2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தேர்தல் விஞ்ஞாபனங்களில் இனப்பிரச்சினை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் முக்கியமான அரசியல் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு, பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன.

தேர்தல் களத்தில் அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு, சமஷ்டி, ஒற்றையாட்சி, தன்னாட்சி அதிகாரம், பிரிவினைவாதம் என்பன போன்ற சொற்கள் இப்போது வழங்கமாகியிருக்கின்றன.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர், நாட்டின் ஏனைய பகுதிகளில் நடக்கும் பிரசாரங்களில் இந்தச் சொற்களின் பயன்பாடு இன்னும் அதிகமாகியிருக்கிறது.

ஒன்றுபட்ட- பிரிக்கப்படாத நாட்டுக்குள், அதிகபட்ச அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படை.

வடக்கு, கிழக்கு இணைந்ததாக இந்த சமஷ்டி நிர்வாகக் கட்டமைப்பு, இருக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைத்து வந்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சரி, ஏனைய தீவிரப் போக்குடைய சக்திகளும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழினத்தை முடக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டி வந்தன.

வடக்கு, கிழக்கு இணைந்த வலுவான மாகாணசபைக் கட்டமைப்புக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே கூட்டமைப்பின் இலக்கு என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்குள் தீர்வு காணவே அது விரும்புவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், இந்த விமர்சனங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கிறது.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பது இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வை ஏற்கத் தயாரில்லை என்பதை வலியுறுத்தியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இதன்மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகக்குறைந்தபட்ச தீர்வை ஏற்கத் தயாராகி விட்டதான விமர்சனங்களுக்கு, பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வடக்கு அரசியல் களத்தில் கூட்டமைப்பு, சமரச அரசியலுக்குத் திரும்பி விட்டதாகவும், ஐதேக அரசுக்கு முண்டு கொடுக்க முனைவதாகவும், விமர்சனங்கள் மேலோங்கியிருப்பதை மறுக்க முடியாது.

அதேவேளை, தெற்கு அரசியல் களத்திலோ, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், முக்கியமான பிரசார ஆயுதமாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால், இது அபாயகரமான ஆவணமாக சிங்கள மக்கள் முன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நாட்டைப் பிரிக்க கூட்டமைப்பு முயற்சிப்பதாகவும், பிரிவினைப் பாதையில் பயணிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர்.

கூட்டமைப்புக் கோருகின்ற அதிகபட்ச அதிகாரப்பகிர்வுக்கு- சமஷ்டி முறையிலான தீர்வுக்கு தாம் அமைக்கவிருக்கும் ஆட்சியில் இடமேயிருக்காது என்று சிங்கள மக்களுக்கு தெம்பூட்டியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.

சமஷ்டி என்பது பிரிவினையே என்ற விளக்கங்கள் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் கொடுக்கப்படுகின்றன.

தம்மை முற்போக்குவாதிகள் என்று காட்டிக் கொள்ளும் ஜேவிபி கூட, சமஷ்டி முறையானது அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஐதேகவும் கூட, ஒற்றையாட்சிக்குள் தான் கூடிய அதிகாரப்பகிர்வு என்றும், சமஷ்டிக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறது.

ஆக, கூட்டமைப்பு முன்வைத்துள்ள, தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்திய பிரசாரங்களுக்கு தென்னிலங்கையில், கூடுதல் கவனம் செலுத்தப்படுவதைக் காணமுடிகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கூடுதல் அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.

அது 13ஆவது திருத்தச்சட்டத்துக்குள் தான் இருக்கும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, கூட்டமைப்பின் சமஷ்டி அதிகாரப் பகிர்வை நிராகரித்துள்ள, வாசுதேவ நாணயக்காரக, இந்தியாவில் உள்ளது போன்ற அதிகாரப் பகிர்வு முறையையே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்வாக முன்வைப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அதிகாரப் பகிர்வு முறை, ஓர் அரை சமஷ்டியே ஆகும்.

ஆனால், 13ஆவது திருத்தச்சட்டத்துக்குள் உள்ள அதிகாரப் பகிர்வு முறைக்கும், இந்தியாவில் உள்ள அரை சமஷ்டிக்கும் இடையிலேயே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.

ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்தபோது, மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை வழங்க மறுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க எப்படி முன்வரப் போகின்றன?

இப்போது, இந்தியாவைப் போல அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கு இணங்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் ஏன் அத்தகைய தீர்வை முன்வைக்கவோ அதனை நடைமுறைப்படுத்தவோ முன்வரவில்லை?

அதைவிட, முன்னர் இந்தியாவுக்கு 13இற்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ இப்போது, 13இக்குள் தான் தீர்வு என்று கூறும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில், ஒற்றையாட்சிக்குள் கூடுதல் அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வுகாணப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

ஒற்றையாட்சி என்பதன் அர்த்தமே, மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தான் அர்த்தப்படுத்துகிறது. ஒற்றை நிர்வாக அலகே அது.

அதற்குள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்வது என்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் ஐதேகவும் தான் பதிலளிக்க வேண்டும்.

அதுபோலவே, சமஷ்டி என்றால் பிரிவினை தான் என்று விளக்கம் கெட்ட சிங்களத் தலைமைகள் இன்னமும் பிரசாரம் செய்து வருகின்றன.

இதிலிருந்து, சமஷ்டி, ஒற்றையாட்சி போன்ற ஆட்சி முறைகள் குறித்த சரியான விளக்கமோ, தெளிவோ சிங்களத் தலைமைகளிடம் இல்லை என்று நாம் தவறாக கணக்குப் போட்டுவிடக் கூடாது.

இது அவர்களின் அரசியல் பிழைப்புக்கான நடிப்பு.

ஒற்றையாட்சி என்பதை வலியுறுத்துவதன் மூலம், பிரிவினைக்கு எதிரானவர்கள், அதற்கு அனுமதிக்காதவர்கள் என்ற கருத்தை அவர்கள் சிங்கள மக்களிடத்தில் ஊன்றப் பார்க்கிறார்கள்.

அதுபோலவே, சமஷ்டி என்பது பிரிவினை தான் என்ற கருத்தை சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்துவதன் மூலம், அதனை ஒரு தீண்டத் தகாத விவகாரமாக மாற்றியமைத்திருக்கிறார்கள்.

உலகில் வெற்றிகரமாக உள்ள சமஷ்டி கட்டமைப்புகள் குறித்து முன்னைய காலங்களில் இலங்கையில் பிரசாரங்களை மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

அதனால் தான், இன்னமும் சிங்களத் தலைமைகளால், சமஷ்டியை பிரிவினையாக அர்த்தப்படுத்தி சிங்கள வாக்காளர்களின் முன்பாக அரசியல் நடத்த முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஓர் ஆவணமாகவே வெளியிடப்பட்டுள்ளது.

அதனை நிராகரிக்கும், சிங்கள அரசியல் தலைமைகள் தான், தாம் தமிழரின் பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வை வழங்கி, இலங்கைத் தீவில் நிலையான அமைதியை ஏற்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால், எந்தவொரு கட்சிக்குமே, அத்தகைய தீர்வை முன்வைத்து, சிங்கள மக்கள் முன் வாக்குக் கேட்கின்ற துணிச்சல் கிடையாது.

அதனால் தான், தமிழரின் அபிலாஷைகளாக முன்வைக்கப்படும், யோசனைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தப்படும் போக்கு தெற்கில் இன்னமும் நீடித்து வருகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனையை முன்வைத்திருந்தாலும், அந்த அரசியல் தீர்வை எவ்வாறு அடையப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

அதாவது ஒற்றையாட்சிக்குள் தான் அதிகாரப்பகிர்வு என்று அடம்பிடிக்கின்ற ஐதேகவுடன் பேரம் பேசி, இந்த சமஷ்டி ஆட்சிமுறையிலான அதிகாரப்பகிர்வை எட்டுவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

மறுபுறத்தே, மாகாணங்களுக்கே அதிகாரங்களைப் பகிர மறுத்த கட்சியுடன் பேரம் பேசும் வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளுமா என்ற கேள்வியும் உள்ளது.

இன்னொரு பக்கத்தில், கூட்டமைப்பு பேரம் பேசும் அரசியலின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்று கூறுவதை, சமரச அரசியலாக விமர்சித்து, வாக்குவேட்டையாடும் போக்கும் வடக்கில் காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி முறையிலான அதிகாரக் கட்டமைப்புக்கே தெற்கில் இந்தக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன என்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கின்ற ஒரு நாடு, இருதேசம் என்ற கொள்கையை சிங்களத் தலைமைகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்று கேட்கவே தேவையில்லை.

சிங்களத் தலைமைகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிந்திருந்தாலும் அதனை அடைவதற்கான வழிமுறையை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

ஆக மொத்தத்தில், இம்முறை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம், கட்சிகள் தமக்குள் முட்டி மோதுவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஒரு வட்டத்துக்குள் அனைத்துத் தரப்பினரையும் கொண்டு வந்து சேர்க்கும் ஒன்றாக இருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .