2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1983: கறுப்பு ஜூலையின் தொடக்கம்

என்.கே. அஷோக்பரன்   / 2017 மே 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 94)

இந்தியாவின் கண்டனம்  

1983 ஜூலை மாத ஆரம்பப் பகுதி; அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எந்த நபரையும் எந்தப் பொறுப்புக் கூறலுமின்றி, விசாரணைகளுமின்றி ‘கொன்று புதைக்கும்’ அதிகாரம் இலங்கைப் படைகளுக்கு அவசரகாலச் சட்ட ஒழுங்கு 15A-யின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.   

இதற்கு நியாயம் சொன்ன, இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “வடக்கிலுள்ள படைகளினதும் பொலிஸாரினதும் மனவுறுதி மிகக் குறைவாக உள்ளது. அவர்களுக்குப் பலமூட்ட இந்தச் சட்ட ஒழுங்கு அவசியம்” என்ற தொனியின் தனது நியாயத்தை முன்வைத்தார்.  

இதனால், வடக்கில் பல தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமின்றி இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டும், சுட்டும் கொல்லப்பட்டதாக ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில், சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.   

‘சபாரட்ணம் பழனிவேல் என்ற தமிழ் இளைஞர், இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்குள் இழுத்தச் செல்லப்பட்டு, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதன் பின்னர், அவரது உடலின் மீது இராணுவ கனரக ஊர்தியை ஏற்றி, உடல் நசுக்கப்பட்டது’ என்ற சம்பவத்தை சச்சி பொன்னம்பலம் தனது நூலில் விபரிக்கிறார்.   

இந்தக் கொடுங்கோன்மைச் சட்ட ஒழுங்கின் படுபயங்கரத்தை இந்தச் சம்பவம் சுட்டி நிற்கிறது. இந்தச் சட்டவொழுங்கு அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்தவுடனேயே இந்தியா இதற்கெதிரான கண்டனத்தை முன்வைத்திருந்தது.   

இந்திய உயர்ஸ்தானிகரை அழைத்து, இந்தச் சட்டவொழுங்கு தொடர்பிலான நியாயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ்.ஹமீத் தெரிவித்திருந்தார்.  

ஆனால், இதனை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த ஷங்கர் பாஜ்பாய், இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தீவிர நடவடிக்கை பற்றிய கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.   
இந்த விவகாரம் தொடர்பில் அவரைச் சந்தித்திருந்த இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேனார்ட் திலகரத்ன, “இது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடா? அல்லது மத்திய அரசின் நிலைப்பாடா?” என்று கேள்வி கேட்டதுடன் “இது எங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும்” என்றும் தெரிவித்திருந்தார். 

இது பற்றி ஜே.ஆரும் “இது எங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும், தேவையில்லாத, ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.   

இந்த நிலைப்பாட்டில், ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம் உறுதியாக இருந்தது. இது பற்றிய கேள்வி நாடாளுமன்றத்தில் எழும்பிய போது, அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், “நாங்கள் அணிசாரா நாடுகளின், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத அதியுன்னத கொள்கையை மதிக்கிறோம். எங்கள் சிறந்த அயலவர், இதனை மதித்து நடந்துகொள்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்.  

 இத்தோடு, இலங்கை அரசாங்கம் இதனை விட்டுவிடவில்லை. ஜே.ஆரின் பணிப்புரையின்படி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டினால் தமது அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையிலான இந்திய அரசின் கண்டனத்துக்கு எதிரான இலங்கை அரசின் கண்டனத்தை எடுத்துரைத்ததோடு, இது இருநாட்டு உறவினைப் பாதிக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.  

இதன் பின், தமது நிலைப்பாட்டை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பேனார்ட் திலகரத்னவுக்கு தெளிவுபடுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷங்கர் பாஜ்பாய், “கொல்லப்பட்ட உடல்களை மரணவிசாரணையின்றிப் புதைக்கும் அல்லது எரிக்கும் அதிகாரத்தை படைகளுக்கு தந்த இலங்கையின் அவசரகால சட்டவொழுங்குகள் பற்றிய தனது கவலையையே இந்தியா வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுவரும் நிலையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். ஏனெனில், இது எமது நாட்டிலும் விளைவுகளை ஏற்படுத்தலாம்” இவை, மிகக் கண்ணியமான இராஜதந்திர வார்த்தைகளில் சொல்லப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டது.    

நிர்க்கதியான நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி  

குறித்த சட்டவொழுங்கு தந்த அதிகாரத்தின் கீழ், பலபேர் எந்த விசாரணையுமின்றி, ஈவிரக்கமின்றி அரச படைகளினால் கொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏதாவது செய்தாக வேண்டிய சூழலை எதிர்கொண்டது.   

இது அவர்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒரு விடயமாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமது தனிவழியில் பயணித்தன.  

 இலங்கை அரசாங்கம் அந்த ஆயுதக் குழுக்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அடையாளப்படுத்தி, அவர்களை முற்றாக வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. 

இது பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, “அபெண்டிசைட்டீஸ் நோயாளி ஒருவர் குணமாக வேண்டுமென்றால், அபெண்டிக்ஸ் முற்றாக வெட்டி நீக்கப்பட வேண்டும்” என்றார்.   

அதாவது, பயங்கரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பதே, தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை ஜே.ஆர் தெளிவாகக் குறிப்பிட்டார்.   

இதற்கு, நடுவில் ஆங்காங்கே இனக்கலவரங்கள் தலைதூக்கின. தமிழ் மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் கேள்விக்குறியாகின. நிர்க்கதியான நிலையில் தமிழினம் நின்று கொண்டிருந்தது.   

இதே நிர்க்கதியான நிலைதான் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும். “தமிழர்களின் உயிர்களைப் பற்றியோ, அவர்களது அரசியல் அபிப்பிராயம் பற்றியோ நாம் யோசிக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இங்கிலாந்தின் “த டெலிகிராப்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பற்றியும் இவ்வாறு சொல்லியிருந்தார்.

“அவர்கள் பயங்கரவாதிகளின் சார்பில் பேசினார்கள். அதெல்லாம் இப்போது முடிவுக்கு வரவேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை, அரசியல் விவகாரங்களில் அதன் உறுப்பினர்களோடு நாம் கலந்துரையாடுவோம். ஆனால், பயங்கரவாத விடயங்களை நாம் பார்த்துக்கொள்வோம், அவர்களுக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.   

தமிழ் மக்கள் மீது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கொண்டிருந்த செல்வாக்குக் குறைந்துவிட்டது என்ற அபிப்பிராயம் ஜே.ஆரினால் இதற்கு முன்பும் சில தடவைகள் மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருந்தது.   

உள்ளூராட்சித் தேர்தலை வடக்கில் ஏறத்தாழ 90 சதவீதமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவிப்புக்குச் சார்பாகப் பகிஷ்கரித்திருந்தமையானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது.   

ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களாலும், இலங்கை அரசாங்கத்தாலும் பொருட்படுத்தப்படாத ஒரு நிலையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியிருந்தது எனலாம்.   

ஆகவே, இந்தச் சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அச்சம்மிகு சூழல் தொடர்பிலும், தமது கட்சியை முன்கொண்டு செல்வது தொடர்பிலும் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்டிருந்தது.

 இந்த நிலையில்தான் 1983 ஜூலை ஒன்பதாம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு, தமது மாநாட்டை ஜூலை 21 ஆம் திகதி மன்னாரில் நடத்தத் தீர்மானித்தது.  

மாவட்ட அபிவிருத்திச் சபையின் முடிவு  

இதேவேளை, 1983 ஜூலை 15 ஆம் திகதி, யாழ். மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ‘பொட்டர்’ நடராஜா, தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.   

“எந்த அதிகாரமும் நிதியும் இல்லாத ஒரு சபையின் தலைவராக இருந்து என்ன பயன்?” என்பது ‘பொட்டர்’ நடராஜாவின் கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்வியில் நிறைய நியாயங்கள் இருந்தன.   

ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, அதிகாரப் பரவலாக்கல் வழிமுறையாக முன்வைத்தது. நல்லெண்ணத்தோடு இதனை ஜே.ஆர் அரசாங்கம் செய்திருக்குமாயின், குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வினைதிறனுடன் இயங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் தங்குதடையின்றிச் செய்திருக்க வேண்டும்.   

ஆனால், அது நடக்கவில்லை. வெறும் காகிதங்களுக்குள் மட்டும் அடங்கிய தீர்வைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ‘பொட்டர்’ நடராஜாவின் பதவி விலகல் என்பது, வரலாற்றினைப் பார்க்கும்போது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான சாவுமணியாக, மாவட்ட அபிவிருந்திச் சபைகளின் முடிவை சமிக்ஞை செய்தது என்று சொன்னால் அது மிகையல்ல.   

மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பில் பெரும் நம்பிக்கையோடிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு ‘பொட்டர்’ நடராஜாவின் பதவி விலகல் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.   
தொண்டமான், “இந்த பதவி விலகல் துரதிர்ஷ்டவசமானது. இது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று தனது எண்ணத்தை வெளியிட்டிருந்தார்.   

சீலனின் முடிவும் ஓர் இனக்கலவரத்தின் தொடக்கமும்  

1983 ஜூலை 15 ஆம் திகதி, இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனியை இலக்கு வைத்து, நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தது.   

இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், சார்ள்ஸ் அன்டனி இருந்த இடத்தை அறிந்துகொண்ட இராணுவம், அங்கு விரைந்தது. 
இந்தச் சம்பவத்தை, ‘இலங்கையில் புலிகள்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில், எம்.ஆர்.நாராயன் சுவாமி விவரிக்கிறார்.   

‘இராணுவ வருகையைக் கண்டுகொண்ட சார்ள்ஸ் அன்டனியும், உடனிருந்த இரு சகாக்களும் துவிச்சக்கர வண்டியில் தப்பிச் செல்ல முயலுகையில், இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. 

துவிச்சக்கர வண்டியில் செல்லமுடியாத நிலையில், வயல் வெளியினூடாக ஓடித்தப்பிக்க முயல்கின்றனர். ஏற்கெனவே, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது, முழங்காலில் காயமடைந்திருந்த சார்ள்ஸ் அன்டனியினால் தொடர்ந்து ஓட முடியாத நிலையில், தனது சாகாக்களிடம், தன்னால் இந்த நிலையில், கடும் வலியோடு தொடர்ந்து ஓடுவது சாத்தியமில்லை என்றும், தனக்கு இராணுவத்திடம் உயிரோடு அகப்பட விருப்பமில்லை என்றும், தன்னைச் சுட்டுக் கொன்று விட்டு, தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தப்பிக்குமாறு சார்ள்ஸ் அன்டனி வேண்டியதாகவும் அதன்படி, அவரது சகாக்கள், அவரது விருப்பப்படி அவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பித்தனர்’ இவ்வாறு, தனது நூலில் எம்.ஆர்.நாராயன் சுவாமி பதிவு செய்கிறார்.   

உள்ளூராட்சித் தேர்தலின் போது, கந்தர்மடத் தாக்குதல் உட்பட விடுதலைப் புலிகளின் பல தாக்குதல்களை முன்னின்று நடத்திய சார்ள்ஸ் அன்டனியின் முடிவானது, இலங்கை இராணுவத்துக்குப் பெரும் மகிழ்ச்சியையும், விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் தந்திருந்தது.   

இந்தச் சம்பவத்தை இராணுவத்தின் பெரும் வெற்றியாக ஊடகங்கள் பறைசாற்றின. சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் மட்டுமல்லாது, அவ்வமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும் கூட. 

இந்த இழப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிச்சயம் பதிலடி வரும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது.   

அந்தப் பதிலடி நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பும் தயாரானது. அந்தப் பதிலடி நடவடிக்கை நேரடியாக பிரபாகரனாலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாக நாராயன் சுவாமி குறிப்பிடுகிறார்.   

இந்தப் பதிலடி நடவடிக்கையின் விளைவே நாடுதழுவிய 1983 ‘கறுப்பு ஜூலை’ என்றறியப்படும் தமிழ் மக்களுக்கெதிரான மாபெரும் இனக்கலவரத்துக்கான “அறுநிலை” (breaking point) என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.   

இந்தப் பதிலடித்தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், இலங்கை அரசியல் பரப்பில் நிறைய விடயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.   

(அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .