2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1983 இனக்கலவரத்தின் அறுநிலைப் புள்ளி

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூன் 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 96)

1983 ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னாரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், ஜூலை 21 திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தெட்டத்தௌிவாகத் தாம், அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிவித்திருந்தது. வெறுமனே பயங்கரவாதம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடாக இருந்தது. 

1983 ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னாரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், ஜூலை 21 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். 

ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தெட்டத்தெளிவாகத் தாம் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிவித்திருந்தது. 

வெறுமனே, பயங்கரவாதம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடாக இருந்தது. மாவட்ட அபிவிருத்தி சபைகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், தமிழ் மொழியைத் தேசிய மொழியாக முழுமையாக அமுல்படுத்துதல், வேலைவாய்ப்பு, கல்வி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அரசாங்கப் நடவடிக்கைகள், காணிக் கொள்கை உள்ளிட்ட தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்களும் சர்வ கட்சி மாநாட்டில் ஆராயப்பட வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அறிவித்தது.

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட ஜே.ஆர் அரசாங்கத்தின் சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டுக்கானக அழைப்பை நிராகரித்திருந்தன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டணியிலிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம்தான் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றும் நிலையில் இருந்தன.

நாடாளுமன்றத்தில் கூட்டணியின் கடைசி நாள்

இந்த நிலையில், 21 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கின. அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நாடாளுமன்றப் பேச்சு அவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 
வீ.என்.நவரட்ணம் தனது பிரியாவிடை உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார். 

1977 பொதுத் தேர்தலில் யாழ். சாவகச்சேரித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வீ.என்.நவரட்ணம், தன்னை ஆறு வருட பதவிக்காலத்துக்கே மக்கள் தேர்ந்தெடுத்திருந்ததாகவும் அந்த ஆறு வருட பதவிக்காலம் 1977 ஜூலை 21 இல் முடிவடைவதாகவும் மேலும் தமிழ் மக்கள் ஜே.ஆர். அரசாங்கத்தின் நாடாளுமன்ற பதவிக்காலத்தை நீட்டிக்கும் சர்வசன வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்திருந்தமையினால் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலத்தில் தான் தொடர்ந்து பதவியில் இருப்பது தார்மீக ரீதியில் ஏற்புடையதல்ல;ஆதலால் தன்னை தனது மக்கள் தேர்ந்தெடுத்த பதவிக்கால முடிவில் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். 

இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் பலமானதொரு உரையை ஆற்றியிருந்தார். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதியுரை என்று இதனைச் சொல்லலாம். இதன் பின்னர், ஆறு ஆண்டுகள் காலத்தில் அவர் ஒரு குறுகிய காலத்துக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தாலும் கூட, இதுவே எதிர்க்கட்சித் தலைவராக அவரது இறுதியுரையாக அமைந்தது. 

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு அடிப்படை உரிமைகளைக் கூட நசுக்குவதைச் சுட்டிக் காட்டிய அமிர்தலிங்கம், “அரசாங்கமானது அவசரகாலச் சட்டத்தின் கீழான தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, வடக்குக்கான உணவு விநியோகத்தைச் சரிவரச் செய்ததா? வடக்குக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது” என்று சாடினார். 

மேலும், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவராகத் தான், ஜனாதிபதி ஜே.ஆருக்கு எழுதிய கடிதங்கள் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சில போராளிகள் புகையிரதத்துக்கு எரியூட்டியதை ‘பித்துப்பிடித்த செயல்’ என்று வர்ணித்த அமிர்தலிங்கம், ஆனால் வடக்குக்கு பேரூந்துகள் செல்வதைக் கூட தடுக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்புலத்தோடு நடத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார். 

இரட்டைப் பெரியகுளம் இராணுவ முகாமருகே வடக்கு நோக்கிச் சென்ற ஆறு தனியார் பேரூந்துகள் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேரூந்தொன்றின் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததில் ஒரு சிங்களவரான அப்பேரூந்தின் சாரதி படுகாயமடைந்ததையும் குறிப்பிட்டார். அத்தோடு சர்வ கட்சி வட்ட மேசை மாநாடு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் பிரதமர் பிரேமதாஸ இடையே கடும் தர்க்கமும் இடமபெற்றிருந்தது.  

1983 ஜூலை 21 ஆம் திகதியோடு, தமது பதவிக்காலம் நிறைவடைந்ததைச் சுட்டிக்காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 22 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை. மாறாக அவர்கள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னாரில் இடம்பெறவிருந்த தமது மாநாட்டில் கவனம் செலுத்தினார்கள்.  

இந்த நிலையில், வடக்கில் நிலைமைகள் கடுமையாகிக் கொண்டே வந்தன. 1983 ஜூலை 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இராணுவம் மூன்று தமிழ்ப் பெண் பிள்ளைகளைக் கடத்தியதாகச் செய்தி பரவியது. இராணுவம் அம்மூன்று பெண் பிள்ளைகளையும் கும்பலாக வன்புணர்வு செய்ததாகவும், அதில் ஒரு பெண் தற்கொலை செய்துவிட்டதாகவும் தகவல்கள் வடக்கெங்கும் பரவி பரபரப்பையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தின. 

“ஃபோ ஃபோ ப்ராவோ” மீதான தாக்குதல்

1983, ஜூலை 23 கறுப்பு ஜூலை என்ற மாபெரும் இனவழிப்பின் அறுநிலைப் புள்ளியாக (breaking point) அமைந்த தினம். ஜூலை 23, அன்று நாடாளுமன்றமானது அவசரகாலச் சட்டத்தை நீடித்து வாக்களித்திருந்தது. இங்கு அவசரகாலச்சட்டம் என்பது புதிதாக அதனுள் சேர்க்கப்பட்ட சட்டவொழுங்குகளின்படி, இலங்கைப் படைகளுக்கு ‘கொன்று புதைக்கும்’ அதிகாரபலத்தை வழங்கியிருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகிறது. 

மன்னாரிலே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஆரம்பமாகவிருந்த நிலையில், ஜூலை 23 வடக்கிலே, குறிப்பாக யாழ்ப்பாணத்திலே மற்றுமொரு சாதாரண நாளாகவே விடிந்திருந்தது. 

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் வேறொரு திட்டமிருந்தது. ஜூலை 15 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரும், வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய நண்பனுமான ‘சீலன்’ என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனி, இராணுவச் சுற்றுவளைப்பினால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையை பிரபாகரன், தானே முன்னின்று நடத்தத் தீர்மானித்திருந்ததாக ‘இலங்கையில் புலிகள் (ஆங்கிலம்) என்ற தனது நூலில் எம்.ஆர். நாராயன் ஸ்வாமி குறிப்பிடுகிறார். 

 1983, ஜூலை 23 இரவு 10.06 ற்கு இலங்கை இராணுவத்தின் காலட்படையணியின் (Sri Lanka Light Infantry) முதலாவது படைப்பிரிவின் ‘சீ’ கொம்பனியைச் சேர்ந்த இரண்டாவது லெப். வாஸ் குணவர்த்தன தலைமையிலான 15 பேரைக் கொண்ட ‘ஃபோ ஃபோ ப்ராவோ’ என்ற குறியீட்டுச் சொல்லால் குறிக்கப்பட்ட ரோந்துப் படை வழமையான ரோந்துப்பணிக்காக குருநகர் இராணுவ முகாமிலிருந்து மாதகல் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. 

இந்த ரோந்துப் படைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்காக இருந்தது. இந்த ரோந்துப் படை பயணிக்கும் பாதையில், திண்ணைவேலியில் பலாலி- யாழ். வீதியில் தாக்குதல் நடத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல் திட்டத்தை விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கியஸ்தரான செல்லக்கிளி தயாரித்திருந்ததாகவும் அதனை பிரபாகரன் அங்கீகரித்திருந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று கருதக்கூடிய கிட்டு, செல்லக்கிளி, ஐயர், விக்டர், புலேந்திரன், சந்தோசம், அப்பையா உள்ளிட்ட அனைவரும் இந்தத் தாக்குதலில் பங்கெடுத்ததாக தனது நூலில் நாராயன் ஸ்வாமி குறிப்பிடுகிறார். 

ஜீப் மற்றும் ட்ரக் ஊர்திகளில் பயணித்த ‘ஃபோ ஃபோ ப்ராவோ’ ரோந்துப் படை செல்லக்கிளியினால் குறித்த வீதியில் தயார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிக்கு முதலில் இலக்கானது. அதனைத் தொடர்ந்து சற்றுத் தொலைவில் தயார் நிலையிலிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பினர் இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களினால் குறித்த ரோந்துப் படை மீது தாக்குதல் நடத்தினர் என தனது நூலில் நாராயன் ஸ்வாமி விபரிக்கிறார். 

இதையொத்த விபரிப்பை, ‘இலங்கையின் தாங்கொணாத்துயர் (ஆங்கிலம்)’ என்ற தனது நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்கவும் வழங்கியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் ‘ஃபோ ஃபோ ப்ராவோ’ ரோந்துப் படையின் இரு இராணுவப் படையினரைத் தவிர, ஏனைய 13 பேரும் கொல்லப்பட்டனர். அத்தோடு குறித்த தாக்குதலைத் திட்டமிட்டு முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான செல்லக்கிளியும் கொல்லப்பட்டார். 

ஆயுதக் குழு ஒன்று அரச படைகள் மீது இதுவரை நடத்தியிருந்த தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாக அமைந்தது. ஒரே தடவையில் 13 இராணு வீரர்கள் கொல்லப்பட்டமையானது இராணுவத்துக்கு பேரதிர்ச்சியாகவும் பேரிடியாகவும் அமைந்தது. மறுபுறத்தில் இராணுவம் மீதான தாக்குதலை வெற்றிகரமாக விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தாலும் எட்டு நாட்களில், தனது இரு முக்கியஸ்தர்களை (சீலன் மற்றும் செல்லக்கிளி) விடுதலைப் புலிகள் அமைப்பு இழந்திருந்தது. 

ஆனால், இருதரப்புகளின் இந்த இழப்புக்களை விட, இந்தத் தாக்குதல் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே மிகப்பெரும் இழப்புகளையும் பெரும் இனவழிப்பையும் பேரவலத்தையும் சந்திப்பதற்கான அறுநிலைப் புள்ளியாக அமைந்ததுதான் வேதனைக்குரியது. 

இராணுவத்தின் வெறியாட்டம்

திண்ணைவேலித் தாக்குதல் மற்றும் அதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்தி தீயாகப் பரவத் தொடங்கியது. இது சிங்கள மக்களிடையே சினத்தையும் தமிழ் மக்களிடையே அச்சத்தையும் விளைவித்ததாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க தனது நூலில் குறிப்பிடுகிறார்.

 தமிழ் மக்களின் அச்சத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கந்தர்மட வாக்குச்சாவடித் தாக்குதலில் ஓர் இராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கே யாழ். நகருக்குள் புகுந்து அப்பாவித் தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதலை இலங்கை இராணுவம் நடத்தியிருந்தது. அது நடந்து ஏறத்தாழ இரண்டு மாதங்களில் 13 இராணுவ வீரர்கள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், முன்னர் பொலிஸார் இதுபோன்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களில் கொல்லப்பட்டபோது, அவர்களது உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே, தமிழ் மக்கள் மிகவும் அச்சமான சூழலை எதிர்கொண்டார்கள். தமிழ் மக்கள் அச்சம் கொண்டது போலவே, இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழ் மக்கள் மீது தனது வெறியாட்டத்தைக் குறித்த தாக்குதல் நடந்த திண்ணைவேலிப் பகுதியில் முன்னெடுத்தது. 24 ஆம் திகதி அதிகாலையிலிருந்து பலாலி வீதி மற்றும் சிவன், அம்மன் ஆலயம் இருந்த இடங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வீடுகளுக்கும் எரியூட்டியது. 

இராணுவத்தின் இந்த வெறியாட்டத்தில் 51 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்று காலையில் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்  ரீ.ஐ.வீரதுங்க, யாழ். வந்தபோதுதான் இராணுவத்தின் குறித்த இனவெறித் தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இராணுவ வீரர்கள் 13 பேர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினால் கொல்லப்பட்டது இராணுவத்தையும் இலங்கையையும் பொறுத்தவரை பாரதூரமான ஒரு செய்தி. இங்கு இராணுவமும் இலங்கை அரசாங்கமும் பதிலடி கொடுத்திருக்க வேண்டியது, இந்தத் தாக்குதலை நடத்திய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கன்றி, அப்பாவித் தமிழ் மக்கள் மீதல்ல. 

தமிழ் மக்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்று பிற்காலத்தில் தொடர்ந்து கேள்வியெழுப்பிய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு, அப்பாவித் தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதலை இராணுவம் நடத்தியது ஏன் என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். 

1969 இல் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. 1983 வரை தமிழ் மக்களிடம் அவை குறிப்பிடத்தக்க செல்வாக்கோ, அங்கீகாரமோ பெறவில்லை.

குறைந்த பட்ச அரசியல் தீர்வையேனும் வேண்டி நின்ற தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளைத் தொடர்ந்து உதாசீனம் செய்து, தமிழ் மக்கள் மீதான தொடர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழ் மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து, தமிழ் மக்களை வேறுவழியின்றிய சூழலுக்குள் தள்ளியது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் தவறன்றி வேறில்லை. அந்த உதாசீனத்தின் விளைவை இலங்கையின் அனைத்து அப்பாவி மக்களும் அனுபவிக்க வேண்டியதாக அமைந்தது. 

அப்பாவித் தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதலை இராணுவம் நடத்தியது ஏன் என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். 1969 லே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. 1983 வரை தமிழ் மக்களிடம் அவை குறிப்பிடத்தக்க செல்வாக்கோ, அங்கீகாரமோ பெறவில்லை.

குறைந்த பட்ச அரசியல் தீர்வையேனும் வேண்டி நின்ற தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளை தொடர்ந்து உதாசீனம் செய்து, தமிழ் மக்கள் மீதான தொடர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழ் மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து தமிழ் மக்களை வேறுவழியின்றிய சூழலுக்குள் தள்ளியது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்ககங்களின் தவறன்றி வேறில்லை.

அந்த உதாசீனத்தின் விளைவை இலங்கையின் அனைத்து அப்பாவி மக்களும் அனுபவிக்க வேண்டியதாக அமைந்தது. 

இறுதிச் சடங்குகள் எங்கே?

1983 ஜூலை 24 அன்று இலங்கை இராணுவத்தின் முன்பும், இலங்கை அரசாங்கத்தின் முன்பும் இருந்த பெருங்கேள்வி இறந்த 13 இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளை எங்கு நடத்துவது என்பதுதான். ஏனென்றால் அதன் முக்கியத்துவமும் அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் அனுபவ ரீதியில் அரசாங்கம் நன்கறிந்தேயிருந்தது. 

(அடுத்த வாரம் தொடரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .