2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1983 ‘கறுப்பு ஜூலை’: புலியும் பலிகடாவும்

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:26 - 1     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 105)

பெட்டாவில்புலி  

நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்த 29 ஆம் திகதி, முன்னைய நாட்களோடு ஒப்பிடுகையில், கொழும்பில் வன்முறைகள் பெருமளவில் அடங்கியிருந்தன. ஆனால், பெட்டா (புறக்கோட்டை) பகுதியில், மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் நடக்கக் காத்திருந்தது.   

இலங்கையின் வர்த்தகத்தின் மையம் கொழும்பென்றால், கொழும்பின் வர்த்தக மையம் புறக்கோட்டை. வணிக, வர்த்தக நிலையங்கள் செறிந்த பகுதி; பொன் கொழிக்கும் மையம்.   
1983 ஜூலைக்கு முன்பு, புறக்கோட்டையில் தமிழ் வர்த்தகர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். குறிப்பாகத் தங்க நகைகள், மொத்த விற்பனை, ஆடையகங்கள் எனச் சகல வர்த்தகத் துறைகளிலும் தமிழ் வர்த்தகர்கள் கோலோச்சிய காலம் அது. 

இந்த நிலையில்தான், 1983 ஜூலை 25 ஆம் திகதி, பெட்டா, இன அழிப்புக் காடையர்களின் இலக்காக மாறியது. மூன்று தினங்களுக்குள் பலநூறு கடைகள், தாக்கியும் உடைத்தும் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டிருந்தன.  

தமிழ் வர்த்தகர்களின் சொத்து, மூலதனம், செல்வம், வர்த்தகம், வணிகம், தொழில் என்பன அழிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த நாட்களில், செட்டியார் தெரு (ஸீ ஸ்றீட்) ஒப்பீட்டளவில் பாதுகாப்பாகவே இருந்ததாக, 1983 கலவரம் பற்றி எழுதிய சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

செட்டியார் தெரு என்பது, தங்கநகை வியாபாரத்தின் மத்திய நிலையம் எனலாம். வரிசையாகத் தங்க நகைக் கடைகள் நிறைந்த வீதி. கிட்டத்தட்ட அத்தனை கடைகளும் தமிழர்களுக்குச் சொந்தமானவை.  

 1983 ஜூலை 25 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரையான, நிறைந்த இன அழிப்பு வன்முறைகளிலும் இந்த வீதி ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பாக இருந்தமைக்கு, சிலர், அரசியல் பின்னணியை, முக்கிய காரணமாகக் குறிப்பிடுகிறார்கள்.  

 செட்டியார் தெருவில் நகைக் கடைகள் வைத்திருந்த தமிழ் வணிகர்களில் அநேகர், பெரும் செல்வந்தர்கள். அத்துடன், ஆட்சியிலிருந்த ஜே.ஆர் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு, நீண்டகாலமாகப் பண ரீதியிலாக ஆதரவளித்து வந்தவர்கள்.   
ஐக்கிய தேசியக் கட்சியின் தூண், குறிப்பாக, மத்திய கொழும்பு பகுதியின் சிங்கம், என்று அறியப்பட்ட அந்தத் தலைவர், கட்சியிலும் ஆட்சியிலும் ஜே.ஆருக்கு அடுத்த முக்கியஸ்தர்.   

இந்தத் தொடர்பு காரணமாக, ‘ஜூலை 25-28 ஆம் திகதி வரை, செட்டியார் தெருவின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, எந்தவித பெரும் அசம்பாவிதங்களும் நடக்காது, இந்த நகைக் கடைகள் பாதுகாக்கப்பட்டன’ என்று, கறுப்பு ஜூலை பற்றிய மனித உரிமைகளுக்கான, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெட்டாவே, சுற்றிவரப் பற்றியெரிந்து கொண்டிருந்தபோது, செட்டியார் தெருவின் பெரும் நகைக் கடைகள் பத்திரமாகவே இருந்தன. இது இன்னொன்றையும் உணர்த்துகிறது.  

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் யார் இருந்திருந்தாலும், நிச்சயமாக அரசாங்கம் திடமாக எண்ணியிருந்தால், 1983 ஜூலை இன அழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.  

செட்டியார் தெரு பாதுகாக்கப்பட முடியுமென்றால், முழுக் கொழும்பும், ஏன் முழு நாடுமே பாதுகாக்கப்பட்டிருக்கலாம். செட்டியார் தெருவைப் பாதுகாக்கப் படைகள் சம்மதித்தன என்றால், கொழும்பையும் முழு நாட்டையும் பாதுகாக்கப் படைகள் ஒத்துழைத்திருக்கும்.  

ஆகவே, ஜே.ஆர் “நான் சொன்னால் கேட்கும் நிலையில் படைகள் உள்ளனவா” என்று தொண்டமானிடம் வினவிய குழந்தைத்தனமான கேள்வி, வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது.   

நிச்சயம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பின்புலமின்றி, ஆதரவின்றி இத்தகையதொரு பாரியளவிலான இன அழிப்பு நடத்தப்பட்டிருக்க முடியாது. அதுவும் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்து தினங்களுக்கு.   

1983 ஜூலை 29 ஆம் திகதி, கொழும்பு அமைதியாகவே இருந்ததில், செட்டியார் தெருவின் பாதுகாப்பும் தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால், நகைக் கடை ஊழியர்கள், எதுவும் நடக்கலாம் என்று தம்மைத் தாமே பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.  
 தமது கடைகளில், பயன்பாட்டிலிருந்த அமிலங்கள் உள்ளிட்ட இரசாயனங்களை மின்குமிழ்களுக்குள் நிரப்பி, தமக்கான சிறிய பாதுகாப்பை அவர்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள்.  

 காலை 10.30 அளவில், செட்டியார் தெருவின் பிரதான வீதி (மெயின் ஸ்றீட்) முடிவில் ஒன்று சேர்ந்த காடையர் கூட்டமொன்று, செட்டியார் தெருவுக்குள் நுழைந்தது.   

இதுவரையான தாக்குதல்களில், தாக்குதலுக்கு உள்ளான அப்பாவித் தமிழர்கள் திரும்பித் தாக்கவில்லை. ஆகவே, தமிழர்கள் திரும்பித் தாக்கமாட்டார்கள் என்ற எண்ணத்துடன், செட்டியார் தெருவின் நகைக் கடைகளைச் சூறையாடும் நோக்கத்துடன் நுழைந்த காடையர் கூட்டம், நகைக் கடை ஊழியர்களின் தற்காப்புத் தாக்குதலுக்கு இலக்கானது.   

அமிலங்களும் இரசாயனங்களும் நிரம்பிய மின்குமிழ்கள் வீசப்பட்டதைக் கண்ட இன அழிப்புக் காடையர் கூட்டம் அதிர்ச்சி அடைந்து “கொட்டி (புலி)” “கொட்டி” என்று கத்தியது.  

இதைப்பற்றி மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, தனது நூலில், மிகப் பொருத்தமான ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது, இந்தக் காடையர்களின் சிற்றறிவைப் பொறுத்த வரையில், திருப்பித் தாக்குகிற தமிழர்களெல்லாம் புலிகளாகத்தான் இருக்க வேண்டும்.

இதனால், நிர்க்கதி நிலையில் நின்ற நகைக் கடை ஊழியர்களின், தற்காப்புத் தாக்குதலை எதிர்கொண்ட இன அழிப்புக் காடையர்கள் “கொட்டி” “கொட்டி” என்று கூக்குரலிட்டபடி, அருகே சென்.ஜோன்ஸ் மீன் சந்தையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை வரவழைத்தனர்.   

அங்கு விரைந்த இராணுவத்தினர் நடத்திய திறந்த துப்பாக்கிச் சூட்டில், ஏறத்தாழ 12 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், மட்டக்களப்பையும் மலையகத்தையும் சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக கொழும்பில் வந்து செட்டியார் தெரு நகைக் கடைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். “கொட்டி” “கொட்டி” என்று இன அழிப்புக் காடையர்களின் கூக்குரல் கேட்டு, அப்பாவி இளைஞர்களைக் கொல்ல முடிந்த இராணுவத்தினால், அந்த இன அழிப்பை நடத்தியவர்களை, காடையர்களை சுட்டுக் கொன்று, இன அழிப்பை ஏறத்தாழ ஐந்து நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவம், இவ்வாறுதான் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.  

வரலாற்றைத் திரித்தல்

மறதி மனிதனுக்கு இயல்பானது. ஆனால், பெருந்துயரங்களை மனிதர்கள் மறப்பதில்லை; வரலாறும் மறப்பதில்லை.   

அதனால்தான் வரலாறு பலருக்குப் பயத்தை உருவாக்கிறது. வென்றவன் தனக்கேற்றவாறு வரலாற்றை எழுதிக் கொள்வதும் இதனால்தான்.   

ஆனால், உண்மைகளைப் புதைத்தாலும் அழிந்துவிடுவதில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு 1983 இன அழிப்பு என்பது அழிக்க முடியாத கறை. 1983 இற்கு முன்னர் நடந்த ஜேர்மனின் ‘ஹொலோகோஸ்ட்’, ‘இஸ்தான்புல் இன அழிப்பு’, ‘கெமர் ரூஜ் இன அழிப்பு’, ‘பர்மாவில் ரொஹிங்கியாக்களுக்கெதிரான இன அழிப்பு’ ஆகியவற்றுக்கும் 1983 இற்குப் பின்னர், நடந்த சீக்கியப் படுகொலை, இராக்கின் குர்திஷ் இன அழிப்பு, பூட்டானின் இன அழிப்பு, ருவண்டா இன அழிப்பு, ஸ்றப்றெனிக்கா இன அழிப்பு, ஜகார்ட்டா இன அழிப்பு ஆகியவை போன்று உலக அளவில் நடந்த மாபெரும் இன அழிப்புகளில் ஒன்றாக ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பும் வரலாற்றின் துயரம் மிகு கறுப்புப் பக்கங்களில் இடம்பிடிக்கிறது.   

ஆக, அழிக்க முடியாத இந்தக் கறையை மூடிமறைக்கவும் சப்பைக்கட்டு கட்டவும் நீண்டகாலமாகவே, பல மட்டங்களிலும் புலமைத்தளங்களிலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.  

1983 இன அழிப்பைத் தமிழர்கள் மீது சாட்டிவிடும் முயற்சி இதிலொன்று. அதாவது, அந்த 13 இராணுவ வீரர்கள் அன்று திண்ணைவேலியில் கொல்லப்பட்டமைதான், 1983 இன அழிப்புக்கான ஆத்திரமூட்டலாக (provocation) அமைந்தது என்ற நியாயப்படுத்தல்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இன அழிப்புக்கு, ஆத்திரமூட்டல் ஏற்புடைய நியாயமாக, அடிப்படைப் புத்தியுள்ள எந்த மனிதனாலும் கூட, ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  

இதன் பின்னர், 1983 இன அழிப்பை, திட்டமிட்ட இன அழிப்பாக அன்றி, ஒரு சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகச் சித்திரிக்கும் தன்மை, பாணி கைக்கொள்ளப்பட்டது.  

ஜீ. டீ.ஸீ. வீரசிங்ஹ, தன்னுடைய ‘இலங்கைக்கான இன முரண்பாட்டுத் தீர்வுகள்’ (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில், 1983 இல் சட்ட ஒழுங்கின் சீர்குலைவுதான் இடம்பெற்றது.

அங்கு எந்தப் பாகுபாடும் இருக்கவில்லை. இந்தச் சட்ட ஒழுங்குச் சீர்குலைவானது, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தைத் தாக்கியதனூடாகப், பயங்கரவாதிகளினால் திட்டமிடப்பட்டது. சட்ட ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, உடனடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத ஜே.ஆர்.ஜெயவர்த்தன பொறுப்புக் கூற வேண்டும்’ என்று பதிகிறார்.   

அதாவது, இலங்கையின் இன உறவுகள், முறிவுகள் பற்றி அவர் எழுதியுள்ள இந்தச் சிற்றேட்டில், இனப்பாகுபாடே இங்கு இல்லை என்று சுற்றிவளைத்துப் பக்கம் பக்கமாகச் சப்பைக் கட்டு கட்டியவர், உலகில் நடந்த பெரும் இன அழிப்புகளில் ஒன்றான, 1983 கறுப்பு ஜூலை இனப் படுகொலையை இரண்டே வரிகளில், இது சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று கூறிக் கடந்துவிடுகிறார்.   

இதை ஒத்த போக்கை, பல நூலாசிரியர்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள். ‘கோட்டாவின் யுத்தம்’ (ஆங்கிலம்), ‘நந்திக் கடலுக்கான பாதை’ (ஆங்கிலம்) உள்ளிட்ட இலங்கையின் போர் வரலாறு மற்றும் போர் வெற்றி பற்றி மிக விரிவாகக் கூறும் நூல்களும் 1983 ‘கறுப்பு ஜூலை’ கலவரங்களைச் சில பக்கங்களில் சொல்லிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.ஆருமே காரணம் என்று சாடிவிட்டுக் கடந்துவிடுகின்றன.  

1983 கறுப்பு ஜூலை, இன அழிப்பை நியாயப்படுத்த முடியாது விட்டால், அடுத்த கட்டம் அதை முக்கியமற்றதாக்கி விடுதல்; அதை நீண்டகாலத் திட்டமாக, முன்னெடுப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.   

இதன் இன்றைய வடிவம்தான், அண்மையில் அமைச்சரொருவர், “1983 கறுப்பு ஜூலை இன அழிப்பில், வெறும் ஏழு பேர் மாத்திரம்தான் கொல்லப்பட்டார்கள்” என்று சொன்னது.   

ஓர் இன அழிப்பு நடந்திருக்கிறதென்றால், அதைப்பற்றி சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டிருக்க வேண்டும்; இழப்பின் அளவு கண்டறியப்பட்டிருக்க வேண்டும்; இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலிருந்தவர்கள் பொறுப்புக் கூறியிருக்க வேண்டும்.

இங்கு 34 ஆண்டுகளாகியும் எந்தச் சுயாதீன விசாரணைகளும் இல்லை; பொறுப்புக் கூறலுமில்லை.  

 மாறாக, ‘1983 கறுப்பு ஜூலை’ என்ற மாபெரும் இன அழிப்பை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அல்லது அது பெரும் அழிப்பே அல்ல, என்று அதை ஒரு பொருட்டில்லாத சம்பவமாக மாற்றிச் சித்திரிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.  

‘மனித உரிமைகளுக்கான வடக்கு-கிழக்கு செயலகம்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, ‘தமிழர்களின் படுகொலைகள் 1956-2008’ (ஆங்கிலம்) என்ற நூலில், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பில் கிட்டத்தட்ட, 3,000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே தமிழ் அமைப்புகள் சிலவற்றின் கணக்கெடுப்பின்படியான தரவு என்று பதிவு செய்கிறது.   

அத்தோடு, சொந்த நாட்டுக்குள்ளாகவே ஏறத்தாழ 200,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள் என்று பதிவு செய்கிறது. எத்தனை பெரிய கொடூரம் இது? ஆனால், இந்தக் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நீதி என்ன? நீதியின் தார்ப்பரியம் என்பது, ‘உலகமே அழிந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்பதாகும். (fiat justitia et pereat mundus) ஆனால், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பைப் பொறுத்தவரை நீதிதான் இங்கு புதைக்கப்பட்டு விட்டது.   

இடதுசாரிகள் பலிக்கடா  

சர்வதேச அழுத்தங்கள் கழுத்தை நெரிக்கவே, 1983 இன அழிப்புக்கான பழியை யார் மீதாவது சுமத்திவிட வேண்டிய தேவை, ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இருந்தது.   

இலகுவான பலிக்கடாக்களாக ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளே ஜே.ஆரின் கண்களில் தென்பட்டன.   

இடதுசாரிகளை நக்ஸலைட்டுகள் என்று வர்ணித்த ஜே.ஆர் அரசாங்கம், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் பழியை அவர்கள் மீது சுமத்தத் தயாரானது. அன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில், குறிப்பாக மேற்கு நாடுகளிடையே இருந்த கம்யூனிஸ, இடதுசாரி எதிர்ப்பலை மற்றும் இந்தியாவிலிருந்த நக்ஸல் எதிர்ப்புணர்வு ஆகியவற்றோடு, தாம் சங்கமித்துவிட முடியும் என்பதுடன், இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம் என்ற நோக்கங்கள் இதன்பின் இருந்திருக்கலாம்.   

இந்த ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைத் தடைசெய்ய, ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது. அத்தோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஆப்பு வைக்க, அரசியலமைப்புக்கான ஆறாவது சீர்திருத்தத்தை முன்வைக்கவும் ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 1

  • Thiru Tuesday, 15 August 2017 01:20 PM

    13 army was killed on July 23rd at Thirunelvely in Jaffna. Not at Thinnaively (திண்ணைவேலி). There is no place by the name of Thinnaively. Please correct it.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .