2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

விஜயகலா மட்டுமா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூலை 11 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலைவாசி உயர்வு, இலங்கை ரூபாயின்  பெறுமதி சரிவு, நாளாந்தம் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால், மக்களின் அபிப்பிராயம், அரசாங்கத்துக்கு எதிராக உருவாகி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனா இலஞ்சம் வழங்கியதாக, ‘நியூ யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு இருந்த செய்தி, அரசாங்கத்தின் தலைவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும்.   

ஆனால், அதன் மூலம் பயனடைய அரசாங்கத்துக்குக் குறிப்பாக, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை.   

அதற்குள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இடையில் புகுந்து, புலிகளுக்கு ஆதரவாகப் பேசி, அந்த அவகாசத்தைக் குழப்பி விட்டார்.   

‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியால், பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, விஜயகலாவின் உரையால் பெரும் ஆறுதல் அடைந்திருப்பார். ஏனெனில், அதன் மூலம் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட இலஞ்சக் குற்றச்சாட்டை, மூடி மறைக்க முடியும் என்பதாலேயாகும்.   

கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சியினரும் மஹிந்த அணியினரும் ‘நியூயோர்க் டைம்ஸ்’ செய்தியைக் கொண்டும் விஜயகலாவின் உரையைக் கொண்டும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். அதில், இப்போதைக்கு மஹிந்த அணியே வெற்றி பெற்றுள்ளது.   

அதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. முதாவதாக, ‘நியூயோர்க் டைம்ஸ்’ செய்தியின் பாரதூரத்தன்மை மக்களுக்கு விளங்குவதில்லை.

 இரண்டாவதாக, கடந்த மூன்றாண்டுகளாக, மஹிந்த அணியினர் மீது, அரசாங்கம் இது போன்ற பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த போதிலும், மஹிந்தவின் காலத்தில் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்கவுக்கு, எதிராகச் சுமத்தப்பட்ட சிறியதொரு குற்றச்சாட்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான பணியை, சீனாவுக்கு வழங்கிய மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, அப்பணிகளில் ஈடுபட்ட சீன நிறுவனம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக, 7.6 மில்லியன் டொலர் நன்கொடையாக (இலஞ்சமாக ) வழங்கியது என்பதே, ‘நியூயோர்க் டைம்ஸ்’ செய்தியில் கூறப்பட்டு இருந்தது.   

ஒரு மில்லியன் டொலர் என்றால், எவ்வளவு என்பது பலருக்குத் தெரியாது. பலர் அத்தொகையை நாணய மாற்று வீதத்தால் பெருக்கி, ரூபாயாக மாற்றிப் பார்க்க முற்படுவதில்லை.

 எனவே பலருக்கு, மஹிந்த பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சத் தொகை, ஏதோ சிறியதொரு தொகையாகவே தெரிகிறது. 7.6 மில்லியன் டொலர் என்றால் சுமார் 1,200 மில்லியன் இலங்கை ரூபாயாகும். (120 கோடி ரூபாய்)   

இச்செய்தி வரும் போதே, மஹிந்த ஆதரவாளர்கள் அதை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டார்கள். அதற்காக அவர்களிடம் நியாமான காரணங்களும் இருந்தன. 

மஹிந்த வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்பட்ட 18 பில்லியன் டொலர் (சுமார் 270,000 கோடி ரூபாய்) பணத்தை அரசாங்கம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது அவர்களின் வாதமாகும். 

ஆனால், விஜயகலாவின் உரையை, அவ்வாறு ஐ.தே.கவால் மறுக்க முடியாது. அதைச் சகல ஊடகங்களும் வெளியிட்டு இருந்தன. மஹிந்த அணியினர், உடனடியாக அதை ஊதிப் பெருப்பித்ததால் அரசாங்கம், பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.  

எனவே, ஐ.தே.க தலைவர்களும் விஜயகலாவைப் பகிரங்கமாகக் குறை கூற முற்பட்டனர். விஜயகலா, மனப்பூர்வமாகப் புலிகளை ஆதரித்துப் பேசவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவரது உரை தமது கட்சியைப் பாதிக்கும் என்பதாலேயே, அவர்கள் பகிரங்கமாக விஜயகலாவைக் குறைகூறினர்.   

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துடனும் விஜயகலாவைப் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் என, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், விஜயகலாவை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.   

‘தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால், வடக்கில் பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியே சென்று வர வேண்டுமென்றால், புலிகள் மீண்டும் வர வேண்டும்’ என்ற கருத்துப்பட, விஜயகலா கடந்த இரண்டாம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதி அலுவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சியொன்றின்போது, கூறியிருந்தார். அதுவே இந்தச் சர்ச்சைக்கு காரணமாகியது.   

வடக்கில் அண்மைக் காலமாகக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதையும் குறிப்பாக, கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஆறு வயதுப் பாடசாலை மாணவியான சிவநேசன் றெஜினா கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டுப் பேசும் போதே, அவர் அவ்வாறு கூறியிருந்தார்.  

இப்போது, அவர் உரையாற்றிய பின்னணி மறக்கப்பட்டு, அவர் பாவித்த வார்த்தைகளே தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக அரசாங்கம், பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது.   

அதையடுத்து, நிர்ப்பந்தத்தின் காரணமாக விஜயகலா, தமது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இராஜினாமாச் செய்தார்.   

விஜயகலாவின் கூற்று விடயத்தில், தெற்கில் உள்ளவர்களும் வடக்கில் உள்ளவர்களும் ஒரே விதமாக நடந்து கொள்ளவில்லை. 

தெற்கில் உள்ளவர்கள், குறிப்பாக மஹிந்த அணியினர், அதைப் பெரும் துரோகமாக எடுத்துக் காட்டி, கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.   

சிங்கள ஊடகங்களும் அதற்குப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன. 

ஆனால், வடக்கில் மக்களோ, தமிழ் ஊடகங்களோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில தமிழ்ப் பத்திரிகைகள் அந்தச் செய்தியை வெளியிடவும் இல்லை. கொழும்பில் வெளியாகும் ஒரு பிரதான தமிழ் பத்திரிகை, அச்செய்தியை அதன் 14ஆம் பக்கத்திலேயே பிரசுரித்தது.  

அதற்குக் காரணம், விஜயகலாவின் செய்திக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் அல்ல; விஜயகலா தவறு செய்துவிட்டார். எனவே, அவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கமும் அல்ல.  

 அந்தக் கருத்துப்பட, தமிழ் அரசியல்வாதிகள் எவ்வளவோ பொது மேடைகளில் பேசுவதால், தமிழ் ஊடகங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே காரணம்.   

இந்த விடயத்தில், தற்போது ஐ.தே.கவுக்கும் மஹிந்த அணியினருக்கும் இடையே நடக்கும் பிரசாரப் போருக்கு, விஜயகலா இரையாகிவிட்டார் என்றே கூறவேண்டும். 

இல்லாவிட்டால், எத்தனையோ தமிழ்த் தலைவர்கள், அரசியல்வாதிகள் புலிகளைப் பாராட்டியும் புகழ்ந்தும் பேசி வரும் நிலையில், விஜயகலாவின் உரை மட்டும் இவ்வளவு பெரும் சர்ச்சைக்குரியதாகிவிட வேண்டியதில்லை.   

உதாரணமாக, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, இந்தச் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்துவதற்குச் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர், அதே வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் புலிகளைப் போற்றிப் பேசினார்.   

அன்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், “தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் நியாயமானது. ஆனால், சர்வதேசம் அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் கூறி அழித்துவிட்டது” எனக் கூறியிருந்தார்.   

அடிப்படையில் இந்தக் கூற்றுக்கும் விஜயகலாவின் கூற்றுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? 

இருவரும் புலிகளைப் பாராட்டுகிறார்கள்; இருவரும் புலிகள் இன்று வரை செயற்பட்டு இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.   

புலிகளைப் பாராட்டும் அல்லது போற்றிப் புகழும் நிகழ்ச்சிகள் இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்றன. அவற்றை நடத்துவோர், புலிகள் மீண்டும் தலைதூக்குவதை விரும்பவில்லையா? அந்நிகழ்ச்சிகள் மூலம், புலிகள் மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணமே, மக்கள் மனதில் உருவாக்கப்படுகிறது. 

கடந்த ஜூன் 25 ஆம் திகதி, யாழ்ப்பாண மாநகர சபைக் கூட்டத்தில், நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத் தூபி, நாவாந்துறை மாவீரர் நினைவுத்தூபி ஆகியவை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் சங்கிலியன் பூங்கா, மீண்டும் கிட்டு பூங்காவாக மாற்றப்பட்டு புனரமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல், கடந்த ஐந்தாம் திகதி, வடக்கில் சில இடங்களில் குறிப்பாக, யாழ். பல்கலைகழகத்தில் கரும்புலிகள் தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.   

புலிகளைப் பாராட்டுவதற்காவும் புகழ்வதற்காகவும் நிகழ்ச்சிகளை நடத்துவது, துரோகம் என்றே தெற்கில் பலரும் கருதுகின்றனர். அரசாங்கமும் அவ்வாறுதான் கருதுகிறது.

 ஆயினும், விஜயகலாவின் கூற்றை, இவ்வளவு ஊதிப் பெருப்பித்துப் பெரும் சர்ச்சையை உருவாக்கியவர்கள், இந்தத் தீர்மானங்களைப் பற்றி அறியவில்லைப் போலும்.  

 விஜயகலாவைத் தண்டித்ததைப் போல், இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியவர்களையும் தண்டித்திருக்க வேண்டும் என்பது எமது வாதமல்ல. விஜயகலாவின் உரையை, அவர்கள் எதிர்நோக்கியிருந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே பாவித்தார்கள் என்பதே எமது வாதமாகும்.   

இது போன்ற தீர்மானங்கள், இதற்கு முன்னர் வடமாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
2014ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச போர்க் குற்ற விசாரணை தொடர்பான பிரேரணையும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இன அழிப்புப் பற்றிய தீர்மானமும் அதற்கு உதாரணங்களாகும்.   

இவற்றின் மூலம், நேரடியாகப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்படாவிட்டாலும், இவை இலங்கை அரசாங்கமும் தென்பகுதி சிங்களத் தீவிரவாதிகளும் தேசத் துரோகமாகக் கருதும் செயல்களாகும். ஆனால், அப்போது அவர்கள் இவ்வளவு கடுமையாக, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் “பதவி விலகு” என்று கூறவும் இல்லை. அப்போது, அவர்களது தேசப்பற்று இவ்வளவு ஆவேசமாகக் காணப்படவில்லை.  

2013 ஆம் ஆண்டு, வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில், விக்னேஸ்வரன் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை ஒரு விடுதலைப் போராளியாகவே குறிப்பிட்டார். புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதி, தீர்ப்பு வழங்கிய ஒரு நிறுவனமே உயர் நீதிமன்றம்.  

 அதன் நீதியரசராக இருந்த அவர், அந்தத் தேர்தல் காலத்தில் பகிரங்க மேடைகளிலும் ‘டைம்ஸ் ஒப் இன்டியா’ பத்திரிகையுடனான பேட்டியொன்றின் போதும், “பிரபாகரன் ஒரு பயங்கரவாதியல்ல; விடுதலைப் போராளியே” என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறியது மட்டுமல்லாது, 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற ‘ஊவா-வெல்லஸ்ஸ கிளர்ச்சி’யின் கதாநாயகனான கெப்பெட்டிபொலவுடன் பிரபாகரனை ஒப்பிட்டும் பேசினார்.   

விக்னேஸ்வரன் அரசமைப்பை மீறியதாகவோ, அவரைத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கக் கூடாது என்றோ, அப்போது எவரும் கூறவில்லை.   

விஜயகலாவின் கூற்றுக்கு, எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரும் ஒருவர். 

அவரும் ஊடகங்கள் முன்னிலையிலேயே பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்ததாகச் சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன் கூறுகிறார்.   

தம்மை மிரட்ட, தேரர் தமது அமைச்சுக்கு வந்தபோது, “பிரபாகரன் நல்லவர்; வல்லவர். தெற்கில் உள்ள அரசியல்வாதிகளைப் போலல்லாது, கொள்கைப் பிடிப்பு உள்ளவர்; அவரை நாம் அவசரப்பட்டுக் கொன்றுவிட்டோம். அவர் வாழ்ந்திருக்க வேண்டியவர்” என்றெல்லாம் ஞானசார தேரர் ஊடகங்களின் முன்னிலையிலேயே தம்மிடம் கூறியதாக அமைச்சர் கூறுகிறார்.   

இனப்பிரச்சினை, இனவாதம், போர், இனஒழிப்பு மற்றும் போர் குற்றம் போன்ற விடயங்களில், அரசியல்வாதிகளின் நிலைப்பாடு, நிலைமைக்கு ஏற்ப மாறும். விஜயகலாவே அதற்கு ஓர் உதாரணம்.   

கடந்த அரசாங்கம், சிறுவர்களையும் முதியவர்களையும் கொன்றதாகவும், கொல்லப்பட்டவர்கள் புலிகளாக இருந்தால், தாம் அதைப் பற்றிக் கேள்வி எழுப்பப்போவதில்லை என்றும் விஜயகலா, கடந்த வருடம் கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, கூறியதாகத் ‘தமிழ் கார்டியன்’ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  

அதேபோல், 2014 ஆம் ஆண்டு சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை வேண்டும் என, மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது, ‘இன ஒழிப்பு’ என்ற பதத்தை விக்னேஸ்வரன் விரும்பவில்லை.   

ஆனால், ஒரு வருடத்துக்குப் பின்னர், 1948 ஆம் ஆண்டிலிருந்தே, நாட்டில் தமிழ் மக்கக்கு எதிரான இன ஒழிப்பு இடம்பெற்றுள்ளதாக, அவரே மாகாண சபையில் பிரேரணையொன்றை சமர்ப்பித்தார்.   

தெற்கிலுள்ளவர்களும் அவ்வாறே தான். ஒன்றிணைந்த எதிரணியினர் விக்னேஸ்வரனைப் பிரபாகரனின் அவதாரமாகவே கருதுகின்றனர். 

ஆனால், 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “விக்னேஸ்வரன் ஓர் இனவாதியல்ல; அவர் அரசியலுக்காகவே தேசியவாதத்தைப் பேசுகிறார்” எனக் கூறயிருந்தார். 

எனவே, விஜயகலாவைப் பற்றிய சர்ச்சையிலும் தேசப்பற்று சம்பந்தப்படவில்லை.   
இருப்பினும், விஜயகலாவின் கூற்றில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று கூற முடியாது. தமிழ் மக்கள், புலிகளின் தியாகங்களைப் போற்றிப் புகழ்வதோ, மதிப்பதோ பிழையென எவராலும் கூற முடியாது.   

ஆனால், புலிகளாகி ஆயுதம் ஏந்தும் வகையில், அரசியல்வாதிகள் இளைஞர்களை உசுப்பேத்திவிடுவதாக இருந்தால், நாளை அந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினால், உசுப்பேத்தி விடும் அந்த அரசியல்வாதிகளும் ஆயுதம் ஏந்தத் தயாராக இருக்க வேண்டும்.  அவ்வாறில்லாவிட்டால் இளைஞர்களை தூண்டிவிடக் கூடாது. 

1970களில் அது தான் நடந்தது. அன்றைய அரசியல்வாதிகள், பிற்காலத்தில் புலிகளால் துரோகிகளாகவே கருதப்பட்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .