சந்திப்புக் குறித்த விக்னேஸ்வரனின் அணுகுமுறைகளையும் பார்க்கும்போது, ஒரு சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தாண்டி, அது மிகுந்த துயரத்தைத் தருகிறது.  

நடைபெற்று முடிந்த சந்திப்பு, ஒரு ஈழத் தமிழ் தொழிலதிபருக்கும் ரஜினிக்கும் இடையிலானது என்றாலோ, ஒரு ஈழத்தமிழ் இரசிகருக்கும் ரஜினிக்கும் இடையிலானது என்றாலோ பரவாயில்லை.   

அது, விக்னேஸ்வரன் என்ற பெயர், தமிழ் மக்களின் அரசியலுக்குள் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடப்போகிறது என்று பலர் நம்பினார்கள்?  

கறை படாத கரமுடையவர்; நீதியின் சிகரமாக நின்று மக்களுக்கு வழிகாட்டக்கூடியவர்; தேசியத்தின் உறுதியான பாதையில் நின்று எதிரியுடன் சமராடக் கூடியவர் என்று எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை எல்லாம் அவர் மீது மக்கள் கொண்டிருந்தார்கள்?  

உண்மையில், முதலமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில், விக்னேஸ்வரன் காண்பிக்க முனைந்த ஆளுமையானது, போருக்கு பின்னர், முதற்றடவையாகத் தமிழர் மட்டத்தில், பல தரப்புகளாலும் அண்ணாந்து பார்க்கப்பட்டது.   

உள்நாட்டில் மாத்திரமல்லாது, வெளிநாட்டுத் தரப்புகளும், இனித் தாங்கள் தொடர்பாட வேண்டிய மனிதர் இவர்தான் போலுள்ளது என்ற கணிப்போடு, கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  
ஆனால், இன்று அவர் அரசியலில் வந்து நிற்கின்ற புள்ளி, பரிதாபகரமானது; படிப்படியாக உதிர்ந்து, அலையில் கரைந்துபோன மண்வீடு போலுள்ளது.  

வடமாகாண சபையில், தனது முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைந்த அடுத்த நாளே, புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தனது புரட்சிப் பாதையை அறிவித்தார்.  

தமிழ் மக்களுக்குத் தவறாக வழி காண்பித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து, தமிழர்களுக்கான தலைமைத்துவத்தைப் பிடுங்கியெடுத்து, தனது கட்சிதான் இனிமேல் தமிழர்களுக்கு வழிகாட்டப்போவதாகவும் மீட்சியைப் பெற்றுக்கொடுக்கப்போவதாகவும் அறிவித்தார். அதற்குத் தனது சகல வளங்களும் தயார் என்பதுபோல, சிங்கள தேசத்தையும் பார்த்துப் போர்ச் சங்கு ஊதினார்.  

தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்துவதாக, வெளியில் காண்பித்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளையும் தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு, பலருக்கு வளையம் போட்டார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதேதோ காரணங்களை எல்லாம் சொல்லி, இவரது வலையிலிருந்து வெளியில் பாய்ந்தது. சுரேஷ் மாத்திரம் இவரோடு ஒட்டிக்கொண்டார். ஏனைய கட்சிகள், போகலாமா விடலாமா என்று சம்பந்தரையும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு, முடிவுகளைப் பிற்போட்டுக் கொண்டன.  

கட்சியில் இந்தக்கட்சி என்னதான் செய்யப்போகிறது என்று பார்த்தால், இரண்டொரு மாதங்களிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு கிளை நிறுவனமாக, கூட்டமைப்புக்குச் சேறடிக்கும் அரசியல் செய்வதற்கு, வாளியோடு சந்தியில் வந்து நின்றது.  

அதாவது, கூட்டமைப்புக்கு எதிர் வீட்டிலிருந்துகொண்டு, அரசியல் செய்வது.  

இதற்குத்தானா இவ்வளவு எகத்தாளம்?  

இதற்குத்தானா இவ்வளவு போர்க்குரல்கள்?  

இதற்குத்தானா இவ்வளவு சண்டித்தனம்?  

மக்கள், விக்னேஸ்வரனின் இந்த நோக்கத்தை மிக விரைவிலேயே புரிந்துகொண்டார்கள்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, எத்தனையோ தவறுகளோடு பயணம் செய்துகொண்டிருப்பது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. அதன், செல்நெறிகளில் பல சந்தேகங்களும் பல தளம்பல்களும் நிர்வாகத் திறனின்மைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.   

கூட்டமைப்பென்றால் சுமந்திரன்; சுமந்திரன் என்றால் கூட்டமைப்பு என்கின்ற கோதாவில்தான் அந்த அரசியல் தரப்பு, கடந்த பல காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.  

ஆனால், மக்களுக்கான அரசியலைச் செய்வதற்குத் துணிந்து நிற்பதும், அதற்காகத் தென்னிலங்கைத் தரப்போடு பேசுவதற்குத் துணிந்து நிற்பதும்தான் கூட்டமைப்பின் பிரதான அரசியல் சூத்திரங்களாக முன்னிற்கின்றன.  

காணிவிடுவிப்புக்கும் சுமந்திரன்தான் நீதிமன்றப்படி ஏறுகிறார்; பௌத்த விகாரையை அகற்றுவதற்கும் சுமந்திரன்தான் நீதிமன்றப்படி ஏறுகிறார்; பிரதேச சபை தரமுயர்த்தப்படும் விவகாரத்துக்கும் சுமந்திரன்தான் களத்தில் நிற்கிறார்; சிங்கள ஊடகங்களில் பேசுவதற்கும் சுமந்திரன்தான் நடுக்கதிரையில் இருக்கிறார்; சிங்களத் தரப்போடு பேசுவதற்கும் சுமந்திரன்தான் கோர்ட்டோடு போய் நிற்கிறார்.  

இது, சுமந்திரனுக்கான கட்டணம் செலுத்தாத விளம்பரப்பட்டியல் அல்ல. ஆனால், இந்தப்பட்டியலில் உள்ள எந்த விடயங்களையும் செய்யவல்ல ஆக்கபூர்வமான கட்சியாக, விக்னேஸ்வரனால் தனது அரசியல் அணுகுமுறையை, ஏன் வகுத்துக்கொள்ள முடியாது போனது?  

தனக்குரிய சட்டப் புலமையைப் பயன்படுத்தி, செல்வாக்கைப் பயன்படுத்தி, ஒரு நீதிபதிகள் குழுவின் ஊடாகத் தமிழர்களுக்குரிய சட்ட உரிமைகளை வெற்றிகொள்வதற்கு, ஒரு முயற்சியை முன்னெடுக்க முடியாதா?  

ஒரு சிவில் அமைப்பாகத் தனது புதிய கட்சியை உருவாக்கிக் கொண்டு, சமூகப் பிரச்சினைகளை வெளித்தரப்புகளுக்கு எடுத்துக்கூறுகின்ற தரப்பாக, வளர்ச்சிகொள்ள முடியாதா?  

மும்மொழிப் புலமையும் கொண்ட விக்னேஸ்வரன், சிங்களத் தரப்புகளுடன் சென்று, அறிவார்ந்த அரசியல் உரையாடல்களை மேற்கொண்டு, தமிழ் மக்கள் முன்செல்ல வேண்டிய அரசியல் வழிகள் பற்றிக் கொஞ்சமாவது பேசமுடியாதா?  

எதுவுமே இதுவரை செய்யப்படவில்லை என்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வந்தகாலம் முதல், இன்றுவரை விக்னேஸ்வரன் அரசியலில் கற்றுக்கொண்டதுதான் என்ன?  

‘எழுக தமிழ்’ என்று ஓர் உணர்ச்சிக் கோசத்தை எழுப்பி, மாணவர்களை உசுப்பிவிட்டதா?  

அந்தப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் உட்பட, யாழ்ப்பாண புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என்று எத்தனை பேர் விக்னேஸ்வரன், ஏதாவது செய்வார் செய்வார் என்று, இராணுவத்திடம் கிளிநொச்சி வீழ்ந்த பின்னரும், ஏதாவது அற்புதம் நடக்கும் என்று, போரின்போது மக்கள் எதிர்பார்த்ததைப் போல, காத்திருந்தார்கள்.  

இன்று, தமிழகத்தின் மிகப் பெறுமதியான மனிதரும் அரசியலில் பா.ஜ.கவின் அரசியலோடு மிகவும் நெருக்கமாகப் பயணித்துக் கொண்டிருப்பவராகக் கணிக்கப்படுபவருமான ரஜினி, ஈழத் தமிழர்களின் அரசியலில் எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்களிப்பவராக மாறக்கூடும். அவரை மாற்றவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படவும்கூடும்.   

எம்.ஜி.ஆரைப்போன்ற, ஈழத்தமிழர் அரசியல் ஆதரவு நிலையானது, கமலிடமிருந்து எதிர்பார்க்க முடியாது; ஆனால், ரஜினியிடம் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.  

அப்படியிருக்கும்போது, அவருடனான கலந்துரையாடலில் விக்னேஸ்வரன் தன்னை ஒரு மக்கள் தலைவராக அடையாளப்படுத்தி, ஆளுமையை வெளிக்காட்டி இருக்கலாம்.   

இலங்கையில், தமிழர்களது அரசியல் வகிபாகம் மேலும் மேலும் சிறுத்துக் கொண்டுபோகும் தற்போதைய நிலையில், இந்தியாவின் வகிபாகம் எவ்வாறு அமையவேண்டும், அதற்குத் தமிழகம் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற விடயங்களைக் கொஞ்சமாவது இறுக்கமாகப் பேசியிருக்கலாம்.   

‘பாபா’ படத்தோல்விக்கான காரணத்தையும் தனது தாடி குறித்தும் ரஜினியுடன் பேசிய தருணங்கள் போக, இடைவேளை நேரத்திலாவது, தனது மெல்லிய அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி இருக்கலாம்.  

விக்னேஸ்வரன் போன்றவர்கள், இவ்வாறான அரசியலை மேற்கொள்வதாலும் பெருமெடுப்பில் அறிக்கைகளை விட்டு ஆடம்பரங்களைக் காண்பித்துவிட்டு, பின்னர், இவ்வாறு ‘சித்தன் போக்கு, சிவன் போக்கு’ என்று திரிவதாலும் ஏற்படும் மிகப்பெரிய பாதகமான விளைவு என்னவெனில், அரசியலுக்குப் புதிததாக வருகின்ற எல்லோர் மீதும், மக்களுக்கு இயல்பாகவே அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. சரியான நோக்கத்துடன், நேர்மையாக அரசியல் செய்யவருபவர்களின் மீதும் மக்களுக்கு அவநம்பிக்கைதான் வருகிறது. இவை அனைத்துக்கும், கஜேந்திரகுமார்கள் மாத்திமல்ல; விக்னேஸ்வரன்களும் காரணமாகி விடுகிறார்கள்.  

விக்னேஸ்வரனின் இந்த மாதிரியான அரசியல் பயணத்தை, கூட்டமைப்பு விசுவாசிகள் எள்ளி நகையாடலாம்; கஜேந்திரகுமார் அணியினர், இதற்குத்தான் நாங்கள் இவரோடு போகவில்லை என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.  

ஆனால், மக்கள்?  

‘பாபா’ படத்தின் தோல்விக்கான காரணத்தைப் கண்டுபிடித்த விக்னேஸ்வரன், தொடரும் தமிழ் மக்களின் அரசியல் தோல்விக்கான காரணத்தை நிச்சயம் கண்டுபிடிக்காமல் விட்டிருக்கமாட்டார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .