2024 மார்ச் 28, வியாழக்கிழமை

1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 104)

இந்திரா - ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் 

‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும் மத்திய, மாநில அரசியல் தலைமைகளிடமிருந்து வந்த அழுத்தமும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டிய அவசியத்தை உருவாக்கியது.  

 1983 ஜூலை 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜனாதிபதி 
ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் தொலைபேசி ஊடாக உரையாடினார்.   

இந்த உரையாடலின் போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக, நடைபெற்றுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதைக் குறிப்பிட்ட இந்திரா காந்தி, தாம் இது பற்றி வருந்துவதாகத் தெரிவித்தார்.   

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, தானும் இது பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும் கலவரத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த, தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.   

இதை ஏற்றுக்கொண்ட இந்திரா காந்தி, தனக்கு அது பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டதுடன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உதவியாக, தாம் வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.   

இந்திரா காந்தியின் இந்த அக்கறைக்கு நன்றி செலுத்திய ஜே.ஆர், “எமக்கு அவசியமானால், நிச்சயம் அறியத்தருகிறோம்” என்று கூறினார்.  

இந்திரா காந்தி, அடுத்துக் கேட்ட விடயம்தான், ஜே.ஆரைக் கொஞ்சம் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியது. “எங்களுடைய வெளிவிவகார அமைச்சர், உங்களுடைய நாட்டுக்கு விஜயம் செய்து, உங்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவது பற்றி, உங்களுக்கு ஓர் ஆட்சேபனையும் இல்லையே” என்று இந்திரா காந்தி கேட்டார்.   

ஓர் இன அழிப்பு வன்முறை, அதுவும் சிங்களக் காடையர்களால், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட, இன அழிப்புத் தாக்குதல்கள் தணிந்து கொண்டிருந்த வேளையில், சர்வதேச அழுத்தங்கள் பெருமளவுக்குத் தலையைச் சூழ்ந்து கொண்டிருந்த பொழுதில், உள்நாட்டில் சிங்கள மக்களைத் தணிவிக்க ஜே.ஆரும் அரசாங்கமும் சாமரம் வீசிக் கொண்டிருந்த பொழுதில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையானது, அதுவும் இன அழிப்பு கலவரம் பற்றிக் காண, கலந்துரையாட வருவதானது, நிச்சயம், ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தர்மசங்கடமானது.   

சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில், ஜே.ஆர், ஒருவகையில், நழுவல் போக்குக் காரர். அவர், இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை விரும்பாவிட்டாலும், அதை விரும்பவில்லை என்று சொல்லாதவர். இராஜதந்திரமான அணுகுமுறையும் அதுதான்.   

ஆகவே, இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஜே.ஆரால் மறுக்கவோ, தட்டிக் கழிக்கவோ முடியவில்லை.“நான் உங்கள் வெளிவிவகார அமைச்சரை வரவேற்பேன்” என்று ஜே.ஆர் பதிலளித்தார்.   

நரசிம்மராவ் விஜயம்  

இந்தத் தொலைபேசி உரையாடல், முடிந்த ஆறு மணி நேரத்திலேயே, இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் தலைமையிலான, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷங்கர் பாஜ்பாய் உள்ளிட்ட குழு, இந்திய விமானப் படையின் விசேட விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.   

இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் 
ஏ.ஸீ.எஸ். ஹமீட், விமானநிலையத்தில் வரவேற்றார்.   

இந்திய இராஜதந்திரக் குழு, ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். 29 ஆம் திகதி காலை, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், ஜனாதிபதி ஜே.ஆரை காலை உணவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.   

இந்தச் சந்திப்பில் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டும் ஷங்கர் பாஜ்பாயும் உடனிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில், இந்திய ஓவஸீஸ் வங்கி உட்பட இந்தியர்களுக்குச் சொந்தமான சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிச் சுட்டிக் காட்டிய நரசிம்ம ராவ், தமது சகோதரர்கள் இங்கு தாக்கப்படுவது பற்றித் தமிழ் நாட்டின் கோபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார்.   

ஜே.ஆரும் களநிலவரம் பற்றிய தனது பார்வையைப் பதிவு செய்தார். இதன் பின்னர், இதேதினம் வெளிவிவகார அமைச்சில், வெளிவிகார அமைச்சர் 
ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டுடன் நரசிம்ம ராவ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.   

இலங்கையின் அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாஸவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் சந்திக்க விரும்பினார். இதையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது.   

ஆனால், பிரேமதாஸவுக்கு இதில் பெரிய உடன்பாடிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்குள், இந்தியா பற்றிய பிரேமதாஸவின் அணுகுமுறை, வித்தியாசமாக இருந்தது.   

இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டைப் பிரேமதாஸ விரும்பவில்லை. ஜே.ஆரைப் போன்று, இதை இராஜதந்திரமாக, நாசூக்காகக் கையாள்வதில் கூட, பிரேமதாஸ பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.   

நரசிம்ம ராவை சந்திக்க சம்மதித்திருந்தாலும் அவரையும் அவரது குழுவினரையும் தனது அலுவலக வரவேற்பறையில் 20 நிமிடங்கள் அளவுக்குக் காக்க வைத்த பின்னர்தான், பிரேமதாஸ அவர்களைச் சந்தித்தார். பிரேமதாஸவின் இந்த இந்திய விரோதப் போக்கு, எதிர்காலத்திலும் கடுமையான அளவில் தொடர்ந்தது.   

நரசிம்ம ராவ் தலைமையிலான குழுவினர் கண்டிக்கும் விஜயம் செய்து, அங்கிருந்த இந்தியத் தூதுவராலயத்தில் உள்ளவர்களோடு ஒரு சந்திப்பை நடத்தி, மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தனர்.   

கொழும்பிலும், கொழும்புக்கு வெளியிலுமான பயணங்களின் போது, நடந்திருந்த பேரழிவுகளைக் கண்ணுற்றனர். கொழும்பு திரும்பிய நரசிம்ம ராவ், தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட பெருமளவிலான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களைப் பார்வையிட விரும்பி, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள். 

இதை, இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியான, தலையீடாகக் கருதிய இலங்கை அரசாங்கமானது, நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய இராஜதந்திரக் குழுவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.   

ஆகவே, அகதி முகாம்களைப் பார்வையிடாது, மக்களுடனான நேரடியான சந்திப்புகள் இல்லாது, இந்திய இராஜதந்திரக் குழு நாடு திரும்பியது.   

நரசிம்ம ராவ் உரை  

நாடு திரும்பிய, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார். 

இதன் பின்னர், ஓகஸ்ட் இரண்டாம் திகதி, இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரசிம்ம ராவ், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் காரணமாக, வீடற்றவர்களாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் ஆகியிருக்கும் மக்கள் பற்றியும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினரின் பாதுகாப்பு பற்றியும் இலங்கையிலுள்ள இந்தியர்கள் பற்றியுமான அக்கறையைப் பதிவு செய்ததுடன். இலங்கையில் ‘நாடற்றவர்களாக’ இருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், இந்த வன்முறைத் தாக்குதலில் அடைந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  

“இது மனிதநேயப் பிரச்சினை. தேசம், குடியுரிமை என்ற எல்லைகள் எம்மைப் பிரித்திருந்தாலும், எம்மருகே வாழும், பெருந்தொகையான மக்கள் அடைந்துள்ள துன்பம் பற்றி, நாம் மௌனித்திருக்க முடியாது” என்று நரசிம்ம ராவ் குறிப்பிட்டார்.   

அத்தோடு, இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கமானது, தமிழ் மக்களைக் கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கான, போக்குவரத்து வசதிக்கான கப்பல்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அகதி முகாம்களில் உள்ளோருக்கான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பிலான உதவியைக் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.   

இந்த உதவிகளையும் கப்பலையும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, உடனடியாக அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆயுத உதவி கேட்ட இலங்கை?

இதைத் தாண்டி இன்னொரு விடயம் பற்றியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், தனது கரிசனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையானது, ஒரு வெளிநாட்டுச் சக்திக்கெதிராக அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் ஆயுத உதவி கேட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானதையும் அந்த வெளிநாட்டுச் சக்தி, இந்தியாவாக இருக்கலாம் என்று சில பத்திரிகைகள் ஊகம் தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டிய நரசிம்ம ராவ், இது பற்றி, இந்தியா அவதானமான உள்ளதைப் பதிவு செய்தார்.   

உடனடியாக இந்தச் செய்தியை மறுத்து, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் அறிக்கை வெளியிட்டார். இலங்கை, இந்தியாவுக்கெதிராக வெளிநாடுகளின் உதவியை நாடியது என்பதை, அவர் அடியோடு மறுத்தார்.   

குறித்த செய்தியை, முதலில் வெளிக் கொண்டு வந்ததாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச ஊடக நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகக் கடமையாற்றிய அமெரிக்க பிரஜையொருவரை உடனடியாக நாட்டிலிருந்து, இலங்கை அரசாங்கம் வெளியேற்றியது.   

தமிழ் மற்றும் இந்திய எதிர்ப்புணர்வு  

ஆனால், இலங்கையிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள், வேறொன்றை உணர்த்தியது. ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தாக்குதலின் பின்னணியில், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இருந்ததாக, இன்று வரை நம்பப் படுகிறது.  

 அரசாங்கத்தின் ஆதரவு அல்லது பின்புலம் இல்லாமல், இத்தகையதொரு பாரியளவிலான இன அழிப்பு, நடத்தப்பட்டிருக்க முடியாது என்ற கருத்தைப் பலரும் முன்வைக்கிறார்கள்.  

 இது பற்றிய உண்மைகளை அறிவதற்கு, முழுமையான சுயாதீன விசாரணைகள் எவையும் நடத்தப்படவில்லை. 

அவ்வாறு நடத்தப்பட்டு இருக்குமானால், நிறைய உண்மைகள் வெளிவரக்கூடும். ஆனால், தமிழ் மக்களுக்கெதிரான, இந்த இன அழிப்பு வன்முறைகளுக்கு, எதிர் வினையாக இந்தியா, நேரடியாகக் களமிறங்கும் என்ற அச்சம், சிங்களப் பேரினவாதிகளுக்கு இருக்கவே செய்தது.  

 மலையகத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அமைச்சர் காமினி திஸாநாயக்க, “இந்தியா, இலங்கையில் ஆக்கிரமிப்பு செய்யுமானால், 24 மணி நேரத்துக்குள் தமிழர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்படுவார்கள்” என்று கொக்கரித்திருந்தார்.   

இது, ஜே.ஆரின் அரசாங்கத்திலிருந்த இளம் அமைச்சரொருவர் பகிரங்கமாக, மக்கள் மத்தியில், கூட்டமொன்றில் சொன்னது. இது, இலங்கையின் பேரினவாதம், இந்தியா மீது கொண்டிருந்த, அச்சம் மற்றும் சந்தேகப் பார்வையையும் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த இன வன்மத்தையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.  

சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்கள்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பில், ஏறத்தாழ 300,000 மக்கள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அதேவேளை, கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் தமது வீடுகளையும் சொத்துகளையும் இழந்த அப்பாவித் தமிழ் மக்கள் (ஏறத்தாழ 64,000 பேர்) பொது இடங்களில் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என 
ரீ.டீ.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.   

எந்த உத்தியோகபூர்வ விசாரணையும் நடத்தப்படாத நிலையில், பாதிக்கப்பட்டோர் பற்றிய உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்கள் இல்லை.   

இரத்மலானை விமான நிலையத்தில், ஏறத்தாழ 4,500 பேரும், 

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 14,000 பேரும்,

பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியில் 1,400 பேரும்,

கொழும்பு - 7 இல் அமைந்திருந்த பாடசாலைகளான சிறிமாவோ பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் 2,300 பேரும், தேர்ஸ்டன் கல்லூரியில், 4,000 பேரும், மஹாநாம கல்லூரியில் 12,600 பேரும், திம்பிரிகஸ்யாய அருகில் அமைந்திருந்த இசிப்பதன கல்லூரியில் 4,300 பேரும்,

கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள பாடசாலைகளான புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி, புனித லூஸியாஸ் கல்லூரி, நல்லாயன் கன்னியர்மடம் மற்றும் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 17,000 பேரும், கொட்டாஞ்சேனை சிவன் கோவிலில் 1,100 பேரும், ஜிந்துப்பிட்டியில் 1,750 பேரும்,

நுகேகொட அநுலா வித்தியாலயத்தில் 1,300 பேரும் அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனரென ரீ.டீ.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார். இவர்களில் பலரை யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.   

சர்வதேச அழுத்தத்தைச் சமாளித்தல்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பில் இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச அழுத்தம், இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கவே, இந்த அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டிய உடனடி நிர்ப்பந்தம், இலங்கை அரசாங்கத்துக்கு  இருந்தது. இதற்கு ஓர் உடனடி உபாயத்தை, இலங்கை அரசாங்கம் கையாண்டது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X